Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மிஸ்ர் நாட்டின் தலை நகர் கெய்ரோவில் ஹிஜ்ரீ 905ல் நடைபெற்ற ஸூபிஸ கருத்தரங்கு.

மிஸ்ர் நாட்டின் தலை நகர் கெய்ரோவில் ஹிஜ்ரீ 905ல் நடைபெற்ற ஸூபிஸ கருத்தரங்கு.

தொடர் 06

வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒளியிலானவர்களாயிருந்தும் கூட அவர்களின் இயற்கை அமைப்பு – படைகோலம் மாறாத, அழியாத, விகாரப்படாத நிலையில் மனிதனாகத் தோற்றமளித்துள்ளார்கள் என்றால் அகிலம் அனைத்தையும் படைத்து, ஜிப்ரீலையும் படைத்து அவருக்கு இத்தனை சக்தியையும் வழங்கிய அல்லாஹ்வுக்கு அவனின் “தாத்”தில் எந்த ஒரு குறையும் ஏற்படாமல் படைப்புகளாக வெளியாக முடியாமற் போகுமா? ஜிப்ரீலுக்கு முடியுமென்றால் அல்லாஹ்வுக்கு ஏன் முடியாது?

அஷ்ஷெய்குல் அக்பர், வல்மிஸ்குல் அத்பர், வல்கிப்ரீதுல் அஹ்மர், வந்நூறுல் அப்ஹர், வல் அல்மஇய்யுல் அஷ்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்ட கேள்விக்கு விடையளிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

கேள்வி:
فَكَمْ تَرْجِعُ صُوَرُ التَّجَلِّيِّ الْإِلَهِيِّ إِلَى مَرْتَبَةٍ مِنَ الْعَدَدِ؟

இறைவனின் “தஜல்லீ” வெளிப்பாடு எத்தனை உருவத்தில் ஏற்படும்?

விடை:

قاله الشّيخ الأكبر محي الدين ابن عربي فى الباب الثامن والتسعين ومأةٍ، أنّها ترجع كلّها إلى صورَتين، صُوْرَةٌ تُنْكَرُ وَصُوْرَةٌ تُعْرَفُ، ولا ثَالِثَ لها، قال: وقد وَرَدَ أنّ الله تعالى لمّا كلّم موسى عليه الصلاة والسلام تَجَلَّى له فى اثني عَشَـرَ ألفِ صورةٍ، وفى كلّ صورة يقول له يا موسى! لِيَتَنَبَّهَ موسى فيعلم أنّه لو كان جميع التّجلّى بصورة واحدة لم يقل له فى كل صورة كلمةَ يا موسى،
اليواقيت والجواهر، ج أوّل، ص 112، المبحث الثاني والعشرون

அஷ்ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “புதூஹாதுல் மக்கிய்யா” எனும் அறிவுக் களஞ்சியத்தில் 198ம் பாடத்தில், அவன் எத்தனை “ஸூறத்” உருவத்தில் வெளியானாலும் அவையாவும் இரண்டு அம்சங்களில் அடங்கிவிடும். ஒன்று அறிந்த உருவம். மற்றது அறியாத உருவம். மூன்றாவது அம்சம் இல்லை.

அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் பேசிய போது 12 ஆயிரம் உருவத்தில் காட்சியளித்தான். அவன் ஒவ்வொரு உருவத்தில் “தஜல்லீ” ஆன போதும் மூஸா விழிப்படைய வேண்டுமென்பதற்காக யா மூஸா – யா மூஸா என்று அழைத்துக் கொண்டே இருந்தான். அவன் ஒவ்வொரு “தஜல்லீ”யின் போதும் யா மூஸா என்றழைத்தது ஒவ்வொரு “தஜல்லீ”யையும் தனித்தனியானது என்று பிரித்துக் காட்டுவதற்கேயாகும். அவ்வாறு இடையிடையே அவர்களை அழைத்து அதன் மூலம் பிரித்துக் காட்டவில்லையானால் அனைத்து தஜல்லீயும் ஒரே “தஜல்லீ”யாகவே கணிக்கப்படும்.

இந்தச் செய்தி, “அல்யவாகீது வல்ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 112ம் பக்கத்தில் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் எழுதியுள்ள செய்தியாகும்.

இதற்கு முதலும் இந்தச் செய்தியை நான் எழுதியதை வாசித்த மௌலவீ ஒருவர், இதென்ன பொய்யை சொல்கிறான் இந்த றஊப் என்றார். அவருக்கு பக்கத்திலிருந்த இன்னொரு மௌலவீ அவர் கிதாபின் பெயர், அதன் பக்கம், ஆசிரியரின் பெயர் முழு விபரமும் சொல்லியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு சொல்வீர் என்று கேட்டாராம். அதற்கவர் இவ்வாறு வேகமாக நின்றால்தான் அவனை மடக்க முடியும் என்றாராம். மௌலவிகளிலேயே இவ்வாறு வஞ்சகமுள்ளவர்கள் இருந்தால் நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவது எப்படி? யார் நல்வழிப்படுத்துவது?

بِالْمِلْحِ تُصْلِحُ مَا تَـخْشَـى تَغَيُّرَهُ
فَكَيْفَ بِالْمِلْحِ إِنْ حَلَّتْ بِهِ الْغِيَرُ

ஒரு வஸ்த்து பழுதடையாமல் இருப்பதற்காக உப்பு கொண்டு அது சரி செய்யப்படும். ஆனால் உப்பே கெட்டுப் போனால் என்ன செய்ய முடியும்?

கெய்ரோ கருத்தரங்கு விடயத்திற்கு வருகிறேன்.

அஷ்ஷெய்கு இப்றாஹீம் மவாஹிப் அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் மேற்கண்டவாறு எதிர் தரப்பினருக்கு விளக்கம் சொன்ன போது அவர்களால் அஷ்ஷெய்கு இப்றாஹீம் அவர்களுக்கு மறுப்புக் கூற முடியாமல் இருந்தார்கள்.

قال الشيخ إبراهيم وبما قرَّرنا عليكم انتفى أن يكون المرادُ قربَه تعالى مِنَّا بصِفاتِه دون ذاتِه، وأنّ الحقَّ الصَّريحَ هو قربُه منَّا بالذاتِ أيضا، إذ الصّفة لا تُعقل مجردة عن الذّات المتعالى كما مرّ،

அஷ்ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் பின்வருமாறு எதிர் தரப்புக்கு கூறினார்கள். (நான் இதுவரை உங்களுக்கு விளக்கி வைத்ததன் மூலம் அல்லாஹ் தனது “தாத்” கொண்டுதான் வெளியானான் என்ற தத்துவத்தையும், அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை என்ற தத்துவத்தையும், அதேபோல் அவனல்லாத எந்த ஒரு வஸ்த்தும் இல்லை என்ற தத்துவத்தையும் தெளிவாக அறிந்திருப்பீர்கள்)

மேலே எழுதிய அறபு வரிகளுக்கான தமிழாக்கத்தை இங்கு தருகிறேன். அல்லாஹ் எத்தனை உருவத்தில் வெளியானாலும் அவையெல்லாம் இரண்டால் ஓர் அம்சத்துக்குள் அடங்கினதாகவே இருக்கும்.

அதாவது ஓர் உருவம் அறியப்பட்டதாகவும், இன்னோர் உருவம் அறியப்படாததாயும் இருக்கும். மூன்றாவது அம்சம் இல்லை.

அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் பேசிய போது 12 ஆயிரம் உருவத்தில் “தஜல்லீ” வெளியாகிப் பேசியுள்ளான். ஒவ்வோர் உருவத்தில் தோற்றும் போதும் யா மூஸா! என்றழைத்த பின்னரே பேசுவான். இவ்வாறு அவன் பேசியது நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விழிப்புணர்வு பெறுவதற்கேயாகும்.

இதில் இன்னுமொரு நுட்பம் உண்டு. அதாவது அல்லாஹ் யா மூஸா என்று அழைக்காமல் தொடராக அவன் பேசியிருந்தால் அது ஒரு சந்திப்பாக மட்டுமே கணிக்கப்படும். யா மூஸா என்று அழைத்து சொல்லியுள்ளதால் 12 ஆயிரம் சந்திப்பின் போதும் அவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்பது தெளிவாகும்.
அல்யவாகீத்
பாகம் 01, பக்கம் 116

எதிர் தரப்பில் வந்த பத்றுத்தீன் அல் ஹனபீ அவர்கள் அஷ்ஷெய்கு இப்றாஹீம் கொடுத்த விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அஷ்ஷெய்கு இப்றாஹீம் உரிய பதில் கொடுத்தார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் எதிர் பாராமல் அங்கு அல் ஆரிப் பில்லாஹ் முஹம்மத் அல் மக்ரிபீ அஷ்ஷாதுலீ வந்தார்கள்.

فدخل عليهم الشّيخ العارف بالله تعالى سيّدي محمد المغربي الشّاذلي شيخ الجلال السيوطي

அங்கு எதிர் பாராமல் வந்த இமாம் ஸூயூதீ அவர்களின் ஞான குரு அஷ்ஷெய்கு முஹம்மத் அல்மக்ரிபீ அஷ்ஷாதுலீ அவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அங்கிருந்தோர் விடயத்தைக் கூறினார்கள்.

இமாம் முஹம்மத் அல் மக்ரிபீ அவர்கள் கூட்டத்தை சமாதானமாக கலைத்து வைக்க விரும்பி அங்கே சற்று நேரம் விளக்கம் கொடுத்தார்கள்.

அதன் சுருக்கம் என்னவெனில் معيّة الله أزليّة என்பதாகும். அதாவது அல்லாஹ் ஒருவருடன், அல்லது ஒரு வஸ்த்துடன் இருப்பதென்பது அசலீ أزلي என்று சொல்லப்படும். அதாவது பூர்வீகமானது என்று கூறப்படும். அதற்கு ஆரம்பமில்லை. எப்போதும் அது அவனுடனுள்ளதேயன்றி பின்னர் அவனுடன் சேர்ந்ததென்பது கருத்தல்ல.

وكانت معيّته تعالى معيّة أزليّة كذلك هي أبديّة، ليس لها انتهائيٌّ فهو تعالى معها، بعد حدوثها من العدم،

அந்த “மஇய்யத் – உடன்” என்பது பூர்வீகமானதேயாகும். அதேபோல் முடிவற்றதுமாகும். “தாத்” இருக்கும் வரை நெருக்கம் இருக்கவே செய்யும்.

இவ்வாறு அங்கு வந்த ஜலாலுத்தீன் ஸுயூதீயின் ஷெய்கு முஹம்மத் அல் மக்ரிபீ அஷ்ஷாதுலீ அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த விளக்கத்தைக் கேட்டவர் அனைவரும் வியந்து போயினர்.

فأدهش الحاضرين بما قاله، فقال لهم اعتقدوا ما قرَّرْتُهُ لكم فى المعيّة واعتَمدُوهُ، ودعُوا ما يُنَافِيه تكونوا مُنَزَّهِيْن لمولاكم حقَّ التنزيه، ومُخلصين لعُقُولكم من شُبهات التّشبيه،

இமாம் முஹம்மத் அல் மக்ரிபீ அவர்கள் கொடுத்த விளக்கம் சபையோரை குலுக்கியது. அப்போது அவர்கள் சபையில் இருந்தவர்களுக்கு நான் கூறிய விளக்கத்தை நம்பிக் கொள்ளுங்கள். அதற்கு மாற்றமான கொள்கையை விட்டு விடுங்கள். இவ்வாறு செய்தீர்களாயின் அல்லாஹ்வை “தன்ஸீஹ்” செய்தவர்காளகிவிடுவீர்கள். இன்னும் அல்லாஹ்வுக்கு எதையும் ஒப்பாக்குவதை விட்டும் தப்பியும் விடுவீர்கள் என்று கூறினார்கள்.

وإن أراد أحدٌ أن يعرف هذه المسئلة ذوقًا فليسلِّم قياده لي، أخرجْهُ عن وظائفه وثِيابِه وما له وأولاده، وادخِلْهُ الخلوة وأمنعه النوم وأكل الشّهوات، وأنا أضمن له وُصولَه إلى علم هذه المسئلة ذوقا وكشفا،

قال الشّيخ إبراهيم فما تجرَّأَ أحدٌ أن يدخل معه فى ذلك العهد،

ثمّ قال الشّيخ زكريا والشّيخ برهان الدّين والجماعة، فقبّلو يده وانصرفوا،


மேற்கண்டவாறு கூறிய பின் அஷ்ஷெய்கு முஹம்மத் அல் மக்ரிபீ அஷ்ஷாதுலீ அவர்கள் பின்வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.

உங்களில் யாராவது இவ்விடயத்தை – அல்லாஹ் “தாத்”தோடு படைப்பாக வெளியானான் என்ற விடயத்தை “தவ்க்” அனுபவ அடிப்படையில், சுவைத்தறிதல் மூலம் அறிய விரும்பினால் அவர் தன்னை என்னிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

அவரின் வழக்கங்களிலிருந்து நான் அவரை வெளியேற்றுவேன். அவர் வழமையாக செய்து வந்த காரியங்கள் அனைத்தையும் விடச் செய்வேன். அவரின் உடைகளிலும் மாற்றம் செய்வேன். அவரின் பிள்ளைகளின் உறவிலிருந்து அவரைத் துண்டிப்பேன். அவரை “கல்வத்”தில் அமர்த்துவேன். உறக்கத்திற்கு கட்டுப்பாடு விதிப்பேன். மன இச்சைக் கேற்ப சாப்பிடுவதை நிறுத்திவேன்.

எனது நிபந்தனைகளுக்கு உடன்பட்டு என்னுடன் வருபவரை இந்த அறிவளவில் சேர்த்து வைப்பது எனது கடமை என்றார்கள்.

ஆனால் அவனின் நிபந்தனையை ஏற்று அவருடன் செல்ல எவரும் விரும்பவில்லை.

பின்னர் அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகவில்லை என்று கூறிய அஷ்ஷெய்கு சகரிய்யா, அஷ்ஷெய்கு பத்றுத்தீன் ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும், ஸலாம் கூறி, முஸாபஹா செய்து கலைந்தார்கள்.

இதன் மேலதிக விளக்கம் அடுத்த தொடரில்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments