தொடர் – 15
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் விளக்கம்!
முஸ்லிமான தாய்க்கும், தந்தைக்கும் பிறந்த பிள்ளை முஸ்லிம்தான். அதற்கு “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதோ, அக்குழந்தை சொல்ல வேண்டும் என்பதோ அவசியமில்லை.
முஸ்லிமான தாய், தந்தைக்கு விபச்சாரத்தில் பிறந்த பிள்ளையும் முஸ்லிம்தான். ஆயினுமது விபச்சாரத்தில் பிறந்த பிள்ளையாகும். இக்குழந்தை وَلَدُ الزِّنَا விபச்சாரக் குழந்தை என்று அழைக்கப்படும். சமுகம் அதை சற்று கீழ்த்தரமாகவே பார்க்கும். எனினும் இறைவனிடம் அக்குழந்தை குற்றவாளியாகாது.
முஸ்லிமான பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை எத்தனையாண்டுகள் உலகத்தில் வாழ்ந்து ஒரு தரமேனும் அக்குழந்தை “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லாமல் மரணித்தாலும் கூட அக்குழந்தை முஸ்லிம்தான்.
ஆயினும் அக்குழந்தை 15 வயதை அடைந்த பின், அல்லது அதற்கு முன்னர் ஆணாயினும், பெண்ணாயினும் இந்திரியம் வெளியாவதன் மூலம், பெண்ணாயின் மட்டும் மாதத் தீட்டு ஏற்படுவதன் மூலம் வயது வந்தவராக ஆனபின் திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் வசனம் கூறுகின்ற தத்துவத்தை அறிந்து, “ஷரீஆ” கூறும் வழியில் அவர் செயல்பட வேண்டும். தவறினால் தண்டிக்கப்படுவார்.
முஸ்லிம் அல்லாத ஒருவர் – அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் – இஸ்லாம் மார்க்கத்தில் இணைவதாயின் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்றும், “முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்றும் சொல்வது கடமை. அவர் மேற்கண்டவாறு மட்டும் சொல்லாமல் أَشْهَدُ – “அஷ்ஹது” என்ற சொல்லையும் சேர்த்துச் சொல்வது கடமை. அவர் சொல்கின்ற அறபு வசனத்துக்கான பொருளையும் விளங்கியறிந்து கொள்ளுதல் அவரின் கடமையாகும்.
திருக்கலிமாவை “அஷ்ஹது” என்ற சொல்லுடன் சேர்த்துச் சொன்னாலும் அதன் போலிப் பொருளான “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர எந்த இலாஹும் – நாயனும் இல்லை” என்று அவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல் திருக்லிமாவுக்கு உரிய பொருளான “அல்லாஹ் அல்லாத எந்த இலாஹும் இல்லை, எந்த வஸ்த்துவும் இல்லை” என்ற பொருளே சொல்லிக் கொடுக்க வேண்டும். திருக்கலிமா சொல்லிக் கொடுப்பவர் திருக்கலிமாவின் தத்துவத்தை அறிந்து சொல்லிக் கொடுக்கவும் வேண்டும்.
திருக்கலிமாவின் போலிப் பொருள்:
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திரு வசனத்திற்குரிய பொருள் தெரியாதவர்களே முஸ்லிம்களில் 90 வீதமானோர் உள்ளனர். தலையில் கை வைத்து வியக்க வேண்டிய விடயம் என்னவெனில் உலமாஉகளில் அதிகமானோர் திருக்கலிமாவின் சரியான பொருள் தெரியாமலிருப்பதேயாகும்.
திருக்கலிமா என்பது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தையே குறிக்கும். இவ்வசனம் “கலிமா”வாயிருப்பதுடன் அது திருக்குர்ஆன் வசனங்களிலும் ஒன்றாகும். (திருக்குர்ஆன் 47-19)
இதில் ஒரு விஷேடமுண்டு. அதிலுள்ள 12 எழுத்துக்களும் மூன்றெழுத்துக்களேயாகும். அதாவது அலிப், லாம், ஹே என்பனவையாகும். இம் மூன்று எழுத்துக்களுமே திரும்பத் திரும்ப வந்து 12 எழுத்துக்களாக உள்ளன.
இங்கு இன்னுமொரு நுட்பம் உண்டு. அதாவது திருக்கலிமா “நுக்தா” புள்ளி இல்லாத எழுத்துக்களால் மட்டும் அமைந்திருப்பதாகும். ஓர் எழுத்து “நுக்தா” புள்ளி இல்லாமல் வந்தால் அது ஓர் எழுத்துதான். அது ஒன்றையே காட்டும். “நுக்தா” புள்ளியுடன் வரும் எழுத்து இரண்டைக் காட்டும். எனவே, ஒன்றைக் காட்டும் திருக்கலிமா “நுக்தா” புள்ளி இல்லாமல் வந்திருப்பது அது ஒன்றையே காட்டுகின்றதென்பதற்கு ஆதாரமாகும். திருக்கலிமாவில் வந்துள்ள புள்ளியில்லாத எழுத்துக்கள் அலிப், லாம், ஹே இம் மூன்றுமாகும்.
அறபு மொழியின் மொத்த எழுத்துக்கள் 29 ஆகும். அவற்றில் புள்ளி உள்ள எழுத்துக்கள் பதினைந்தும், புள்ளி இல்லாத எழுத்துக்கள் பதினான்குமாகும். பதினான்கில் மூன்றுதான் திருக்கலிமாவில் உள்ள அலிப், லாம், ஹே என்பனவாகும்.
திருக்கலிமாவின் பெயர்கள்:
திருக்கலிமாவுக்கு 24 பெயர்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் எழுதுவதாயின் கட்டுரை நீண்டுவிடுமாகையால் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். தேவையேற்படும் போது விபரங்கள் வெளிவரும்.
01. கலிமதுத் தவ்ஹீத் – كَلِمَةُ التَّوْحِيْدِ
02. கலிமதுல் இக்லாஸ் – كَلِمَةُ الْإِخْلَاصِ
03. கலிமதுல் இஹ்ஸான் – كَلِمَةُ الْإِحْسَانِ
04. தஃவதுல் ஹக்கி – دَعْوَةُ الْحَقِّ
05. கலிமதுல் அத்லி – كَلِمَةُ الْعَدْلِ
06. கலிமதுத் தய்யிபி – كَلِمَةُ الطَّيِّبِ
07. அல் கலிமதுத் தய்யிபா- اَلْكَلِمَةُ الطَّيِّبَةُ
08. அல் கலிமதுத் தாபிதா – اَلْكَلِمَةُ الثَّابِتَةُ
09. கலிமதுத் தக்வா – كَلِمَةُ التَّقْوَى
10. அல் கலிமதுல் பாகியா – اَلْكَلِمَةُ الْبَاقِيَةُ
11. கலிமதுல்லாஹில் உல்யா – كَلِمَةُ اللهِ الْعُلْيَى
12. அல் மதலுல் அஃலா – اَلْمَثَلُ الْأَعْلَى
13. கலிமதுஸ் ஸவாயி – كَلِمَةُ السَّوَاءِ
14. கலிமதுன் நஜாதி – كَلِمَةُ النَّجَاةِ
15. கலிமதுல் அஹ்தி – كَلِمَةُ الْعَهْدِ
16. கலிமதுல் இஸ்திகாமா – كَلِمَةُ الْإِسْتِقَامَةِ
17. மகாலீதுஸ் ஸமாவாதி வல் அர்ழி – مَقَالِيْدُ السَّمَوَاتِ وَالْأَرْضِ
18. அல்கவ்லுஷ்ஷதீது – اَلْقَوْلُ الشَّدِيْدُ
19. அல்பிர்று – اَلْبِرُّ
20. அத்தீனுல் காலிஸ் – اَلدِّيْنُ الْخَالِصُ
21. அஸ்ஸிறாதுல் முஸ்தகீம் – اَلصِّرَاطُ الْمُسْتَقِيْمُ
22. கலிமதுல் ஹக்கி – كَلِمَةُ الْحَقِّ
23. அல் உர்வதுல் வுத்கா – اَلْعُرْوَةُ الْوُثْقَى
24. கலிமதுஸ் ஸித்கி – كَلِمَةُ الصِّدْقِ
மேற்கண்ட பெயர்களில் ஒவ்வொரு பெயருக்கும் ஆதாரமும் உண்டு. கட்டுரை நீண்டுவிடுமென்பதற்காக எழுதவில்லை.