Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உலகை ஆளும் “ஹிக்மத்” எனும் தத்துவம்!

உலகை ஆளும் “ஹிக்மத்” எனும் தத்துவம்!

தொடர் – 1

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

தத்துவம் பேசிய தத்துவ வாதிகளிற் பலர் கொல்லப்பட்டார்கள். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டார்கள். இன்னும் சிலர் மிருகங்களுக்கு உணவாக்கப்பட்டார்கள். வேறு பலர் பல்வேறு கோணங்களில் துன்புறுத்தப்பட்டார்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை எதார்த்தத்தை சேர்ந்ததேயாகும். எதார்த்தம் என்பது மெய்யறிவையே குறிக்கும்.

எப்பொருள் எத்தன்மையுடையதாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு. எந்த ஒரு வஸ்த்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு கரு இருப்பதவசியம். அந்தக் கரு எதுவென்றறிவதே அறிவு என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் எதை எடுத்துக் கொண்டாலும் அதன் கரு அல்லாஹ்வின் “வுஜூத்” ஆகவே இருக்கும்.

ஸூபீகள் இறையியலுக்கு மட்டுமே மெய்யறிவென்பர். இந்து மத ஞானத்தின் உச்சியை அடைந்தவர்களும் இறைஞானத்திற்கே “அறிவு” என்பர்.

قَالَ الْقُطْبُ الْأَكْبَرْ أَبُو الْحَسَنْ عَلِيْ اَلشَّاذُلِيْ رَحِمَهُ اللهُ مَنْ لَمْ يَتَغَلْغَلْ فِى عِلْمِنَا هَذَا مَاتَ مُصِرًّا عَلَى الْكَبَائِرِ مِنْ حَيْثُ لَا يَشْعُرُ

ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(எங்களின் அறிவான இந்த அறிவில் வயிறு நிரம்பக் குடிக்காதவர் தான் அறியாமலேயே பெரும்பாவத்தில் நிலை பெற்றவராக மரணிப்பார்) என்று கூறியுள்ளார்கள்.

அவர்கள் குறிப்பிடும் அறிவுதான் “வஹ்ததுல் வுஜூத்” இறைஞானமாகும். இந்த அறிவை ஸூபீ மகான்கள் தமது அறிவென்றே பேசுவர். பல ஸூபீ மகான்களின் எழுத்தில் فِى عِلْمِنَا எங்களின் அறிவு என்று எழுதியிருந்ததை என் கண்ணால் பல நூல்களில் நான் பார்த்துள்ளேன். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

اَلْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ أَخَذَهَا حَيْثُ وَجَدَهَا

(“ஹிக்மத்” எனும் இறைஞானம் “முஃமின்” விசுவாசியின் தவறிப் போன – காணாமல் போன சொத்தாகும். அதை அவன் எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்வான்) இறைஞானம் நாக பாம்பின் வாயினுள் இருந்தாலும் எவ்வாறாயினும் அதை எடுக்க வேண்டும் என்றும் தத்துவஞானிகள் பலர் கூறியுள்ளனர்.

“ஹிக்மத்” என்ற சொல் عِلْمُ الْحِكْمَةِ இறை ஞானத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாகும். அது ضَالَّةُ الْمُؤْمِنِ விசுவாசியின் காணாமற் போன அவனின் சொத்தாகும். அது அவனுக்கு மட்டும் உரியதேயாகும். இதற்கான வரைவிலக்கணம் பின்வருமாறு.

اَلْحِكْمَةُ عِلْمٌ يُبْحَثُ فِيْهِ عَنْ حَقِيْقَةِ كُلِّ شَيْئٍ

ஒவ்வொரு வஸ்த்தின் எதார்தத்ம் பற்றி எதில் – எக்கலையில் ஆராயப்படுமோ அது “இல்முல் ஹிக்மத்” என்று சொல்லப்படும். இது பொதுவாக இறைஞானமென்றும் அழைக்கப்படும்.

இது ஓர் “இல்ம்” அறிவு என்றால் இது ஒரு கலைதான். ஏனெனில் பின்வரும் திருவசனம் இதை விளக்கி காட்டுகிறது.

وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ

(ஒருவனுக்கு “ஹிக்மத்” எனும் ஞானம் வழங்கப்பட்டால் அவன் அதிக நன்மை வழங்கப்பட்டவனாவான். இதை “லுப்பு” உள்ளவர்களேயன்றி வேறெவரும் விளங்கிக் கொள்ளமாட்டார்கள்) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 2-269)

“லுப்பு” என்ற சொல்லின் பன்மைச் சொல்தான் “அல்பாப்” எனும் திருவசனத்தில் வந்த சொல்லாகும். “லுப்பு” என்றால் قَلْبُ الْقَلْبِ – உள்ளத்தினுள் உள்ள உள்ளம் என்று கருத்து வரும். உள் மனம், வெளி மனம் என்று சொல்லப்படுவது போன்றதாகும். இதற்கு உள் மனமுள்ளோர் என்று பொருள் கொள்ள வேண்டும். ஞானம் கொடுக்கப்பட்டோர் அதிக நன்மை கொடுக்கப்ட்டவர்கள் என்ற செய்தியை சாதாரணமாக எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அதைப் புரிவதாயின் உள் மனமுள்ளோரால் மட்டுமே புரிய முடியும். அத்தகைய புனிதமானதே அந்த விடயமாகும். இதை ஒரு வரியில் சொல்வதாயின் “வலீ”மாரால் அல்லது “குத்பு”மாரால் மட்டுமே புரிய முடியம் என்று சொல்லலாம்.

அல்லாஹ் என்னையும் இந்த ஞானத் தாகமுள்ளவர்களையும் உள் மனமுள்ளவர்களுடன் சேர்த்தருள்வானாக!

“ஹிக்மத்” எனும் அறிவு வழங்கப்பட்டவனை மட்டுமே மேற்கண்டவாறு அல்லாஹ் சிறப்பாக்கி கூறியுள்ளானேயன்றி வேறெந்த அறிவு வழங்கப்பட்டவனையும் இவ்வாறு சிறப்பாக்கி கூறியதற்கு ஆதாரங்களை காண முடியவில்லை.

இவ் அறிவு வழங்கப்பட்டவன் அதிக நன்மை வழங்கப்பட்டவனாவான் என்று இந்த அறிவுள்ளவன் மட்டுமே சிறப்பாக்கி கூறப்பட்டுள்ளான். வேறெந்த அறிவுள்ளவனும் இவ்வாறு சிறப்பாக்கி கூறப்பட்டதற்கு நான் ஆதாரத்தை காணவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

“ஷரீஆ”வின் அறிவு முக்கியமான அறிவுதான். அதேபோல் “பிக்ஹ்” சட்டக்கலை அறிவும் முக்கியமான அறிவுதான். இதேபோல் “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரைக் கலையும் முக்கியமான அறிவுதான்.

இவ்வாறு பல் கலைகள் சிறப்பிற்குரியவையாக இருக்கும் நிலையில் அவற்றை விட “ஹிக்மத்” எனும் அறிவு சிறப்பாக்கி கூறப்பட்டிருப்பது மட்டுமன்றி அது திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதுவே நிகரற்ற ஓர் ஆதாரமாகும்.

இந்த அறிவு வழங்கப்பட்டவன் அதிக நன்மைகள் வழங்கப்பட்டவனாகிறான் என்றால் இதன் சுருக்கம் என்னவெனில் இந்த அறிவு வழங்கப்பட்டவன் مَذْكُوْرْ – மத்கூர் ஆகிவிடுகிறான் என்பதேயாகும். அதாவது அவன் அல்லாஹ்வினால் “மத்கூர்” நினைக்கப்பட்டவனாகிவிடுகிறான். அல்லாஹ்வை நினைப்பவன் அறபியில் ذَاكِرْ தாகிர் என்றும், நினைக்கப்பட்ட அல்லாஹ் مَذْكُوْرْ மத்கூர் என்றும் சொல்லப்படுவான். ஓர் அடியான் அல்லாஹ்வினால் நினைக்கப்படுகிறான் என்றால் அவன் சாதாரணமானவனாக இருப்பானா?

அடியான் அல்லாஹ்வை நினைக்கும் போது அடியான் ذَاكِرْ என்றும், அல்லாஹ் அடியானை நினைக்கும் போது அல்லாஹ் ذَاكِرْ என்றும், அடியான் مَذْكُوْرْ என்றும் அழைக்கப்படுவான்.

இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஏனைய மார்க்கத்தவர்களை அழைப்பதாயினும், முஸ்லிம்களையே இறைஞானத்தின் பால் அழைப்பதாயினும் அதற்கான இலகுவானதும், பொருத்தமானதுமான வழியொன்றை அல்லாஹ்வே சொல்லித் தருகிறான். அதுவே பின்னால் கூறப்படும் வழியாகும்.

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ

நபீயே! உங்களின் “றப்பு” இரட்சகனான அல்லாஹ்வின் வழிக்கு “ஹிக்மத்” எனும் தத்துவம் கொண்டும், அழகிய உபதேசம் கொண்டும் அழையுங்கள்! என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 16-125)

“ஹிக்மத்” எனும் தத்துவம் கொண்டு மக்களை அழைக்குமாறு அல்லாஹ் ஏன் சொன்னான் என்றால் முஸ்லிமல்லாத ஒருவன் இஸ்லாமியர்களின் நடைமுறைகள், வாழ்க்கை முறைகள், உண்ணல், உறங்கல் போன்ற விடயங்களால் கவரப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்வதற்கும், இஸ்லாம் கூறும் “ஹிக்மத்” எனும் தத்துவத்தால் கவரப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தில் இணைவதற்கும் வித்தியாசமுண்டு.

இஸ்லாம் கூறும் “ஹிக்மத்” என்ற தத்துவத்தால் கவரப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவன் சரியான, அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவனாவான். அவனை எவராலும் அசைக்க முடியாது. அவன் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டாலும், தீக்கிடங்கில் எறியப்பட்டு எரிக்கப்பட்டாலும் அவன் தனது கொள்கையிலிருந்து அசையவேமாட்டான்.

ஆயினும் முஸ்லிம்களின் வாழ்க்கை நடைமுறையாலும், பழக்க வழக்கங்களாலும் கவரப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவன் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருக்கமாட்டான்.

நபீ தோழர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தது அதன் இறை கொள்கையால் கவரப்பட்டேயன்றி வேறெந்தக் காரணத்திற்காகவுமல்ல. இவர்கள் போல் இஸ்லாமிய கொள்கையால் கவரப்படாமல் வேறு காரணங்களால் கவரப்பட்டு இஸ்லாமில் நுழைபவர்கள் அசைக்க முடியாத “ஈமான்” நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள்.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்திலும், அவர்களின் காலத்தின் பின்னுள்ள காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத ஏனைய சமயங்களை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்களில் படித்துப் பண்டிதர்களாகவும், பல்கலைக்கழக வேந்தர்களாகவும் விளங்கிய பலர் இஸ்லாமிய இறைஞானத்தால் கவரப்பட்டே இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.

எனவே, இஸ்லாமிய நடைமுறைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளைக் காட்டியும், கூறியும் பிறரை இஸ்லாம் மார்க்கத்திற்கு அழைப்பதை விட சரியான கொள்கையையும், இறை தத்துவத்தையும் கூறி, விளக்கி வைத்து இஸ்லாம் மார்க்கத்தின் பால் அழைப்பதே அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வழி செய்யுமென்பதற்காகவே அல்லாஹ்வின் வழிக்கு “ஹிக்மத்” என்ற இறைஞானத்தைக் கொண்டு மக்களை அழைக்குமாறு பெருமானார் அவர்களுக்கு அல்லாஹ் ஆலோசனை வழங்கியுள்ளான்.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “நுபுவ்வத்” நபித்துவம் கிடைத்தபின் அவர்கள் முதலாவதாக நிகழ்த்திய உரையும் “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் தத்துவமேயாகும். இறை ஞானமேயாகும்.

எனது இறைஞான அனுபவத்தில் நான் அறிந்த சில விஷேட உண்மைகளை இங்கு எழுதுகிறேன்.

இறைவன் தொடர்பான அறிவு இறைஞானம் எனப்படும். ஒருவன் இந்த ஞானத்தை கற்றறிந்து தானும் பயன் பெற்று, பிறரையும் பயன் பெறச் செய்யும் நோக்குடன் இறைஞானத்துறையில் கால் பதித்தானாயின் அவனுக்கு அல்லாஹ்வின் உதவியும், அவனின் அருளும், அவன் பற்றிய ஞான விளக்கமும் அவன் அறியாமலேயே அவனை வந்தடையும். இத்தகைய அருட்பாக்கியம் இவ்வறிவுக்கு மட்டுமே உண்டு.

இதேபோல் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் அரசர் என்று நான் குறிப்பிடுகின்ற அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா”, “புஸூஸுல் ஹிகம்” போன்ற நூல்களுக்கும் மேற்கண்ட விஷேடங்கள் இருப்பதாக உலகப் பிரசித்தி பெற்ற இறைஞான நூலாசிரியர் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

وَأَمَّا كُتُبُه رضي الله عنه فَهِيَ الْبِحَارُ الزَّوَاخِرُ الَّتِيْ مَا وَضَعَ الْوَاضِعُوْنَ مِثْلَهَا، وَمِنْ خَصَائِصِهَا مَا وَاظَبَ أَحَدٌ عَلَى مُطَالَعَتِهَا إِلَّا وَتَصَدَّرَ لِحَلِّ الْمُشْكِلَاتِ فِى الدِّيْنِ، وَمُعْضَلَاتِ مَسَائِلِهِ، وَهَذَا الشَّأْنُ لَا يُوْجَدُ فِى كُتُبِ غَيْرِهِ أَبَدًا،

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய நூல்கள் ஆயிரத்தையும் தாண்டிவிட்டன. நான் சிரியாவின் தலை நகரான “திமஷ்க்” டமஸ்கஸ் நகரில் அடக்கம் பெற்றுள்ள இறைஞானப் பேரரசர் அவர்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்று மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த போது அங்குள்ள பிரசித்தி பெற்ற மார்க்க மேதைகளிற் பலரைச் சந்தித்து உரையாடினேன். அவர்கள் எழுதிய நூல்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவை என்றும், அவற்றில் சில அச்சிடப்படாமல் இஸ்லாமிய நாடுகளிலுள்ள நூலகங்களில் கையெழுத்துப்பிரதிகளாக இருக்கின்றன என்றும் அவர்கள் கூறினார்கள். அதேபோல் சிரியாவிலுள்ள பல புத்தகக் கடைக்காரர்களும் அவ்வாறே எம்மிடம் கூறினார்கள். அதோடு அவர்கள் எழுதிய மொத்த நூல்கள் ஆயிரத்திற்கும் அதிகமானவை என்றும் கூறினார்கள்.

மேற்கண்ட அறபு வரிகளுக்கான மொழியாக்கம் அடுத்த தொடரில் இடம் பெறும்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments