தொடர் 05
ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தாவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்று சென்ற தொடரில் கூறிய நான் அவற்றில் இரண்டு வழிகளை சென்ற தொடரிலேயே எழுதிவிட்டேன்.
அல்லாஹ் படைப்பாக வெளியானது, வெளியாவது மாவிதை அழிந்து மா மரம் வெளியாவது போன்றதல்ல என்றும், களி மண் சட்டி பானையாக வெளியாவது போன்றதல்ல என்றும் எழுதியிருந்தேன்.
இதற்கான காரணம் அல்லாஹ்வின் “தாத்” ஒருபோதும் அழியாதென்றும், மாறுபடவோ, விகாரப்படவோ மாட்டாதென்பதுமாகும் என்றும் எழுதியிருந்தேன்.
சென்ற தொடரை வாசித்தவர்கள் பயன் பெற்றிருப்பார்கள். அதோடு இத்தொடரை வாசிப்பதும், விளங்குவதும் அவர்களுக்கு மிக எளிதாக இருக்கும். சென்ற தொடரை வாசிக்காதவர்களுக்கு இது கடினமாயிருக்கும்.
ஒரு வஸ்த்து அழியாமலும், அது மாறுபடாமலும் இன்னொரு வஸ்த்தாவது போன்றே அல்லாஹ்வின் “தாத்” அழியாமலும், அது மாறுபடாமலும், விகாரப்படாமலும் படைப்பாக வெளியாவதாகும். வெளியாதல் என்ற பொருளுக்கு தஜல்லீ, ளுஹூர் என்ற சொற்களை ஸூபீ மகான்கள் பயன்படுத்துவர்.
மேற்கண்டவாறு அல்லாஹ் படைப்பாக வெளியாவதற்கு ஓர் உதாரணம் கூறி விளக்கி வைக்கிறேன்.
இது நீண்ட ஹதீது கூறும் வரலாறாகும். முழுமையாக எழுத முடியாமைக்கு வருந்தினவனாக சாரத்தை மட்டும் தருகிறேன்.
இதுவே ஹதீது:
இந்த ஹதீதின் இலக்கத்தையும், நூலின் பெயரையும் இதன் கீழ் குறிப்பிடுகிறேன்.
ஒரு சமயம் பெருமானார் அவர்கள் திரு மதீனா பள்ளிவாயலில் நபீ தோழர்களுடன் இருந்த நேரம் இனம் தெரியாத நபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் யாரென்று இருந்தவர்களுக்கு கூட தெரியவில்லை.
வந்தவர் பெருமானார் அவர்களிடம் أخبرني عن الإيمان “ஈமான்” என்றால் என்னவென்று எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்டார்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஈமானின் ஆறு அம்சங்களையும் கூறினார்கள். வந்தவர் சரியாகவே சொல்லிவிட்டீர்கள் என்றார். இது அங்கு இருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது. தெரியாதவர் போன்று கேள்வி கேட்கிறார். பதில் சொன்னபின் சரியாகவே சொல்லவிட்டீர்கள் என்று கூறுகிறார். இவர் யார்? என்று பேசிக் கொண்டார்கள்.
வந்தவர் பெருமானார் அவர்களிடம் இஸ்லாம் பற்றிக் கூறுங்கள் என்று இரண்டவாதாக கேட்டார். நபீ பெருமான் இஸ்லாமின் ஐந்து அம்சங்களையும் கூறினார்கள். அப்போதும் அவர் முன்னால் சொன்னதுபோல் சரியாகவே சொன்னீர்கள் என்றார். அங்கிருந்த தோழர்கள் மீண்டும் வியப்படந்தார்கள்.
மூன்றாவது கேள்வியாக أخبرني عن الإحسان “இஹ்ஸான்” என்றால் என்னவென்று வந்தவர் கேட்டார். அதாவது إخلاص – இக்லாஸ் என்றால் என்னவென்று அறிவியுங்கள் என்று கேட்டார்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
என்று பதில் கூறினார்கள்.
பொருள்: “இக்லாஸ்” என்றால் நீ அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் – காண்பவன் போல் அவனை வணங்க வேண்டும். நீ அவனைப் பார்க்கக் கூடியவனாக இல்லையானால் அவன் உன்னைப் பார்க்கிறான். காண்கிறான் என்று கூறினார்கள்.
மேற்கண்ட அறபு வசனங்களின் பொருளை – சொல் அர்த்தத்தை மட்டும் எழுதியுள்ளேன். இந்த வசனங்களின் ஆன்மீக விளக்கத்தை நான் கூறுவதால் اَلْفِتْنَةُ نَائِمَةٌ لَعَنَ اللهُ مَنْ أَيْقَظَهَا “குழப்பம் உறக்கத்தில் உள்ளது. அதை விழிப்பாக்கி விட்டவனை அல்லாஹ் சபித்துவிடுவானாக” என்ற பெருமானாரின் சாபத்திற்கு உட்பட்டவனாக எதிரிகளால் பொது மக்களிடம் நான் சித்தரித்துக் காட்டப்பட்டு என்னால் சமுக நல்லிணக்கம் கெட்டுப் போகக் கூடாதென்பதை கருத்திற் கொண்டு விளக்கம் எழுதவில்லை. அல்லாஹ் நாடினால் நடக்கும். நான் இந்த நபீ மொழியை இங்கு எழுதத் தொடங்கியது இதற்கு விளக்கம் கொடுப்பதற்காக அல்ல. இந்த நபீ மொழியிலிருந்து எனது இத்தலைப்புக்குத் தேவையான ஓர் அம்சத்தை மட்டும் எடுத்துக் கொள்வதற்காகவே தொடங்கினேன்.
இதோடு மேற்கண்ட அறபு வசனங்களுக்கு விளக்கம் கூறாமல் எனக்குத் தேவையான அம்சத்துக்கு மட்டும் விளக்கம் கூறுகிறேன்.
பெருமானாரிடம் மேற்கண்ட கேள்விகள் கேட்டு விடைகளை பெற்றுக் கொண்ட அந்த நபர் இன்னும் சில கேள்விகளையும் கேட்டு விடைகளையும் பெற்றுக் கொண்டு வெளியான பின், வந்தவர் யாரென்று தெரியுமா என்று பெருமானார் அவர்கள் தோழர்களிடம் கேட்டதற்கு இல்லை, அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும்தான் நன்கறிவார்கள் என்று சொல்ல அவர்தான் ஸெய்யிதுனா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். உங்களுக்கு உங்களின் “தீன்” மார்க்கத்தை கற்றுத்தர வந்தார் என்று ஏந்தல் அவர்கள் சொன்னார்கள்.
சுருக்கம்:
சுருக்கம் என்னவெனில் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு வலுப்பமான இரண்டு இறக்கைகள் உள்ளன. அவ்விரண்டில் ஒன்றை மட்டும் விரித்தார்களாயின் ஆகாயம் முழுவதையும் அது அடைத்துக் கொள்ளும். அத்தகைய வலுப்பமான படைப்பு அவர்.
இத்தகைய தன்மையுள்ள ஜிப்ரீல் அவர்கள்தான் மனித உருவத்தில் தோற்றினார்கள். இவ்வாறு அவர்கள் பல சமயங்களில் நபீ பெருமானிடம் வந்துள்ளார்கள்.
அல்லாஹ் ஒளியால் படைத்த ஜிப்ரீல் மனித தோற்றம் எடுத்து மனித சடமுள்ளவராக தோன்றியதால் அவரின் இயற்கையான தோற்றம் அழிந்து விடவுமில்லை. மாறுபடவுமில்லை. விகாரப்படவுமில்லை. அவர்களின் இயற்கைத் தோற்றம் இருந்தவாறு இருக்கும் நிலையில்தான் அவர்கள் அவ்வாறு மனித உருவம் பெற்று வந்தார்கள்.
வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சட உருவம் எடுத்ததினால் – மனித உருவம் எடுத்ததினால் அவர்களின் இயற்கையான தோற்றம் அழியவுமில்லை. அது மாறுபடவுமில்லை. அது விகாரப்படவுதுமில்லை.
இவ்வாறுதான் அல்லாஹ்வும் ஆவான். அவன் உலகமாகவும், உலகிலுள்ளவையாகவும் வெளியானதால் அவனின் பரிசுத்த “தாத்” மாறுபடவுமில்லை, அழியவுமில்லை, விகாரப்படவுமில்லை.
இந்த உதாரணத்தை ஆதாரமாக வைத்து ஓர் உண்மையாளன் மனச்சாட்சிக்கு மாறில்லாதவன், துய்ய எண்ணத்தோடு மேற்கண்ட உதாரணத்தையும், இன்னும் ஸூபிஸம் தொடர்பாக நான் எழுதி வருகின்ற ஞானக் கருத்துக்களையும் சிந்தித்து, ஆராய்ந்தறிவானாயின் அவன் உண்மையான விசுவாசியாகவே இருப்பான். அதோடு இறைவனை அறிந்த ஞானியாகவும் ஆகுவான்.
அல்லாஹ் படைப்பாக வெளியானது “தாத்”து கொண்டுதான் என்றும், அவ்வாறு அவன் வெளியானதால் அவனின் “தாத்” மெய்ப் பொருளுக்கு அழிவோ, குறையோ, மாற்றமோ ஏற்படவில்லை என்றும் தெளிவாகிவிட்டது.
இவர் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறுகிறாரே இவரின் கூற்றை ஏற்க முடியுமா? அல்லாஹ்வுக்கு எவ்வாறு உதாரணம் கூற முடியும்? என்று என்னைக் கேட்க நினைத்தால் நான் அவருக்கு கூறும் விளக்கம் என்னவெனில் இவ்வாறான சந்தேகம் சுமார் 79ம், 80ம் ஆண்டுகளில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்த ஒன்றுதான். புதிய சந்தேகமல்ல.
எனினும் யாரும் எதிலும் சந்தேகங் கொள்ளத்தேவையில்லை. கடந்த பல கட்டுரைகளிலும், நான் எழுதிய நூல்களிலும் விளக்கம் எழுதியுள்ளேன்.
எனினும் சில வரிகள் மட்டும் இங்கு தெளிவுக்காக தருகிறேன்.
தொடரும்..