தொடர் 04
அல்லாஹ் தனது “தாத்” கொண்டு அனைத்து படைப்புக்களாகவும் வெளியாகி காட்சியளித்துக் கொண்டிருக்கிறான். அவன் பற்பல வடிவங்களில் தன்னைக் கண்டு மகிழ்வதற்காகவே படைப்புகளைப் படைத்தான். அவன் படைத்த படைப்புக்களில் மனித படைப்பே மிகச் சிறந்ததாகும். அவர்களில் மிகச் சிறந்தவர்கள் எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
மனிதனின் “ஸூறத்” உருவ அமைப்பு மிக விஷேடமானதாகும். அவன் படைத்த முதற் படைப்பான எம்பெருமானாரின் ஒளியிலிருந்து இதே நொடி வரை அவன் படைத்த படைப்புக்களிலும், இதன் பிறகு உலக முடிவு வரை அவன் படைக்கப் போகின்ற படைப்புகளிலும் மிக அழகான படைப்பும், பகுத்தறிவு – பிரித்தறிவு வழங்கப்பட்ட படைப்பும் மனித படைப்பேயாகும். மனிதனைக் கண்டு அஞ்சாத உயிரினம் இல்லவே இல்லை. அவற்றில் பாம்பு குறிப்பிடத்தக்கதாகும். அவனின் முதற் படைப்பு “நூரே முஹம்மதிய்யா” எனும் நபீ அவர்களின் பேரொளியாகும்.
அந்த முதற் படைப்பு எம் பெருமானாரின் ஒளி என்று சொன்னாலும் அந்த ஒளி மனித உருவமுள்ளதேயாகும். ஒளிக்கு உருவமுண்டு அந்த உருவம்தான் மனித உருவம்.
كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ
ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வெளிப்பாட்டிலேயே அவன் இருக்கிறான்.
இது காலவரை அவன் படைத்த படைப்புகளும், தற்போது அவன் படைத்துக் கொண்டிருக்கின்ற படைப்புக்களும், இதன் பிறகு இறுதி நாள் வரை அவன் படைக்கவுள்ள படைப்புக்களும் அவனுக்கு வேறுபடாத வெளிப்பாடுகள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் தவறாக விளங்கிக் கொண்டால் “குப்ர்” எனும் நிராகரிப்பு ஏற்பட்டுவிடும்.
அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகிறான் என்றால் அவனின் “தாத்”திலிருந்து இதுவரை – கோடிக்கணக்கான – எண்ணற்ற படைப்புகள் வெளியாகியுள்ளதால் அவனுடைய “தாத்”தில் ஏதாவது குறை, வித்தியாசம், மாற்றமொன்றும் ஏற்படவில்லையா? என்று ஒருவர் என்னிடம் கேட்பாராயின் அவருக்கு பின்வருமாறு நான் பதில் கூறுவேன்.
அன்புள்ள தம்பிக்கு, உனது கேள்வி நியாயமானதே! இப்படியொரு கேள்வி உனது மனதில் உதித்திருக்கிறதே அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோர் மனிதிலும் இவ்வாறான கேள்வி உதிக்காது. நீ இவ்வாறு கேள்வி கேட்டதிலிருந்து அல்லாஹ் தனது “தாத்” கொண்டுதான் படைப்புகளாக வெளியாகியுள்ளான் என்பதை நீ ஏற்றுக் கொண்டாய் என்பதை உனது கேள்வி மூலம் நான் அறிகிறேன். உனக்கு பதில் சொல்வதை எனது முதற் கடமையாக கருதி இதை எழுதுகிறேன்.
சகோதரா? அல்லாஹ்வின் “தாத்”தை எவராலும் சூழ்ந்து கொள்ள முடியாது. அது எனது “தாத்” போன்றதோ, உனது “தாத்” போன்றதோ அல்ல. அது அற்புதமான “தாத்” ஆகும். அது பற்றி எவர் சிந்தித்தும், ஆய்வு செய்தும் எந்த ஒரு முடிவும் காண முடியாது.
அந்த அற்புத “தாத்”தின் வெளிப்பாடுதான் இந்தப் பிரபஞ்சம். எத்தனை கோடிப் படைப்புகளாக அது வெளியானாலும் அந்த “தாத்” அழியாது, அது மாறுபடாது, அது விகாரப்படாது. படைப்பாக வெளியாகுமுன் அது எவ்வாறிருந்ததோ அவ்வாறே படைப்புகளாக வெளியான பின்னும் அது உள்ளது.
இறை ஞானிகள் هُوَ الْآنَ كَمَا كَانَ அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதும் இருக்கிறான், எப்போதும் இருப்பான் என்று சொல்வர்.
சகோதரா! இது தொடர்பாக நீ விளங்கி தெளிவு பெற வேண்டும். அதன் மூலம் நான் நன்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சில உதாரணங்கள் எழுதுகிறேன். வாசித்துப் பயன் பெறுவாய் என்று நம்புகிறேன்.
உதாரணங்கள்:
சகோதரா! ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தாவதாயின் அதற்கு மூன்று வழிகள் உள்ளன.
வழி ஒன்று – ஒரு வஸ்த்து அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படமாமலும் அதற்கு எந்தவொரு குறையும் ஏற்படாமலும் அது இன்னொரு பொருளாதல். இது ஒரு வழி.
வழி இரண்டு. அதாவது ஒரு வஸ்த்து முழுமையாக அழிந்து இன்னொரு பொருளாதல். இது ஒரு வழி.
வழி மூன்று. அதாவது ஒரு வஸ்த்து அழியாமல், ஆயினுமது மாறு பட்டும், விகாரப்பட்டும் இன்னொரு பொருளாதல்.
முதலாம் வழி பற்றி இறுதியில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.
ஒரு வஸ்த்து முழுமையாக – முற்றாக அழிந்து இன்னொரு வஸ்த்தாதல் – பொருளாதல். விதைகளையும், மரங்களையும், செடிகளையும் போன்று.
உதாரணமாக விதையை எடுத்துக் கொள்வோம். இதை மண்ணில் நட்டினால் அது சில நாட்களில் முற்றாக அழிந்து மரமாகிறது. இது ஒரு வழி.
அல்லாஹ் படைப்பாக வெளியாதல் என்பது இந்த இரண்டாம் வழி போலன்று.
ஏனெனில் விதை எனும் மூலம் அழிந்து மரம் வெளியாகியுள்ளது. இவ்வாறுதான் – அல்லாஹ் அழிந்துதான் படைப்பாக வெளியானான் என்று விளங்குதலும், நம்புதலும் பிழையாகும். பிழை மட்டுமன்றி அல்லாஹ் பற்றிய நம்பிக்கையில் குறையும், தவறுமாகும்.
மூன்றாம் வழி. ஒரு வஸ்த்து அழியாமல் ஆயினுமது மாறு பட்டும், விகாரப்பட்டும் இன்னொரு பொருளாதல்.
உதாரணமாக களிமண், அதனாலான பாத்திரங்கள் போன்று. குயவன் களிமண்ணை எடுத்து அதில் நீரை ஊற்றி பிசைந்து நெருப்பில் அதைச் சூடாக்கி சட்டி, பானை போன்ற பாத்திரங்கள் செய்கிறான். அவன் செய்த பாத்திரங்களுக்கான மூலம் களி மண்ணாகும். சட்டி, பானை என்பவை களி மண்ணின் வெளிப்பாடுகளேயாகும்.
இவ் உதாரணத்தில் மண் அழியவில்லை. ஆயினுமது மாறு பட்டும், விகாரப்பட்டும் இன்னொரு பொருளாகியது.
இவ்வாறுதான் அல்லாஹ் எனும் மூலம் களிமண் போல் அழியாது போனாலும் அது மாறு பட்டும், விகாரப்பட்டும் சட்டி பானையாக வெளியாவது போல் அல்லாஹ் படைப்பாக வெளியானான் என்று நம்புதலும் பிழைதான். பிழை மட்டுமல்ல. அது “ஈமான்” நம்பிக்கையை பாதிக்கும்.
சுருக்கம் என்னவெனில் மேற்கண்ட இரண்டாம் வழியில் சொல்லப்பட்ட மா விதை, மா மரம் உதாரணம் போல் அழிந்து – அவனின் “தாத்” அழிந்து படைப்பு வெளியாகவில்லை.
இதேபோல் மேற்கண்ட களிமண், சட்டி பானை உதாரணம் போல் அல்லாஹ் மாறுபட்டும், விகாரப்பட்டும் படைப்பு வெளியாகவுமில்லை.
இவ்விரு வழிகளும் பிழை என்பதற்கான காரணம் அல்லாஹ்வின் “தாத்” அழிந்து போவதும், அது மாறுபட்டும், விகாரப்பட்டும் போவதுமேயாகும். மெய்ப்பொருளான அந்த “தாத்” பரிசுத்தமானது. குறையற்றது. துய்யது. அதன் தரத்திற்கேற்றவாறு அதை அறிந்தவர் யாருமிலர். எம்பிரான் அவர்களுமா? ஆம். அவர்களும்தான், அவர்கள் அவனை அவனின் தரத்திற்கேற்றவாறு அவர்கள் அறியாமற்போனது அவர்களின் தரத்தில் ஒரு மண்ணளவும் குறையை ஏற்படுத்தாது.
مَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ
யா அல்லாஹ்! உன் தரத்திற்கேற்றவாறு உன்னை நாங்கள் அறியவில்லை என்று அவர்களே சொல்லியிருப்பதால் அது பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. அதனால் அண்ணலெம் பெருமானின் அந்தஸ்த்து குறைந்து போவதுமில்லை. இதனால் இவ்வாறு சொன்னவனுக்கு “முர்தத்” “பத்வா” கொடுப்பது நியாயமுமில்லை.
அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியானானா? இல்லையா? என்பது தொடர்பாக நாம் ஆய்வு செய்கிறோம். இந்த அளவு முன்னேற்றத்தை எமக்குத் தந்த எல்லாமாயுள்ள ஏகனைப் புகழ்கிறோம். இதேநேரம் “தாத்” என்றால் என்னவென்று தெரியாத, அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டா? இல்லையா? என்று கூட புரியாத முஸ்லிம்களும், ஆன்மிகத்துக்கு சிவப்புக் கொடி காட்டும் முல்லாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அல்லாஹ்வினால் கட்டப்பட்ட ஆன்மிகம் எனும் தத்துவ மாளிகை இன்று பாழடைந்து, விஷஜந்துக்கள் வாழும் காடு போலாயிற்று.
நபீ தோழர்களான ஸஹாபாக்களும், “தாபிஈ”ன்களும், மற்றும் வலீமார், குத்புமார்களும் கட்டிப் பாதுகாத்து வந்த ஸூபிஸ மாளிகை முகவரி இல்லாமல் போய்விட்டது. இன்று வாழும் இளைஞர்களுக்கு ஆன்மிகம், ஸூபிஸம் என்றால் என்னவென்று கூட தெரியாமற் போய்விட்டது. முஸ்லிம் இளைஞர்களை மட்டும் நான் சுட்டிக் காட்டவில்லை. சமய வேறுபாடின்றி பொதுவாக இளைஞர் சமுகத்தைக் குறிப்பிடுகிறேன். அனைத்து மதங்களும் ஆன்மிகத்தையே போதிக்கின்றன. ஆன்மிக வழியின்றி மார்க்கமில்லை. ஆன்மிகமின்றி மதமுமில்லை. அதேபோல் ஆன்மிகமில்லான் மனிதனுமில்லை. மனத்தூய்மைக்கு வழிகாட்டுவதும், இறைவனைக் காட்டித்தருவதும் ஆன்மிகமே!
அன்புச் சகோதரா! ஒரு வஸ்த்து அழியாமலும், அது மாறுபடாமலும் இன்னொரு பொருளாவது போன்றுதான் அல்லாஹ் படைப்புக்களாக வெளியாவதாகும். இது பற்றிய விபரம் அடுத்த தொடரில்….