தொடர் – 14
அல்லாஹ்வுக்கு “வுஜூத்” உள்ளமை அவசியம்!
படைப்புக்கு அதன் எதிர்மறையான “அதம்” எனும் இன்மை அவசியம்!
படைப்பு என்பது பார்வையில் மட்டும் தோற்றுவதேயன்றி அது எதார்த்தத்தில் இல்லாததேயாகும்!
அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபாத்” தன்மைகள் இருபது. அவற்றை கிளிப் பிள்ளைபோல் பாடமாக்காமல் அவற்றின் பொருளையும், அவை தருகின்ற சாராம்சத்தையும் விளங்கி அறிந்தவனே தனது கடமையை நிறைவேற்றினவனாவான். இருபதையும் மனனம் செய்வது கடமையல்ல. ஆயினும் அவற்றின் சாராம்சத்தை விளங்கியறிவதே கடமை.
அல்லாஹ்வுக்கு வாஜிபானது – கடமையானது எதுவுமில்லை. அவனுக்கு கடமையானதென்று இங்கு கூறப்பட்டது அவனில் அவசியம் இருக்க வேண்டியதென்ற கருத்தையே குறிக்கும். இது மனிதனுக்கு தொழுகை கடமையானது போன்ற கடமையல்ல. எது அவனில் மட்டும் இருக்க வேண்டியது அவசியமோ அது அவனின் படைப்பில் இருப்பது அசாத்தியம். இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அவனில் மட்டும் இருக்க வேண்டிய ஒன்று அவனின் படைப்பிலும் இருக்கிறதென்று நம்பினவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனேயாவான். ஏனெனில் அவன் அல்லாஹ்வில் மட்டும் இருக்க வேண்டிய ஒன்று படைப்பில் இருப்பதாக நம்பிவிட்டான். இவ்விடத்தில் அவன் இறைவனுக்கு மட்டுமுள்ள ஒன்றை படைப்புக்குத் தரிபடுத்திய காரணத்தால் அவனின் நம்பிக்கை “ஷிர்க்” ஆன நம்பிக்கையாகிவிட்டது.
“வுஜூத்” உள்ளமை என்ற சொல்லின் எதிர்மறைச் சொல் இன்மை, இல்லாமை என்ற பொருளுக்குரிய “அதம்” என்ற சொல்லேயன்றி பொய் என்ற பொருளுக்குரிய “கதிபுன்” என்ற சொல் அல்ல. இச் சொல்லின் எதிர் மறை “ஸித்குன்” என்பதாகும்.
உண்மை வேறு, உள்ளமை வேறு. இரண்டும் ஒன்றல்ல. உண்மை என்றால் மறுக்க முடியாதது. பொய் அல்லாதது. சத்தியம் என்ற பொருளுக்குரிய சொல்லாகும்.
உள்ளமை பேசவேண்டும் என்று சொல்வது பிழை. உண்மை பேச வேண்டுமென்பதே சரியானதாகும். உள்ளமை என்பது ஒரு வஸ்த்து உள்ளதாக இருப்பதைக் குறிக்கும். அதாவது இன்மைக்கு – இல்லாமைக்கு மாற்றமானது. (இதற்கு தமிழில் பொருத்தமான ஒத்தைச் சொல்லை காண முடியவில்லை)
அல்லாஹ்வுக்கு “வுஜூத்” உள்ளமை அவசியமென்றால் படைப்புக்கு இன்மை – இல்லாமை அவசியமாகும். இதன் சுருக்கம் படைப்பு இல்லை என்பதேயாகும்.
அல்லாஹ் மட்டுமே உள்ளான் படைப்பு இல்லையென்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா?
படைப்பு உண்டு என்று ஒற்றைக் காலில் நின்று வாதிடுபவன் ஒரு முஸ்லிமாக இருந்தானாயின் அவனுக்கு மேலே நான் எழுதிய உள்ளமை, இன்மை எனும் தத்துவத்தைக் கூறி உணர்த்தி வைக்கலாம்.
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
قال الشيخ القطب الأكبر أبو الحسن علي الشّاذلي قُدِّس سرّه: قد مَحَقَ الحقُّ تعالى جميعَ الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلقُ؟ فقال موجودون، ولكن حكمهم مع الحقِّ تعالى كَالْأَنَابِيْبِ الّتي فى كوّة الشمس، تراها صاعدةً هابطةً فإذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودةٌ فى الوجود، (اليواقيت والجواهر، الجزء الأول، ص65)
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(நிச்சயமாக அல்லாஹ் முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற தனது சொல்லைக் கொண்டு படைப்பை அழித்து விட்டான். அதாவது படைப்பு இல்லையென்று சொல்லிவிட்டான். அவ்வாறாயின் படைப்பு எங்கே என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அது இருக்கிறது. ஆயினுமது எது போன்றதென்றால் ஓலைக் குடிசையில் முகட்டிலுள்ள துவாரத்தின் வழியாக “பைப்” குழாய் போன்ற சூரிய வெளிச்சத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற அணு அளவிலான தூசி போன்றதாகும். அது உனது கண்ணுக்கு ஏறுவது போன்றும், இறங்குவது போன்றும் தெரியும். ஆயினும் நீ அதைக் கையால் பிடித்தால் அது கைக்கு வராது. இவ்வாறுதான் படைப்புமாகும். படைப்பு என்பது பார்வைக்கு மட்டும் தெரியக் கூடியதேயன்றி எதார்த்தத்தில் அது இல்லாததேயாகும்) அதற்கு “வுஜூத்” உள்ளமை இல்லை.
அல்குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வினால் “குத்பு” என்று வாழ்த்தப்பட்ட ஒரு மகான் ஆவார்கள்.
அல்லாஹ் “நுபுவ்வத்” எனும் நபித்துவத்தின் வாசலை அடைத்து لَا نَبِيَّ بَعْدِيْ எனக்குப் பிறகு எந்த ஒரு நபீயுமில்லை என்று பெருமானாரைச் சொல்ல வைத்தபின், நபீமாரின் இடத்திலிருந்து அவர்கள் செய்த “தீன்” மார்க்கப் பணிகளைத் தொடர்வதற்காக தாபியீன், தபஉத் தாபியீன், குத்புமார், வலீமார் ஆகியோரை நியமித்தான். அவர்கள் அனைவரும் நல்வழி பெற்றவர்களேயாவர். அவர்கள் திருக்குர்ஆனுக்கோ, நபீமொழிகளுக்கோ, ஸஹாபாக்களின் வாக்குகளுக்கோ மாறாக எதுவும் செய்தவர்களுமல்ல. சொன்னவர்களுமல்ல. அவர்கள் எது சொன்னாலும் அதைச் சரி காண்பதே எமது கடமை. ஒரு கூட்டம் தங்களின் மன இச்சைக்கு வழிப்பட்டு அவர்கள் சொன்னதையும், செய்ததையும் ஆதாரமாக எடுத்துச் செயல்படலாகாதென்று கூறுகிறது. இது அவர்களின் அறியாமையாக அல்லது மன முரண்டாக இருக்கலாம். அவர்களுக்கு விளக்கம் கூற நான் விரும்பவில்லை. அல்லாஹ் தாழிட்ட கதவை என்னால் திறக்க முடியுமா?
خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ
அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீதும், கேள்வியின் மீதும் “சீல்” முத்திரை குத்திவிட்டான். இன்னும் அவர்களின் மனக் கண் பார்வையும் மூடப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறியுள்ளான். (02-07)
இன்று எதை எடுத்துக் கொண்டாலும் மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது மறுமை நாள் வரை இருந்து கொண்டுதான் இருக்கும். ஸுன்னீகளான நாங்கள் நான்கு மத்ஹபுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். ஒரு “மத்ஹப்” குறித்து அது மட்டுமே சரியானதென்று நாம் கூறவில்லை. எவர் எதை விரும்புகிறாரோ அவர் அதைப் பின்பற்றலாம் என்றுதான் சொல்வோம். ஆயினும் தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமீ, ஜமாஅத் கதியானீ, ஜமாஅத் ஷீஆ போன்றவையெல்லாம் சரியானவைதான், எவர் எதை விரும்புகிறாரோ அவர் அதைப் பின்பற்றலாம் என்று ஒருபோதும் நாங்கள் சொல்லமாட்டோம்.
ஏனெனில் நான்கு “மத்ஹப்”களின் மூலவர்களும் திருக்குர்ஆன், ஹதீதுகளின் அடிப்படையில்தான் தமது மத்ஹபுகளை அமைத்தார்கள். ஆனால் இவர்களோ தமது “ஹவா” எனும் மனவாசையைத் தமது “இலாஹ்” தெய்வமாக நினைத்து அதன் தலைமையில் தமது அமைப்புக்களையும், ஜமாஅத்துக்களையும் அமைத்துள்ளார்கள்.
எனவே, எமக்கு “குத்பு”மாரும் தேவையில்லை, வலீமாரும் தேவையில்லை, அவர்களின் சொல், செயல்களை ஆதாரங்களாகக் கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கில்லை. ஷாதுலீயும் எமக்குத் தேவையில்லை, காதிரீயும் எமக்குத் தேவையில்லை என்று ஒருவன் வாதிட்டானாயின் அவனை நேர்வழிப்படுத்த முயற்சிப்பது அறியாமையாகும்.
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ
தனது மனவாசையை தனது தெய்வமாக ஆக்கிக் கொண்டவர்களை நீங்கள் கண்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான். (திருக்குர்ஆன் 45-23)
ஞானமேதை, அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் படைப்பு என்பது பார்வையில் மட்டும் தெரிகின்ற – தோற்றுகின்ற ஒன்றேயன்றி அதற்கு எதார்த்தமில்லையென்று தெளிவாக உதாரணத்தோடு நிறுவிக் கூறியிருக்க அவர்களின் பேச்சை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது? எனக்கு இன்னோரை கேட்கத் தோணுகிறது.
ஷாதுலீ நாயகம் மட்டும் இவ்வாறு சொல்லவில்லை. இப்னு அறபீ என்ற தலைப்பில் நான் எழுதிய தொடர் 02ல் இதே கருத்தை விலியுறுத்தி அவர்கள் கூறிய பின்வரும் பாடலை எழுதி அதற்கு விளக்கமும் எழுதியுள்ளேன். அதை இங்கு சுருக்கமாக நினைவூட்டுகிறேன்.
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةْ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةْ
இந்தப் பாடலில் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் படைப்பு “கயால்” என்றும், அது எதார்த்தத்தில் அல்லாஹ் என்றும் கூறியுள்ளார்கள். அது எது போலெனில் “ஸறாப்” கானல் நீர் போன்றதென்றும் விளக்கியுள்ளார்கள்.
அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களையும், இப்னு அறபீ நாயகம் அவர்களையும், இன்னுமிவர்கள் போல் அல்லாஹ்தான் உள்ளான் என்றும், படைப்பு இல்லையென்றும் கூறிய குத்புமார், வலீமார்களையும், மற்றும் அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை என்ற தத்துவத்தை – எல்லாமே அவன்தான் என்ற சத்தியத்தை “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா மூலம் பிரகடனம் செய்த நபீமார்களையும், இவற்றுக்கெல்லாம் மேலாக இத்தத்துவத்தின் கருவான அல்லாஹ்வையும் யார் என்று சொல்வது? “காபிர்”கள் என்று சொல்வதா? “முஷ்ரிக்”குகள் என்று சொல்வதா? “முர்தத்”துகள் என்று சொல்வதா?
மேற்கண்டவர்கள் சொல்வதையே நான் சொல்கிறேன். நான் கூறும் இத்தத்துவம் எனது கற்பனையல்ல. அல்லாஹ் திருக்குர்ஆனில் ஓர் வசனத்தில் மட்டுமன்றி பல வசனங்களில் கூறியிருக்கும் நிலையில், இதேபோல் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் அருள் மொழிகளிலும் தெளிவாகக் கூறியிருக்கும் நிலையிலும் இந்த தத்துவத்தை “குப்ர்” என்றோ, “ஷிர்க்” என்றோ எவ்வாறு சொல்ல முடியும்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். தூர நின்று இழித்துரைப்பது நன்மக்களின் பண்பல்ல. தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இத்தத்துவம் அல்லாஹ் சொன்னதும், அண்ணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னதுமாகும். இத்தத்துவத்திற்கு மூல, அடிப்படை ஆதாரம் திருக்குர்ஆனும், ஹதீதுகளுமேதான்.
குத்புமாரும், வலீமாரும், ஆரிபீன்களான ஞான மகான்களும் திருக்குர்ஆன், ஹதீது இரண்டையும் கருவாகக் கொண்டு அல்லாஹ் தமக்கு வழங்கிய “இல்ஹாம்”, “கஷ்பு” என்ற ஞானோதயங்கள் மூலம் விரித்துச் சொன்னதே இத் தத்துவமாகும். தவிர அவர்களின் சொந்தக் கருத்தல்ல.
திருக்குர்ஆன் இத் தத்துவத்திற்கு “மத்ன்” மூலம் போன்றதும், ஞான மகான்கள் கூறிய விளக்கம் அதன் “தப்ஸீர்” விரிவுரை போன்றதுமாகும். இவ்வாறு ஹதீதும் ஒரு மூலமேதான். இதற்கும் பல “ஷர்ஹ்” விரிவுரை உண்டு.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாதான் இத் தத்துவத்திற்கு மூலம் என்பதை ஒருவன் ஆதாரங்களோடு அறிந்தானாயின் அவன் இதை நிறுவ வேறு ஆதாரங்கள் திருக்குர்ஆனிலிருந்தோ, திரு நபீயின் அருள் மொழிகளிலிருந்தோ தேடமாட்டான். தேடத் தேவையுமில்லை.
ஏனெனில் திருக்கலிமாவானது திருக்குர்ஆன் வசனம் என்றும், ஹதீது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். பெருமானார் அவர்களும், அவர்களுக்கு முன்னுள்ள நபீமார் அனைவரும் சொன்னவற்றில் மிகச் சிறந்தது திருக்கலிமாவேயாகும்.
வணக்கத்திற்குரிய “இலாஹ்” தெய்வம் அல்லது நாயன் அல்லாஹ் மட்டும்தான் என்பதே திருக்கலிமாவின் பொருள் என்று வைத்துக் கொண்டால் இக்கருத்தை அறபு மக்களிடம் தெளிவு படுத்தவும், அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் 13 ஆண்டுகள் நபீ பெருமானாருக்கு தேவைப்பட்டதேனென்று படித்தவர்களும், ஆய்வாளர்களும் கவனத்திற் கொண்டால், சிந்திக்கத் தொடங்கினால் குன்றின் மேல் தீபம் போல் அவர்களுக்கு திருக்கலிமாவின் பொருள் தெளிவாகிவிடும்.
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நாம் வைத்துவிட்டு நபீயுமல்லாத, வலீயுமல்லாத, ஆயினும் சிந்தனைத் திறனும், ஆய்வுத் திறனுமுள்ள ஒரு பட்டதாரியால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்தான் என்று நிறுவ எவ்வளவு காலம் தேவைப்படுமென்று படித்த, திறமையுள்ள ஒருவனிடம் கேட்டால் சில மணி நேரங்கள் தேவை என்று ஒருவன் சொல்லலாம். இன்னொருவன் 24 மணி நேரம் – ஒரு நாள் தேவையென்று சொல்லலாம். இன்னொருவன் ஒரு வாரம் தேவை என்றும் சொல்லலாம், இன்னொருவன் ஒரு மாதம் தேவை என்றும் கூடச் சொல்லலாம். ஆயினும் நன்றாகப் படித்த, நல்ல திறமையுள்ள எவனாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் மட்டும் தான் என்று நிறுவ 13 ஆண்டுகள் தேவையென்று சொல்வானா? சொல்லவேமாட்டான். அவனுக்கு அந்த அளவு நீண்ட காலம் தேவையுமில்லை.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் أَعْلَمُ الْعَالَمِيْنْ உலக மக்களில் மிக அறிஞராவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறிருந்தும் கூட “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்தான்” என்று நிறுவ 13 ஆண்டுகள் அவர்களுக்கு தேவைப்பட்டதென்றால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்தான் என்று நிறுவ அவர்களுக்கு அவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்க முடியாதென்றுதான் எவரும் சொல்வார்.
இதன் மூலம் நாம் விளங்க வேண்டிய கருத்தென்னவெனில் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்தான் என்பது திருக்கலிமாவின் பொருளல்ல. மாறாக “அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை” என்பதே அதன் பொருள் என்பது தெளிவாகிறது. இந்தக் கருத்தை நிறுவ நீண்ட காலம் தேவைதான். நபீயவர்களுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டதற்கு நியாயம் உண்டு. இதே கருத்தை 1979ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இராப் பகலாக கூறி வந்தும் கூட என் கூற்றை அதிகமானோர் நம்பவில்லையென்று நான் கவலைப்படத் தேவையில்லை.
ஏனெனில் இந்தக் கருத்தை பகுத்தறிவு மிக எளிதாக ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில்..
தொடரும்..