தொடர் 02
قال العلّامة الغزويني في شرح عقائد النّسفي ‘ أنّ قول المعتزلة وجمهورَ البخاريّة أنّ الحقّ تعالى بكلِّ مكانٍ بعلمه وقدرته وتدبيره دون ذاته باطلٌ ، (وقوله باطل خبرٌ لقوله أنّ قول المعتزلة) (اليواقيت ج 1، ص 11)
அல்லாமா ஙஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அகாயிதுன் நஸபீ” என்ற நூலின் விரிவுரையில், (முஃதஸிலாக்களும், புஹாறாவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அல்லாஹ் ஒவ்வோர் இடத்திலும் தனது அறிவைக் கொண்டும், சக்தியைக் கொண்டும் மட்டுமே வெளியாகி இருக்கின்றானேயன்றி தனது “தாத்”தோடு வெளியாகவில்லை) என்ற பேச்சு வீணான பேச்சாகும் என்று கூறியுள்ளார்கள்.
(அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 11)
இமாம் ஙஸ்வீனீ அவர்கள், அல்லாஹ் தனது “தாத்” கொண்டு வெளியாகாமல் தனது சக்தி கொண்டும், கண்காணிப்பு கொண்டும் மட்டுமே வெளியாகியுள்ளான் என்ற பலரின் கருத்து பிழை என்றும் சொல்கிறார்கள்.
அவர்கள் தனது பேச்சுக்கு ஆதாரமாக பின்வருமாறு காரணமும் சொல்லியுள்ளார்கள்.
يلزم من القول بأنّ الله تعالى معنا بالعِلم فقط دون الذّات اِسْتِفْلَالُ الصِّفات بِأَنْفُسِهَا دون الذّات، وذلك غيرُ معقول
(اليواقيت ج 1، ص 11)
அல்லாஹ் தனது “தாத்” கொண்டுதான் – “தாத்” உடனேதான் படைப்பாக வெளியாகியுள்ளான் என்பதே எதார்த்தமும், உண்மையுமாகும். உண்மை இவ்வாறிருக்கும் நிலையில் உலமாஉகளிற் சிலர் இல்லை பலர் அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகாமல் “ஸிபாத்” எனும் தன்மைகள் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று உடும்புப் பிடி பிடித்து நிற்பது தண்டிக்கப்பட வேண்டியதாகும். அது “நப்ஸின்” குனமும், மனவெழுச்சியின் பிரதிபலிப்புமாகும்.
அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகாமல் அவனுடைய “ஸிபாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று சொல்வோரிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.
சங்கை மிகு உலமாஉகளே! அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகவில்லை. அவன் தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று கூறுகிறீர்கள்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் اللهُ مَعَكُمْ அல்லாஹ் உங்களுடன் உள்ளான் என்றும், وَهُوَ مَعَكُمْ அவன் – அல்லாஹ் உங்களுடன் உள்ளான் என்றும், واللهُ معَ الصَّابِرِيْنَ அல்லாஹ் பொறுமையாளர்களுடன் உள்ளான் என்றும், இன்னுமிவை போன்ற பல இடங்களில் مَعَ – “மஅ” என்ற சொல்லுடன் கூறியுள்ளான். “மஅ” என்றால் உடன் என்று பொருள் வரும். இவ்வாறு பொருள் வருவதால் அவன் வேறு, படைப்பு வேறு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. “மஅ” உடன் என்ற சொல்லின் தாற்பரியத்தை புரிந்து கொண்டால் “உடன்” உடனே விளங்கிவிடும்.
மேற்கண்ட வசனங்கள் மூலம் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற கருத்தும், அவன் படைப்புடன் இருக்கிறான் என்ற கருத்தும் பேத புத்தியுள்ளவர்களுக்கு விளங்கும். கூரிய, தெளிவான புத்தியுள்ளவர்களுக்கல்ல.
இக்கருத்து இரண்டு வஸ்த்துக்களைக் குறிக்கின்றன. ஒன்று அல்லாஹ். மற்றது படைப்பு. அல்லாஹ் படைப்புடன் இருக்கிறான் என்ற வசனம் இரண்டு வஸ்த்துக்களை குறிக்கிறதென்பது தெளிவாக விளங்குகிறது.
அப்துல்லாஹ் என்பவன் தனது தாயுடன் இருக்கிறான் என்ற வசனம் மூலம் இரண்டு வஸ்த்துக்கள் இருப்பது விளங்கப்படுவது போன்று.
அல்லாஹ் படைப்புடன் இருக்கிறான் என்றால் அவ்விரண்டிலும் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிலை பெற்றது எது? தன்னைக் கொண்டு நிலை பெறாமல் அல்லாஹ்வைக் கொண்டு நிலை பெற்றது எது? என்று அறிய வேண்டும்.
அனைவரும் அறிந்த விடயம் என்னவெனில் அல்லாஹ் மட்டும்தான் தன்னைக் கொண்டு நிற்பவன், மற்றெல்லாப் படைப்புகளும் அல்லாஹ்வைக் கொண்டு நிற்கின்றன என்பதாகும்.
(இவ்விரண்டையும் விளங்கினால் போதும்) قَائِمٌ بِاللهِ – قَائِمٌ بِنَفْسِهِ என்று இரண்டு வகையுண்டு. “காயிமுன் பினப்ஸிஹீ” என்றால் தன்னைக் கொண்டு நிற்பது என்று பொருள் வரும்.
“காயிமுன் பில்லாஹ்” என்றால் தன்னைக் கொண்டு நிற்காமல் அல்லாஹ்வைக் கொண்டு நிற்பது என்று பொருள் வரும்.
அல்லாஹ் தவிர உலகிலுள்ள படைப்புக்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நிற்கின்றன. அல்லாஹ் மட்டுமே தன்னைக் கொண்டு நிற்பவனாவான். இதுவே எதார்த்தம்.
அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றால் அவன் நிலைபெற்றிருப்பது தன்னைக் கொண்டேயன்றி இன்னொன்றைக் கொண்டல்ல. இன்னொன்றின் உதவி கொண்டல்ல என்ற கருத்து வரும்.
படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்றால் ஒரு வாழை மரம் ஒரு முட்டில் அல்லது முட்டைக் கொண்டு நிற்பது போல் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு விளங்கினால் இங்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவையாகின்றன. ஒன்று வாழைமரம், மற்றது முட்டு. விழவிருந்த வாழை மரம் விழாமல் முட்டில் நிற்கின்றது என்று சொல்வது போல். இதேபோன்றுதான் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்று புரிந்து கொள்ளக் கூடாது.
இவ்வாறுதான் படைப்பு என்பது அல்லாஹ் என்ற முட்டைக் கொண்டு நிற்கிறதென்று வைத்துக் கொண்டால் இரண்டு வஸ்த்துக்கள் தேவையாகின்றன. ஒன்று அல்லாஹ், மற்றது படைப்பு.
நாம் கூறி வந்த விளக்கத்தின்படி வாழை மரம் முட்டில் நிற்பதுபோல் தான் படைப்பு என்பது அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதுமாகும் என்று வைத்துக் கொண்டால் இங்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை. ஒன்று அல்லாஹ். மற்றது படைப்பு. இரண்டில்லை என்பது இஸ்லாமிய கொள்கையின் ஆணி வேராகும்.
இங்கு அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்கிறான் என்று வைத்துக் கொண்டால் படைப்பு அவனைக் கொண்டு நிற்கிறதென்று கொள்ள வேண்டும். இவ்வாறு கொள்ளாமல் படைப்பு என்பதும் அவன் போல் தன்னைக் கொண்டு நிற்கிறதென்று வைத்துக் கொண்டால் இந்த இடத்தில் அல்லாஹ்வுக்கு நிகர் வந்து விடும். அதாவது அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பது போல் படைப்பும் தன்னைக் கொண்டு நிற்கிறதென்ற கருத்து வரும். இந்த நம்பிக்கை “ஷிர்க்” இணை வைத்தலாகும்.
எனவே இவ்வாறு விளங்கும் போது தன்னைக் கொண்டு நிலை பெற்றிருத்தல் என்ற விடயத்தில் அல்லாஹ்வும், படைப்பும் ஒரே மாதிரியானதென்று நிகர் வந்து விடும். அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று சொல்வதிலும் இந்தச் சிக்கல் உண்டு.
ஆகையால் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்றால் இரண்டு வஸ்த்துக்கு இடமில்லாத வகையில் விளங்க வேண்டும்.
அவ்வாறு விளங்குவதாயின் – படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்பதற்கு வாழை மரத்தையும், முட்டையும் உதாரணமாகக் கொள்ளாமல் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதானது பாய் பன்னைக் கொண்டு நிற்பது போலுமென்றும், கைத்தடி மரத்தைக் கொண்டு நிற்பது போலுமென்றும், ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்பது போலுமென்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வுதாரணங்களில் இரண்டு வஸ்த்துக்கு இடமில்லாமற் போய்விடும். பாய் பன்னைக் கொண்டு நிற்கிறதென்ற உதாரணம் வாழை மரம் முட்டைக் கொண்டு நிற்கிறதென்ற உதாரணம் போன்றதல்ல. ஏனெனில் இவ் உதாரணத்திற்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவையில்லை. பாய் பன்னைக் கொண்டு நிற்கிறதென்பதற்கு பெயரளவில்தான் இரண்டு வஸ்த்துக்கள் சொல்லப்படுகிறதேயன்றி எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை. பன் என்றும், பாய் என்றும் இரண்டு பெயர்கள் சொல்லப்பட்டாலும்கூட அங்கு எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை. இருப்பது பன் மட்டுமே!
இவ்வாறுதான் ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறதென்பதுமாகும். இவ்வுதாரணத்திலும் இரண்டு வஸ்த்துக்களுக்கு இடமே இல்லை. இருப்பது பஞ்சு மட்டும்தான் ஷேட் அல்ல.
எனவே, واللهُ مَعَكُمْ அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்ற வசனத்திற்கும், وَهُوَ مَعَكُمْ அவன் உங்களுடன் இருக்கிறான் என்ற வசனத்திற்கும் இரண்டில்லாத வகையில் பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சொல்வதற்கு اَلْمَعِيَّةُ الذَّاتِيَّةُ தாத்தோடு சம்பந்தப்பட்ட “உடன்” என்று ஸூபீ மகான்கள் சொல்வார்கள்.
இரும்பு ஆணியுடன் உள்ளது. பஞ்சு ஷேட்டுடன் உள்ளது, மரம் தடியுடன் உள்ளது என்று சொல்வது போன்றதே மேற்கண்ட வசனங்களாகும். இரண்டுக்கு இடமில்லாத “உடன்” என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
தலைப்பில் நான் எழுதியது போல் அல்லாஹ் தனது “தாத்” கொண்டுதான் படைப்பாக “தஜல்லீ” வெளியாகியுள்ளானே தவிர தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டு மட்டும் வெளியாகவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று சொல்வோர் எதையும் வணங்காமலேயே “ஷிர்க்” வைத்தவர்களாகி விடுகின்றனர்.
குறிப்பு: “ஸிபத்” என்பது “தாத்”தை விட்டும் ஒருபோதும் பிரியாதென்பதும், அதை எவராலும் பிரிக்க முடியாதென்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இது தொடர்பான விளக்கம் கடந்த தொடர்களில் கூறப்பட்டுள்ளன.
துவிதம், அத்வைதம் இரண்டிலும் துவிதம் இருள், அத்வைதம் ஒளி. “புத்வா” வழங்கிய முல்லாக்கள் தமது “துன்யா” எனும் போதை காரணமாக இஸ்லாமிய கொள்கையை தலை கீழாய் விளங்கிக் கொண்டார்கள்.
தொடரும்…