தொடர் 07
இற்றைக்கு சுமார் 538 வருடங்களுக்கு முன் கெய்ரோ அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அல்லாஹ் தனது “தாத்” கொண்டு படைப்பாக வெளியானானா? அல்லது தனது “ஸிபாத்” எனும் தன்மைகள் கொண்டு வெளியானானா? என்பது தொடர்பாக கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
அதில் அல்லாஹ் தனது “தாத்”தைக் கொண்டே படைப்பாக வெளியானான் என்றும், அவ்வாறில்லை அவன் தனது “ஸிபாத்” எனும் தன்மைகள் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டன.
அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று கருத்துச் சொன்னவர் அஷ் ஷெய்கு இப்றாஹீம் மவாஹிப் அஷ்ஷாதுலீ அவர்கள். அவருக்கு எதிராக அல்லாஹ் தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று கருத்துச் சொல்ல வந்தவர்கள் மூவரும், இன்னும் ஒரு குழுவுமாகும். இவர்களின் பெயர்கள் கடந்த தொடரில் கூறப்பட்டுள்ளன.
நடந்த கருத்தரங்கில் சொல்லப்பட்ட கருத்துக்களை தெளிவான சிந்தனையோடு ஆய்வு செய்தால் இப்றாஹீம் மவாஹிப் அஷ்ஷாதுலீ என்பவரே அவர்களில் தரமான ஓர் அறிஞர் என்பது தெளிவாகும்.
எதிர் தரப்பினர் கேட்பவர்களாய் மட்டுமே இருந்தார்கள் என்பதும் தனி நபரான இப்றாஹீம் அவர்கள்தான் விளக்கம் சொன்னவர்களாக இருந்தார்கள் என்பதும் இந்த வரலாறின் மூலம் தெளிவாகிறது.
அஷ்ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களில் இரண்டையும், இமாம் ஙஸ்வீனீ அவர்களின் பேச்சையும், இன்னும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களையும் ஆதாரங்களாக முன்வைத்து விளக்கம் கூறியும் கூட எதிர் தரப்பினர் எவரும் அவரின் கூற்றை மறுத்து விளக்கம் ஒன்றும் சொல்லாமல் மௌனிகளாகவே இருந்தனர். அவர்கள் தமது கொள்கையில் உறுதியானவர்களாயிருந்தால் அஷ்ஷெய்கு இப்றாஹீம் அவர்களுக்கு மறுப்புக் கூறி தமது வாதத்தை சரியென்று நிறுவியிருக்க வேண்டும். அவ்வாறும் அவர்கள் செய்யாமல் மீண்டும் மீண்டும் கேள்விகளைத் தொடர்ந்து நேரத்தை வீணாக்கியது தமது வாதம் சரியானதென்று நிறுவ முடியாமற் போனதினாலாகும்.
அஷ்ஷெய்கு இப்றாஹீம் அவர்கள் தமது கருத்தை நிறுவக் கூறும் ஆதாரங்கள் யாவும் சுருதிப் பிரமாணங்கள், யுக்திப் பிரமாணங்கள் கொண்டும் நிறுவப்பட்டவையாகும்.
அல்லாஹ் “தாத்” கொண்டு வெளியாகாமல் “ஸிபாத்” தன்மைகள் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்ற எதிர் தரப்பின் வாதத்தை الصفة لا تفارق الموصوف தன்மைகள் என்பது எதில் தங்கி நிற்கிறதோ அதைவிட்டும் அது பிரியாது என்ற ஸூபிஸ தத்துவம் கொண்டு நிறுவப்பட்ட விடயம்தான் இத் தத்துவம். இதுவே உண்மை. இதுவே எதார்த்தம். விஞ்ஞானத்தின் முடிவும் இதுதான் மெய்ஞ்ஞானத்தின் முடிவும் இதுதான்.
எனினும் இஸ்லாமிய “அகீதா” கொள்கை நூல்களில் ஒரு சொட்டேனும் ஸூபிஸ ஞானம் கலக்காத கொள்கை நூல்களும் உள்ளன. ஸூபிஸ ஞானத்தையும் தழுவி எழுதப்பட்ட கொள்கை விளக்க நூல்களும் உள்ளன. எனது கருத்து என்னவெனில் ஸூபிஸக் கொள்கையையும், கருத்தையும் கவனத்திற் கொள்ளப்படாத நூல்களை மிக அவதானமாக வாசிக்க வேண்டும்.
ஓர் இமாம் ஒரு கருத்துச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் கருத்து திருக்குர்ஆன், ஹதீதுகளுக்கு முரண் இல்லாதிருந்தால் அவர் சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி அதை இஸ்லாமியன் அல்லாதவன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக அக்கருத்தை மறுப்பதும், தூக்கியெறிவதும் அறிவுடைமையல்ல.
கெய்ரோவில் நடந்த கருத்தரங்கின் முடிவு அல்லாஹ் “தாத்”தை கொண்டுதான் வெளியாகி இருக்கிறான் என்பதேயாகும். யாராவது இதற்கு மாறாக அவன் “ஸிபாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்று சொன்னால் அதை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன் நியாயத்திற்கு கட்டுப்படாமல் மன முரண்டினால் அட்டூழியம் பண்ண வந்தால் அவனுடன் தர்க்கம் செய்யாமல் விட்டு விடுவதே சிறந்தது. அடித்து அப்பம் கொடுக்கத் தேவையில்லை.
அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதை நிறுவ இந்த விவாதம் மட்டும் ஆதாரமில்லை. திருமறை வசனங்கள் நிறைய உள்ளன. தேவையேற்படும் போது எழுதுவோம்.
அல்லாஹ்வுக்கும் படைப்புக்கும் தொடர்பு உண்டா?
அல்லாஹ்வுக்கும், அவன் படைப்புக்கும் தொடர்பு உண்டா? அவ்வாறாயின் அது எத்தகையானது? என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
ஒரு குழந்தையை அதன் தாயின் கருவில் படைத்து அக்குழந்தை வெளியாகும் வரை மட்டுமே அந்தக் குழந்தைக்கும், அவனுக்கும் தொடர்பு இருந்தது. குழந்தை பிறந்ததும் அவனுக்கும், அதற்குமுள்ள தொடர்பு அதே நேரத்துடன் துண்டிக்கப்பட்டு விடுகிறது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அவனுக்கும், அதற்கும் இடையே உள்ள தொடர்பு நிரந்தரமானது. என்றும் பிரியாது.
ஒரு தச்சன் கதிரை செய்கிறான். அதைச் செய்து முடிக்கும் வரை அதோடு தொடர்புள்ளவனாகவே அவன் இருக்கிறான். அதைப் பூரணமாகச் செய்து முடித்து அதை யாருக்காவது விற்றுவிட்டானாயின் அதோடு அந்தக் கதிரை வாங்கினவர் வீட்டுக்கு வந்துவிடுகிறது. அதைச் செய்த தச்சன் எங்கோ இருப்பான். அவனுக்கும், கதிரைக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. கதிரை எங்கோ இருக்கும். தச்சன் எங்கோ இருப்பான். கதிரைக்கும், அவனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. கதிரை எங்கே கிடந்தால் என்ன? எப்படிக் கிடந்தால் என்ன? அதை விற்றுப் பணம் பெற்றதோடு அவனுக்கும், அதற்குமிடையிலுள்ள தொடர்பு அறுந்தே போய்விட்டது.
அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு இப்படியானதல்ல.
இதேபோல் செம்மான் செருப்பு செய்கிறான். அதைச் செய்து முடிக்கும் வரை அதோடு தொடர்புள்ளவனாக அவன் இருக்கிறான். அதை முழுமையாகச் செய்து முடித்து யாருக்காவது விற்று விட்டானாயின் அதோடு அச் செருப்பு அவனின் தொடர்பிலிருந்து விடுபட்டு விடுகிறது. அதைச் செய்த செம்மான் எங்கோ இருப்பான். செருப்பு எங்கோ கிடக்கும். செம்மானுக்கும், செருப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது.
அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு இப்படியானதல்ல.
இவ்வாறுதான் எந்தவொரு வஸ்த்தை எடுத்தாலும் அது சிறிது காலம் மட்டுமே அதைச் செய்தவனின் தொடர்பில் இருக்கும். அந்த வஸ்த்து அவன் கைவிட்டுப் போனால் அவனுக்கும், அவ்வஸ்த்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது.
ஆனால் அல்லாஹ் ஒரு படைப்பை படைத்தால் அப்படைப்பு சாகும் வரை மட்டுமல்ல. அது செத்து மடிந்து தூசுடன், தூசாக மண்ணுடன் மண்ணாகப் போனாலும் கூட அல்லாஹ் அதோடு தொடர்புள்ளவனாகவே இருப்பான்.
முதலாம் உதாரணத்தில் தச்சன், கதிரை என்று உதாரணம் சொன்னேன். தச்சனுக்கும், கதிரைக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு என்று சொன்னேன்.
அதே உதாரணத்தை பின்வருமாறு சொல்வோம். கதிரைக்கும், மரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. இத் தொடர்பு “தாதிய்யா” என்று சொல்லப்படும். இவ்வாறான தெடர்புதான் அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பிரியாத தொடர்பு. எவராலும் பிரிக்க முடியாத தொடர்புமாகும்.
இரண்டாம் உதாரணத்தில் செம்மான், செருப்பு என்று உதாரணம் சொன்னேன். செம்மானுக்கும், செருப்புக்குமுள்ள தொடர்பு போன்றதல்ல அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு. மாறாக செருப்புக்கும், தோலுக்குமுள்ள தொடர்பு போன்றதே இறைவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
முதலாம் உதாரணத்தில் கதிரை கதிரையாக இருக்கும் போதும் அது மரம்தான். அது உடைந்து கதிரையின் உரு இல்லாமற் போனபின்னும் மரம்தான். அதேபோல் இரண்டாம் உதாரணத்தில் செருப்பு செருப்பாக இருக்கும் போதும் அது தோல்தான். அது கிழிந்து செருப்பின் உரு இல்லாமற் போன பின்னும் தோல்தான்.
கதிரை உடைந்து போனபின் கதிரை என்ற தோற்றமும், பெயரும்தான் இல்லாமற் போகுமேயன்றி மரம் என்ற பெயர் இல்லாமற் போகாது. இவ்வாறுதான் செருப்புமாகும். செருப்பு கிழிந்து போனபின் செருப்பு என்ற தோற்றமும், பெயரும்தான் இல்லாமற் போகுமே தவிர தோல் என்ற பெயர் இல்லாமற் போகாது.
கதிரைக்கும், மரத்துக்குமுள்ள தொடர்பும், செருப்புக்கும், தோலுக்குமுள்ள தொடர்பும் போன்றதே அவ்விரண்டிற்குமுள்ள தொடர்பாகும். கதிரை மரம்தான், செருப்பு தோல்தான் என்றே சொல்ல வேண்டும்.
செருப்புக்கும், தோலுக்கும் என்ன தொடர்பு என்றும், கதிரைக்கும், மரத்துக்கும் என்ன தொடர்பு என்றும் ஒருவன் கேட்டால் கதிரை மரம்தான், செருப்பு தோல்தான் என்றே சொல்ல வேண்டும். ஒரு பொருளை வைத்துக் கொண்டு தொடர்பு பேசுவது எவ்வாறு? தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை.
இவ்வாறுதான் அல்லாஹ். ஓர் உயிரைப் படைக்க நாடினால் அவ் உயிருள்ள வஸ்த்தாக அவனே “தஜல்லீ” வெளியாகுவான்.
தொடரும்…