“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 19

“லா இலாஹ இல்லல்லாஹ்” لَا إِلَهَ إِلَّا اللهُ என்ற வசனம் திருக்குர்ஆன் வசனமாகும். இது “திருக்கலிமா” என்றும் அழைக்கப்படும்.

இவ்வசனத்திற்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்றே இலங்கை நாட்டில் வாழும் முஸ்லிம்களும், இந்தியா – தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களும் தமிழில் பொருள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மொழி தவிர வேறு மொழி பேசுவோர் தமது மொழியில் எவ்வாறு பொருள் கூறுகிறார்கள் என்பதை நான் அறியேன்.

திருக்கலிமாவுக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது பிழையென்பதே எனது ஆய்வில் கிடைத்த முடிவாகும். இன்று உலகில் வாழ்ந்து வருகின்ற “தஸவ்வுப்” ஸூபிஸ ஞான மகான்களும், வாழ்ந்து மறைந்த ஸூபீ மகான்களும் திருக்கலிமாவுக்கு மேற்கண்டவாறு பொருள் சொல்வது பிழையென்றே கூறியுள்ளார்கள்.

இவ்வாறு திருக்கலிமாவுக்கு பொருள் கூறுவதுதான் பிழையென்று சொல்கிறேனேயன்றி திருக்கலிமாவின் வசனம் பிழையென்றோ, அல்லது அல்லாஹ் வணக்கத்திற்கு தகுதியற்றவன் என்றோ நான் சொன்னதுமில்லை, பேசியதுமில்லை, எழுதியதுமில்லை.

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திருக்கலிமா “லா இலாஹ இல்லாஹ்” என்ற வசனம் பிழையென்று சொல்வதாக அவர்களின் எதிரிகள் பொறாமையினால் இப்படியொரு செய்தியை பரப்பி அவர்களை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். அவர்களின் கனவு பயனற்ற பகற் கனவாயிற்று.

1970ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை நான் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசவில்லை. ஆயினும் திருக்கலிமாவுக்கு சொல்லப்படுகின்ற “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற கருத்து பிழை என்றும், அதற்கு வேறு கருத்து உண்டு என்றும் மட்டுமே சொல்லியிருக்கிறேன். அந்தக் கருத்து எதுவென்று பகிரங்கமாக நான் சொல்லவில்லை. அக்கால கட்டத்தில் பலர் என்னிடம் வந்து, “நீங்கள் திருக்கலிமாவுக்கு இன்று மக்கள் சொல்கின்ற கருத்து அதன் சரியான கருத்தில்லை என்றும், அதற்கு வேறு கருத்து உண்டு என்றும் சொல்கிறீர்கள். அதை எமக்கு சொல்லித் தரமாட்டீர்களா?” என்று கேட்டிருக்கிறார்கள். அந்தக் கருத்தைச் சொல்வதற்கான காலம் வரும், அப்போது சொல்வேன் என்று அவர்களுக்கு சொல்லியுமிருந்தேன்.

1979ம் ஆண்டு “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானக் கருத்துக்களை – இதற்கு முந்தின காலத்தில் சொல்லாத கருத்துக்களை – அதாவது “வஹ்ததுல் வுஜூத்” எனும் கோட்பாடு தொடர்பாக நான் கூறிய கருத்துக்களை பொறாமையினாலும், அறியாமையினாலும் ஜீரணிக்க முடியாமற் போன குறை குடங்களில் பல தழும்பத் தொடங்கின. நிறை குடங்கள் பல ஆடாமலும், அசையாமலும் அமைதி காத்தன.

தழும்பிய குடங்களில் ஒன்று எனக்கு எதிராகத் தலை தூக்கியது. நான் பேசிய தத்துவம் இஸ்லாமிய ஞானமில்லை, அது இந்து மத ஞானம் என்று காத்தான்குடியில் நடைபெற்ற பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் அந்த நபர் பேசினார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் பாணியில் அவரின் கூட்டம் நடந்த அதே இடத்தில் நான் பேசவேண்டியேற்பட்டு நான் பேசிக் கொண்டிருந்த போது, என்னை எதிர்த்துப் பேசிய அந்த நபரைச் சாடிப் பேசினேன்.

அவர் எதையும் தாங்கும் இதயமுள்ளவராக இருக்கவில்லை போலும். நான் மேல் நோக்கிப் பறப்பதை விரும்பாத அவர் காத்தான்குடியில் அக்கால கட்டத்தில் – 1979 – இருந்த உலமாஉகளில் பொறாமையே உருவான மௌலவீமார்களை எனக்கு எதிராக இயக்கி எனக்கு ஒரு பத்வா வழங்கி என்னை மேல் நோக்கிப் பறக்க விடாமல் என் சிறகை உடைப்பதற்கு காத்தான்குடி உலமாஉகளை கருவியாகப் பயன்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைத் தூண்டி எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கவைத்தார்.

இவை அனைத்திற்கும் சூத்திரதாரியான அவர் “பத்வா” வழங்கப்பட்ட அன்றுதான் மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டிருப்பார்.

1979ம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் பின் நான் கூறிய கருத்து சரியானதென்று நிறுவ வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

நான் கூறி வந்த இறைஞான கருத்துக்களை மக்கள் மத்தியில் பகிரங்கமாக, விளக்கமாக விபரிக்க வேண்டிய ஒரு கடமை எனக்கு இருப்பதை உணர்ந்த நான் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களை பேசத் தொடங்கி இன்று வரை பேசியும், எழுதியும் வருகிறேன்.

நமது இலங்கை நாட்டு உலமாஉகளில் அதிகமானோர் என்னுடன் தொடர்பில்லாதவர்களாகவும், நான் என்ன சொல்கிறேன் என்பதை நேரில் கேட்டறியாதவர்களாகவுமே உள்ளனர். அவர்களிற் சிலருக்கு நல்ல நோக்கம் இருந்தாலும் கூட பொறாமைக் காரர்கள் தமக்கும் “முர்தத்” சீல் குத்திவிடுவார்கள் என்று பயந்து கனவு கண்ட ஊமையன் போல் உள்ளார்கள்.

இன்னும் சிலர் தனியாகவும், வேறு சிலர் தமது மௌலவீ நண்பர்களுடனும் என்னைச் சந்திக்க வருகிறார்கள். அவர்களிற் சிலர் இரண்டொரு நாள் என்னோடு தங்கியுமிருக்கின்றார்கள். அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” விளக்கம் கூறினால் அமைதியோடும், மிக கவனத்தோடும் செவியேற்று இருப்பார்கள். திருப்தியோடு என்னை விட்டும் பிரிந்து செல்வார்கள். அல்லாஹ் இன்னோருக்கு அவர்களின் உள்ளங்களில் “வஹ்ததுல் வுஜூத்” நட்சத்திரத்தை உதிக்கச் செய்து அவர்கள் காணும் பொருளிலெல்லாம் “ஹக்கு” சத்தியத்தை – அல்லாஹ்வைக் கண்டு மகிழ அருள் புரிவானாக!

திரை நீக்கம்:

திருக்கலிமாவுக்கு இன்று அனைவராலும் சொல்லப்படுகின்ற “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு எந்த “இலாஹ்” நாயனும் இல்லை” என்ற கருத்தை நீங்கள் பிழை என்று சொல்வதற்கான காரணம் என்னவென்று ஒருவர் என்னிடம் கேட்க நினைத்தால் அவருக்கு நான் கூறும் பதில் பின்வருமாறு.

திருக்கலிமாவுக்கு இன்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்ற “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற பொருள் பிழையென்று பல வழிகளில் நிறுவ முடியும். பல காரணங்கள் மூலம் மறுக்க முடியும்.

அவற்றில் ஒரு வழி, திருக்கலிமாவில் வராத சொல்லின் பொருள் அதன் மொழியாக்கத்தில் எவ்வாறு வந்தது? என்று அவ்வாறு சொல்பவரிடம் கேட்க வேண்டும். இதற்கும் விடை வேண்டும்.

அதோடு திருக்கலிமா சாதாரண வசனமல்ல. அது திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றாயிருப்பதால் அந்த வசனத்தோடு مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ வணக்கத்திற்குரிய என்று சொல்பவனின் சொந்த வசனத்தை அல்லாஹ்வின் வசனத்தோடு எவ்வாறு இணைக்க முடியும்? இதற்கும் விடை வேண்டும்.

அவற்றில் இரண்டாவது வழி, திருக்கலிமா வசனம் தருகின்ற நேரடிப் பொருள் ஏதேனுமொரு சிக்கலை ஏற்படுத்துமென்றிருந்தால், அல்லது முரண்பாட்டை ஏற்படுத்துமென்றிருந்தால் மட்டுமே مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ வணக்கத்துக்குரியவன் என்று வலிந்துரை கூற வேண்டும். இன்றேல் – நேரடிப் பொருள் கொள்வதால் எந்தவொரு சிக்கலும், முரண்பாடும் இல்லையெனில் நேரடிப் பொருளே கொள்ள வேண்டும். “தஃவீல்” வலிந்துரை செய்யலாகாது.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இவ்வசனத்திற்கு “தஃவீல்” வலிந்துரை கொள்ளாமல் நேரடிப் பொருள் கொள்வதால் – அதாவது அல்லாஹ் தவிர வேறெந்த “இலாஹ்” நாயனுமில்லை என்று நேரடிப் பொருள் கொள்வதால் எந்த ஒரு சிக்கலும், முரண்பாடுமில்லாதிருந்தால் நேரடிப் பொருளே கொள்ள வேண்டும். வலிந்துரையை நினைத்தும் பார்க்கலாகாது.

அவற்றில் மூன்றாம் வழி:

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனம் “முஹ்கம்” வசனமாகும். “முஹ்கம்” வசனமென்றால் அதற்கு நேரடிப் பொருள்தான் கொள்ள வேண்டுமேயன்றி வலிந்துரை கொள்ளக் கூடாது. அது வலிந்துரையின்றி சரியான பொருளைத் தரும் வசனமாகும்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் “முஹ்கம்” வலிந்துரையின்றி நேரடிப் பொருள் தர வேண்டிய வசனமாதலால் அதற்கு வலிந்துரை கொள்ள முடியாது.

“திருக்குர்ஆனில் “முஹ்கம்” என்றும் “முதஷாபிஹத்” என்றும் இரு வகையுண்டு என்பதை நாம் அறிவோம். அதேபோல் “முஹ்கம்” வசனங்களுக்கு வலிந்துரை கொள்ளலாகாதென்றும் எமக்குத் தெரியும்.

ஆயினும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா “முஹ்கம்”தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்கலிமா “முஹ்கம்”தான்

“திருக்கலிமா” “முஹ்கம்”தான் என்று நிறுவுவதற்கு யுக்தியோடு தொடர்புள்ள பல ஆதாரங்கள் உள்ளன. (தொடரும்….