தொடர் – 13
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திரு மக்கா நகரில் தங்கியிருந்த காலத்தில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய “இல்ஹாம்”, “கஷ்பு” எனும் அறிவு ஞானங்களை ஒரு பெரும் நூலில் எழுதுவதற்கு அல்லாஹ் அவர்களுக்கு ஓர் உதிப்பைக் கொடுத்தான்.
எழுதத் தொடங்கினார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறும் தகவல்களை இங்கு எழுதுகிறேன்.
قال الشّيخ الأكبر محي الدين ابن عربي رضي الله عنه فى الباب السّادس والستّين وثلاثمأة من الفتوحات المكيّة (جميع ما أتكلّم به فى مجالسي وتآليفي إنّما هو من حضـرة القرآن الكريم، فإنّي اُعطيتُ مفاتيحَ العلم فيه، فلا استَمِدُّ قطّ فى علم من العلوم، إلّا منه، كلّ ذلك حتّى لا اَخْرُجَ عن مجالسة الحقّ تعالى فى مناجاته بكلامه، أو بما تَضَمَّنَهُ كلامُه)
முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 366ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(நான் எனது சபைகளில் பேசுகின்றவையும், எனது நூல்களில் எழுதுகின்றவையும் திருக்குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களேயாகும். ஏனெனில் நான் திருக்குர்ஆன் அறிவில் அதன் திறப்புகள் வழங்கப்பட்டவனாக உள்ளேன். எந்த ஓர் அறிவை நான் கூறினாலும் அது திருக்குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கும். வேறு எதிலிருந்தும் நான் எடுப்பதில்லை.
இதெல்லாம் நான் அல்லாஹ்வுடன் அவனின் பேச்சு கொண்டு அல்லது அவனின் பேச்சு உள் வாங்கியதைக் கொண்டு அவனுடனேயே இருப்பதற்காகவேயாகும்)
மேலே தொடர் 12ல் நான் கூறிய இரு அற்புதங்களுமுள்ள ஒரு மகான் பொய் சொல்வார்களா? அவ்வாறு பொய் சொல்வதற்கு அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது? அவர்கள் பொய் சொல்வதாக சிலர் நினைக்கலாம். அல்லது சொல்லலாம். இன்னோர் வலீமார் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். அவர்களின் தத்துவங்கள் எமக்குப் புரியவில்லையானால் நாம் அது பற்றி தவறாக எதுவும் பேசாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
إعلم رحمك الله أنّه لا يجوز الإنكارُ على القوم إلّا بعد معرفةِ مصطلحهم في ألفاظهم ثمّ إذا رأينا بعد ذلك كلامهم مخالفا للشريعة رمينا به،
“அல்யவாகீத் வல் ஜவாஹிர்” நூலாசிரியர் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
(“அல்கவ்மு” என்றால் பொதுவாக கூட்டம் என்று பொருள் வரும். ஸூபீகள், இறைஞானிகள் தமது கலைக்கென்று சில கலைச் சொற்களை அமைத்து வைத்துள்ளார்கள். அச் சொற்களை அறிவதற்கு முன் ஞான மகான்களை “இன்கார்” மறுப்பதும், எதிர்ப்பதும் எவருக்கும் கூடாது. ஏனெனில் அவர்கள் ஏதோ கருத்துக்கு ஒரு சொல்லை கலைச் சொல்லாக அமைத்திருந்து அது பற்றிய ஞானமில்லாதவன் அதற்கு வேறோர் கருத்தை வைத்து பொருள் கொள்வானாயின் அது பிழையாகிவிடும்.
உதாரணமாக ظِلٌّ என்றால் நிழல் என்பதே வெளிப்படையான பொருள். இது அறபு மொழி கற்றவர்களுக்கு தெரியும். ஸூபீகள், இறைஞானிகள் இச் சொல்லை “வுஜூத்” என்பதைக் குறிக்கும் கலைச் சொல்லாக அமைத்துள்ளார்கள்.
உதாரணமாக பின்வரும் பாடலைக் கவனியுங்கள்.
صَلَاةُ اللهْ سَلَامُ اللهْ عَلَى طَهَ رَسُوْلِ اللهْ
صَلَاةُ اللهْ سَلَامُ اللهْ عَلَى يس حَبِيْبِ اللهْ
இந்தப் பாடலில் “தாஹா” என்றும், “யாஸீன்” என்றும் கூறுப்படுவது நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையே குறிக்கும். ஏனெனில் இவ்விரண்டும் அவர்களின் பெயர்களாகும்.
இதே பாடல் பின்வருமாறும் வந்துள்ளது. சாதாரண மனிதர்கள் – அதாவது பொது மக்கள் மேலே சொன்னவாறு பாடுவார்கள். ஸூபிஸக் கலையோடும், ஞானத்தோடும் தொடர்புள்ளவர்கள் பின்னால் வருமாறு பாடுவார்கள்.
صَلَاةُ اللهْ سَلَامُ اللهْ عَلَى الْفَانِيْ رَسُوْلِ اللهْ
صَلَاةُ اللهْ سَلَامُ اللهْ عَلَى الْمَاحِيْ حَبِيْبِ اللهْ
இந்தப் பாடலில் “பானீ” என்ற சொல்லும், “மாஹீ” என்ற சொல்லும் வந்துள்ளன.
இவ்விரு சொற்களுக்கும் ஞான வழி வாழாத சாதாரண மக்கள் அழிந்து போனவன் என்றும், அழிப்பவர் என்றுமே பொருள் கூறுவார்கள். இவ்வாறான பாடல்களை ஸூபீகளின் கலைச் சொற்கள் தெரியாதவர்கள் பிழை என்பர். “ஷிர்க்” என்றும் சொல்லிவிடுவர். ஏனெனில் على الفاني رسول الله அழிந்து போன றஸூலுல்லாஹ் என்றும், அழிக்கும் ஹபீபுல்லாஹ் என்றும் பொருள் வரும்.
ஸூபீகளும், ஞானமகான்களும் “பானீ” என்ற சொல்லை فَانِيْ فِى الله என்ற பொருளுக்கு பயன்படுத்துவார்கள். அதாவது அல்லாஹ்வில் அழிந்தவன் என்ற கருத்துக்கு பயன்படுத்துவார்கள்.
ஒரு மனிதன் அல்லாஹ்வில் அழிதல் என்றால் அவனின் உடல் அழிந்து போவதைக் குறிக்காது. மாறாக அவனின் உணர்வு அல்லாஹ்வில் அழிந்து அல்லாஹ் தவிர எதுவுமில்லை, தானுமில்லை, எந்தவொரு சிருட்டியும் – படைப்புமில்லை என்று உணர்வதைக் குறிக்கும். இந்த நிலை அடைந்தவர் “பானீ” என்றழைக்கப்படுவார்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் رَئِيْسُ الْفَانِيْنْ “பனா” ஆனவர்களின் தவைராவார்கள். அவர்களை விட “பனா” ஆனவர் எவருமிலர்.
“மாஹீ” مَاحِيْ என்பதும் பெருமானாரின் பெயர்களில் ஒன்றுதான். “ஷரீஆ” உடையவர்கள் مَاحِى الذُّنُوْبِ பாவங்களை அழிப்பவர்கள் என்று பொருள் சொல்வர். ஸூபீகளும், இறைஞானிகளும் مَاحِى الْغَيْرِيَّةْ இறைவனுக்கு வேறானது இல்லையென்று அதை அழிப்பவர்கள் என்று பொருள் கொள்வார்கள்.
“ஷரீஆ” உடையவர்கள் கூறும் பொருளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் ஸூபீகளினதும், ஞானிகளினதும் பொருளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முந்திய பாடல் எல்லா நாட்டு முஸ்லிம்களும் அறிந்த பாடல்தான். ஆயினும் பிந்தின பாடல் அவ்வாறானதல்ல. இது காத்தான்குடி மக்களில் ஸூபிஸவாதிகள் மட்டுமே அறிந்த பாடலாகும். அதுமட்டுமல்ல இப்பாடலைப் பெற்ற தாயும் காத்தான்குடிதான்.
இரண்டும் சரியானதாயிருந்தாலும் கருத்துச் செறிந்த பாடலும், ஸூபிஸ உணர்வைத் தட்டியெழுப்பும் பாடலும் பிந்தின பாடல்தான்.
ஒரு மனிதன் தன்னையும் மறந்து, உலகையும் மறந்து, உலகிலுள்ள அனைத்தையும் மறந்து அல்லாஹ் அன்றி ஒன்றில்லை என்ற நிலையிலிருப்பது “பனா” உடைய நிலையாகும். இந்நிலைக்கு அப்பாலும் ஒரு நிலை உண்டு. அது “பக்ர்” என்று சொல்லப்படும். அந்த நிலை இந்த நிலையை விடச் சிறந்ததாகும். அது பற்றி அதற்குரிய இடத்தில் எழுதுவோம்.
ஸூபிஸ ஞானத்தை எதிர்ப்பதோ, ஸூபீகளை எதிர்ப்பதோ ஒரு முஸ்லிம் நினைத்துக் கூடப் பார்க்க கூடாத ஒன்றாகும். இன்று ஸூபீகளையும், ஞானிகளையும் எதிர்த்து அவர்களை “முர்தத்”துகள் என்போர் மறுமையில் “முர்தத்” பத்வா வழங்கிய முல்லாக்களைத் தேடிப்பிடித்து அவர்களின் செவிகளைப் பிடித்திழுத்துக் கொண்டு மலக்குகளிடம் சென்று இவர்கள்தான் எங்களை இந்நிலைக்கு தள்ளியவர்கள் என்று அவர்களிடம் முறையிடட்டும்.
இன்னுமொரு பாடலைக் கவனியுங்கள்.
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ – مَا فِى قَلْبِيْ غَيْرُ اللهْ
نُـوْرُ مُـحَـمَّـدْ صَـلَّى اللهْ – لَا إله إِلَّا اللهْ
இந்தப் பாடலில் மூன்றாம் அடியில் வந்துள்ள نور محمد صلى الله என்பதற்குப் பதிலாக نور محمد ظل الله என்றும் பாடுகின்றார்கள். நூறு முஹம்மத் ஸல்லல்லாஹ் என்பது ஷரீஆவாதிகளின் பாடல். நூறு முஹம்மத் ளில்லுல்லாஹ் என்பது தரீகாவாதிகளின் பாடலாகும்.
ظِلٌّ – என்றால் சாதாரணமாக அனைவரும் அறிந்த பொருள் நிழல் என்பதாகும். இச் சொல்லை ஸூபீகள் “வுஜூத்” உள்ளமை என்ற பொருளுக்கு பயன்படுத்துவர். نور محمد ظل الله என்று பாடுவர். இதன் பொருள் அல்லாஹ்வின் “வுஜூத்” என்பதாகும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ – என்று கூறியுள்ளான். எனவே ஸூபீகள் இதன் உள்ரங்கமான பொருள் “வுஜூத்” என்பதாகும். ஸூபீகளின் திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இவ்வசனத்திற்கு “உங்களின் றப்பு “வுஜூத்” ஐ எவ்வாறு விரித்துள்ளான் என்று நீங்கள் உங்களின் இரட்சகனளவில் பார்க்கவில்லையா? என்று விரிவுரை எழுதப்பட்டுள்ளது.
அதாவது அல்லாஹ்வின் “வுஜூத்” தான் கடல்களாக, மலைகளாக, பரந்த பூமியாக விரிந்து காணப்படுகிறது. இதற்கான விளக்கம் உரிய இடத்தில் இடம் பெறும்.
எனவே ஸூபீகளின் கலைச் சொற்களைப் புரிந்து கொள்ளாத எவரும் அவர்களை மறுப்பதும், எதிர்ப்பதும் பெருங்குற்றமாகும். மரண வருத்தத்தின் போது நாவில் திருக்கலிமா வராமல் தடை செய்யும் பயங்கர நஞ்சாகும்.
தொடரும்…