தொடர் – 11
இறைஞானக் கருத்துக்களில் அநேகமான கருத்துக்களை “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ அவர்கள் என்ற தலைப்பிலேயே எழுதி வருகிறேன். இத்தலைப்பு எனது பிரதான தளமாகும். இத்தளத்தில் இவர்களின் கருத்துக்களும் இடம் பெறும். ஏனைய இறைஞான மகான்களின் கருத்துக்களும் இடம் பெறும். எனினும் எவரின் கருத்தை எழுதினாலும் இது இன்னாரின் கருத்தென்று நான் கூறுவேன். இவர்களை எனது பிரதான தளமாக நான் அமைத்ததற்கான காரணம் எனக்கு இவர்கள் மீதுள்ள அளவற்ற அன்பேயாகும். எனக்கு அவர்கள் மீது அத்தகைய அன்பு ஏற்படுவதற்கான காரணம், நான் எனது அன்பர்கள் இருவருடன் அவர்களின் புனித அடக்கத்தலத்தையும், அவர்களையும், மற்றும் அங்கு சமாதி கொண்டுள்ள கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மனைவியர், மற்றும் குத்புமார்களையும் சந்திப்பதற்காக சிரியா செல்ல நாடி டில்லியிலிருந்து விமானத்தில் ஏறி சுமார் அரை மணி நேரத்தில் எனக்கு அவர்கள் வெளிப்படுத்திய ஓர் அற்புதமும். நான் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் இரண்டாம் நாள் அவர்கள் காட்டிய அற்புதமும், நான் நாட்டிற்கு – காத்தான்குடிக்கு வந்தபின் அவர்களை நான் கண்ட கனவுமேயாகும்.
மேலே நான் குறிப்பிட்ட மூன்று அற்புதங்களில் சிரியா பயணத்தின் போது நடந்த அற்புதமான இரு நிகழ்வுகளையும் இன்று வரை – இச்செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை நான் எவரிடமும் சொல்லவுமில்லை. சொல்வதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவுமில்லை. ஆகையால் விழிப்பில் நடந்த வியப்பான அவ்விரு நிகழ்வுகளையும் என்னுடன் பயணித்து என்னுடனேயே இருந்தவர்களிடம் கூட நான் கூறவில்லை.
ஆயினும் கனவில் கண்ட ஒரு காட்சியை மட்டும் எனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளேன்.
எனது 78 வருட வாழ்வில் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நபீமார்களினதும், நூற்றுக்கும் மேற்பட்ட “குத்பு”மார்களினதும், மற்றும் அவ்லியாஉகளினதும் சியாறங்களுக்குச் சென்றுள்ளேன். அவர்களின் வரலாறுகளை வாசித்துமுள்ளேன்.
நபீமார் தவிர பொதுவாக அறிவிலும் விஷேடமாக இறைஞானத்திலும் இப்னு அறபீ நாயகம் போன்ற ஒருவர் இருந்ததாக நான் அறியவில்லை. இப்னு அறபீ நாயகம் அவர்கள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசிர்வாத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் எனது பார்வையில் நபீமார்களுக்குப் பிறகு உலகில் தோன்றிய அல்லாஹ்வின் “அலீம்” அறிஞன் என்ற திரு நாமத்தின் நிகரற்ற வெளிப்பாடு இப்னு அறபீ என்றே சொல்வேன்.
سُئل الشّيخ الإمام ابن حجر الهيتمي رحمه الله عن مطالعة كتب الشّيخ محي الدين ابن عربي قدّس سرّه،
فأجاب بقوله الذي أثرناه عن أكابر مشايخنا العلماء الحكماء الذين يُستسقى بهم الغيث، وعليهم المُعوَّل وإليهم المَرْجِع في تحرير الأحكام وبيان الأحوال والمعارف والمقامات والإشارات،
أن الشيخ محي الدين بن عربي من أولياء الله العارفين ومن العلماء العاملين، وقد اتفقوا على أنه كان أعلَمَ أهلِ زَمَانِه، بِحَيْثُ أنه كان في كلّ فَنٍّ متبوعاً لا تابعاً، وأنه في التحقيق والكشف والكلام على الفرق والجمع بحرٌ لا يجارى، وإمامٌ لا يغَالِطُ ولا يُمارِي، وأنّه أَوْرَعُ أهلِ زمانِه وألزَمُهم للسنّةوأعظمُهم مجاهَدَةً، حتّى أنّه مَكَثَ ثلاثةَ أشهُرٍ على وُضوءٍ واحدٍ، وقِسْ على ذلك ما هو من سَوابِقِه ولَوَاحِقِه،
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்களை வாசிப்பது தொடர்பாக அஷ் ஷெய்குல் இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்கள்.
(தத்துவ வாதிகளும், அறிஞர்களுமான எங்களின் ஷெய்குமார் – ஞான குருமார் வழியில் நாம் அறிந்து கொண்ட விஷயத்தை சொல்கிறேன். நான் குறிப்பிடும் மகான்கள் சாதாரணமானவர்களல்ல. அவர்கள் பெரும் மகான்கள். அவர்களின் பொருட்டால் மழை கேட்டால் அது உடனே பெய்யும். எந்தவொரு சட்டமாயினும், பிரச்சினையாயினும் அவர்களிடமே அவற்றுக்கான தீர்வு பெறப்படும். அது மட்டுமல்ல. ஞானக் கலையோடு தொடர்புள்ள ஆன்மீக நிலைகள், ஞானங்கள், மற்றும் அந்தஸ்த்துக்கள், ஜாடைகள் போன்றவற்றுக்கும் அவர்களிடமே விடைகள் காணப்படும். அவர்கள் அத்தகைய நாதாக்களாவர். அவர்கள் அனைவரும் இப்னு அறபீ பற்றி பின்வரும் கொள்கையும், அபிப்பிராயமும் உள்ளவர்களேயாவர்.
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைஞானிகளான வலீமார்களில் ஒருவர். “ஷரீஆ” வழி பேணி வாழும் அறிஞர்களிலும் ஒருவர். அக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்களில் மிக அறிஞர் என்றும், எல்லாக் காலங்களிலும் பின்பற்றப்பட்டவர்களாயிருந்தார்களேயன்றி அவர்கள் யாரையும் பின்பற்றும் நிலையில் இருந்தவர்களல்ல என்றும், சகல பிரச்சினைகளிலும் தெளிவானவர் என்றும், “கஷ்பு” எனும் அறிவிலும், பேச்சு ஞானத்திலும் பெருங்கடல் என்றும், அவர்களின் காலத்தவர்களில் மிகப் பேணுதலானவர் என்றும், நபீ வழியை இறுகப் பிடித்தவர் என்றும், மனப் போரில் அதை வென்றவர்கள் என்றும் அறிஞர்கள் கருத்து வேறுபாடின்றி ஒரே குரலில் ஏகோபித்துக் கூறிய ஒரு மகான் ஆவார்கள். மனப்போரில் வென்றவர்கள் என்பதற்கு ஓர் ஆதாரம் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒரே “வுழூ”வுடன் வாழ்ந்ததேயாகும். இந்த ஒரே ஆதாரம் மூலம் அவர்கள் எத்தகையோர் என்று புரிந்து கொள்ளலாம்.
மேற்கண்டவாறு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்தவர்கள் இமாம் இப்னு ஹஜர் அவர்களேயாவர். இமாம் இப்னு ஹஜர் ஹிஜ்ரீ 909-974 காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் தனது விருப்பத்தின் படி மட்டும் அவ்வாறு புகழாமல் பல அறிஞர்களின் கருத்துக்களையும் உள்வாங்கியே அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.
மூன்று மாதங்கள் தொடராக ஒரே “வுழூ”வுடன் இருந்தது சாதாரண விடயமல்ல. மூன்று மாதங்கள் தொடராக ஒரே “வுழூ”வுடன் இருந்தார்கள் என்று சொல்வதை விட தொடராக மூன்று மாதங்கள் உறங்காமலும், மல சலம் கழிக்காமலும், பின் துவாரத்தால் “குசு” காற்று வெளியாகாமலும் இருந்தார்கள் என்று சொல்வதே சிறந்தது எனலாம்.
ஒரு வைத்திய மேதையிடம் இவ்வாறிருப்பது மனித சக்திக்கு உட்பட்டதா? இல்லையா? என்று கேட்டால் அவர் இல்லை என்றே சொல்வார். ஆயினும் ஒருவன் இவ்வாறிருப்பதற்கு பல வருடங்கள் பயிற்சியெடுத்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் சொல்வார்.
ஒருவன் பயிற்சி எடுத்து ஒரு சாதனை படைத்து உலகப் பிரசித்தி பெற விரும்பினால் மட்டும் புகழ் விரும்பியான அவன் தனது முயற்சியில் வெற்றி பெறச் சாத்தியமுண்டு. ஆயினும் ஆன்மீக வாதிகளான அவ்லியாஉகளோ மறைந்து வாழ்வதையே விரும்பினார்கள். அவர்களிலெவரும் பயிற்சியெடுத்து சாதனை படைத்ததற்கும் வரலாறில்லை. அவ்லியாஉகளுக்கு அவ்வாறான எண்ணம் இருந்ததற்கும் வரலாறில்லை.
ஷெய்குனா இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வாறிருந்தது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய “கறாமத்” அற்புதமேயன்றி புகழ் பெறுவதற்காக அவ்வாறு பயிற்சி எடுத்து அப்படியொரு திறமையை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று நினைப்பது பெரும் பாவமாகிவிடும். வலீமார் எந்தவொரு கட்டத்திலும் அவ்வாறு செய்பவர்களல்ல.
இப்னு அறபீ நாயகம் தொடராக மூன்று மாதம் அவ்வாறிருந்தது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமேயாகும்.
ஆயினும் தமக்குத் தாமே “ஆரிப் பில்லாஹ்” என்றும், இமாம் என்றும் பெயர் வைத்துக் கொண்ட, அல்லது தமது ஆதரவாளர்களால் “ஆரிப் பில்லாஹ்” என்றும், இமாம் என்றும் பெயர் வைக்கப்பட்ட சிலர் இப்னு அறபீ நாயகமவர்களைக் குறை கூறுவதும், அவர்களை “சிந்தீக்” என்று சொல்வதும் பொறாமை, எரிச்சல் என்பவற்றின் வெளிப்பாடு என்றே நான் சொல்வேன்.
இமாம் என்று தனது ஆதரவாளர்களால் பட்டம் சூட்டிப் பிரசித்தி பெற்ற சில அறபு எழுத்தாளர்கள் தமது நூல்களில் இப்னு அறபீ அவர்களையும், அவர்களின் கொள்கையான “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையையும் பிழையென்று சொல்வதை நமது நாட்டு உலமாஉகள் சிலர் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பது அவர்களின் அறியாமையேயாகும். அல்லது அங்கோடை செல்ல வேண்டிய பைத்தியங்களேயாகும்.
இப்னு அறபீ நாயகம் அவர்களின் இன்னுமோர் அற்புதத்தை இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூலில் 216ம் பக்கத்தில் கூறியுள்ளார்கள். அதையும் இங்கு எழுதுகிறேன்.
وَمِنْه أَنه لما صنَّف كِتَابه الفتوحات المكية وَضعه على ظهر الْكَعْبَة وَرَقًا مِنْ غَيْرِ وِقَايَةٍ عَلَيْهِ فَمَكثَ على ظهرهَا سَنَةً لَمْ يَمَسَّهُ مَطَرٌ وَلَا أَخذ مِنْهُ الرّيح ورقة وَاحِدَة مَعَ كَثْرَة الرِّيَاح والأمطار بِمَكَّة فَحِفْظُ اللهِ كِتَابَه هَذَا من هذَيْن الضِّدَّيْنِ دَلِيلٌ أَيُّ دَلِيلٍ وعلامةٌ أَيُّ عَلامَةٍ على أَنه تَعَالَى قَبِلَ مِنْهُ ذَلِك الْكتاب وأثابه عَلَيْهِ وَحمد تصنيفه لَهُ فَلَا يَنْبَغِي التَّعَرُّض للإنكار عَلَيْهِ فَإِنَّهُ السُّمُّ الْقَاتِل لوقته كَمَا شَاهَدْنَاهُ وجَرَّبْنَاه فِي أنَاس حق عَلَيْهِم من المقت وَسُوء الْعقَاب مَا أوجب لَهُم التَّعَرُّض لهَذَا الإِمَام الْعَارِف بالإنكار حَتَّى استأصل شأفتهم وَقطع دابرهم فَأَصْبحُوا لَا ترى إِلَّا مساكنهم فمعاذا بِاللَّه من أَحْوَالهم وتضرعا إِلَيْهِ بالسلامة من أَقْوَالهم
சுருக்கம்: இமாம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூலை திரு மக்கா நகரில் இருந்து எழுதி முடித்த போது அதை வெளியிடுமுன் தனக்கு அது சரியான நூல்தான் என்று அல்லாஹ்விடமிருந்து ஓர் அற்புதம் கிடைத்த பிறகுதான் வெளியிட வேண்டுமென்று விரும்பிய இமாம் இப்னு அறபீ அவர்கள் தான் எழுதிய அந்த நூலை கையெழுத்துப் பிரதியை கோர்த்துக் கட்டாமல் தனித் தனித் தாளாக இருந்த நிலையில் அதை “கஃபா”வின் மொட்டை மாடியில் வைத்து விட்டு ஒரு வருடம் பொறுத்திருக்க வேண்டும். அதன் பின் அதை எடுத்துப் பார்க்கும் போது அதில் ஓர் எழுத்தாவது மழையால் நனைந்திருந்தால் அல்லது அதில் ஒரு தாளாவது காற்றால் பறந்திருந்தால் அதை வெளிப்படுத்துவதில்லை என்று முடிவு செய்து….
தொடரும்…