“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 16

எதற்காக பெருமானார் அவர்களுக்கு திருக்கலிமா வழங்கப்பட்டது?
விக்கிரக வணக்கத்தை ஒழிப்பதற்காகவா? வேறென்ற வேற்றுமையை களைவதற்காகவா?

அன்புக்குரியவர்களே!

கடந்த தொடர்களில் அல்லாஹ் தொடர்பாக மக்கத்து காபிர்களின் நம்பிக்கை எவ்வாறிருந்ததென்று திருக்குர்ஆன் வசனங்களை ஆதாரங்களாக கூறி நிறுவினேன். வாசித்தவர்கள் விளங்கியிருப்பார்கள். அவர்கள் ஆத்திகர்களாக இருந்தார்களேயன்றி நாத்திகர்களாக இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். விக்கிரகங்களை அவர்கள் தமக்கு முன்னால் வைத்து அல்லாஹ்வை வணங்கினாலும் கூட அவ்வாறு செய்தல் பிழை என்றும் எழுதியிருந்தேன். அந்த மக்கள் சிலைகளை முன்வைத்து வணங்கியதற்கு அவர்கள் காரணம் கூறுகையில் அவை தம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைக்கின்றன என்று கூறினார்கள் என்றும் கூறியிருந்தேன்.

வாசித்தவர்கள் இவ் விபரங்களை அறிந்திருப்பார்கள். ஆகையால் இவர்களுக்கு மட்டும் இத் தொடரில் நான் எழுதுகின்ற விடயங்கள் எழிதில் புரிந்துவிடும். ஆயினும் கடந்த தொடர்களை வாசிக்காதவர்கள் இத் தொடரை மட்டும் வாசிப்பதால் இத் தொடரை எழிதில் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடலாம். அறிவைத் தேடும் எண்ணமுள்ளவர்களும், தெளிவை நாடும் நாட்டமுள்ளவர்களும் கடந்த தொடர்களையும் வாசித்துக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று உலகெங்கும் வாழ்கின்ற குறிப்பாக இலங்கை நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களை “காபிர்”கள் என்று சொல்கிறார்கள்.

காத்தான்குடி முஸ்லிம்கள் தமது அடுத்த ஊரில் வாழும் இந்துக்களை “காபிர்”கள் என்றே சொல்வார்கள்.

இலங்கை நாட்டைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் அனைவரும் ஏனைய மதத்தைப் பின்பற்றுவோரை “காபிர்”கள் என்றே சொல்கின்றனர். “காபிர்” என்ற இச் சொல்லுக்கு நிரகரிப்பவன் என்று பொருள் வரும். அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும்? நியாயமாகும்? என்று அலசி ஆராய வேண்டும்.

முஸ்லிம்கள் அல்லாத பௌதர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் தமக்கென்று தனியான வழிபாட்டுத் தலங்கள் அமைத்து அவற்றுக்கு விகாரை (பன்சல), கோவில், தேவாலயம் என்று பெயரிட்டு தமது கடவுளை வணங்கி வரும் நிலையில் அவர்கள் “காபிர்” கடவுளை நிராகரிப்பவர்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்? முஸ்லிம்கள் எதற்காக மற்ற மதத்தினரை “காபிர்”கள் – நிராகரிப்பவர்கள் என்று சொல்கிறார்கள்?

இது பற்றி முஸ்லிம்களில் சிந்தனையாளர்கள், மற்றும் ஆய்வாளர்களும் ஆய்வு செய்து தத்துவத்தை கண்டறிய வேண்டும்.

இங்கு நான் குறிப்பிடும் முஸ்லிம்கள் தவிர ஏனைய மதத்தினர் நிராகரிப்பது உண்மைதான். ஆயினும் கடவுளை – இறைவனை அவர்கள் நிராகரிக்கவில்லை. மாறாக கடவுள் உள்ளான் என்றுதான் நம்பியுள்ளார்கள். அவ்வாறாயின் அவர்களை அல்லாஹ்வும் “காபிர்” என்றுதானே சொல்கிறான். இதில் மறைந்துள்ள உண்மை எதுவென்று நாம் தெரிந்து கொள்ளாமல் அவர்களைக் “காபிர்”கள் என்று சொல்லுதல் கூடாது. எதார்த்தம் புரிந்து சொல்ல வேண்டும்.

மாற்று மதத்தினர் தாம் முன் வைத்துள்ள விக்கிரகங்களை “அல்லாஹ்” என்று சொல்லாமல் அவன் அவற்றுக்கு வேறானவனே தவிர அவை அவன் தானானவன் அல்ல என்று நம்புகிறார்கள். தாம் வணங்குகின்ற உருவங்கள் அவன் பக்கம் தம்மை நெருக்கமாக்கி வைக்கின்றன என்றுதான் சொன்னார்களேயன்றி அவையும் அவன்தான் என்று சொல்லவில்லை.

அவர்களிடம் விக்கிரகங்களை ஏன் வணங்குகிறீர்கள் என்று கேட்ட போது

مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى

நாங்கள் அவற்றை வணங்கவில்லை. அவை எங்களை இறைவன் பால் – அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைப்பதற்காகவேயொழிய என்றுதான் பதில் கூறினார்கள்.

அவர்கள் கூறிய இந்த பதில் மூலம் அவர்கள் இரண்டு விடயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மை அவர்கள் வாய் மூலமே விளங்கப்படுகின்றன.

ஒன்று: அவர்கள் தாம் வைத்துள்ள விக்கிரகங்களை வணங்கவில்லை என்பது. இரண்டு: அந்த விக்கிரகங்கள் அல்லாஹ் அல்ல, அவை வேறு, அவன் வேறு என்று நம்பினது.

அவற்றை அவர்கள் வணங்கவில்லையாயினும் தாம் வணங்கவில்லை என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் பிழையாகும். இதன் விபரம் என்னவெனில், அவர்கள் முன்னோக்கியது அல்லாஹ்வின் உருவம் தான் என்று வைத்துக் கொள்வோம். அந்த உருவம்தான் அல்லாஹ்வின் உருவம் என்பதற்கு என்ன ஆதாரமென்று முதலாவது அவர்கள் கூற வேண்டும்.

அவர்கள் என்னதான் ஆதாரம் கூறினாலும் அது எடுபடமாட்டாது. ஏனெனில் எல்லாமாயும், எங்குமாயும் வியாபித்துள்ள இறைவனின் உருவமே மனிதர்கள் காணுகின்ற, மற்றும் அவர்கள் காணாத அனைத்து உருவங்களுமாகும். இவ்வாறு அனைத்துமே அவனின் உருவமாயிருக்கும் நிலையில் ஓர் உருவத்தை மட்டும் முன்னோக்கி, இதுதான் அவன் உருவம் என்றெண்ணி அவனை அடைந்து கொள்ள நினைப்பது கட்டுப்பாடற்ற கடவுளை – “முத்லக்” பொதுவான இறைவனை – “முகய்யத்” ஏதேனுமோர் உருவத்தில் மட்டும் கட்டுப்படுத்துவது இறை தத்துவத்திற்கே முரணானதாகிவிடும்.

இவ்வாறு எங்குமாய், எல்லாமாய் வியாபித்துள்ள ஏகனைக் கட்டுப்படுத்துவது எவனாலும், எந்த வகையிலும் முடியாத விடயமாகையால் எந்த ஒன்றிலும் குறிப்பாக்கி அவனை கட்டுப்படுத்துதல் கூடாது.

விக்கிரக வழிபாடாயினும், சிலை வழிபாடாயினும் அது சிருட்டி வழிபாடுதான். சிருட்டியை எந்த வகையிலும் வழிபடமுடியாது. சிருட்டி சிருட்தான், சிருட்டி கர்த்தா கர்த்தாதான். சிருட்டி வணங்கப்படுவது பகுத்தறிவும், தத்துவமும் ஏற்றுக் கொள்ளாத ஒன்றாகும்.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் சிலை வணக்கம், சிருட்டி வணக்கத்தை முற்றாக விட்டாலும் கூட அவை இறைவனுக்கு – கடவுளுக்கு – அல்லாஹ்வுக்கு வேறானவை, அவனை விட்டும் பிரிந்தவை, அவன் போல் அவையும் சுயமான “வுஜூத்” உள்ளமையுள்ளவை என்ற நம்பிக்கை இருக்கும் வரை அவர்கள் காபிர்கள்தான். விசுவாசத்தின் வாடையைக் கூட அவர்களால் அடைந்து கொள்ள முடியாது.

வானம், பூமி, மற்றுமுள்ள படைப்புக்கள் அனைத்துமாய் தோற்றுவது அவனேயன்றி வேறு யாருமில்லையாதலால் அவனுக்கு வேறான ஒன்றுமில்லை என்றும், அவன் தானானவையாகவே அனைத்தும் உள்ளன என்று நம்பும் வரை அவன் விசுவாசியாக – முஃமின் ஆக முடியாது.

வேறென்ற வேரறுந்தால் விக்கிரக வணக்கம் கசந்து போகும். வேறென்ற வேரை அறுத்தால் சிலைகளையோ, விக்கிரகங்களையோ, சிருட்டிகளையோ முன்வைத்து வணங்கும் கலாச்சாரம் கைவிடப்பட்டு விடும்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்கலிமா வழங்கப்பட்டு நபீயாக அனுப்பி வைக்கப்பட்டது தாம் முன்வைத்து வணங்கும் விக்கிரகங்களும், சிலைகளும் அல்லாஹ்வுக்கு வேறான, சுயமானவை என்ற காபிர்களின் நம்பிக்கையை வேருடன் பிடுங்கியெறியவே அனுப்பி வைக்கப்பட்டார்கள். விக்கிரக வணக்கத்தை ஒழிப்பதற்காக அனுப்பி வைக்கப்படவில்லையா என்று ஒருவர் கேட்பாராயின் அவருக்கு பின்வருமாறு பதில் கூறுவோம்.

அவர் கேட்பது போல் அதற்காகவுமே அனுப்பி வைக்கப்பட்டார்கள். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. எனினும் விக்கிரக வணக்கத்தை தடை செய்வதற்கு இன்னுமொரு “கலிமா” தேவையில்லை. “லா இலாஹ இல்லல்லாஹ்” ஒன்றே போதும். அல்லாஹ்வுக்கு வேறான விக்கிரகங்களுமில்லை, சிலைகளுமில்லை என்ற கொள்கையை அவற்றை வணங்குபவர்களுக்கு ஊட்டப்பட்டால் அவர்கள் தாமாகவே சிலை வணக்கத்தையும், விக்கிரக வணக்கத்தையும் விட்டு விடுவார்கள். அவனே எல்லாமாயுமிருக்கும் நிலையில் ஆளுக்கோர் உருவத்தை வைத்து வணங்குதல் எல்லாமாயுள்ள ஏகனை வணங்கியதாவது எவ்வாறு?

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் நபீ பட்டம் பெற்ற பின் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற தத்துவக் கொள்கைப் பிரச்சாரம் செய்தார்களேயன்றி சிலை வணக்கம், விக்கிரக வணக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று எந்த ஓர் ஆர்ப்பாட்டமும் அவர்கள் செய்யவில்லை. முழு நேரமும் அல்லாஹ்வுக்கு வேறான தெய்வமில்லை என்று நிறுவுவதற்கே பாடுபட்டார்கள்.

போர்கள் நடந்தது “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவைக் கருவாகக் கொண்டேயன்றி விக்கிரக வணக்கத்தை அழித் தொழிப்பதைக் கொண்டல்ல. இதனால் விக்கிரக கலாச்சாரத்தை அனுமதித்தார்கள் என்பதோ, கண்டும் காணாமல் நடித்தார்கள் என்பதோ கருத்தல்ல.

ஒரு மரத்தின் கிளையை வெட்டினால் அது மீண்டும் வளரும். ஆயினுமதை அடி வேருடன் பிடுங்கிவிட்டால் மீண்டும் வளராது. பெருமானார் அவர்களுக்கு விக்கிரக கலாச்சாரத்தை வெட்டியெறிவது பெரிய வேலையல்ல. எனினும் அவர்கள் அதில் கை வைக்காமல் மரத்தை ஆணி வேருடன் அறுத்தெரியும் பணியில் கவனம் செலுத்தினார்கள். இவ்வுதாரணம் போன்றதே பின்வரும் உதாரணமுமாகும்.

குடிபோதைக்கு அடிமையான ஒருவன் தனது தாய்க்கு அடிப்பதையும், மனைவியை துன்புறுத்துவதையும், பாதையால் போக்குவரத்துச் செய்பவர்களுக்கு அடிப்பதையும் நிறுத்துவதற்காக அவனைச் சீர் செய்வதில் காலம் கழிப்பதை விட அவனின் குடிப்பழக்கத்தை நிறுத்தினால் அவன் தானாகவே தனது அட்டூழியங்களை நிறுத்திவிடுவானல்லவா?


عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ،


மனிதர்களுடன் – காபிர்களுடன் போர் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளேன். அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லும் வரை என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (புகாரீ – 25)

மேற்கண்ட இந்த ஹதீது திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் யுத்தம் செய்யுமாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பணிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெளிவாகக் கூறுகின்றது.

தீனை – மார்க்கத்தை நிலை பெறச் செய்வதற்காக “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சாட்சி சொல்லாதவர்களுடன் போர் செய்யுமாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்று மேற்கண்ட ஹதீது கூறுகிறது. “உமிர்த்து” நான் ஏவப்பட்டுள்ளேன் என்ற சொல் “வுஜூப்” போர் செய்வது கடமை என்று கூறுகிறது. போர் செய்வது கடமையென்றால் அதன் கருத்து “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்ல மறுப்பவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்பதையே கூறுகிறது. இதற்குப் பல நிபந்தனைகள் உள்ளன. அவை நமது நாட்டைப் பொறுத்து இல்லையாதலால் சஹ்றான் இந்நாட்டை இஸ்லாமிய நாடாக்க நினைத்தது போல் நாமும் நினைப்பது கூடாது.

பெருமானார் அவர்களை எதிர்த்தவர்கள் அனைவரும் அறபு மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களேயாவர். ஆகையால் அவர்களுக்கு “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் பொருளை விபரித்து சொல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை. அறபு மொழி தெரியாதவர்களுக்கு மட்டுமே அதன் கருத்தை விபரித்துக் கூற வேண்டும்.

இவ் விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் திட்டமாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பாக தனியான தலைப்பில் விபரமாக நான் எழுத உள்ளேன். எனினும் இந்த இடத்தில் அதை சுட்டிக் காட்டுகிறேன்.

அதென்னவெனில், “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா – அந்த வசனம் எந்தவொரு வலிந்துரையுமின்றி படித்தவன், படிக்காதவன் அனைவரும் மிக எழிதில் புரிந்து கொள்ளக் கூடிய வசனமாகும். இது தொடர்பாக தனித் தலைப்பில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!