தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவும், அதன் தலைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!
“வஹ்ததுல் வுஜூத்”, ஸூபிஸ தத்துவம் பேசிய எனக்கும், எனது கருத்தைச் சரிகண்டவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று வழங்கிய “பத்வா” மூன்று வகையில் செல்லுபடியாகாது.
ஒன்று – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு “பத்வா” வழங்கும் அதிகாரம் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம்களை காபிர்கள் – மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
இரண்டு – குற்றவாளி என்று அவர்களால் சொல்லப்பட்ட நான் விசாரிக்கப்படாமல் தீர்ப்புக் கூறப்பட்டது.
மூன்று – நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கையென்று விளங்கி அது பிழையென்று எழுதிய நூலில் எனது பெயரைக் குறிப்பிட்டது.
மேற்கண்ட மூன்று காரணங்களாலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனக்கு “முர்தத்” என்று வழங்கிய தீர்ப்பு செல்லுபடியற்றதாகும்.
நான் இறைவன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன் “பத்வா” வழங்கிய வேளை “பத்வா” குழுவினர் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் கொள்கை பிழையென்று விளங்கியிருந்தார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை என்பது என்னவென்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதனாலும் அவசரமாக “பத்வா” வழங்கியதாலும் நான் பேசிய கருத்துக்கள் வழிகெட்ட “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையென்று நினைத்துக் கொண்டு “பத்வா” வழங்கிவிட்டார்கள்.
ஆயினும் இந்தப் பிரச்சினையின் பின் அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும் அவர்கள் அதை சரி காண்பார்களா? என்பது எனக்குச் சந்தேகமானதே! அதை அவர்கள் மறுத்தால் அவர்களுக்கு “பத்வா” வழங்க எங்களுக்கு முடியும்.
அவர்கள் ஏற்கனவே அவ்வாறு “பத்வா” வழங்கினாலும் கூட அதில் பல தில்லுமுல்லுகள் செய்துள்ளார்கள். அவை பற்றி முல்லாக்களும், முர்தத் பத்வாவும் என்ற தலைப்பில் விபரமாக எழுதியுள்ளேன். மீண்டும் எழுதி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
குற்றவாளி என்று கருதப்படுபவருக்கு தீர்ப்புக் கூறுமுன் அவர் விளக்கமாக விசாரிக்கப்பட வேண்டும். “பத்வா” வழங்கிய முல்லாக்கள் என்னை ஒரு தரமேனும் விசாரிக்கவில்லை. இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். எந்த ஒரு தீர்ப்பாயினும் குற்றவாளியென்று கருதப்படுபவர் நீதிவான்களால் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக திருக்குர்ஆன் – அல்லாஹ் கூறும் வசனத்தைக் கவனிப்போம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ
விசுவாசிகளே! “பாஸிக்” எனும் தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தி கொண்டு வந்தால் அதை உடனே அங்கீகரித்து அறியாமையால் குற்றமற்ற ஒரு சமுகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாமலிருப்பதற்காக – அதன் உண்மையை அறிவதற்காக அதனைத் தீர விசாரணை செய்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள். (திருக்குர்ஆன் 49-06)
இத்திரு வசனத்தின் அமைப்பைப் பார்த்தால் எனக்கும், ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் முல்லாக்கள் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய பின் அவர்களைக் கண்டித்து அருளப்பட்ட வசனம் போன்றே இவ்வசனம் அமைந்துள்ளது.
இத்திரு வசனத்தின் சுருக்கம் என்னவெனில் யாராவது ஒரு “பாஸிக்” கெட்டவன் ஏதாவதொரு செய்தியைக் கொண்டு வந்தால் அது பற்றித் தீர விசாரித்த பின்புதான் தீர்ப்புக் கூற வேண்டும். சொன்னவனையும் விசாரிக்க வேண்டும். அவன் சொன்ன விடயத்தோடு தொடர்புள்ளவர்களையும் விளக்கமாகவும், விபரமாகவும் விசாரிக்க வேண்டும்.
செய்தி சொன்னவனையும், அதோடு தொடர்புள்ளவர்களையும் விசாரிக்காமல் தீர்ப்புக் கூறுதல் – ஒரு முடிவு சொல்லுதல் பிழையாகும். இதனால் பெரும் விபரீதம் ஏற்படச் சாத்தியமுண்டு. பல உயிரிழப்புக்கள் ஏற்படவும் வழியுண்டு.
இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். இதை வாசகர்கள் கவனத்திற் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒருவன் ஒரு பள்ளிவாயல் நிர்வாகத்திடம் வந்து இவ் ஊரிலுள்ள ஒருவன் தன்னை அல்லாஹ் என்று சொல்கிறான் என்று கூறினால் பள்ளிவாயல் நிர்வாகம் இத்தகவலை சொன்னவனையும், அதோடு சம்பந்தப்பட்டவனையும் பள்ளிவாயலுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும். அதற்குரியவன் ஊரில் இல்லாவிட்டால் அவன் வரும் வரை காத்திருந்து அவனை விசாரிக்க வேண்டும். அவன் வரத் தாமதமானால், அல்லது அவனை அழைப்பதற்கு அவன் இருக்குமிடம் தெரியாமற் போனால் எவ்வாறேனும் அவனோடு தொடர்பு கொண்டு அவனை ஊருக்கு அழைத்து அவனையும் விசாரிக்க வேண்டும். விசாரணையை சில நாட்களோ, சில மாதங்களோ பிற்போட வந்தாலும் பிற்போட வேண்டும். இப்பிரச்சினை அவசரமாக முடிக்க வேண்டியதாயின் பள்ளிவாயல் நிர்வாகம் அவனுக்கு ஆள் அனுப்பி, அல்லது கடிதம் அனுப்பி அவனை ஊருக்கு அழைக்க வேண்டும். இது தொடர்பாக நிர்வாகம் நீதியாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும்.
பிரச்சினைக்குரியவனை எந்த வகையிலும் சந்திக்க – அழைக்க முடியாது போகுமிடத்து தகவல் தந்தவைன மட்டும் விசாரித்துவிட்டு சில நாட்களுக்கு இப்பிரச்சினைக்கான தீர்வை நிர்வாகம் பிற்போட வேண்டும். பிரச்சினைக்குரியவனை எந்தவகையிலும் நேரில் விசாரிக்க முடியாமற் போனால் மட்டும் நிர்வாகம் தகவல் சொன்னவனை மீண்டுமொரு தரம் விசாரித்து, ஆதாரங்கள், சாட்சிகளைக் கொண்டு ஒரு தீர்ப்புக் கூற வேண்டும்.
இவ்வாறு ஒரு முயற்சியும் செய்யாமல் தகவல் தந்தவனின் பேச்சை மட்டும் ஆதாரமாகக் கொண்டு அவன் தகவல் தந்த உடனேயே ஒரு தீர்ப்பைக் கூறுவது மார்க்கத்திற்கு முரணான தீர்ப்பாகிவிடும்.
பள்ளிவாயல் நிர்வாகிகள் தமது அறியாமையினாலோ, அல்லது நிர்வாகிகளில் ஒருவர் தகவல் தந்தவனிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டதினாலோ என்னவோ உரியவனை விசாரிக்காமல், “எவன் தன்னை அல்லாஹ் என்று சொன்னானோ அவன் “முர்தத்” மதம் மாறிவிட்டான்” என்று தீர்ப்புக் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து பிரச்சினைக்குரியவனின் உறவினர்களுக்கும், அவனின் நண்பர்களுக்கும், ஏற்பட்ட ஆத்திரத்தால் பள்ளிவாயல், நிர்வாகிகளை அவர்கள் அடித்தார்கள். துன்புறுத்தினார்கள். அவ் ஊரில் இரு தரப்பினருக்கும் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
இரு தரப்பிலும் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டு அவ்வூர் போர் களமாக மாறியிருக்கும் நிலையில் பிரச்சினைக்குரியவன் ஊர் வந்துவிட்டான்.
இரு தரப்பினரும், மற்றும் பொது மக்களும் ஒன்று பட்டு பொலிஸ் பாதுகாப்போடு அவனிடம் நடந்தது பற்றிக் கேட்ட போது அவன் பின்வருமாறு விளக்கம் சொன்னான்.
பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் முதலில் செய்தி சொன்ன தீயவன் தெருவில் என்னைக் கண்ட போது உனது பெயர் என்ன? என்று என்னிடம் கேட்டான். நானும் மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தேன். அவனும் அவ்வாறே சென்று கொண்டிருந்தான்.
நான் எனது பெயரைச் சொல்வதற்காக அல்லாஹ் என்று சொல்லி அதற்குப்பின்னாலுள்ள சொல்லைச் சொல்வதற்கிடையில் இருமலேற்பட்டு நான் இருமிக் கொண்டிருக்கையிலேயே கெட்டவன் போய்விட்டான். எனது பெயர் “அல்லாஹ் பிச்சை” என்றான். இதுவே நடந்த உண்மை.
அவன் தனது பெயரில் ஒரு சொல்லைக் கூறி மறு சொல்லைக் கூறுவதற்கிடையில் கெட்டவன் பள்ளிவாயலுக்கு வந்துவிட்டான்.
இதற்கிடையில் இரு தரப்பினர்களிலும் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவிட்டன.
மேலே எழுதியது ஓர் உதாரணமேயன்றி நடந்த செய்தியல்ல. உதாரணம் பொருத்தமானதாயினும் “அல்லாஹ் பிச்சை” என்ற பெயரில் யாராவது இருந்திருப்பானா? அவ்வாறு பெயர் வைக்கலாமா? என்று சிலர் கேட்க நினைக்கலாம். அவர்கள் வேறு யாருமல்ல. தற்போது செயலிழந்து தவிக்கின்ற, பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் ஹதீதுகளில் قَرْنُ الشَّيْطَانِ – ஷெய்தானின் கொம்பு என்று சுட்டிக் காட்டப்பட்டவர்களேயாவர்.
ஆம், காத்தான்குடியிலேயே “அல்லாஹ் பிச்சை” என்ற பெயரில் சுமார் 75 வருடங்களுக்கு முன் பலர் இருந்துள்ளார்கள். காத்தான்குடியில் 75 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் பெயர் பட்டியலைப் புரட்டினால் இது உண்மையென்று தெளிவாகும்.
நான் சிறுவனாயிருந்த காலத்தில் காத்தான்குடி – ஆரையம்பதி எல்லை வீதியில் அல்லாஹ் பிச்சை என்ற பெயரில் நல்ல மனிதர் ஒருவர் இருந்ததை நான் அறிவேன். அவரைக் கண்டுமிருக்கிறேன். அவரின் வழித்தோன்றல்கள் இப்போதும் காத்தான்குடியில் வாழ்கிறார்கள்.
இது மட்டுமல்ல. எனது பரம்பரையில் நாலாவது தலைமுறையிலுள்ள ஒருவர் “அல்லாஹ் பக்ஷ்” என்ற பெயரில் வாழ்ந்துள்ளார். “அல்லாஹ் பக்ஷ்” என்றால் அல்லாஹ் பிச்சை என்று பொருள். இவ்வாறு வந்த பெயர்களில் ஒன்றுதான் “பள்ளித்தம்பி” என்ற பெயருமாகும். இப்பெயரிலும் இவ்வூரில் பலர் வாழ்ந்துள்ளனர். “பள்ளிம்மா” என்ற பெண்ணின் பெயரும் இந்த வரிசையில் உள்ளதேயாகும்.
தமக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாதவர்கள் பிள்ளை கிடைத்தால் அது ஆணாக இருந்தால் அல்லாஹ் போட்ட பிச்சை என்ற கருத்தில் “அல்லாஹ் பிச்சை” என்றும், பெண்ணாக இருந்தால் “பள்ளி உம்மா” என்றும் பெயர் சூட்டுவார்கள்.
நான் மேலே கூறிய உதாரணத்தில் “அல்லாஹ் பிச்சை” என்ற பாத்திரம் நான்தான். என்னிடம் பெயர் கேட்ட தீயவன் காத்தான்குடியிலிருந்து இந்தப் பிரச்சினையை கொழும்புக்கு எடுத்துச் சென்றவர்களாவர். பள்ளிவாயல் நிர்வாகிகள் என்போர் “பத்வா” தீர்ப்பு வழங்கிய முல்லா மகான்களாவர்.
இன்று காத்தான்குடியில் மட்டுமே “முஸ்லிம் – முர்தத்” என்ற வேறுபாடு காணப்படுகின்றதேயன்றி வேறு எந்த ஊரிலுமில்லை.
“பத்வா” வழங்கிய முல்லாக்கள் முழுப்பிழையும் தம்முடையதென்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தவறினால் “பத்வா” குழுவினரும், தற்போது தலை மறைவாகியுள்ள தலைவரும், பெயர் கேட்ட தீயவனும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியேற்படும். அல்லாஹ் பிச்சையின் ஆதரவாளர்கள் எனது ஆதரவாளர்கள் அவர்கள். அவர்கள் தீவிரவாதிகள் அல்ல.
பிழை பிறந்த இடம் எது?