தொடர் – 5
“இஸ்முல் பாயில்” – செய் பெயர் என்பது அதோடு மூன்றில் ஒரு காலத்தை குறிக்கும் சொல் சேர்ந்து வரவில்லையாயின் அது முக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே இருக்கும். இது தொடர்பான விபரங்கைளயும், விளக்கங்களையும் உதாரணங்களோடும், திருக்குர்ஆன், ஹதீதுகளின் ஆதாரங்களோடும் கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன். வாசிக்கத் தவறியோர் அத் தொடர்களை வாசித்தறியுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இஸ்முல் பாயில் – செய் பெயர் தருகின்ற தத்துவங்களை எழுதிய தொடரில் அல்குத்பு அபூ மத்யன் அல் மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாறின் சுருக்கத்தையும் எழுதினேன்.
இதை எழுதியதற்கான காரணம் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் “முஅல்லிமுல் முஅல்லிமீன்” ஆசிரியர்களின் ஆசிரியர் என்று பட்டம் வழங்கப்பட்ட மேதை – ஒரு குத்பு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கலையில் குழியோடிய மகான் என்பதையும், முக்காலத்திலும் அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை என்ற தத்துவத்தை தெளிவாகச் சொன்னவர்கள் என்பதையும் வாசகர்கள் விளங்கி இத்தகைய நாதாக்களும் இக் கொள்கையைச் சரி கண்டுள்ளார்கள் என்பதை அறிவதற்கேயாகும்.
அஷ் ஷெய்கு, அல்குத்பு அபூ மத்யன் அல் மக்ரிபீ போன்ற ஒருவர் இக்காலத்தில் இவ்வுலகில் இருப்பாராயின் அவர் இக்காலத்தின் “குத்பு” ஆகவே இருப்பார். ஒரு குத்புக்கு நிகர் அவர் போன்ற குத்பேதான்.
இவர்கள் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களின் காலத்தவர்களாவர்.
ஒரு சமயம் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்கள் தங்களின் “முரீத்” சிஷ்யனுடன் வன வழியால் சென்று கொண்டிருந்த நேரம் பயங்கர மலைப் பாம்பு ஒன்று அவர்கள் செல்லும் வழியில் குறுக்கே உறங்கிக் கொண்டிருந்தது. அவ்வழியால் சென்ற இவ்விருவரின் அரவம் கேட்டதும் பாம்பு விழித்து தலை உயர்த்தி இருவரையும் பார்த்த போது இப்னு அறபீ நாயகம் அவர்களிடம் அவர்களின் சிஷ்யன் தாங்கள் அதற்கு “ஸலாம்” சொன்னால் அது பதில் சொல்லும் நாயகமே என்றார். அப்போது ஷெய்கு அவர்கள் அதற்கு ஸலாம் சொன்னதும் அது மனிதன் பதில் சொல்வது போன்று அழகாக பதில் கூறிவிட்டு அஷ் ஷெய்கு அபூ மத்யன் அவர்களின் நிலைமை என்ன? என்று கேட்டது?
இப்னு அறபீ நாயகம் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றார்களா? எதிர்ப்பாக இருக்கின்றார்களா? என்று கேட்டது. சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் உள்ளனர் என்று கூறினார்கள். அப்போது அந்தப் பாம்பு, அவருக்கு எனது ஸலாம் கிடைக்கட்டுமாக! அவரை எதிரிகள் கடுமையாக எதிர்ப்பார்கள், அவரைக் கொலை செய்ய முடிவும் செய்துவிடுவார்கள். ஆயினும் அவர் கொல்லப்படுவதற்கு முன் மரணித்துவிடுவார் என்று கூறியது. அது கூறியவாறே அவர்களின் மரணம் நிகழ்ந்தது. இந்த விடயம் கடந்த தொடர் ஒன்றில் எழுதப்பட்டுள்ளது.
அஷ் ஷெய்கு அபூ மத்யன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களை உள்வாங்கிப் பாடிய பாடல் ஒன்றை இங்கு எழுதுகிறேன்.
اَللهَ قُلْ وَذَرِ الْـوُجُــوْدَ وَمَــا حَــــــوَى
إِنْ كُنْتَ مُرْتَادًا بُلُوْغَ كَمَـــــــــــالٍ
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَـــــــــــــهُ
عَدَمٌ عَلَى الـتَّـفْصِيْلِ وَالْإِجْــمَـــــــالِ
وَاعْـلَـمْ بِأَنَّكَ وَالْعَوَالِمَ كُلَّـــــــــــهَا
لَوْلَاهُ فِيْ مَـحْــوٍ وَفِي اضْمِـــــــحْلَالِ
مَنْ لَا وُجُــــوْدَ لـِــــذَاتِهِ مِنْ ذَاتِــــهِ
فَـوُجُــوْدُهُ لَوْلَاهُ عَـيْـنُ مُحَـــــــــــالٍ
وَالْعَارِفُوْنَ بِـرَبِّـهِمْ لَـمْ يَــشْــــــهَدُوْا
شَـيْـئًا سِـوَى الْـمُتَكَبِّرِ الْمُتَعَـــــــالِيْ
وَرَأَوْا سِوَاهُ عَلَـى الْـحَقِيْقَةِ هـَــالِكًــا
فِـى الْـحَـالِ وَالْـمَاضِـيْ وَالْإِسْتِقْبَــالِ
மொழியாக்கம்: நீ “அல்லாஹ்” என்று சொல். (அல்லாஹ் என்று நீ சொல்) “வுஜூத்” எனும் உள்ளமையையும், அது உள் வாங்கியதையும் நீ விடு. நீ பூரணத்தை – “கமாலிய்யத்”தை தேடுபவனாக இருந்தால்.
அல்லாஹ் தவிரவுள்ள அனைத்தையும் நீ ஆராய்ந்து, துருவித் துருவி ஆய்வு செய்தால் அவையாவும் இல்லாதவையாகும். “அதமுன்” என்பது உனக்குப் புரியும். மொத்தமாகப் பார்த்தாலும், விரிவாகப் பார்த்தாலும் அல்லாஹ் அல்லாதவை இல்லாதவைதான். அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்பது உனக்கு விளங்கும்.
நீயும், அனைத்து “ஆலம்” உலகங்களும் அவனில்லையெனில் – அவற்றின் தோற்றத்தில் அவன் இல்லையெனில் அவை அழிந்தவைதான்.
அல்லாஹ்வின் தாத்திலிருந்து தனது தாத்திற்கு “வுஜூத்” இல்லாதவனுக்கு “தாத்” இருப்பது அசாத்தியமே.
ஆரிபீன் – இறைஞானிகள் அல்லாஹ் தவிர வேறெதையும் காணவில்லை. அல்லாஹ் தவிர மற்றவை சென்ற காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும் இல்லாதவையே.
அஷ் ஷெய்கு, அல்குத்பு ஷுஐப் அபூ மத்யன் மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் பாடலில் படைப்பு என்பது முக்காலத்திலும் இல்லை என்று திட்டமாக கூறியுள்ளார்கள்.
சுமார் இற்றைக்கு 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இறைஞான மகான்களிற் பலர் – எண்ணற்றோர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியுள்ளார்கள் என்பதற்கும், இதேபோல் அவர்களின் வழி வந்தவர்களும் எழுதியும், பேசியுமே வந்துள்ளனர் என்பதற்கும் ஆதாரமுண்டு.
இலங்கை நாட்டில் 1838 – 1898 காலப் பகுதியில் கண்டிப் பிரதேசத்தில் வாழ்ந்த அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் மட்டுமே “அஸ்றாறுல் ஆலம்” என்ற பெயரில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தொடர்பாக ஒரு நூல் எழுதியுள்ளார்கள். இவர்கள் தவிர வேறெவரும் இந்த ஞானம் தொடர்பாக ஒரு நூலாவது எழுதியதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
எனினும் இலங்கைத் திரு நாட்டில் வாழ்ந்த பல அறிஞர்கள் குறித்த இந்த ஞானம் பேசியதற்கும், சிறிய பிரசுரங்கள் வெளியிட்டதற்கும் ஆதாரங்கள் உண்டு. இவர்கள் இலைமறை காய் போல் வாழ்ந்த மகான்களாவர்.
அறிஞர் சித்திலெப்பை வாழ்ந்த காலத்திலும், இலை மறை காய் போல் இலங்கையில் வாழ்ந்த ஏனைய இறைஞானிகளின் காலத்திலும் நிறைய உலமாஉகள் இருந்தும் கூட அறிஞர் சித்திலெப்பை அவர்களுக்கோ, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய ஏனைய அறிஞர்களுக்கோ எதிராக அவர்களில் எவரும் “பத்வா” கொடுக்கவுமில்லை. அவர்களுக்கு எதிராக வேறெந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவுமில்லை. அக்கால மார்க்க அறிஞர்கள் எமக்கு “முர்தத்” பத்வா வழங்கிய முல்லாக்கள் போல் வஞ்சக நெஞ்சுள்ளவர்களாக இருக்கவில்லை.
காத்தான்குடியில் அடக்கம் பெற்றுள்ள அதி சங்கைக்குரிய மகான் “ராசா ஆலிம்” றஹிமஹுல்லாஹ், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாமித் லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ், மற்றும் ஓடக்கரை ஆலிம் என்று பிரசித்தி பெற்றிருந்த அஹ்மத் லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ், எனது மதிப்பிற்குரி தந்தை, காத்தான்குடி 05 பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் உறங்கிக் கொண்டிருக்கின்ற அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் ஆகியோரும், இன்னும் பல மகான்களும் காத்தான்குடியின் மூத்த அறிஞர்களும், இறை ஞானிகளாவர். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பாக நூல்கள் எழுதாது போனாலும், பகிரங்கமாகப் பேசாது போனாலும் கூட “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களை தம்மோடு நெருங்கி வாழ்ந்தவர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆயினும் பகிரங்கமாக, ஒலி பெருக்கிகள் மூலம் பகிரங்க கூட்டங்கள் எதிலும் இன்னோர் பேசவில்லை. இதற்கு காரணம் இந்த ஞானம் தெரியாத போலி உலமாஉகளினதும், பொறாமைக் காரர்களினதும் தீமைகளை அவர்கள் பயந்ததேயன்றி இந்த ஞானத்தை பகிரங்கமாகப் பேசுவது மார்க்கத்திற்கு முரணானதென்று அவர்கள் கருதியதால் அல்ல.
ஓர் அறிஞன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசாமலும், எழுதாமலுமிருந்தால் அவர் அது தெரியாதவர் என்றோ, அல்லது அது பிழையென்று சொல்பவரென்றோ நாம் நினைத்துவிடலாகாது. இந்த ஞானம் தெரிந்த பலர் பேசாமலும், எழுதாமலும் விட்டதற்கும், சிலர் பேசினாலும் கூட அதை பரம ரகசியம் போல் கருதிக் கூறியதற்கும் காரணம் போலி உலமாஉகளினதும், பொறாமைக் காரர்களினதும் தீமையைப் பயந்ததேயாகும்.
நான் அறிந்தவரை “ஷெய்கு”மார்களிற் சிலர் “பைஅத்” வழங்கும்போது வீட்டுக் கதவுகளையும், ஜன்னல்களையும் கூட பூட்டி விட்டு “பைஅத்” கொடுத்திருக்கிறார்கள்.
ஷெய்குமாரும், இறைஞானம் தெரிந்தவர்களும், இந்த ஞானத்தை மறைத்து வந்த காரணத்தினால்தான் பொது மக்களில் அநேகர் சரியான ஈமானை இழந்தார்கள். அல்லாஹ் பற்றி அணுவளவேனும் அறியாத முழு மடையர்களானார்கள். அதோடு ஞானிகளின் எதிரிகளாகவும் மாறினார்கள்.
இத்தகையோர் 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெரும் ஞான மகான்களிலும் இருந்துள்ளார்கள்.
وقد كان الحسن البصري، وكذلك الجنيد والشّبلي وغيرهم لا يقرِّرون علمَ التّوحيد إلا فى قُعُورِ بُيوتِهم بعد غلق أبوابهم وجَعلِ مفاتيحها تحتَ وَرِكِهم، ويقولون أتحبّون أن تُرمى الصحابةُ والتابعون الّذين أخذنا عنهم هذا العلمَ بالزندقة بهتانا وظلما،
இமாம் ஹஸனுல் பஸரீ, அபூ பக்ர் ஷிப்லீ, ஜுனைத் பக்தாதீ ஆகியோரும், இன்னும் பலரும் “தவ்ஹீத்” தொடர்பாகப் பேசுவதாயின் தங்களின் வீடுகளின் உள்ளேதான் பேசுவார்கள். வேறெங்குமே பேசமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் பேசுவதாயினும் வீட்டுக்கதவுகள் அனைத்தையும் தாழிட்டு திறப்புக்களைத் தமது தொடைக்கடியில் வைத்துக் கொண்டே பேசுவார்கள். அவ்வாறு செய்வதற்கான காரணத்தையும் பின்வருமாறு கூறினார்கள். தோழர்களே! இந்த ஞானத்தைப் பகிரங்கமாகச் சொல்லும் போது நாங்கள் இந்த ஞானத்தைக் கற்றுக் கொண்ட ஸஹாபா – நபீ தோழர்கள், தாபியீன் – அவர்களைத் தொடர்ந்தவர்களை அநீதியாக “சிந்தீக்” என்று எதிரிகள் சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? ஆகையால்தான் நாங்கள் மறைத்துப் பேசுகிறோம் என்று அவர்கள் சொல்வார்கள்.
சுருக்கம் என்னவெனில் இறைஞானம் – “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை அறிந்தவர்களில் எதிரிகளின் தீமையைப் பயந்தவர்களும், அவர்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுத்து நிற்க முடியாதவர்களும் இரகசியமாக பேசட்டும்.
எதிரிகளைப் பயப்படாதவர்களும், அறிவு ரீதியாக அவர்களுடன் முகம் கொடுத்து நிற்கச் சக்தியுள்ளவர்களும் பகிரங்கமாகப் பேசட்டும் என்பதாகும். இந்த அறிவை எந்த வகையிலும் பேசவோ, எழுதவோ கூடாதென்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக இஸ்லாமிய மார்க்கத்தை பகிரங்கமாக சொல்லுமாறு அல்லாஹ் கூறியுள்ளான்.