Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உலோபிகளும், கொடை வள்ளல்களும்

உலோபிகளும், கொடை வள்ளல்களும்

اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَمُمْسِكًا تَلَفًا

இறைவா! பிறருக்கு அள்ளி வழங்குபவர்களுக்கு நீயும் அள்ளி வழங்குவாயாக! தமது களஞ்சியத்தை பூட்டி வைத்துக் கொள்பவர்களுக்கு உனது களஞ்சியத்தை நீயும் பூட்டி வைத்துக் கொள்வாயாக!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

உலோபிகளுக்கு எதிராகவும், கொடை வள்ளல்களுக்கு ஆதரவாகவும் எம்பெருமான் முஹம்மத் முஸ்தபா – தாப தாப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட “துஆ”தான் மேற்கண்ட “துஆ” ஆகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا ‘

ஒவ்வொரு நாளும் வானத்திலிருந்து இரு மலக் – வானவர்கள் பூமிக்கு இறங்கி அவர்களில் ஒருவர், இறைவா! மக்களுக்கு அள்ளிக் கொடுப்பவனுக்கு நீயும் அள்ளிக் கொடுப்பபாயாக! என்று “துஆ” செய்கிறார். மற்றவர் இறைவா! பிறருக்கு கொடுக்காமல் தனது களஞ்சியத்தை பூட்டி வைக்கும் உலோபிக்கு உனது களஞ்சியத்தின் கதவை நீயும் பூட்டி வைப்பாயாக! என்று “துஆ” செய்கிறார் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
அதாரம்: புகாரீ
ஹதீது எண்: 1442

மேற்கண்ட இந்த நபீ மொழியில் இரண்டு மலக்குகளின் பிரார்த்தனைக்கு “ஆமீன்” சொன்னவர் யாரென்று கூறப்படவில்லையாயினும் மூவரில் ஒருவர் “ஆமீன்” என்று சொல்லியிருப்பார். அல்லது மூவரும் ஒரே குரலில் “ஆமீன்” சொல்லியிருப்பார்கள்.

தெளிவான ஆதாரமின்றி யார் “ஆமீன்” சொன்னார்கள் என்று திட்டமாகக் கூற முடியாது போனாலும் யார் சொல்லியிருப்பார் என்று சூழலைக் கருத்திற் கொண்டு ஓரளவு யூகிக்க முடியும். அந்த வகையில் நபீ பெருமான் அவர்களே “ஆமீன்” சொல்லியிருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். எனது யூகம் சரியாயின் அவர்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கும். எனது யூகம் பிழையாயின் அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்களே “றஹ்மத்” அருளானவர்களாயிருக்கும் நிலையில் அவர்கள் அருள் செய்ய வேண்டுமென்பதில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

அன்புக்குரிய வாசகர்களே!

பணம் படைத்தவர்கள், கோடீஸ்வரர்களில் யாராவதொருவன் தனது பொருளாதாரத்திற்கேற்றவாறு தீனுக்காகவும் – மார்க்கத்திற்காகவும், பொதுவாக கல்விக்காகவும் செலவிடாமல் இருப்பானாயின் அவனின் பொருளாதாரம் அழிந்து எல்லாம் நாசமாகிவிட வேண்டுமென்று வறுமைக் கோட்டில் வாழ்பவர்களும், இன்ஜினியர், டொக்டர் போன்ற உயர் கல்வி கற்பதற்குத் தகுதியிருந்தும் கூட வறுமை காரணமாக கல்வியை தொடராமல் கடையில் சம்பளத்திற்கு வியர்வை சிந்தி வேலை செய்பவர்களும் நினைப்பதுண்டு. அவர்களிற் பலர் இறைவனிடம் கையேந்துவோரும் உள்ளனர்.

இவ்வுண்மையை எவரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இத்தகைய உலோபிகளுக்கு எதிராக – அவர்களுக்கு கேடாக நாம் இறைவனிடம் கையேந்த தேவையில்லை.

1400 ஆண்டுகளுக்கு முன்னேயே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட இரு மலக்குகளும் சேர்ந்து இந்தப் பணியை செய்து விட்டார்கள் என்று நான் மேலே எழுதிய நபீ மொழி கூறுகிறது.

எனவே, உலோபிகளான பண முதலைகளின் அழிவுக்கு நாம் கையேந்தத் தேவையில்லை. நம்மைவிடச் சிறந்தவர்கள் கையேந்திவிட்டார்களாதலால் நாம் ஏன் கையேந்த வேண்டும்?

பணக்காரன் ஒருவன் பின்வருமாறு நினைக்கலாம். நான் எனது பொருளாதாரத்திற்கு உரிய முறைப்படி கணக்குப் பார்த்து அதற்கான “ஸகாத்” நிதியை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டேன் என்று.

ஒரு பணக்காரன் தனது பொருளாதாரத்திற்கு “ஸகாத்” கொடுப்பது அவனின் கடமையாகும். அவன் கொடுத்தே ஆக வேண்டும். அந்த “ஸகாத்” நிதி பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. ஒருவனுக்குரிய கடமையைக் கடந்து தனது சொந்தப் பணத்தில் “ஹத்யா”வாக, அல்லது “ஸதகா” அன்பளிப்பாக வழங்குவதையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். “பர்ழ்” கடமையான தொழுகை தொழுதவன் “ஸுன்னத்” ஆன தொழுகை தொழத் தேவையில்லையென்று நினைப்பது அறியாமையாகும்.

கடமையை மட்டும் செய்துவிட்டு மேலதிகமாகச் செய்யாமலிருக்கும் உலோபி பற்றியே நான் குறிப்பிடுகிறேன்.

ஒரு சமயம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களை அழைத்து “தீன்” பணிக்காக உங்களால் முடிந்த உதவிக்கரம் நீட்டுங்கள் என்று கூறியது “ஸகாத்” நிதியை குறிக்காது – மேலதிகமாக “தீன்” பணிக்கு வழங்குவதையே குறிக்கும்.

பெருமானார் இவ்வாறு கேட்ட மறுநாள் அவர்கள் பள்ளிவாயலுக்கு வந்த போது அன்பளிப்பாக தோழர்கள் கொண்டு வந்து அங்கு குவித்திருந்த பொருளாதாரக் குவியல்களைக் கண்டு வியந்த அவர்கள் அவற்றில் மிகப் பெரிய குவியலாக இருந்ததைச் சுட்டிக் காட்டி இது யாரின் குவியல்? என்று வினவினார்கள். ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குவியல் என்று சொல்லப்பட்டது.

அல்லாஹ்வுக்காக அனைத்தையும் இழந்து உடுத்த உடையோடு மட்டும் அங்கு நின்றிருந்த தோழர் அபூ பக்ர் அவர்களை அழைத்த பெருமானார் உங்களுக்காகவும், உங்களின் மனைவி, மக்களுக்காகவும் வீட்டில் எதை வைத்துள்ளீர்கள்? என்று வியப்போடு வினவ அல்லாஹ்வையும், அவனது றஸூலையும் மட்டுமே வைத்துள்ளேன் என்று அவர்கள் கூறிய பதில் பெருமானாரின் கண்களை கலக்கியது. கண் சில சொட்டுக்கண்ணீரை உதிரச் செய்தது.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் தோழர்களிடம் கேட்ட நிதியுதவி “ஸகாத்” நிதியில் உள்ளதல்ல. மாறாக அவர்களின் சொந்தப் பொருளாதாரத்தில் உள்ளதேயாகும்.

அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம், “அல்லாஹ்வையும், றஸூலையுமே வைத்துள்ளேன்” என்று கூறிய பதில் மூலம் அவர்களின் வீட்டிலிருந்த உரல், உலக்கை, தையல் ஊசி, விறகு, அடுப்புக்கல், வாளி, தும்புத்தடி, துடைப்பான் முதலான அனைத்தையுமே கொண்டு வந்தார்கள் என்பது விளங்கப்படுகிறது.

இதுவே தியாகம். தியாகம் என்றால் இதுதான்.

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ

நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து – உங்களுக்கு விருப்பமானவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யும் வரை அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு நன்றியையும், நன்மையையும் பெற்றுக் கொள்ளமாட்டீர்கள்.
திருக்குர்ஆன் (3-92)

இத்திரு வசனத்தின் மூலம் ஒருவன் தன்னிடமுள்ளவற்றில் தனக்கு விருப்பமானதையே பிறருக்கு கொடுக்க வேண்டுமே தவிர தன்னிடமுள்ள கழி பட்டதை, அல்லது தனக்கு விருப்பம் குறைந்ததை, அல்லது அறவே தனக்கு விருப்பமில்லாததை கொடுக்கக் கூடாதென்ற அறிவுரை விளங்கப்படுகின்றது. விருப்பமானதைக் கொடுப்பதே தியாகமாகும். இந்தக் கொடைதான் அல்லாஹ்வின் விருப்பத்தையும், இரக்கத்தையும் கொண்டு வரும் கொடையாகும். மேற்கண்டதிரு வசனத்திலுள்ள مِمَّا تُحِبُّوْنَ நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து என்ற வசனத்தில் مِمَّا என்று ஒரு சொல் வந்துள்ளது. இச் சொல் مِنْ مَا என்றிருந்ததேயாகும். பின்னர் “தஜ்வீத்” சட்டத்தின்படி மிம்மா – مِمَّا என்று தோற்றுகிறது.

இவ்வாறு அல்லாஹ் இவ்வசனத்தை அமைத்தது கொடுப்பவனுக்கும், எடுப்பவனுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.

இதன் விளக்கம் என்னவெனில் ஒருவனிடம் 10 ஷேட்டுகளும், 10 சாரன்களும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். 10 ஷேட்டுகளிலும் ஒரு ஷேட் மட்டும் அதேபோல் 10 சாரன்களில் ஒரு சாரன் மட்டும் அவனுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் இத்திரு வசனத்தின் கூற்றுப்படி தனக்கு விருப்பமான ஒரு சாரனையும், அதேபோல் தனக்கு விருப்பமான ஒரு ஷேட்டையுமே யாருக்காவது கொடுக்க வேண்டும். இது மனதுக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும். ஆயினும் ஒருவனிடம் தனக்கு விருப்பமான ஷேட்டோ, சாரனோ ஒன்றுக்கு மேற்பட்டவையிருந்தால் அவற்றில் ஒன்றை மற்றவர்களுக்கு கொடுப்பதால் மனதுக்கு எந்தவொரு சங்கடமும் ஏற்பட வழியில்லை. ஏனெனில் தனக்கு விருப்பமான ஒன்று போனாலும் அதேபோல் இன்னொன்று தன்னிடம் இருப்பதால் பெரிதாக சங்கடம் ஒன்றும் ஏற்படமாட்டாது

ஆகையால் மேற்கண்ட திரு வசனத்தில் مِمَّا என்ற சொல்லில் வந்துள்ள “மின்” என்ற சொல்லுக்கு بَعْضٌ சிலது என்று பொருள் கொண்டு ஒருவனிடம் தனக்கு விருப்பமான எந்தப் பொருளாவது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவை இருந்தால் மட்டுமே மேற்கண்ட திரு வசனத்தின்படி செயல்படலாம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் எந்த ஒரு சங்கடத்தையும் ஏற்படுத்தாது.

திருக்குர்ஆனில் பின்வருமாறு ஒரு வசனம் வந்துள்ளது.

فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

ஒருவன் மரணப்படுக்கையில் இருக்கும் போது, இறைவா! என்னுயிரை இப்போதே கைப்பற்றி விடாமல் இன்னும் சில நாட்கள் பிந்தி நீ கைப்பற்றினால் அதற்கிடையில் நான் “ஸதகா” தர்மம் செய்து நல்ல மனிதர்களில் ஒருவனாகிவிடுவேன் என்று சொல்வான். மரணிப்பவன் அறபியாயிருந்தால் அறபு மொழியில் இவ்வாறே சொல்வான். வேறு மொழி பேசுபவனாயிருந்தால் இதே கருத்தை தனது மொழியில் சொல்வான்.

இங்கு ஒரு நுட்பம் உண்டு. அதுவே இவ்வசனத்தின் பிரதான, ஆய்வுக்கு எடுக்க வேண்டிய அம்சமாகும்.

அதென்னவெனில் மரணப்படுக்கையில் இருப்பவன் فَأُصَلِّيَ நான் தொழுது, அல்லது فأَصُوْمَ நான் நோன்பு நோற்று என்று சொல்லாமல் فَأَصَّدَّقَ நான் தர்மம் செய்து என்று சொல்வதால் இது பணக்காரனுக்கு மட்டுமுள்ள சிக்கல் என்பது தெளிவாகிறது.

ஏழைகளுக்கு தர்மம் செய்வதிலும், “தீன்” மார்க்க விடயத்தில் செலவு செய்வதிலும், கல்வி விடயத்தில் செலவு செய்வதிலும் உலோபித்தனம் செய்தவன் மட்டும்தான் மரணப்படுக்கையில் மேற்கண்டவாறு சொல்வானாகையால் பணக்காரனாயிருந்தும் தனது தரத்திற்கேற்றவாறு செலவு செய்யாதவன் கடுமையாக தண்டிக்கப்படுவான் என்பது விளங்கப்படுகிறது.

எனவே, பணம் படைத்தவர்கள் தமது பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தான, தர்மம் செய்தல் வேண்டும்.

நமது ஸூபிஸ சமுகத்தில் ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு போன்ற மூவர் இருப்பார்களாயின் நமது பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய கட்டிடம் இதுவரை பூரணம் பெற்று பல்லாண்டுகள் கடந்திருக்கும். மனமிருந்தால் எதையும் செய்யலாம். பணக்காரர்கள் மனச் சாட்சிக்கு விரோதமாக நடந்தார்களாயின் அவ்களின் மரணம் அழகாக அமையாது. அவர்கள் தமது மனச் சாட்சியிடம் கேட்டுச் செயல்பட வேண்டும்.

اَلصَّدَقَةُ تَرُدُّ الْقَضَاءَ وَالْبَلَاءَ

தர்மம் தலை காக்கும். தீய விதியையும், நோய் நொடிகளையும் தடை செய்யும்.

ஸூபிஸ வழி வாழும் சகோதரிகளே! அல்லாஹ்வின் இல்லத்தை கட்டியெழுப்ப நீங்கள் செய்த நிதியுதவிகள் தாராளம்! ஏராளம்! இன்னும் நமது ஸூபிஸத் தளத்தை கட்டி முடிக்க பணம் தேவையாதலால் உங்களின் தாய்மார்களான அன்னை பாதிமா, அன்னை ஆயிஷா, அன்னை ஹப்ஸா, அன்னை ஸவ்தா, அன்னை ஸபிய்யா, அன்னை றம்லா, அன்னை மைமூனா, அன்னை ஸெய்னப், அன்னை ஜுவைரிய்யா றழியல்லாஹு அன்ஹுன்ன ஆகியோரின் வாழ்வை நெஞ்சில் வைத்துச் செயல்படுமாறு உங்கள் அனைவரையும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments