Home எழுத்தாக்கங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 12

மேலே நான் எழுதிய அறபு வரிகளின் தமிழ் மொழியாக்கம் இதோ.

இப்னு அறபீ நாயகம் அவர்கள் திரு மக்கா நகரில் இருந்த காலத்தில் எழுதிய நூல்தான் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் களஞ்சியம். அதை எழுதி முடித்த அவர்கள் அதை வெளியிடுவதற்கு முன் அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா? இல்லையா? என்பதை அறிந்த பிறகுதான் வெளியிட வேண்டுமென விரும்பி அவர்கள் தனித் தனித் தாள்களில் எழுதியவற்றை கோர்த்துக் கட்டமால் அவை தனித்தனித் தாள்களாக இருக்கும் நிலையில் அதை அவ்வாறே “கஃபா”வுக்கு கொண்டு வந்து அதன் வெளி மாடி – மொட்டை மாடிக்கு அதை எடுத்துச் சென்று, இறைவா! தனித் தனி தாள்களாக கோர்த்துக் கட்டமாலிருக்கும் இந்நூலை நீ ஏற்றுக் கொண்டாயா? இல்லையா? என்பதை நான் அறிந்த பிறகுதான் வெளியிடுவேன். இன்று கஃபாவின் மொட்டை மாடியில் வைக்கின்ற நான் ஒரு வருடத்தின் பின் வந்து பார்ப்பேன், அதில் ஒரு தாள் கூட மழையினால் நனையாமலும், ஒரு தாள் கூட காற்றினால் பறக்காமலும் இருந்தால் மட்டுமே இதை நான் வெளியிடுவேன் என்று கூறி வைத்தார்கள்.

ஸுப்ஹானல்லாஹ்! அவர்கள் அதை வைத்த நாள் முதல் ஒரு வருடம் வரை திரு மக்காவில் கடும் மழையும் பெய்தது, கடும் காற்றும் வீசியது. அவ்வாறிருந்தும் கூட அதில் எந்தவொரு குறையும் ஏற்படாமல் அவர்கள் வைத்தது போலவே இருந்ததைக் கண்ட இப்னு அறபீ நாயகம் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு “ஷுக்ர்” செய்து அந்த நூலை வெளியிட்டார்கள். இப்படியொரு அற்புதம் எந்த ஒரு நூலை எழுதியவருக்காவது நடந்ததற்கு வரலாறுண்டா?

குறித்த நூல் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் எது இருக்கிறது? இத்தகைய ஆதாரம் இருந்துங்கூட அவர்களை ஒருவன் மறுக்கிறான் என்றால் அவன் ஒரு “ஷகீ” மூதேவியாகவே இருப்பான்.

எனவே, இந்நூலை எவரும் எதிர்க்கக் கூடாது. யாராவது எதிர்த்தால் அது அவரைக் கொல்லும் நஞ்சாகிவிடும். இந்த நூலை எதிர்த்த பலர் பல்வேறு கஷ்டங்களுக்கும், நோய், நொடிகளுக்கும் உள்ளாகி, தாம் குடியிருந்த வீடுகளையும் இழந்து தெருக்களில் அலைந்து திரிந்ததையும் எமது கண்ணால் கண்டோம் என்று இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்பதாவல் ஹதீதிய்யா, பக்கம் – 216

இப்னு அறபீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையுள்ளவராதலால் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாதென்று உலமாஉகளில் ஒரு சிறு குழு – வஹ்ஹாபிகள் கூறுகின்றனர். ஆயினும் “பத்வா” வழங்கிய “முப்தீ” மகான்கள் தமது “பத்வா”வில் அவர்களைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். அவர்களை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதற்கு ஆதாரம் அவர்கள் அவர்களுக்காக றழியல்லாஹு அன்ஹும் என்று “துஆ” செய்ததேயாகும். அது மட்டுமல்ல. தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக அவர்கள் எடுத்த இமாம்களுடன் இப்னு அறபீ நாயகம் அவர்களையும் சேர்த்துள்ளதேயாகும்.

இது உல அதிசயங்களில் ஒன்று எனலாம். ஏனெனில் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே எனும் தத்துவம் பிழை என்றும், “ஷிர்க்” என்றும் கூறுகின்ற உலமா சபை அதே கருத்துக்கு வித்திட்ட, பேசியும், எழுதியும் வருகின்ற இமாம் இப்னு அறபீ அவர்களைச் சரி கண்டிருப்பதும், அவர்களுக்கு “துஆ” கேட்டிருப்பதும் உலக அதிசயங்களில் ஒன்றா? இல்லையா?

இப்னு அறபீ அவர்கள் எல்லாம் அவனே என்று சொல்லவில்லை என்று இவர்கள் சொல்வார்களாயின் அவர்கள் அவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்கள் தேவையென்று அவர்களிடம் நான் கேட்கிறேன். சொல்வார்களா? வாய் திறக்க மாட்டார்கள். இருந்தாலும் மனத் திருப்திக்காக மட்டும் சில ஆதாரங்களை எழுதுகிறேன்.


يقول الشّيخ الأكبر ابن عربي رضي الله عنه ‘ مَا فِى الْوُجُوْدِ إِلَّا اللهُ ‘(الفتوحات المكيّة،لابن عربي، تحقيق عثمان يحيى 13- 424)
وقال أيضا: اَلْعَارِفُ مَنْ يَرَى الْحَقَّ فِى كُلِّ شَيْئٍ، بَلْ يَرَاهُ عَيْنَ كُلِّ شَيْئٍ، (فصوص الحكم بشرح القيصري، 2 – 385)
وقال أيضا: اَلْكَوْنُ خَيَالٌ، وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ، (فصوص الحكم بشرح القاشاني، ص 243)
وقال أيضا: وَلَوْ لَا سَرَيَانُ الْحَقِّ فِى الْمَوْجُوْدَاتِ بِالصُّوْرَةِ مَا كَانَ لِلْعَالَمِ وُجُوْدٌ، (فصوص الحكم، ص 29)
قال الشّيخ الشاعر العارف أيضا:
فَالْحَقُّ خَلْقٌ بِهَذَا الْوَجْهِ فَاعْتَبِرُوْا – وَلَيْسَ خَلْقًا بِهَذَا الْوَجْهِ فَادَّكِرُوْا
مَنْ يَدْرِ مَا قُلْتُ لَمْ تَـخْـذُلْ بَصِيْرَتُهُ – وَلَيْسَ يَدْرِيْهِ إِلَّا مَنْ لَهُ بَصَرٌ
جَـمِّـعْ وَفَـرِّقْ فَإِنَّ الْعَيْنَ وَاحِدَةٌ – وَهِـيَ الْكَثِيْرَةُ لَا تَبْقَـى وَلَا تَذَرُ
(فصوص الحكم بشرح القاشاني، ص 84)

ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்கள் எல்லாம் அவனே என்று சொல்லியுள்ளார்கள் என்றால் எந்த கிதாபில், எந்தப் பக்கத்தில் சொல்லியுள்ளார்கள் என்று ஒருவர் கேட்பாராயின் அவர் அவர்களின் எந்த ஒரு நூலையும் பார்க்காதவராகவே இருப்பார். ஏனெனில் அவர்களின் எல்லா நூல்களிலும், குறிப்பாக “தஸவ்வுப்” ஸூபிஸம் தொடர்பாகவும், இறைஞானம் தொடர்பாகவும் எழுதிய எல்லா நூல்களிலும் எல்லா இடங்களிலும் எழுதியிருக்கும் நிலையில் எந்தக் கிதாபுகளை பார்க்குமாறும் சொல்லலாம்? இருந்தாலும் மேலே ஐந்து இடங்களை நூல்களின் பெயர்களுடனும், பக்கங்களுடனும் தெளிவாகக் கூறியுள்ளேன். இவற்றுக்கான விளக்கத்தை சுருக்கமாக கூறிவிட்டு இன்னும் ஓர் ஆதாரம் கூறுவேன்.

இப்னு அறபீ நாயகம் எல்லாம் அவனே என்று சொல்லவில்லை என்று கூறி “பித்னா” குழப்பத்திற்கு வழி தேடும் “பத்தான்” குழப்பவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்களோ?

“வஹ்ததுல் வுஜூத்” என்று ஒன்றிருப்பது உண்மையாயினும் அதற்கு நான் கூறும் விளக்கம் பிழையானதென்று ஷெய்குமார் குடும்பத்தைச் சேர்ந்த ஆன்மிக அறிவில் முழுமை பெறாத சில பொடியன்மாரும், அரை குறை அவியல் எனப்படும் சில மௌலவீமாரும் சொன்னார்கள்.

அதற்கு நான் கூறும் விளக்கம் பிழையானதென்றால் அதற்குரிய சரியான விளக்கத்தை அவர்கள் சொல்ல வேண்டுமென்று பல முறை பகிரங்கமாகக் கேட்டிருந்தோம். எவரும் பதில் சொல்லவில்லை. ஷெய்குமார் குடும்பத்தைச் சேர்ந்த சில பொடியன்மார் மட்டும் அதற்கு விளக்கம் சொல்ல எங்களுக்கு அனுமதியில்லை என்று சொன்னார்களாம். பொய் சொல்வதாயினும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் என்று பொது மக்கள் சொல்வதுண்டு. அந்தப் பொடியன்மாரிடம் நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அதாவது “வஹ்ததுல் வுஜூத்” என்பதற்கு நான் கூறும் விளக்கம் பிழையென்று சொல்வதற்கு அந்தப் பொடியன்மாருக்கு அனுமதி கொடுத்தது யார்? இதுவே எனது கேள்வி.

நான் மேலே ஐந்து ஆதாரங்கள் கூறியுள்ளேன். இவ் ஐந்தும் எல்லாமவனே என்ற தத்துவத்தைக் கூறுவது ஞான ஓட்டமுள்ளவர்களுக்கு விளங்காமற் போகாது. இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த தொடரில் மேற்கண்ட ஐந்து ஆதாரங்களுக்கும் விளக்கம் சொல்வதுடன் மேலும் ஓர் ஆதாரமும் கூறி அதற்கும் விளக்கம் சொல்வேன்.

தொடரும்….

NO COMMENTS