Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்காத்தான்குடி மக்களுக்கு ஒரு நற் செய்தி!

காத்தான்குடி மக்களுக்கு ஒரு நற் செய்தி!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

சிந்தியுங்கள்! சரியெனக் கண்டால் செயல்படுங்கள்! இன்றேல் لكم دينكم ولي دين உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம் என்று கூறிக் கொண்டு மனச் சாட்சியின்படி செயல்படுங்கள்.

அன்புக்குரியவர்களே! நான் இவ்வூரில் 05.02.1944ல் பிறந்து இன்று வரை இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் ஓர் அரசியல்வாதியல்ல. இவ் ஊரின் நன்மை கருதியும், முன்னேற்றம் கருதியும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளில் எனக்கு விருப்பமான, ஆயினும் அனுபவமும், திறமையுமுள்ள அரசியல்வாதிகளிற் சிலரின் வெற்றிக்காக ஆதரவு வழங்கி வந்துள்ளேன். அவர்களில் மதிப்புக்குரிய சகோதரர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடற்குரியவராவார்கள்.

எந்த ஓர் அரசியல்வாதியாயினும் அவர் நான் கூறி வரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்க்காதவராயும், பாரபட்சமின்றிச் சேவை செய்பவராயும் இருப்பாராயின் அவரை அரசியல் விடயத்தில் முழுமையாக ஆதரிப்பதற்கு எப்போதும் நான் விருப்பமுள்ளவனாகவே உள்ளேன். இதுவே எனது இலட்சியம்.

இது தவிர எந்த அரசியல்வாதியாயினும் அவர் எனது கொள்கையை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ, எனது பள்ளிவாயலில் தொழ வேண்டுமென்றோ, என்னுடன் நெருங்கிய தொடர்புள்ளவராயிருக்க வேண்டுமென்றோ, என் தலைமையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாயலுக்குப் பண உதவிசெய்ய வேண்டுமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை. அவரை ஆதரிப்பதற்கு மேற்கண்ட விடயங்களை நிபந்தனையாக நான் கூறவுமில்லை.

எந்த ஓர் அரசியல்வாதியாயினும் அவர் இருமுகம் உள்ளவராகவோ, இரு நாக்குள்ளவராகவோ இருந்து செயல்படலாகாதென்பது நான் அவருக்கு ஆதரவு வழங்குவதற்கான எனது பிரதான நிபந்தனையாகும்.

என்னை முஸ்லிமாக ஏற்றுக்கொள்ளாதவர்களின் கவனத்திற்கு!

என்னை “முர்தத்” என்றும், நான் கூறும் ஞானம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதென்றும் நம்பியுள்ள பொது மக்களே! உங்களுடன் சில நிமிடங்கள் உரையாடுகிறேன்.

1979ம் ஆண்டு முதல் இன்று வரை என்னால் முடிந்தவரை “ஷரீஆ”வின் அறிவுகளையும், “தரீகா” தருகின்ற இறை ஞான தத்துவங்களையும் கூறிக் கொண்டே இருக்கிறேன். பலர் என்னைச் சரிகண்டு என்னோடு உள்ளார்கள். உங்கள் போன்ற இன்னும் பலர் என்னைப் பிழை கண்டு என்னை “முர்தத்” என்று சொல்லிக் கொண்டும், எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் பெரும்பான்மையுடன் இருப்போம் என்று இருக்கிறார்கள். இவர்கள் எனக்கு எதிராக எதுவுமே செய்ததில்லை.

உங்கள் அனைவருக்கும் நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவெனில் உங்களுக்கு இந்நாட்டில் மத உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை முதலான மனித உரிமைகள் எல்லாம் உள்ளன. இவ்வுரிமைகளில் தலையிட நான் விரும்பவில்லை.

ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் நான் பேசி வருகின்ற இறைஞானத்தை பிழையென்றும், என்னையும், எனது கருத்தை சரி கண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும் சொல்வது உங்களை நரகத்திற்கு அனுப்பும் சொற்களும், செயல்களுமாகும் என்பதை உங்களின் நன்மை கருதி எத்தி வைக்கிறேன். இது எனது கடமை என உணர்ந்து உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

நீங்கள் என்றாவதொரு நாள் மரணிப்பது நிச்சயம். “மாலிகு யவ்மித்தீன்” தீர்ப்பு நாளின் அரசனான அல்லாஹ்வின் ஆட்சி பாரபட்சமின்றி நடைபெறும் நிலையில், நான் அங்கு வந்து உங்களைச் சுட்டிக் காட்டி,

رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا ،فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا

நான் எனது இக்கூட்டத்தாரை இராப் பகலாக அழைத்தேன். என் அழைப்பைக் கேட்டு இவர்கள் என்னை விட்டும் தூரமானார்களேயன்றி என்னை நெருங்கவில்லை என்று நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னது போல் நானும் சொல்வதற்கு பின்வாங்கமாட்டேன் என்று உங்களிடம் முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறேன்.

முப்பது வயதுக்குட்பட்ட படிப்பை முடித்த, படிக்கின்ற இளைஞர்களே!

அல்லாஹ் உங்களை கல்வித்துறையில் உயர்த்தி வைப்பானாக! நீங்கள் எழுதவுள்ள அனைத்துப் பரீட்சைகளிலும் உங்களுக்கு முதற்தர வெற்றியைத் தருவானாக!

அன்புக்குரியவர்களே!

இன்று முப்பது வயதுக்குட்பட்டவர்களாயிருக்கும் உங்களுக்கு 42 வருடங்களுக்கு முன் – 1979ம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் நீங்கள் கேள்விப்பட்டவையாகவே இருக்கும். 1979ம் ஆண்டு எனக்கு 35 வயது. அவ்வேளை நான் மூன்று பிள்ளைகளின் தந்தை. இவ்வேளை நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் “வுஜூத்” – உள்ளமையில் அவனின் அறிவில் இருந்துள்ளீர்கள். 79ம் ஆண்டு நடந்தவையொன்றும் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் கேள்விப்பட்டவற்றில் உண்மையுமிருக்கும், பொய்யுமிருக்கும். அதைக் கிளற நான் விரும்பவில்லை. அதைக் கிளறினால் விடயம் நீண்டு விடும்.

நான் இப்போது கூற விரும்பும் அறிவுரை என்னவெனில், நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பாக நீங்கள் அறியவும், தெளிவு காணவும் விரும்பினால் நான் இன்றுவரை இறையியல் தொடர்பாக பேசிய பேச்சுக்களை CDகள் மூலம் கேட்க வேண்டும். இதேபோல் இறையியல் தொடர்பாக நான் எழுதிய நூல்களை வாசிக்க வேண்டும். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள இறையியல் தொடர்பான அறிவு ஞானமுள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் மூலம் நான் கூறிவருகின்ற இறைஞானம் தொடர்பாக கேட்டறிய வேண்டும். இவைதான் அறிவைத் தேடும் வழிகளாகும்.

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்வழிகளில் நீங்கள் செல்லாமல் இருந்து கொண்டு நான் கூறிவருகின்ற தத்துவம் பிழையென்றும், “குப்ர்” – “ஷிர்க்” என்றும் நீங்கள் நம்புவதும், பேசுவதும், மற்றும் என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” என்று சொல்வதும் அறிவுடைமையல்ல.

மேற்கண்ட எனது ஆலோசனையின்படி நீங்கள் செயல்பட விரும்பவில்லையானால் இறையியல் மேதை ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அவர்களின் அறபு நூல்களான அல்புதூஹாதுல் மக்கிய்யா, புஸூஸுல் ஹிகம் முதலான நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்புக்களை தேடிப் பெற்று வாசியுங்கள்.

எனது இந்த ஆலோசனையும், அறிவுரையும் நீங்கள் மறுமையில் ஜெயம் பெற வேண்டுமென்பதை கருத்திற் கொண்டு எழுதப்பட்டதாகும். நீங்கள் மார்க்க ரீதியில் என்னுடன் இணைந்து எனது கையைப் பலப்படுத்த வேண்டுமென்பதோ, எமது பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழ வேண்டுமென்பதோ, அங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டுமென்பதோ எனது நோக்கமல்ல. என் கையை பலப்படுத்த ஆள் சேர்க்க நான் அரசியல்வாதியுமல்ல. மறுமையில் மோட்சம் பெற விரும்புவோர் என்னுடன் இணைவது அவர்களின் விருப்பமாகும்.

காத்தான்குடி உலமாசபை, சம்மேளன உறுப்பினர்களே!

உங்களின் நன்மை கருதி – எனது நன்மை கருதியல்ல – சில விடயங்கள் எழுதுகிறேன். செவியேற்றுச் செயல்படுவதும், செவிடர்கள் போல் இருப்பதும் உங்கள் விருப்பமாகும். அது உங்களின் உரிமையும், சுதந்திரமுமாகும்.

நான் கூறி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியல் தத்துவம் திருக்குர்ஆனும், திரு நபீயின் நிறை மொழிகளும், நபீமாரும், குத்புமாரும், மற்றும் வலீமாரும், தரீகாக்களின் தாபகர்களான ஷெய்குமார்களும் கூறிய தத்துவமேயன்றி திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ முரணான கருத்தல்ல என்பதை உங்களின் சிந்தனைக்கு இறைவன் மீது சத்தியம் செய்தவனாக தருகிறேன்.

நான் கூறுவது சத்தியக் கொள்கை என்பதை உலமாஉகளும், பொது மக்களும் நம்ப வேண்டுமென்பதற்காக நமதூரில் ஈமானிய(?) நெஞ்சங்களின் கெடுபிடி உச்சக்கட்டத்திலிருந்த சமயம் கொழும்பு ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களுக்கும், எனது தரப்பினருக்கும் நகர சபையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, எனக்கு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மூன்று மணி நேரம் தொடர்ந்து உரையாற்ற சந்தர்ப்பம் தாருங்கள், அந்த மாநாட்டிற்கு உலமாஉகளையும், சிந்தனையாளர்களையும், மற்றும் ஆய்வாளர்களையும் அழையுங்கள். நான் பேசி முடிந்தபின் நடுவர்களின் தீர்ப்பின் படி செயல்படுவோம். நான் “முர்தத்” மதம் மாறியவன்தான் என்று நடுவர்கள் முடிவெடுத்தால் என்னை அங்கேயே கொலை செய்து விடுங்கள் என்றும் கூறினேன். எனது கூற்று செவிடன் காதில் சங்கூதினாற் போலாகிவிட்டது.

அதன்பிறகு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவீ ரிஸ்வீ முப்தீ அவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பல கடிதங்கள் எழுதி, தரமான உலமாஉகளை அழைத்துக் கொண்டு காத்தான்குடிக்கு வாருங்கள். நான் மூன்று மணி நேரம் பேசுகின்றேன். அதன் பின் நாம் அனைவரும் ஒன்று கூடி விவாத அடிப்படையிலன்றி கருத்துப் பறிமாறல் அடிப்படையில் ஆய்வு செய்வோம் என்று அழைப்பு விடுத்திருந்தேன். இவ் அழைப்புக்கும் இன்று வரை பதில் இல்லை. இவ் அழைப்பும் கூட செவிடன் காதில் சங்கூதிய கதைபோலாகிவிட்டது. ரிஸ்வீ அவர்களுக்கு மீண்டும் தொடர்ந்து அறபியில் காரமான பல கடிதங்கள் எழுதினேன். அவற்றுக்கும் பதில் வரவில்லை. அவரும் தற்போது தலைமறைவு.

எனவே இதன்பிறகு அவர்களுடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்றும், நீதித்துறையின் சட்ட நடவடிக்கைதான் இவர்களுக்கான இறுதி முடிவென்றும், அதோடு நீதியாளர்கள் அனைவருக்கும் நீதியாளனான “அஹ்கமுல் ஹாகிமீன்” ஆன நாயனிடமே கை உயர்த்துவதென்றும் முடிவு செய்துவிட்டேன்.

ஆகையால் காத்தான்குடி கௌரவ உலமாஉகளும், சம்மேளன உறுப்பினர்களும் எனக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்து சட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் இன்னல்களுக்குள்ளாகிவிடாமலும் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் எனும் வாளால் “பத்வா” வழங்கிய முல்லா முப்திகளின் தோலை உரித்து முஸ்லிம் சமுகத்திற்கு அவர்கள் யாரென்றும், அவர்களின் பின்னணியிலிருந்து அறபு பத்வாவில் இல்லாத என் பெயரை தமிழ் பத்வாவில் எழுதிவர்களும் யாரென்று காட்டும் பணியை தொடர்வேன். இன்ஷா அல்லாஹ்!

அன்புக்குரிய முரீதீன்களே! முரீதாத்துகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

பின்னால் நான் எழுதுவது உங்களுக்கு நான் செய்யும் இறுதி உபதேசமாகும். நீங்களும் திருந்துங்கள், பிறரையும் திருத்துங்கள்.

நீங்கள் என்னிடம் “பைஅத்” செய்து கொண்ட முரீது, முரீதத் ஆவீர்கள்.

நீங்கள் அனைவரும் ஐந்து நேரமும் தவறாமல் தொழ வேண்டும். குறிப்பாக “ஸுப்ஹ்” தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுவிட்டு “அவ்றாத்” ஓத வேண்டும். மாதத்தில் ஒரு முறை நடைபெறும் “காதிரிய்யா” திருச்சபையில் கலந்து கொள்ள வேண்டும். திருச்சபைக்கு வரும் போது திருமண வீட்டுக்குச் செல்வது போல் ஆடம்பர உடையில் வராமல் பக்தி தொனிக்கும் உடையில் வர வேண்டும். ஓய்வுள்ள நேரங்களை பயனுள்ள விடயங்களில் கழிக்க வேண்டும். கோள் சொல்லுதல், புறம் பேசுதல், ஊர் பலாய் கழுவுதலையும், இன்னுமிது போன்ற தீக்குணங்களையும், தீச் செயல்களையும் முற்றாக விட வேண்டும். “துஆ” ஓர் அமல். அதில் கவனம் செலுத்த வேண்டும். கொள்கை தொடர்பாக நான் பேசிய CDகளை தினமும் சிறிது நேரமாவது செவியேற்க வேண்டும். இதேபோல் நான் எழுதிய அனைத்து நூல்களையும் தொடர்ந்து வாசித்து வர வேண்டும். விஷேடமாக கொள்கையோடு வாழ வேண்டும். உயிரை இழக்க நேரிட்டாலும் கொள்கையை இழக்கலாகாது. நான் கொள்கைக்காகவும், முரதீன்களுக்காகவுமே இங்கு வாழ்கிறேன். கொள்கையை பேசியும், எழுதியும் வாழ முடியாத சூழல் எனக்கு ஏற்படுமாயின் நான் வாழுமிடம் வேறு இடமாகவே மாறிவிடும். அவ்வாறு மாறினால் உங்களில் எவரும் என்னைக் காணமாட்டீர்கள்.

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
31.07.2021

RELATED ARTICLES

Most Popular

Recent Comments