தொடர் – 18
வலிந்துரை தரும் அறிவுரை:
எந்த இடத்தில் تأويل – வலிந்துரை செய்ய வேண்டும்? எந்த இடத்தில் வலிந்துரை செய்யத் தேவையில்லை?
இப்படியொரு தலைப்பில் நான் எழுதக் காரணம் திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்திற்கு மார்க்க அறிஞர்களிற் பலர் – அநேகர் திருக்கலிமாவுக்கு வலிந்துரை செய்து பொருள் கூறுகிறார்கள். இவர்களில் மதிப்புக்குரிய ரிஸ்வீ முப்தீயும், அவரின் “பத்வா” குழுவினரும் அடங்குவர். இன்னும் இவர்கள் போல் பலருள்ளனர்.
திருக்குர்ஆன் வசனமாயினும், “ஹதீது” நபீ மொழியாயினும், மற்றும் இமாம்கள், வலீமார் ஆகியோரின் வசனமாயினும் அந்த வசனத்தின் வெளிரங்கம் – வெளி அமைப்புத் தருகின்ற கருத்து “ஷரீஆ”விற்கோ, இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கோ முரணானதாயிருந்தால் – வாசிப்பவர்களுக்கு அவ்வாறு விளங்கினால் அவர் அவ் இடத்தில் சற்று தாமதித்து அவ்வசனத்தை சொன்னவர் உயிருடனிருந்தால் அவரிடம் நேரிற் சென்று அவரின் கருத்தை கேட்டறிய வேண்டும். அல்லது தபால் மூலம், அல்லது ஒரு தூதின் மூலம் அவரின் கருத்தைக் கேட்டறிய வேண்டும்.
அவரை நேரிலோ, தபால் மூலமோ தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாது போனால் அல்லது அவர் மரணித்தால் சரக்குள்ள, அனுபவமுள்ள மூத்த அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு அந்த வசனத்திற்கு ஒரு வலிந்துரை – تأويل வைக்க வேண்டும்.
இவ்வாறு வலிந்துரை வைப்பதன் மூலம் பலர் பயனடைவதற்கும், எளிதில் விளங்கிக் கொள்வதற்கும், அவ்வசனத்தைச் சொன்னவர் மீது தீய எண்ணம் ஏற்படாமலிருப்பதற்கும் வழி பிறக்கும்.
உதாரணமாக அல்லாஹ் திருக்குர்ஆனில்
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
நிச்சயமாக மனிதன் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். (திருக்குர்ஆன் 100-6)
இத்திரு வசனத்தில் வந்துள்ள “அல் இன்ஸான்” என்ற சொல் உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் உள்வாங்கிய சொல்லாகும்.
ஏனெனில் “அல் இன்ஸான்” என்ற இச் சொல்லில் வந்துள்ள “அல்” என்ற ஈரெழுத்துக்களைக் கொண்ட சொல் உலகில் “இன்ஸான்” மனிதனாயிருப்போர் அனைவரையும் உள்வாங்கிய சொல்லாகும். குறித்த இந்த “அல்” என்பது மொழியிலக்கணத்தில் “அலிப் லாம் ஜின்ஸீ” என்று மொழியிலக்கணவாதிகள் கூறுவர். இதன் கருத்து என்னவெனில் மனிதர்களில் ஒருவர் கூட பாக்கியின்றி அனைவரையும் உள்வாங்கும் தன்மை அந்த “அல்”லுக்கு உண்டு. வசனம் தருகின்ற வெளிப்படையான கருத்தின் படி “அல் இன்ஸான்” மனிதன் என்ற சொல்லில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் அடங்கிவிடுவார்கள். இது கொள்கையில் மிகப் பெரிய குற்றமாகும். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் இறைவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருந்ததில்லை.
எனவே, இத்திரு வசனத்திற்கு மனிதன் என்று பொருள் கொள்வதால் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அந்தஸ்தைக் குறைக்குமாகையால் அவர்களைத் தவிரவுள்ள மனிதர்கள் என்றே இவ்வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும்.
அல்லது மொத்தமாக “அல் இன்ஸான்” என்ற சொல் இவ்வசனத்தில் “காபிர்”களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதென்றும் கொள்ளலாம். திருமறை பரந்து விரிந்த பெருங் கடல்.
இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமென்னவெனில், கூறப்பட்ட திரு வசனம் நபீ பெருமான் தவிர மற்றவர்கள் என்று கருத்திற் கொள்ள வேண்டும் என்பதாகும். இவ்வாறான இடங்களில் மார்க்கத்திற்கு முரண் ஏற்படாமல் வலிந்துரை செய்ய வேண்டுமென்று விளங்குகின்றது.
அறபு மொழி நடையில் மொத்தமாக – பொதுவாக ஏதோ ஒன்றை வசனத்தில் கூறி அது எதையெல்லாம் உள்வாங்குமோ அவையனைத்தையும் கருத்திற் கொள்ளாமல் அவற்றில் சிலதை மட்டும் உள்வாங்கும் மரபு இருந்து வந்துள்ளது.
உதாரணமாக மாணவர்கள் விளையாடி நாலு கதிரைகளை உடைத்து வைத்திருந்ததைக் கண்ட வகுப்பாசிரியர் எல்லாமே நாசமாப் போச்சு என்று சொல்வது போல். நாசமானது நாலு கதிரைகள் மட்டும்தான். ஒரு விடயத்தைப் பெரிதாக்கியும், மிகைப்படுத்தியும் சொல்வது போன்று.
كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ – “பித்அத்” எல்லாமே வழி கேடுதான் என்ற வசனமும் இதே மாதிரி வசனமேயாகும். விளக்கம் சொன்னால் நீண்டுவிடும்.
இறைஞானி அபூ யஸீத் அல் பிஸ்தாமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், خُضْتُ بَحْرًا وَقَفَ الْأَنْبِيَاءُ بِسَاحِلِهِ நான் ஞானக் கடலில் நடுவில் நிற்கிறேன். நபீமார் அனைவரும் கரையில் நிற்கிறார்கள் என்று கூறினார்கள். ُ
இவர்களின் இக்கூற்று வெளிப் பார்வையில் “ஷரீஆ”வுக்கு முரணானது போலுள்ளது. இறை ஞானி பிஸ்தாமீ அவர்களும், நபீமார்களும் ஞானக் கடலில் மூழ்குவதற்காகச் சென்ற போது அபூ யஸீத் பிஸ்தாமீ என்பவர் நபீமாரை முந்திக் கொண்டு கடல் நடுவில் சென்றுவிட்டார். நபீமார் அக்கடலில் மூழ்க சக்தியற்ற நிலையில் கரையில் நிற்கிறார்கள் என்ற கருத்தை அவர்களின் பேச்சின் வெளிரங்கம் காட்டுகிறது.
அபூ யஸீத் அவர்கள் ஒரு வலீ மாத்திரமேயன்றி அவர்கள் நபீ அல்ல. வலீ என்பவர் ஆன்மிகத் தரத்தில் நபீயை விட பதவி குறைந்தவர்தான். அவ்வாறிருந்தும் அவர்கள் அவ்வாறு சொன்னது “ஷரீஆ”வுக்கும், “அகீதா”வுக்கும் முரண்படாமலிருப்பதற்காக அவருடைய பேச்சுக்கு வலிந்துரை கொடுப்பது அவசியமாகிறது.
நாம் எவ்வாறு வலிந்துரை கொள்ள வேண்டுமென்றால், அபூ யஸீத் அவர்களும், நபீமாரும் ஞானக் கடலில் இறங்கி அதன் நடுவை அடைந்தனர். பின்னர் நபீமார் அனைவரும் கரை வந்து சேர்ந்துவிட்டனர். அபூ யஸீத் அவர்களோ கரை சேர சக்தியற்ற நிலையில் நடுக்கடலில் தத்தளித்தவராகச் சொன்ன வசனம்தான் خُضْتُ بَحْرًا وَقَفَ الْأَنْبِيَاءُ بِسَاحِلِهِ என்ற வசனமாகும்.
இதேபோன்றுதான் وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ எனும் வசனமாகும். இத்திரு வசனத்தின் நேரடிப் பொருள், “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு” என்பதாகும்.
இத்திரு வசனத்தின் நேரடிப் பொருள் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் தோணுகிறது. இதனால் இதற்கு ஒரு வலிந்துரை அவசியமாவதால் பின்வருமாறு “தஃவீல்” வலிந்துரை வைக்கப்படுகிறது. அதாவது எங்கு திரும்பினாலும் அல்லாஹ்வின் “தாத்” உண்டு என்று இவ்வசனத்திற்கு வலிந்துரை கூறப்படுகிறது. ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலில் இருப்பதைக் கவனிக்கவும்.
இவ்வாறு மேலே சொன்னது போல் திருக்குர்ஆனின் வசனமோ, ஹதீதின் வசனமோ, அல்லது வேறு யாரின் வசனமோ “ஷரீஆ”வுக்கு அல்லது இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கு முரணானது போல் தென்பட்டால் மட்டும் வலிந்துரை கொள்ள முடியும்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் நேரடிப் பொருளான “அல்லாஹ் தவிர வேறு “இலாஹ்” தெய்வம் யாருமில்லை, எதுவுமில்லை” என்ற பொருள் “ஷரீஆ”வுக்கோ, நபீ மொழிகளுக்கோ முரணில்லாமலிருக்கும் நிலையில் அதற்கு مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ வணக்கத்திற்குத் தகுதியான நாயன் என்று வலிந்துரை செய்வதேன்? இதுவே எனது கேள்வி!
திருக்கலிமாவுக்கு வலிந்துரை செய்யாமல் இதன் நேரடிப் பொருளான “அல்லாஹ் தவிர எந்தவொரு “இலாஹ்” நாயனுமில்லை” என்று நேரடிப் பொருள் கொள்வதால் என்ன சிக்கல்? என்ன முரண்பாடு? ஏற்படுகிறதென்று வலிந்துரை செய்வோரிடம் நான் கேட்கிறேன்.
திருக்கலிமாவுக்கு வலிந்துரை செய்யாமல், “அல்லாஹ் தவிர எந்தவொரு “இலாஹ்” நாயனும் இல்லை” என்று நேரடிப் பொருள் கொள்வதால் ஏதாவதொரு சிக்கல், அல்லது முரண்பாடு ஏற்படுமென்று வலிந்துரைவாதிகள் கருதினால் அப்படியொரு சிக்கல் இருப்பது நபீகள் நாயகம் அவர்களுக்கு திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுத்த அல்லாஹ்வுக்கோ, அதை மக்களிடம் சொன்ன நபீகளாருக்கோ புரியவில்லையா? புரிந்திருந்தால் அவர்கள் அதை மாற்றி வலிந்துரையோடு சொல்லியிருக்கலாமல்லவா? அவ்வாறு சொல்லியிருந்தால் அதைத் தானே நாங்களும் திருக்கலிமா என்று ஏற்றுச் செயல்பட்டிருப்போம்.
தொடரும்…