தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஓர் ஊரில் ஓர் ஆன்மிக ஞானி இருந்தார். அவர் மூலம் அல்லாஹ்வை அறிந்து கொள்ள விரும்பியவொரு பகீர் அவரைத் தேடியலைந்து கண்டு பிடித்துக் கொண்டார். அவரிடம் தனது பேராவலை முன்வைத்து அல்லாஹ் பற்றி சொல்லித்தருமாறு கேட்டார் பகீர்.
பகீரின் முகத்தை கூர்ந்து கவனித்த அந்த ஞானி அவரின் வெளி முகம் மூலம் உள் முகத்தைப் பார்த்து அவரின் தேவையை நிறைவு செய்ய முடிவு செய்தார்.
மாலை ஐந்து மணிக்கு தனது வீட்டுக்கு வருமாறு கூறி அவரை அனுப்பி வைத்தார். இருவரும் திட்டமிட்ட படி ஐந்து மணிக்கு சந்தித்தனர்.
இறைஞானி பகீரை அழைத்துக் கொண்டு கடலோரமிருந்த தனது தோட்டத்துக்கு வந்து அவரை அமரச் செய்து, இது எனது தோட்டம், நாமிருவரும் எழுந்து இதைச் சுற்றிப் பார்த்தபின் இங்கு வந்தமர்ந்து நமது தேவையை முடித்துக் கொள்வோம் என்று அவரை அழைத்துச் சென்று தோட்டத்தை முழுமையாக காட்டினார். தென்னையை காட்டி இது தென்னை என்றும், பலா மரத்தைக் காட்டி இது பலா என்றும், அப்பிள் செடியைக் காட்டி இது அப்பிள் செடி என்றும் விபரம் சொல்லிக் கொடுத்தார்.
பின்னர் இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் பகீர் ஞானியிடம் தனக்கு அல்லாஹ் பற்றிச் சொல்லித் தாருங்கள் என்றார்.
அதற்கு அந்த ஞானி நான் சொல்லித் தந்து விட்டேன். ஆனால் நீ விளங்கிக் கொள்ளவில்லை. நீ அல்லாஹ் என்றால் யாரென்று கேட்டாய். தோட்டம் என்ற சொல்லை வைத்து அவனை விளங்கப்படுத்துவதற்காகவே உன்னை தோட்டத்துக்கு அழைத்து வந்தேன் என்றார்.
நீங்கள் சொல்வது எனக்கு சரியாகப் புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் என்றார் பகீர்.
அதற்கு அந்த இறைஞானி பகீரே! தோட்டம் என்பது இங்குள்ள அனைத்து மரங்கள், செடி, கொடிகள் யாவையும் உள்வாங்கிய ஓர் இடத்தின் பெயர்தான். இதுவன்றி தோட்டமென்று தனியான ஒன்றில்லை.
இவ்வாறுதான் “அல்லாஹ்” என்ற திரு நாமமுமாகும். அல்லாஹ் படைத்த அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், சுவர்க்கம், நரகம், மற்றுமுள்ள அனைத்தையும், உன்னையும், என்னையும் உள்வாங்கிய ஒரு சொல்தான் அல்லாஹ் என்ற சொல் என்று புரிந்து கொள் என்றார்.
அவ்வாறாயின் எல்லாமே அவனென்றா சொல்கிறீர்கள்? என்று கேட்டார் பகீர்.
ஆம், அவனுக்கு வேறான ஒரு துரும்பு கூடக் கிடையாது. உன் பெயர் “பகீர்” என்றால் அது உனது உடலின் பெயர். உனது உடல் எவற்றையெல்லாம் உள்வாங்கியதாக உள்ளதோ அவையாவையும் உள்வாங்கிய உடலுக்கே பகீர் என்ற உனது பெயராகும்.
“பகீர்” என்ற பெயர் உனது உடலிலுள்ள அனைத்தையும் உள்வாங்கிய உனது மொத்த உடலுக்கே “பகீர்” என்று சொல்லப்படும்.
உனது உடலில் கை உண்டு, கால் உண்டு, கண் உண்டு, காது உண்டு. இவ்வாறு எண்ணற்ற உறுப்புக்கள் உள்ளன. இவை அனைத்தையும் உள்வாங்கிய உனது உடலுக்கு “பகீர்” என்று பெயர் சொல்வது போல் அல்லாஹ் படைத்த அனைத்து பிரபஞ்சங்களையும் உள்வாங்கிய ஒரு சொல்தான் அல்லாஹ் என்ற சொல்லாகும்.
“அல்லாஹ்” எனும் இத்திரு நாமம் மட்டும்தான் அவனின் “தாத்”திற்குரிய பெயர். கர்த்தாவின் தாத்துக்குரிய திரு நாமம். இது தவிரவுள்ள ஏனைய 99 திருநாமங்களும் அவனின் “ஸிபாத்” தன்மைகளைக் குறிக்கும் திரு நாமங்களேயன்றி அவனின் “தாத்”துக்குரிய பெயர்களல்ல.
الله علم للذّات العليّة، وسائر الأسماء أسماء الإسم ‘ الله ‘ منسوبةٌ إلى الصفات
அல்லாஹ்வுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன என்றால் இதன் சரியான பொருள் “அல்லாஹ்” என்ற திருப் பெயருக்கு 99 பெயர்கள் உள்ளன என்பதாகும். அல்லாஹ் என்ற பெயர் மட்டும் அவனின் அனைத்துப் பெயர்களையும் உள்வாங்கிய பெயராகும்.
الله هو الإسم الجامع لجميع الأسماء الإلهيّة
ஞான மகான் கொடுத்த விளக்கத்தைச் செவியேற்றிருந்த பகீர் அல்ஹம்துலில்லாஹ்! நான் இதுகாலவரை அல்லாஹ் பற்றி நீங்கள் இப்போது சொன்னதற்கு மாறாகவே நம்பியிருந்தேன்.
நான் சிறுவனாயிருந்த காலத்தில் என்னை விட வயதில் கூடியவர்கள் வானத்தின் பக்கம் கை காட்டி கதைத்து வந்ததாலும், அல்லாஹ் என்று சொல்லும் போது வானத்தின் பக்கம் பார்த்து வந்ததினாலும் அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்று நம்பியிருந்தேன்.
எனக்கு சுமார் 20 வயதான போது எனது நண்பர் ஒருவர் என்னிடம் அல்லாஹ் பற்றி நீ எவ்வாறு அறிந்து வைத்துள்ளாய்? என்று கேட்டார். நான் அறிந்ததை அவரிடம் சொன்னேன்.
அதற்கவர் நீ அறிந்து வைத்திருப்பது முற்றிலும் பிழையாகும். நீ அறிந்ததை விட்டு விடு. அல்லாஹ் திருக்குர்ஆனில் ஐந்து இடங்களில் அவன் அர்ஷில் – சிம்மாசனத்தில் இருப்பதாகக் கூறியுள்ளான். திருக்குர்ஆனை நம்பாமல் வேறெதை நம்புவது? என்று என்னிடம் கூறினார். அவரின் பேச்சை நம்பி சுமார் மூன்று வருடங்கள் அவர் கூறிய கொள்கையில் காலம் கழித்தேன்.
அதன் பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கை நாட்டுக்கு வந்த ஒரு தரீகாவின் ஷெய்கு அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடன் சில நாட்கள் தொடர்பாயிருந்த வேளை அவர் இறைவனைப் பற்றி முதலில் சொன்னவர்கள் கூறியதற்கு மாறாக புதிய பாணியில் இறைவனைப் பற்றிச் சொல்லித் தந்தார்.
அவர் சொல்லித் தந்த கொள்கையில் எனக்கு நல்லெண்ணம் ஏற்பட்டது. அதே கொள்கையில் நீண்ட காலம் இருந்தேன். அவர் எல்லாமே அல்லாஹ்தான் என்றும், அவன் தவிர வேறொன்றுமே இல்லையென்றும் சொல்லித் தந்தார். அவர்தான் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று சொன்னார்.
அவரின் வரலாறைக் கேட்டுக் கொண்டிருந்த ஞான மகான் இறுதியாக சந்தித்தவர்தான் உங்களுக்கு சரியான கொள்கையை சொல்லித் தந்துள்ளார். அவர் சொன்ன வழியிலேயே செல் என்று கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் அந்த பகீர் “வஹ்ததுல் வுஜூத்” வழி நடந்து மேலான நிலை அடைந்தார்.
இன்னும் ஒரு குட்டிக்கதை
அல்லாஹ்வை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்ட ஒருவர் அவனை அறிந்து கொள்ளும் நோக்குடன் ஒரு ஞான குருவை தேடி அலைந்தார். நீண்ட நாட்களின் பின் ஓர் இறைஞானியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அவரிடம் அல்லாஹ் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார். அந்த ஞானி அவரிடம், அல்லாஹ் பரிசுத்தமானவன். அவனைப் பற்றிச் சொல்வதாயின் நானும் பரிசுத்தமானவனாக இருக்க வேண்டும். நானோ முழுக்காளியாக இருக்கிறேன். குளிப்பதற்கு நீர் தேடி அலைகிறேன். நீர் கிடைக்கவில்லை. கிடைத்த பின் குளித்துவிட்டு சொல்லித் தருகிறேன் என்றார்.
போனவர் ஒன்றும் புரியாதவராக பெரியவரே! நீங்கள் சொல்வதொன்றும் எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் என்றார்.
அதற்கு அந்த ஞானி அல்லாஹ் பற்றி நான் உனக்குச் சொல்வதை விட கடலில் வாழும் மீன்கள் உனக்குச் சொல்லித் தருவதே பொருத்தமென்று நான் நினைக்கிறேன் என்று கூறி நீ இப்போதே கடற்கரைக்குச் செல். கடலின் முன்னால் நின்று
يا أسماك البحر أخبروني عن الله تعالى
கடல் வாழ் மீன்களே! எனக்கு அல்லாஹ்வைச் சொல்லித் தாருங்கள் என்று சொல் என்று அனுப்பி வைத்தார்.
அவர் கடற்கரைக்கு வந்து ஞானி சொல்லிக் கொடுத்தவாறே கடலுக்கு முன்னால் நின்று சொன்னார். அவர் அவ்வாறு சொல்லி முடிய மீன் கூட்டமொன்று கடற்கரையோரம் தோன்றியது.
அந்த மீன்களில் ஒரு மீன் அந்த மனிதருடன் பேசியது. அல்லாஹ்வை சொல்லித் தருமாறு கேட்டீர்கள். மிகவும் சந்தோஷம். சொல்லித் தர நாங்கள் மிக விருப்பமுள்ளவர்களாகவே உள்ளோம். ஆனால் ஒன்று. அவன் பரிசுத்தமானவன். அவன் பற்றிப் பேசுவதாயின் பேசுவோர் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். நாங்களோ முழுக்காளிகளாக இருக்கிறோம். குளிப்பதற்கு நீர் தேடி அலைகிறோம். இன்னும் நீர் கிடைக்கவில்லை. கிடைத்தபின் குளித்து சுத்தமானபின் சொல்லித் தருகிறோம் என்று கூறி மறைந்துவிட்டன.
போன மனிதன் தலை குழம்பியவராக சிறிது நேரம் கடலோரம் அமர்ந்து சில நிமிட நேரம் சிந்திக்கலானார். ஞானி சொன்ன பதில் போன்றுதானே மீனும் சொன்னது. ஞானியும் நீரைக் காணவில்லை என்கிறார். நீரில் வாழும் மீனும் நீரைக் காணவில்லை என்று சொல்கிறதே! இதில் ஓர் மர்மம் இருக்க வேண்டும். அந்த மர்மம் பற்றி ஞானியிடமே கேட்போம் என்று முடிவு செய்து ஞானியிடம் வந்து நடந்ததைச் சொன்னார்.
ஞானி அப்போதுதான் அவருக்கு அல்லாஹ் பற்றிச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
சகோதரா! நீ அல்லாஹ்வை அறிந்து கொள்ள ஆசைப்பட்டு வந்துள்ளாய். அல்லாஹ்வை அறிய வேண்டும், அவனைக் காண வேண்டுமென்ற விருப்பம் மனிதனுக்கு வரும். அது வரவும் வேண்டும். طَوْعًا أَوْ كَرْهًا விரும்பியோ, விரும்பாமாலோ மனிதனுக்கு அவ்வாறான எண்ணம் வருவதற்குக் காரணம் அவன் இவனாயிருப்பதேயாகும். அவன் தன்னை ஓர் உடையில் மட்டும் பார்க்க விரும்பியிருந்தால் முதற் “தஜல்லீ” முதல் வெளிப்பாடான பெருமானாருடன் “ளுஹூர்” வெளியாவதை நிறுத்திக் கொண்டிருப்பான். அவன் அவ்வாறு செய்யாமல் ஒவ்வொரு நொடியிலும் கோடிக்கணக்கான “மள்ஹர்” பாத்திரங்களில் வெளியாகி அவன் தன்னைப் பார்த்து மகிழ்கிறான்.
எந்தவொரு படைப்பாயினும் அது உயிரினமாயினும், வெளிப்படையான உயிரில்லாத கற் கரடு, புல் பூண்டு போன்றவையாயினும் எல்லாமே அவனின் வெளிப்பாடுதான். அவனேதான் அவையாகவெல்லாம் வெளியாகி பிறர் பார்த்து மகிழ்வதற்கும், தான் தன்னைப் பார்த்து மகிழ்வதற்கும் இவ்வாறெல்லாம் படைத்துள்ளான். நீயும் அவனே! நானும் அவனே! எல்லாமே அவனேதான்! என்று கூறி முடித்தார்.
கதைகள் குட்டிக் கதைகளாயிருந்தாலும் அவை தருகின்ற தத்துவங்களோ மிகப் பிரமாதம்.
தொடரும்..