Thursday, October 10, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மிஸ்ர் நாட்டின் தலை நகர் கெய்ரோவில் ஹிஜ்ரீ 905ல் நடைபெற்ற ஸூபிஸ கருத்தரங்கு.

மிஸ்ர் நாட்டின் தலை நகர் கெய்ரோவில் ஹிஜ்ரீ 905ல் நடைபெற்ற ஸூபிஸ கருத்தரங்கு.

தொடர் 03

அல்லாஹ் தனது “தாத்” கொண்டுதான் படைப்பாக வெளியாகியுள்ளான் என்ற உண்மை தத்துவத்தை ஒருவன் மறுத்து அவன் தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று அறியாமையால் சொல்வானாயின் அவன் மன்னிக்கப்படுவான்.

ஆயினும் அவன் மன முரண்டாக காத்தான்குடி அப்துர் றஊப் அவ்வாறு சொல்வதால் அது சரியாக இருந்தாலும் மறுக்கத்தான் வேண்டும் என்று மறுத்தானாயின் அவன் மன்னிக்க முடியாத பெரும் பாவியாவான். அவன் காபிர் ஆவான் என்று சொன்னாற் கூட அது பிழையாகாது.

கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் ஹிஜ்ரீ 905ல் இற்றைக்கு 538 வருடங்களுக்கு முன் நடைபெற்ற கருத்தரங்கில் அல்லாஹ் தனது “தாத்” கொண்டுதான் படைப்பாக வெளியானான் என்ற கருத்தை நிறுவ வந்த அஷ் ஷெய்கு இப்றாஹீம் அல்மவாஹிப் அஷ்ஷாதுலீ அவர்கள் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதற்கு والله معكم அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான் என்ற திரு வசனத்தையும், وَهُوَ مَعَكُمْ அவன் உங்களுடன் இருக்கின்றான் என்ற திரு வசனத்தையும் ஆதாரமாக கூறினார்கள்.

இவ்விரு வசனமும் எந்த வகையில் – எந்த அடிப்படையில் அல்லாஹ் தனது “தாத்” உடன்தான் படைப்பாக வெளியானான் என்பதற்கு ஆதாரமாகுமென்றால் அல்லாஹ் என்ற திருப் பெயர் அவனின் “அஸ்மாஉ” திரு நாமங்கள், “ஸிபாத்” தன்மைகள் எல்லாம் அடங்கிய “தாத்”தின் பெயர் என்ற வகையில் அவன் உங்களுடன் இருக்கின்றான் என்றால் – தாத், ஸிபாத், அஸ்மாஉ அனைத்துடனுமே இருக்கின்றான் என்பது கருத்து.

ஏனெனில் “தாத்”தை விட்டும் அதன் பெயர்களோ, தன்மைகளோ பிரியமாட்டாது. அவை அவனின் “தாத்”ஐ விட்டும் ஒரு கணமேனும் பிரியமாட்டாது.

الصفة لا تفارق الموصوف
என்ற பொது விதி அடிப்படையில் அல்லாஹ்வின் “தாத்”தை விட்டும் அவனின் செயல்களோ, பெயர்களோ, தன்மைகளோ பிரிவதில்லையாதலால் அவன் உங்களுடன் இருக்கின்றான் என்றால் தனது “தாத்”தோடுதான் இருக்கிறான் என்ற கருத்து தெளிவாகிறது.

ஜனாதிபதி தனது அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்றால் அவர் தனது மாளிகையில் இருக்கும் நிலையில் அவரின் தன்மைகளோடும், பெயர்களோடும் மட்டும் அவர் அமைச்சர்களோடு பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொல்வதாயின் ஜனாதிபதியின் “தாத்” அமைச்சர்களோடு இருக்க வேண்டும்.

எனவே, மேற்கண்ட இரண்டு திரு வசனங்கள் மூலமும் அவன் தனது “தாத்” கொண்டே படைப்புக்களாக வெளியாகியுள்ளான் என்ற உண்மையை அஷ் ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் நிறுவினார்கள்.

இவர்களுடன் பேச வந்த மூவரும், இன்னும் சிலரும் மௌனிகளாக இருந்துவிட்டு

فقالوا له فهل وافقك أحدٌ غيرُ الغزويني في ذلك؟ فقال نعم،
ذكر شيخ الإسلام ابن اللّبّان في قوله تعالى ‘ ونحن أقرب إليه منكم ولكن لا تبصـرون’، إنّ في هذه الآية دليلا على أقربيّته تعالى من عبده قربا حقيقيّا كما يليق بذاته لتعاليه عن المكان ، إذ لو كان المراد بقربه تعالى من عبده قُربَه بالعلم أو بالقدرة أو بالتّدبير مثلا لقال ولكن لا تعلمون ونحوه،

அவரிடம் பின்வருமாறு எதிர் தரப்பினர் கேட்டனர். உங்களின் இந்தக் கருத்துக்கு ஆதரவாக அல் அல்லாமா ஙஸ்வீனீ அவர்களின் கருத்தைக் கூறினீர்கள். இவர் தவிர யார் உங்களின் கருத்துக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று எதிர் தரப்பு கேட்டார்கள்.

அதற்கு அஷ்ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் ஆம், ஆதரவாக பலர் உள்ளார்கள். அவர்களில் அஷ்ஷெய்கு இப்னுல்லப்பான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். அவர் பின்வருமாறு கூறுகிறார்.

அவரின் ஆதாரம்:

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُوْنَ

“நாங்கள் அவனுக்கு – மரணப்படுக்கையில் இருப்பவனுக்கு உங்களைவிட நெருங்கியுள்ளோம், எனினும் நீங்கள் பார்க்காமல் உள்ளீர்கள்” (திருக்குர்ஆன் 56-85)

ஒருவன் மரண வருத்தத்தில் இருக்கும் போது அவனைச் சுற்றி, அவனை நெருங்கி அவனின் உறவினர் இருப்பார்கள். இது உலகிலுள்ள நடைமுறை.

திரு வசனத்தில் மரணப்படுக்கையிலுள்ளவனை நெருங்கிச் சூழ்ந்திருப்பவனை விழித்து அல்லாஹ் பின்வருமாறு சொல்கிறான்.

நீங்கள் நோயாளிக்கு நெருங்கியிருப்பதை விட நாங்கள் அவனுக்கு மிக நெருங்கியுள்ளோம்.
(திருக்குர்ஆன்: 56-85)

அதாவது உறவினர்களான நீங்கள் நோயாளிக்கு நெருங்கியிருப்பதை விட அல்லாஹ்வாகிய நான் அவனுக்கு நெருங்கியுள்ளேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

நோயாளிக்கு அவனின் உறவினர் மற்றவர்களை விட நெருங்கியிருப்பது வழக்கம். சிலர் அவனின் கையை பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் வயிற்றை தடவிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் அவன் நெற்றியை முத்தமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவர்களை விட அல்லாஹ் அந்த நோயாளிக்கு நெருங்கியுள்ளான் என்றால் அந்த நெருக்கம் எப்படியான நெருக்கமாயிருக்கும் என்று நான் சொல்லாமலேயே புத்தி ஜீவிகள் விளங்கிக் கொள்வார்கள். புத்தி ஜீவிகள் மட்டுமன்றி பின்னால் வரும் வசனத்தைப் பார்த்தால் ஸ்ரீ லங்கா MGR கூட விளங்கிக் கொள்வார்.

மேற்கண்டவாறு கூறிய அல்லாஹ் அந்த வசனத்தை ولكن لا تبصرون என்று கூறி முடித்துள்ளான்.

நான் நோயளிக்கு உங்களை விட நெருங்கியிருந்தும் கூட நீங்கள் என்னைக் காணாமல் இருக்கிறீர்கள் என்று வேதனைக் குரலில் கூறுகிறான். கண்ணுக்கு முன் அவனை வைத்துக் கொண்டு காணாமல் இருப்பது கவலைக்குரியதே!

அறபு மொழி அறிந்தவர்களும், அறிவாற்றல் உள்ளவர்களும் விழியை விரித்துப் பார்க்க் வேண்டிய இடம்தான் இது.

அல்லாஹ் நோயாளிக்கு நெருங்கியிருப்போரை விழித்து நீங்கள் பார்க்காமல் இருக்கிறீர்கள் என்று கூறுகிறான்.

நீங்கள் பார்க்காமல் இருக்கிறீர்கள் என்ற வசனம் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகி உள்ளான் என்பதை உணர்த்துவது புத்திமான்களுக்கு மறையாது. அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகாமல் சக்தி, நாட்டம் போன்றவை கொண்டு வெளியாகியிருந்தால் ولكن لا تعلمون நீங்கள் அறியாமல் உள்ளீர்கள் என்று கூறியிருப்பான். لا تبصـرون நீங்கள் பார்க்காமல் இருக்கீறீர்கள் என்ற சொல்தான் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதை தெளிவாக காட்டும் சொல்லாகும். “தாத்” கொண்டு அவன் வெளியாகவில்லையானால் لا تبصرون நீங்கள் பார்க்காமல் இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கமாட்டான்.

இவ்வாறு அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகி உள்ளான் என்று இப்றாஹீம் அல்மவாஹிப் அஷ் ஷாதுலீ கூறினார்கள்.

فلمّا قال ‘ ولكن لا تبصرون ‘ دلّ على أنّ المراد به القربُ الحقيقيّ المُدرك بالبصر لو كشف الله عن بصرنا ، فإنّ من المعلوم أنّ البصـر لا تعلّق لإدراكه بالصّفات المعنويّة، وإنّما يتعلّق بالحقائق المرئيّة،

மேற்கண்ட

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُوْنَ

என்ற வசனத்தில் “லா துப்ஸிறூன்” நீங்கள் காணாமல் இருக்கிறீர்கள் என்று அல்லாஹ் கூறியதிலிருந்து அந்த நெருக்கம் பார்வையால் எட்டிக் கொள்ளப்படுகின்ற நெருக்கமேயன்றி அறிவால் அறியப்படுகின்ற நெருக்கமில்லை என்பது தெளிவாகிவிட்டது. ஏனெனில் கண் பார்வையால் கருத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை அறிய முடியாது என்பதாகும்.

وكذلك القول في قوله تعالى ‘ ونحن أقرب اليه من حبل الوريد ‘ هو يدلّ أيضا على ما قلناه، لأنّ أفعل من يدلّ على الإشتراك في اسم القرب وإن اختلف الكيف، ولا اشتراك بين قرب الصّفات وقرب حبل الوريد، لأنّ قرب الصفات معنويّ وقربَ حبل الوريد حِسِّيٌّ ، ففي نسبة أقربيّته تعالى إلى الإنسان من حبل الوريد الّذي هو حقيقيّ، أي بالّذات اللّازم لها الصّفاتُ،

மேற்கண்ட வசனம் போன்றதே பின்வரும் இத்திரு வசனமுமாகும்.

ونحن أقرب اليه من حبل الوريد

இத்திரு வசனத்தின் பொருள் “நாங்கள் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளோம்” என்பதாகும்.

அதாவது அல்லாஹ் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பு அவனுக்கு நெருங்கியிருப்பதை விட நாங்கள் அவனுக்கு நெருங்கியுள்ளோம். (திருக்குர்ஆன் 50-16)

அல்லாஹ்வுக்கும், மனிதனுக்குமுள்ள நெருக்கம் பற்றி அல்லாஹ் கூறுகையில் அவன் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பை விட – முதுகெலும்பை விட நெருங்கியிருப்பதாக கூறியுள்ளான்.

“ஹப்லுல் வரீத்” என்ற வசனத்திற்கு “பிடரி நரம்பு” என்று மொழியாக்கம் செய்வதே வழக்கம். நானும் அவ்வாறு மொழியாக்கம் செய்து எழுதியுமுள்ளேன்.

எனினும் சுமார் 6 மாதங்களாக அவ்வாறு மொழியாக்கம் செய்யாமல் “முதுகு முள்” என்று மொழியாக்கம் செய்து வருகிறேன். பிடரி நரம்பு என்பதை விட முதுகு முள் என்று சொல்வது பொருத்தமாகத் தெரிகிறது.

பிடரி நரம்பாயினும், முதுகு முள்ளாயினும் அது மனிதனில்தான் உள்ளதேயன்றி மனிதனை விட்டும் வெளியே உள்ளதல்ல. முதுகுமுள் என்று கூறினாலும் அது மனிதனின் மிகப் பிரதானமான இடத்திலேயே உள்ளது. முதுகுமுள் இல்லையென்றால் மனிதன் வாழ முடியாது. மனிதனே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பிடரி நரம்பென்றோ, முதுகுமுள் என்றோ எப்படி வைத்துக் கொண்டாலும் அது மனிதனின் முக்கிய இடத்திலேயே அமைந்துள்ளது. அதை விட அல்லாஹ் மனிதனுக்கு நெருங்கியுள்ளான் என்றால் அவனே மனிதனாக உள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும்.

“அக்றபு” – أَقْرَبُ என்ற சொல் “அப்அலு” என்ற அமைப்பில் உள்ளது. இதற்கு நெருங்கினவன் என்று பொருள் கூறாமல் மிக நெருங்கினவன் என்றுதான் பொருள் கூற வேண்டும்.

“ஹப்லுல் வரீத்” என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கூறிக் கொண்டாலும் அது சடப் பொருளையே குறிக்கும். நெருக்கம் என்பது சடப் பொருளல்ல. இரகசியம் என்னவெனில் அல்லாஹ் மனிதனாக “தஜல்லீ” வெளியாகி தனது வல்லமையை பார்த்து மகிழ்கிறான்.

தொடரும்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments