தொடர் – 17
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் விளக்கம்!
திருக்கலிமாவின் பொருளும், விளக்கமும் இக்கட்டுரையிலிருந்து தொடராக எழுதப்படும். தொடர்ந்து வாசிப்பவர்கள் பயன் பெறுவர்.
எனது தொடர் கட்டுரைகளை சேமித்து வருவோர் பின்னொரு காலத்தில் எமது மேற்பார்வையின் கீழ் நூலாக வெளியிடவும் முடியும்.
திருக்கலிமாவை முஸ்லிம் அல்லாத ஒருவர் அதன் பொருளை விளங்கி மொழிந்தால் மட்டும்தான் அவர் “இஸ்லாம்” எனும் கோட்டைக்குள் அனுமதிக்கப்படுவார். இவ்வாறு மொழியாதவர் முஸ்லிம்களின் உடையிலும், பெயரிலும் இருந்தாலும் கூட அவர் “முஸ்லிம்” ஆக மாட்டார்.
இவ்வசனத்துக்கு பொருள் கூறுவதில் உலமாஉகளில் பல்வேறு கருத்துள்ளவர்கள் உள்ளனர்.
01. “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று சிலர் கூறுவர்.
02. இன்னும் சிலர் “அல்லாஹ் தவிர வேறு “இலாஹ்” நாயன் இல்லை” என்று சொல்கிறார்கள்.
03. இன்னும் சிலர் “அல்லாஹ் அல்லாத வேறொன்றுமே இல்லை” என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு சொல்பவர்கள் அனைவரும் உலமாஉகள்தான்.
இலங்கை நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களில் 90 வீதமானோர் முதலாவது கருத்தான “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்றே திருக்கலிமாவுக்கு பொருள் கூறுகின்றார்கள்.
பொது மக்கள் عَوَامُّ النَّاسْ உலமாஉகள் சொல்கின்ற படியே சொல்வார்கள். ஏனெனில் அவர்களிடம் சிந்திக்கும் திறனும், ஆழமாக ஆய்வு செய்யும் திறமையும் இல்லை.
ஓதிப்படித்த உலமாஉகள் கூட சிறார்களின் குர்ஆன் பாடசாலையில் லெப்பைமாரால் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தையே மௌலவீ பட்டம் பெற்ற பின்பும் மீட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பொருள் திருக்கலிமாவுக்கு சொல்லப்பட்டு வருகின்ற பொய் பொருளாயிருந்தாலும் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் நமது நாட்டில் சிறார்களுக்கென்று நடைபெற்று வந்த குர்ஆன் பாடசாலைகளில் சிறுவர்களுக்கு “பயிற்சி” கொடுக்கும் நோக்கத்தில் அக்காலத்தில் அரை குறை ஆலிம்கள் என்றழைக்கப்பட்ட லெப்பைமார்கள் சிறுவர்களுக்காகக் கொடுத்த பயிற்சிதான் அந்தப் பொருள்.
இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு நடை பயிற்றுவிப்பதற்காக “நடை கரத்தை” செய்து கொடுக்கின்றோம். அது அவர்களின் பயிற்சிக்கு பொருத்தமானதே! ஆயினுமிந்த நடை கரத்தையை ரிஸ்வீ சாஹிபு கொழும்பு காலி வீதியில் நடை பயில்பவர் போல் தள்ளிக் கொண்டு சென்றால் இவரை பொது மக்கள் எங்கே அனுப்புவார்கள்? எவ்வாறு நினைப்பார்கள்?
சிறுவர்களுக்கு நடை கரத்தை போன்றதே ஒன்றுமே தெரியாத, புரியாத “அவாம்முன்னாஸ்” பொது சனத்துக்கு திருக்கலிமாவுக்கு பொருள் சொல்லிக் கொடுப்பதாகும். இதற்காக முப்திகளும், முல்லாக்களும் இதே கருத்தை திருக்கலிமாவுக்கு சொல்லிக் கொண்டிருப்பது அறியாமை என்று சொல்வதை விட முட்டாள் தனமென்று சொல்வதே பொருத்தமானது.
#விஷேட_குறிப்பு:
திருக்கலிமாவின் பொருள் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்று சொல்வது பிழையென்று நான் சொல்வதால் அல்லாஹ் வணக்கத்திற்குரியவனல்ல என்று நான் சொல்வதாக மக்கள் மத்தியில் தப்பான கருத்தை பரப்பி எங்களைக் கொலை செய்வதற்கு மீண்டுமொரு “பத்வா” வழங்க “பத்வா” வியாபாரிகள் தயார் நிலையில் உள்ளார்கள். அவர்களுக்கு தைரியமிருந்தால் இன்னுமொரு “பத்வா” வழங்கட்டும்.
அல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்ல என்று நான் எப்போதும் எங்கேயும் பேசியதுமில்லை, எந்தவொரு நூலில் எழுதியதுமில்லை. அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்று சத்தியம் செய்து சொல்கிறேன். நானும் அவ்வாறே நம்பியுள்ளேன்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவின் பொருளில் “வணக்கத்துக்குரிய” என்ற சொல்லைச் சேர்ப்பது பிழையென்றுதான் நான் சொல்கிறேனேயன்றி அல்லாஹ் வணக்கத்திற்குரிய நாயன் அல்ல என்று நான் சொல்லவில்லை.
ஒருவன் அறபியில் ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ என்று சொன்னால் நான் கடைக்குச் சென்றேன் என்றுதான் மொழியாக்கம் செய்ய வேண்டுமேயன்றி வாழைப்பழம் வாங்குவதற்காக என்று மொழியாக்கம் செய்தல் பிழையாகும். “මම කඩයට ගියා” என்று சிங்கள மொழியில் சொன்னால் நான் கடைக்குச் சென்றேன் என்றுதான் அவ்வசனத்தை மொழியாக்கம் செய்ய வேண்டுமேயன்றி இரண்டு ரொட்டி வாங்குவதற்காக என்று மொழியாக்கம் செய்தல் பிழையாகும்.
அறபு மொழியில் சொல்லப்பட்ட வசனத்திற்கு அவ்வாறு பொருள் சொல்வதாயின் ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ لِشِرَاءِ الْمَوْزِ என்ற வசனத்திற்கு வாழைப்பழம் வாங்குவதற்காகச் சென்றேன் என்று பொருள் கூறலாம். ஆயினும் ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ என்ற வசனத்திற்கு வாழைப்பழம் வாங்குவதற்காகச் சென்றேன் என்று கூறுவது பிழையென்பது அறபுக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கே தெரியும்.
உண்மை இவ்வாறிருக்கும் நிலையில் ஏழு வருடங்கள் அறபுக் கல்லூரியில் ஏழாம் வகுப்பு வரை ஓதி முடித்து “மௌலவீ ஷஹாதா” மௌலவீ சான்றிதழும் பெற்றுக் கொண்ட ஒருவர் மேற்கண்ட வசனத்திற்கு சிறு பிள்ளைகள் போல் அவ்வாறு பொருள் சொன்னால் அறிவுலகம் அவரைக் கேட்குமல்லவா? அவ்வாறு கேட்பது நியாயமா? இல்லையா? அந்த அடிப்படையிலேயே நான் கேட்கிறேன். என் கேள்வி நியாயமானதே!
إِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ
கல்வி – அறிவு என்பது கற்பது கொண்டுதான் கிடைக்கும் என்பது நபீ மொழி. நான் மௌலவீயாயிருந்தாலும் எனக்குத் தெரியாத விடயங்களை தெரிந்தவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்கிறேன். இதில் தவறொன்றுமில்லை.
“லா இலாஹ இல்லல்லாஹ்” لا إله إلا الله எனும் திருக்கலிமாவுக்கு வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர எந்த ஓர் இலாஹ் – தெய்வமும் (நாயனும்) இல்லை என்று பொருள் சொல்பவர்களிடம் வணக்கத்திற்குரிய, வணக்கத்துக்குப் பாத்திரமான, அல்லது வணக்கத்திற்குத் தகுதியான நாயன் யாருமில்லை என்று திருக்கலிமாவுக்குப் பொருள் சொல்கிறீர்களே இந்தப் பொருளுக்குரிய வசனத்தை திருக்கலிமாவில் காட்ட முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் அவர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லவில்லையானால் அவர்களை ஒரு பக்கம் வைத்து விட்டு நாம் அது பற்றி ஆய்வு செய்து பார்ப்போம்.
திருக்கலிமாவில் நான்கு சொற்கள் உள்ளன. அவை லா – இலாஹ – இல்லா – அல்லாஹ் என்பனவாகும். “லா” என்றால் இல்லை என்று பொருள். “இலாஹ” என்றால் நாயன் – தெய்வம் – கடவுள் என்று பொருள் வரும்.
இவற்றை ஒன்று சேர்த்தால் “அல்லாஹ் தவிர தெய்வம் இல்லை” என்று பொருள் வரும். “வணக்கத்துக்குரிய” என்ற பொருளைத் தருகின்ற எந்தவொரு சொல்லும் திருக்கலிமாவில் இல்லை. இவ்வாறிருக்கும் நிலையில் “வணக்கத்துக்குரிய” என்ற பொருளை ஏன் சேர்த்துச் சொல்ல வேண்டும். இந்தப் பொருளை விட்டு “அல்லாஹ் தவிர தெய்வம் இல்லை” என்று திருக்கலிமாவுக்குப் பொருள் சொல்வதால் எந்த வகையில் முரண் ஏற்படுகின்றதென்று சொல்லின்றிப் பொருள் சொல்லும் மகான்களிடம் கேட்கிறேன்.
திருக்கலிமாவுக்கு அதிலுள்ளவாறுதானே பொருள் கூற வேண்டும். “வணக்கத்துக்குரிய” என்ற பொருளைத் தருகின்ற சொல் இல்லாதிருக்கும் போது ஒருவர் தனது சுய விருப்பத்தின்படி அவ்வாறு சொல்வதற்கு என்ன நியாயம் என்று உலமா சபைகளின் தலைவர் ரிஸ்வீ முப்தீ ஹழ்றத் அவர்களிடமும், அர்த்தமற்ற “பத்வா” வழங்கிய முல்லா முப்தீகளிடமும் நான் கேட்கிறேன்.
இவர்களின் கூற்றுக்கு நியாயமும், ஆதாரமும் இருந்தால் மட்டுமே நான் ஏற்றுக் கொள்வேன்.
“வணக்கத்துக்குரிய” என்ற பொருளுக்குரிய சொல் பற்றி ஆய்வு செய்வோம்!
வணக்கத்துக்குரியவன் என்ற பொருளைத் தருகின்ற வசனம் مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ என்பதாகும். இதன் பொருள் வணக்கத்துக்குரியவன், வணக்கத்திற்குப் பாத்திரமானவன் என்பதாகும்.
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு எந்த நாயனுமில்லை, எந்தவொரு கடவுளுமில்லை, எந்த தெய்வமுமில்லை என்று பொருள் கூறுவதாயின் திருக்கலிமாவின் வசனம் لا إله مستحق للعبادة إلا الله என்று வந்திருக்க வேண்டும்.
இந்த வசனம் அல்லாஹ் சொன்ன வசனமல்ல. இது புரட்டல்வாதிகளின் வசனமாகும். இவ்வாறு அமைப்பதே تأويل வலிந்துரை கொடுத்தல் எனப்படும்.
தஃவீல் எனும் வலிந்துரை எந்த இடத்தில் தேவை?
தஃவீல் – تَأْوِيْلْ எனும் வலிந்துரை ஒரு வசனத்திற்கு கொடுப்பதாயின் அதற்கு நிபந்தனையுண்டு. அந்த வசனம் திருக்குர்ஆன் வசனமாயினும், ஹதீதின் வசனமாயினும், இமாம்கள், வலீமாரின் வசனமாயினும் சரியே!
எந்த வசனமாயினும் ஒரு வசனத்திற்கு வலிந்துரை கொடுப்பதாயின் அதற்கான பிரதான நிபந்தனை என்னவெனில் அந்த வசனத்தின் நேரடிப் பொருள் “ஷரீஆ”வுக்கோ, இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கோ முரண்பட்டால் மாத்திரமே வலிந்துரை செய்து அந்த வசனத்தை மொழிந்தவரைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறான கட்டங்கள் தவிர வேறெந்த ஓர் இடத்திலும் எவரும் தனது சுய விருப்பத்தின் படி வலிந்துரை கொள்ள முடியாது.
இதற்கு திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும், இமாம்கள், வலீமார்களின் பேச்சுக்களிலிருந்தும் ஆதாரங்கள் கூறலாம்..
தொடரும்…