(தொடர் 08)
அந்த ஏழு நாட்கள்
2004, 2006 ம் ஆண்டுகள் காத்தான்குடி வாழ் ஸூபிஸ சமூகத்தின் துயரமான ஆண்டுகளாகும்.
அன்றைய றமழான் நோன்பு 17 ம் நாள் 31.10.2004 ம் திகதி
மக்கள் பத்ரிய்யாவுக்கு பத்று ஸஹாபாக்களின் நினைவாக நடைபெறும் கந்தூரிக்காகவும் மஜ்லிஸில் கலந்து பறகத் பெறுவதற் காகவும் காத்தான்குடியின் பல திசைகளிலுமிருந்து சமுகமளித் திருந்தனர். மஜ்லிஸ் நடந்து கொண்டிருந்தது. வந்தவர்களுக்கான தபர்றுக் அன்னதான நார்ஸா வினியோகிப்பதற்கு தயார் நிலையிலிருந்தது.
அப்போது திடீரென்று குண்டு வெடித்த சப்தம் மெயின் வீதிப் பக்கம் கேட்டது.
திடீரென்று மஸ்ஜிதுல் ஹஸனாத் (இரும்புத் தைக்கா ) பள்ளிவாயில் தொழுகை யிலிருந்த மக்களுக்கு றஊப் மௌலவியுடை ஆட்கள் குண்டு எறிந்து விட்டார்களென்றும், பள்ளியில் மையித் இருப்பதாகவும், உடனடியாக தம்மிடமிருக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஒன்று சேருமாறும் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலிலிருந்து ஒலி பெருக்கியில் அறிவித்தல் செய்யப்பட்டது.
இது அடிப்படைவாத வஹ்ஹாபிகள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதல் ஆகும். இது பற்றி அரசியல்தொடர்பான சில சந்தேகங்களும் இருக்கின்றன.
இதை அடிப்படையாகக்கொண்டு காத்தான்குடி 05, பத்ரிய்யா ஜும்ஆப்பள்ளிவாயலில் அடர்ந்தேறுவதற்கும் அங்குள்ள புனித ஸியாறத்தை உடைப்பதற்கும் ஸூபிஸ சமூகத்தவர்களின் வீடுகளையும் கடைகளையும் நாசம் செய்வதற்கும் எதிரிகள் போட்ட சதித்திட்டம் என்பதை பொது மக்கள் அறியவில்லை. மக்கள் ஏதோ கொலை நடந்து விட்டதாக நினைத்து கலகக்காரர்களுடன் வீதியெங்கும் நிறைந்தனர்.
எமது காத்தான்குடி 05, பத்ரிய்யா ஜும்ஆப்பள்ளிவாயலில் முன்னால் அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையில் கலகக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆனால் அவர்களால் பள்ளி எல்லைக்குள் நுழைய முடியவில்லை.
பள்ளிவாயலினுள் பெண்கள், குழந்தைகள் இதனால் பெரும் பதற்றமடைந்தனர். சமைத்த தபர்றுக் நார்ஸாவை மக்களுக்கு வழங்க முடியாத நிலையும் மக்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. குழந்தைகளும் தாய்மார்களும் அழுதனர்.
இதனிடையே பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பல பிரச்சினைகளை எதிர் நோக்கினர்.
பள்ளிவாயலினுள் இருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். பள்ளியைப் பாதுகாக்க வேண்டும். மிக முக்கியமாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் கல்முனையிலுள்ள மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் முரீதீன்கள் உடன் காத்தான்குடிக்கு வந்து அவர்களைக் கல்முனைக்குக் கொண்டு வந்தனர்.
அந்த ஏழு நாட்கள் காலப்பகுதியில் ஸூபி முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளில் பொருள் கொள்ளையிடப்பட்டும், வீடுகளை எரித்தும், உடைத்தும் ஸூபி முஸ்லிம்கள் சிலரை கடத்தி வைத்து அடித்து காயப்படுத்தியும், நூறானிய்யா மாவத்தையிலுள்ள உள்ள மத்றஸதுல் இப்றாஹீமிய்யா குர்ஆன் மத்றஸாவை உடைத்தும் எரித்தும் திருக்குர்ஆனை எரித்தும் அதேபோல் ஜன்னத் மாவத்தையிலுள்ள அல் மத்றஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்றஸாவை உடைத்தும் எரித்தும் டொக்டர் அஹ்மத் பரீத் மாவத்தையிலுள்ள அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹாவையும் அதனுடன் இணைந்துள்ள குர்ஆன் மத்றஸாவையும் உடைத்தும் எரித்தும் அட்டகாசம் புரிந்தனர்.
ஈமானியப் போராட்டம் என்ற போர்வையில் அப்போதைய ஈமானிய நெஞ்சங்கள் என்ற அடிப்படை வாத வஹ்ஹாபிகள் நடாத்திய பாரிய பித்னாவில் காத்தான்குடியின் பல பாகங்களிலும் வாழ்ந்த ஸூபி முஸ்லிம்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்று வாழ முடியாத நிலை ஏற்பட்டு பட்டினி நோன்பு பிடித்தவர்களாக பள்ளிவாயலிலேயே அகதிகளாக அந்த ஏழு நாட்களும் வாழ்வைக் கடத்தினர்.
பலருடைய வீடுகள் முற்றாக உடைக்கப்பட்டது. அதேபோல் எரிக்கப்பட்டன. பலரை வற்புறுத்தி பள்ளிவாயல்களுக்கு அழைத்துச் சென்று கலிமா என்றால் என்னவென்று புரியாத காடையர்கள் உலமாக்களை வற்புறுத்தி கலிமாவும் சொல்லிக் கொடுத்தனர்.
தீன் நகர் ஹைறாத் பகுதியில் வாழ்ந்தவர்களில் ஸூபி முஸ்லிம்கள் அதிகமானோராக இருந்தமையால் அடிப்படை வாத வஹ்ஹாபிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அயல் தமிழ் கிராமமான ஆரையம்பதிக்கு அகதிகளாகச் சென்றனர். அங்கு தமிழ் சகோதரர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டனர். ஆரையம்பதி மக்கள் செய்த உதவிகளை உயிருள்ளவரை மறக்க முடியாது. இதை நினைவுபடுத்தி வருடாந்தம் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் நடைபெறும் பெருமானாரின் மீலாத் கந்தூரியின் போது ஆரையம்பதி சகோதர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதை ஒரு சிறிய ஹிஜ்றத்தாகவே கருத முடியும்.
இதன் பின்னர் சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
பேச்சுவார்த்தையில் இரு பக்கத்தினரும் உலமாக்களாகையால் அவர்களது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமாதான குழுவினரால் குறிப்பிடப்பட்டது.
அதன்படி பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டது
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு
விடுக்கும் ஓர் அறிவித்தல்…
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
காத்தான்குடி மௌலவீ அல்ஹாஜ் ஏ.ஜே. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்கள் தொடர்பான மார்க்கப் பிரச்சினையை அவர்களும் நாங்களும் கலந்து பேசி தீர்த்துக் கொண்டோம் என்பதையும், பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அவரும் மற்றவர்களும் நமது இஸ்லாமிய சகோதரர்கள் என்பதையும் சகலருக்கும் தெரிவிப்பதோடு பொது மக்கள் அனைவரும் அவர்கள் அனைவரையும் முஸ்லிம் சகோதரர்களாக ஏற்று நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த உடன்பாட்டு அறிக்கையுடன் 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை காத்தான்குடி உலமா சபையுடன் இணைந்து வழங்கிய ஏகத்துவத்தில் ஊடுருவல் என்ற முர்தத் பத்வா இரத்துச் செய்யப்படுகிறது.
ஒப்பம்
தலைவர்
ஜம்இய்யதுல் உலமா
காத்தான்குடி
07.11.2004
இந்த அறிக்கையின் பின் சுமூகமான நிலை ஏற்பட்டது சமாதான அடிப்படையில் மக்கள் செயற்பட்டனர். ஸூபி முஸ்லிம்கள் தங்களின் வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் இதனை சகிக்க முடியாத அடிப்படைவாத வஹ்ஹாபிகள் 30.09.2006 தொடக்கம் 06.10.2006 வரையான காலப்பகுதியில் மீண்டும் ஈமானியப் போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளை ஸூபி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.
இதன் போது ஸூபி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாயல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், தர்காக்கள் மற்றும் சுமார் 50 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.
(தொல்லைகள் தொடரும்….)