“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 10

இத்தொடருக்கு முன்னுள்ள தொடர்களில் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்க நகர் மக்களின் கொள்கை எவ்வாறிருந்ததென்றும், அவர்கள் பல சிலைகளையும், விக்கிரகங்களையும் முன் வைத்து வணங்கினாலும் கூட எதார்த்தத்தில் அவர்கள் இறைவனை (நாம் அல்லாஹ் என்று சொல்பவனை)யே வணங்கினார்கள் என்றும், அவற்றை முன் வைப்பதால் அவை தம்மை இறைவன் பால் நெருக்கமாக்கி வைக்கின்றன என்று அவர்கள் காரணம் சொன்னார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

நான் எழுதி வருகின்ற ஞானக் கருத்துக்களை வாசிப்பவர்களில் சிலருக்கு அவற்றில் ஒரு விடயம் கூட விளங்காமற் போவதற்கு சாத்தியமுண்டு. இவர்கள் யாரெனில் இறைஞான அறிவு மண்ணளவேனும் தெரியாதவர்களாவர்.

இன்னும் சிலருக்கு சில விடயம் விளங்கியும், இன்னும் சிலருக்கு சில விடயங்கள் விளங்காமலும் இருப்பதற்கு சாத்தியமுண்டு. இவர்கள் யாரெனில் இறைஞான அறிவை அரை குறையாக அறிந்தவர்களாவர்.

இன்னும் மிகக் குறைந்த சிலர் இந்த ஞான அறிவில் நல்ல விளக்கமுள்ளவர்களாக இருப்பவர்களாவர். அவர்கள் எனது கட்டுரைகளை வாசித்து தெளிவு அடைகிறார்கள். இம் மூன்று வகையினரில் முந்தின வகையினருக்கு நான் கூறும் அறிவுரை என்னவெனில், அவர்கள் முதலில் இந்த ஞானம் உண்மைதான் என்று தமது மனதில் பலமான அத்திவாரமிட்டுக் கொள்ள வேண்டும். இது முதல் அம்சம். நான் இதுகால வரை பேசிய CD களைக் கேட்க வேண்டும், எனது நூல்களையும் வாசிக்க வேண்டும். இது இரண்டாவது அம்சம். அல்லாஹ்விடம் தனக்கு ஞான அறிவைத் தருமாறு அழுது சலித்து “துஆ” கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் சுமார் ஆறுமாதங்கள் செயல்பட்டால் அல்லாஹ் அவர்களின் “கல்பில்” உள்ளத்தில் ஞான ஒளியை ஒளிரச் செய்வான் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டாம் வகையினருக்கு நான் கூறும் அறிவுரை முந்தின வகையினருக்கு கூறிய அறிவுரையேயாகும். ஆயினுமவர்கள் “ஷரீஆ”வின் வணக்க வழிபாட்டிலும், அல்லாஹ்விடம் இறைஞான வளர்ச்சிக்காக “துஆ” கேட்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாம் பிரிவினருக்கு நான் கூறும் அறிவுரை என்னவெனில் அவர்கள் என்னிடம் “பைஅத்” எனும் ஞான ஒப்பந்தம் செய்து “ஷரீஆ”, “தரீகா” வழிகளில் முழுக்கவனம் செலுத்துபவர்களாகவும், பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலுடன் தொடர்புள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

முந்தின இரு பிரிவினரும் தமக்கு நூறு வீதம் தெளிவு கிடைக்கும் வரை தாம் யாரென்று எவருக்கும் காட்டிக் கொள்ளாமல் இருத்தல் அவசியமாகும்.

பின்வரும் வரலாறும், எவர் எவ்வளவுதான் படித்து பெரும் பெரும் பட்டங்கள் பெற்றிருந்தாலும் இறைஞானத்தின் அடிப்படை அறிவு அவர்களிடம் இல்லையாயின் அவர்களாலும் மிக எழிதில் ஸூபிஸ ஞானக் கருத்தை விளங்க முடியாதென்பதையே உணர்த்துகிறது. அடிப்படை ஞானம் மட்டும் இருப்பது கூடப் போதாது. இறைவனின் நாட்டமும், அவர்களுக்கு அதில் நற்பாக்கியமும் இருக்கவும் வேண்டும். பெரும் பெரும் பட்டதாரிகளும், கலாநிதிகளும் தமக்கு “நஸீப்” விதியில்லாமற் போனதால் இறைஞானத்தை இழந்து இறுதியில் அதன் எதிரிகளாகவே மாறிவிட்டனர்.

வரலாறு:
ஒரு சமயம் இந்தியாவிலிருந்து தரீகாவின் ஷெய்கு ஒருவர் இலங்கைக்கு வந்த நேரம் என்னைச் சந்திப்பதற்காக காத்தான்குடி வந்து எனதில்லத்தில் தொடராக மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் PhD முடித்த அஸ்ஹர் பல்கலைக் கழக பட்டதாரியாவார்கள்.

அவர்களின் வருகையை அறிந்த கொழும்பு, கண்டிப் பிரதேசங்களிலுள்ள சிலர் அவர்களைக் கண்டு “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான விளக்கம் பெற்றுக் கொள்வதற்காக எனதில்லம் வந்து தங்கியிருந்தார்கள். அவர்களில் இருவர் மௌலவீமார்கள். ஒருவர் சட்டத்தரணி, இன்னொருவர் MBBS டொக்டர். ஒருவர் வயோதிபர்.

அன்றிரவு சுமார் 10 மணியிலிருந்து “ஸுப்ஹ்” உடைய “அதான்” வரை ஷெய்கு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக விளக்கம் கொடுத்தார்கள்.

“ஸுப்ஹ்” தொழுகையின் பின் ஐவரும் ஷெய்கு அவர்களிடம் விடை பெற்றுச் செல்லுமுன் அவர்களை எனது அறைக்கு அழைத்து உங்களின் தாகம் தீர்ந்ததா? எந்த அளவு தீர்ந்தது? என்று இரகசியமாக வினவினேன். வயதானவர் நூறு வீதம் விளங்கிக் கொண்டேன் என்றார். மௌலவீமார்களில் ஒருவரும், டொக்டரும் 50 வீதம் விளங்கியது என்றனர். மற்றவர்கள் ஷெய்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது கூட எமக்குப் புரியவில்லை என்றார்கள்.

இந்த வரலாறை நான் இங்கு ஏன் எழுதினேன் என்றால் இந்த ஞானத்தை ஒரே தடவையில் விளங்கிக் கொள்ளுதல் மிகக் கடினமாகும் என்றும், எனினும் இது தொடர்பான அடிப்படை ஞானம் கொஞ்சமேனும் உள்ளவர்களாயிருந்தால் மட்டும் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும் என்றும், இவற்றுக்கும் மேலாக இறை நாட்டமும் வேண்டும் என்றும் உணர்த்துவதற்கேயாகும்.

இவ்வாறு நடப்பது புதிய செய்தியல்ல. பின்வரும் விடயத்தைக் கவனியுங்கள்.
إنّ الإمام أحمد بن سُريج حَضَرَ مجلسَ الجنيد، فقِيل له ما فهمتَ من كلامِه؟ فقال لا أدري ما يقول، ولكن أَجِدُ لكلامِه صولةً فى القلب ظاهرةً تدلُّ على عملٍ فى الباطن، وإخلاصٍ فى الضَّمير، وليسَ كلامُه كلامَ مُبطلٍ، (اليواقيت، ج 1، ص 14)

இமாம் அஹ்மத் இப்னு ஸுறைஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள், ஸெய்யிதுத் தாயிபா – ஸூபீகளின் தலைவர் ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் உபன்னியாச சபையில் ஒரு நாள் கலந்து கொண்டு திரும்பிய போது அவர்களிடம் அவ்வூர் மக்களிற் பலர் வந்து அங்கு போனீர்களே என்ன விடயம் உங்களுக்கு விளங்கியது? என்று கேட்டனர். கேட்டவர்கள் அனைவரும் இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்கள் மீது தவறான அபிப்பிராயம் உள்ளவர்களாவர்.

அதற்கு இமாமவர்கள் அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. எனினும் அவரின் பேச்சு எனதுள்ளத்தில் வெளிப்படையான ஒரு வகை உணர்வையும், உள ரீதியான ஓர் வணக்கத்தையும், உள்ளத்தில் ஒரு பக்தி நிலையையும் உருவாக்கியது. அவரின் பேச்சு வீணான பேச்சல்ல என்று கூறினார்கள்.

ஆதாரம்: அல்யவாகீத்
பாகம், 01, பக்கம் 14

ஸூபீகளின் தலைவர் என்று அக்கால மகான்களால் அழைக்கப்பட்டு வந்த ஸெய்யிதுத் தாயிபா ஜுனைதுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரீ 215-298 காலப்பகுதியில் சுமார் 1144 வருடங்களுக்கு முன் “பக்தாத்” நகரில் வாழ்ந்த ஒரு மகான் ஆவார்கள். இவர்களின் காலத்தில்தான் “அனல்ஹக்” நானே மெய்ப்பொருள் – நானே அல்லாஹ் என்று சொன்ன இமாம் மன்சூர் அல் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களும், இமாம் இறைஞானி அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் பல எண்ணற்கரிய இறைஞானிகளும் வாழ்ந்தனர்.

அக்காலத்தில் இறாக் நாட்டின் கிரீடமாக விளங்கியவர்கள்தான் ஜுனைத் அல்பக்தாதீ அவர்கள். அந்தக் காலத்து தலைமை முப்தீயாகவும் அவர்களே இருந்தார்கள்.

“அனல் ஹக்” நான் அல்லாஹ் என்று கூறிய மன்ஸூர் அல் ஹல்லாஜ் அவர்கள் ஸூபிஸத்தின் எதிரிகளான போலி உலமாஉகளின் சதியால் கொல்லப்பட்ட வேளை இமாம் ஜுனைத் அங்குதான் உயிரோடிருந்தார்கள்.

இமாம் ஜுனைத் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் அக்கால அரசராக விளங்கினார்கள். பகிரங்கமாக குறித்த ஞானம் பேசிய ஸூபீகளில் இவர்களும் ஒருவராயிருந்தார்கள்.

இமாம் மன்ஸூர் ஹல்லாஜ் கொல்லப்பட்ட பின் பகிரங்கமாக பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். எனினும் அவர்களால் இறைஞானத்தை பேசாமலிருக்க முடியவில்லை. அதேபோல் ஞானத் தாகமுள்ளவர்களுக்கும் பொறுமையுடன் இருக்க முடியவில்லை.

ஆகையால் ஞானத்தாகமுள்ள ஒரு சிலரை மட்டும் யாருக்கும் தெரியாத, மனிதர்களின் நடமாட்டம் குறைந்த இடங்களுக்கு வரச் சொல்லி அவர்களின் ஞானத் தாகத்தையும் தீர்த்து வைப்பதுடன் தங்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்துகொண்டார்கள்.

எனவே, இறையறிவின் மீது காதலுள்ளவர்கள், ஒரு பெண்ணைக் காதலிக்கின்ற ஒருவன் தினமும் அவளின் நினைவில் இருப்பது போலும், அவள் போகுமிடமெல்லாம் தானும் அவளைப் பின் தொடர்ந்து போவது போலும், இரவில் கண் விழித்திருந்து அவளை நினைப்பது போலும் இறைஞானத்தை தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அலைய வேண்டும். அதை அடைந்து கொள்வதற்காக அயராது உழைக்க வேண்டும். مَنْ جَدَّ وَجَدَ முயற்சித்தவன் பெற்றுக் கொள்வான்