Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மறுமையில் நீங்கள் நடந்து திரியாமல் வாகனத்திற் செல்ல வழி செய்து கொள்ளுங்கள்!

மறுமையில் நீங்கள் நடந்து திரியாமல் வாகனத்திற் செல்ல வழி செய்து கொள்ளுங்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

உங்களின் மரணித்த பெற்றோர் உயிரோடிருந்த காலத்தில் அவர்களைச் சொல்லால் அல்லது செயலால் நீங்கள் வேதனைப்படுத்தி அவர்கள் உங்களைப் பொருந்திக் கொள்ளாத நிலையில் மரணித்திருந்தால் நிச்சயமாக உங்களுக்கு மறுமையில் விசாரணையும் உண்டு, தண்டனையும் உண்டு.

உங்களில் யாருக்காவது இப்படியொரு பிரச்சினை இருந்தால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களின் பொருத்தத்தை பெறுவதற்கும், அல்லாஹ்வின் மன்னிப்புக் கிடைப்பதற்கும் வழியுண்டு. அவ்வழியை உங்களின் நன்மை கருதி இங்கு எழுதுகிறேன்.

தினமும் பெற்றோருக்காக பின்வருமாறு “துஆ” செய்யுங்கள். அறபு மொழியில் “துஆ” செய்ய விரும்பினால் பின்வருமாறு கேளுங்கள்.

اَللهم اغْفِرْ لِوَالِدَيَّ، وَارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا، وَأَدْخِلْهُمَا الْجَنَّةَ وَأَسْكِنْهُمَا مَعَ أَسْعَدِ الْمَخْلُوْقَاتِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

தமிழில் “துஆ” கேட்க விரும்பினால் இறைவா! என் பெற்றோரின் பாவங்களை நீ மன்னித்துக் கொள்வாயாக! நான் சிறுவனாயிருந்த போது என்னை அன்பு காட்டி வளர்த்ததற்காக அவ்விருவருக்கும் “றஹ்மத்” அருள் புரிவாயாக! அவர்கள் இருவரையும் சுவர்க்கத்தில் நுழைய வைத்து படைப்புக்களின் தலைவர் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் வாழச் செய்வாயாக! என்று “துஆ” செய்யுங்கள்.

அவர்களின் பெயரால் நன்மையான காரியங்கள் செய்து அவற்றின் நன்மையை அவர்களுக்குச் சேர்த்து வைக்குமாறு “துஆ” கேளுங்கள்.

ஒருவன் தனக்காகவும், பிறருக்காகவும் எது செய்யலாம் என்பதை பாடல் மூலம் கூறியுள்ளார்கள் இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

إِذَا مَاتَ ابْنُ آدَمَ لَيْسَ يَـجْـرِيْ
عَـلَـيْـهِ مِـنْ خِصَالٍ غَيْرُ عَشْرٍ
عُـلُـوْمٌ بَــثَّـهَـا وَدُعَـاءُ نَـجْـلٍ
وَغَرْسُ النَّخْلِ وَالصَّدَقَاتُ تَجْرِيْ
وَرَاثَـةُ مُـصْـحَـفٍ وَرَبَاطُ ثَـغْرٍ
وَحَـفْـرُ الْـبِـأْرِ أَوْ إِجْـرَا ءُ نَـهْرٍ
وَبَـيْـتٌ لِـلْـغَرِيْـبِ بَـنَاهُ يَأْوِيْ
إِلَـيْـهِ أَوْ بِــنَـاءُ مَـحَـلِّ ذِكْــرٍ
وَتَـعْـلِـيْـمٍ لِـقُـرْآنٍ كَـرِيْـــمٍ
فَـخُذْهَا مِنْ أَحَادِيْثَ بِـحَـصْرٍ

மேற்கண்ட பத்து விடயங்களும் “ஸதகதுன் ஜாரியா” அடிப்படையிலான நற் காரியங்களாகும். ஒருவர் இவற்றை தனக்காகவும் செய்யலாம், பெற்றோருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற “நிய்யத்” எண்ணத்தோடும் அவர்களுக்காகவும் செய்யலாம். மற்றும் செய்பவன் விரும்புகின்றவர்களுக்காகவும் செய்யலாம். அவை பத்து விஷயங்களாகும்.

பாடலின் பொருள்:

மனிதன் மரணித்தால் பத்து விடயங்கள் மட்டும் அவனுக்குப் பயனளிக்கும்.

ஒன்று – அவன் பரப்பிய அறிவு. ஒருவன் எழுத்து மூலம், அல்லது பேச்சு மூலம் அறிவைப் பரப்பியிருந்தானாயின் அவனின் அறிவைக் கேட்டுப் பயன் பெறுபவர்களுக்கு கிடைக்கின்ற நன்மை அவனுக்கும் உண்டு. நூல்கள் எழுதி வெளியிடுவதும் இவ்வாறுதான்.

இரண்டு – அவனின் பிள்ளைகள் அவனுக்காக கேட்கும் துஆ – பிரார்த்தனை. பிள்ளைகள் பெற்றோர் மரணிக்குமுன்னும், மரணித்த பின்னும் அவர்களுக்காக கேட்கும் துஆ.

மூன்று – பேரீத்த மரம் நடுதல். ஒருவன் பேரீத்த மரத்தை நட்டினால் அதனால் மக்கள் பயன் பெறுவதால் அதை நட்டியவனுக்கு நன்மைகள் சென்றடைகின்றன. இவ்வாறுதான் மக்களுக்கு பயன் தரக்கூடிய மரங்களை நடுவதுமாகும்.

நான்கு – “ஸதகா” ஏழைகளுக்கு நிதியுதவி செய்தல், தர்மம் செய்தல்.
ஐந்து – திருக்குர்ஆன் பிரதிகளை பள்ளிவாயல், மத்றஸா போன்றவற்றுக்கும், ஓதத் தெரிந்தவர்களுக்கும் வழங்குதல்.

ஆறு – பாதுகாப்பு அரண் அமைத்தல்.
ஏழு – கிணறுகள் தோண்டி பொது மக்கள் பயன் பெறச் செய்தல்.
எட்டு – பொது மக்களின் நன்மை கருதி மீன் பிடிக்க ஆறுகளை ஏற்பாடு செய்தல்.
ஒன்பது – ஏழைகளுக்காகவும், பயணிகளுக்காகவும் மடம் அமைத்தல்.

பத்து – “திக்ர்” செய்வதற்காக – அல்லாஹ்வை நினைப்பதற்காகவும், திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் ஓர் இடம் அமைத்தல். தைக்கா, சாவியா, மத்ரஸா, ஹோல் – மண்டபம் போன்று

மேற்கண்ட பத்துக் காரியங்களும் “ஸதகதுன் ஜாரியா” என்ற அடிப்படையில் ஒருவர் தனக்காகவும், பிறருக்காகவும் செய்யலாம்.

ஒருவர் தனக்கென்று செய்தாராயின் அதன் பலன் அவருக்கு கிடைக்கும். இன்னொருவருக்கென்று செய்தாராயின் அதன் பலன் செய்யப்பட்டவருக்கும் கிடைக்கும். (செய்தவர், செய்யப்பட்டவர் இருவருக்கும் கிடைக்கும்)

இவ்வாறுதான் எந்த ஓர் “அமல்” வணக்கமாயினும் அதைச் செய்துவிட்டு அதன் பலனை இன்னொருவருக்கு சேர்த்து வைப்பதுமாகும். உதாரணமாக திருக்குர்ஆனை ஓதிவிட்டு அதன் பலனை ஓதியவர் விரும்பினவருக்கு “துஆ” மூலம் சேர்த்து வைப்பதுமாகும். இதில் சிலருக்கு உடன்பாடில்லை. அவர்களின் செயலுக்கும், கருத்துக்கும் விளக்கம் சொல்லப் போனால் விடிந்து விடும். அல்லது வெறுத்து விடும். அது ஒரு கூட்டம். அதற்கு தமது தந்தை கறுப்பா? சிவப்பா? என்பது கூடத் தெரியாது. கவலைதான். நாம் என்ன செய்யலாம்? அவர்களின் அழிவுக்கு “துஆ” கேட்டால் அது நடக்கிறது. அவர்களின் தெளிவுக்கு “துஆ” கேட்டால் அது நடக்குதில்லையே! பிறக்கும் போது முடமாம். பேய்க்குப் பார்த்தால் தீருமா? أفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ மன இச்சையை தனது தெய்வமாக ஆக்கிக் கொண்டவனை நாம் என்னதான் செய்யலாம்? அவர்களின் கதையை விடுவோம். வீணாக “அதீத்” இன் சாபத்திற்குள்ளாகாமல் இருப்போம்.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!

உங்களில் யாராவது பெற்றோரின் மனதை வேதனைப்படுத்தி அவர்கள் உங்களை மன்னிக்காத நிலையில் மரணித்திருந்தால் கவலைப்படாதீர்கள். அவர்கள் உங்களைப் பொருந்திக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறீர்களா? பெரிதாக யோசிக்க வேண்டாம். இப்போதே 60 ஆயிரம் ரூபாவுடன் தவ்ஹீதின் தளங்களில் ஒன்றான தீன் வீதி மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் இயங்கி வருகின்ற “கூட்டு உழ்ஹிய்யா” அலுவலகத்தில், அல்லது பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் இயங்கி வருகின்ற உப அலுவலகத்தில் குறித்த தொகையைச் செலுத்தி உங்கள் பெற்றோரின் மனதைக் குளிர வையுங்கள். அவர்களை உங்களுக்கு “துஆ” செய்பவர்களாக மாற்றுங்கள். அல்லது உங்களின் வீட்டின் எலிகள் கோலில் நடக்கும் நிலைமையில் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் 8500 ரூபாயைச் செலுத்தி பற்றுச் சீட்டையும், தபர்றுக் அட்டையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் வீட்டு எலிகளை அடுத்த வருடத்திற்கிடையில் றெஸ்லர்கள் போன்ற வீரர்களாக ஆக்கிவைப்பானாக!

عَظِّمُوْا ضَحَايَاكُمْ،فَإِنَّهَا مَطَايَاكُمْ يَوْمَ الْقِيَامَةِ

உங்களின் “உழ்ஹிய்யா” பிராணிகளை வலுப்பமாக்கி வையுங்கள். ஏனெனில் அவை தான் மறுமையில் நீங்கள் ஏறிச் செல்லும் வாகனங்களாகும் என்று எம்பிரான் “தாப தாப்” அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

“வலுப்பமாக்கி வையுங்கள்” என்ற வசனத்தின் கருத்து உழ்ஹிய்யாவுக்குரிய பிராணி கொம்புள்ளதாயும், கொழுத்ததாயும், அழகானதாயும், வீரமுள்ளதாயும், குறையற்றதாயும் இருக்க வேண்டும் என்பதாகும்.

அழகிய பெண்ணைத் தேடித் திருமணம் செய்ய விரும்பும் நீங்கள் மறுமையில் பயணிக்கும் வாகனம் அழகாயிருப்பதையும் விரும்பத்தானே வேண்டும். இதுதானே நியாமும் கூட.

ஒருவன் இவ்வுலகிலோ, மறு உலகிலோ குதிரை போன்ற பெறுமதியான, கவர்ச்சியான ஒரு பிராணியில் வந்தால் அது பார்ப்பதற்கு அழகாகவும், பெறுமதியாகவும் இருக்கும். மாட்டில் ஏறிப் பவனி வந்தால் அது தரமானதாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்காதே! இதற்கு என்ன பதில் என்று ஒருவர் என்னைக் கேட்க நினைத்தால் அவருக்கு நான் கூறும் சுருக்கமான பதில் உலகத்து மாட்டிற்கும், சுவர்க்கத்தின் மாட்டிற்கும் வித்தியாசமுண்டு. உலகத்து மாடு இன்னொரு மாட்டின் கருவினாலானது. சுவர்க்கத்து மாடோ “குன்” ஆகு எனும் சொல் கொண்டு ஆனது என்பதேயாகும்.

உழ்ஹிய்யா குழு தலைவர்களுக்கு,

நீங்கள் உழ்ஹிய்யாவுக்காக வாங்கும் பிராணிகள் கொம்புள்ளவையாகவும், அழகானவையாகவும், கொழுத்தவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருக்க வேண்டுமென்று உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments