“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 20

“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை உணர்த்தும் ஆணிவேராயிருப்பதுடன் இது திருக்குர்ஆன் வசனமாகவும் உள்ளது. முஸ்லிமல்லாத ஒருவர் இதை மொழிந்தால் மட்டுமே அவர் முஸ்லிம் ஆகலாம். மொழிவதாயினும் அந்த வசனத்தின் சரியான பொருளையும், கருத்தையும் விளங்கி மொழிதல் அவசியமாகும். இதேபோல் இஸ்லாமில் சேர வருபவர்களுக்கு திருக்கலிமா சொல்லிக் கொடுப்பவர் முதலில் அதன் பொருளையும், கருத்தையும் தெளிவாக அறிந்தவராயிருக்க வேண்டும்.

இன்று இஸ்லாமில் சேர வருகின்ற பிற மதத்தவர்களுக்கு திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை சொல்லிக் கொடுப்பவர் அதன் எதார்த்தமான பொருளும், கருத்தும் எதுவோ அதையே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் எதை நான் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஸூபீ மகான்களின் கருத்தின்படி “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையிலான பொருளும், கருத்துமே இஸ்லாம் மார்க்கத்தில் இணைய விரும்புபவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை என்ற நடை கரத்தை ஈமான் சொல்லிக் கொடுப்பது செல்லுபடியாகாது.

இன்று “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் திருக்கலிமாவின் பொருளும், கருத்தும் அறியாத ஒருவர் சொல்லிக் கொடுத்தாராயின் குருடன் வழி காட்டிய கதை போன்றுதான் ஆகிவிடும்.

திருகக்கலிமாவானது “முஹ்கம்” “தஃவீல்” எனும் வலிந்துரை கூறாமல் விளங்கப்படக் கூடிய ஓர் அறபு வசனமேயாகும்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மட்டும்தான் சொல்லி அழைத்தார்களேயன்றி لَا إِلَهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ “வணக்கத்திற்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று அழைத்ததற்கு ஆதாரமில்லை. திருக்கலிமாவின் வசனமும் அதுவல்ல.

நபீ தோழர்களின் காலத்திலும், தாபியீன்களின் காலத்திலும் திருக்கலிமா لا إله إلا الله என்றுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டதேயன்றி لَا إِلَهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்று சொல்லிக் கொடுக்கப்படவில்லை.

திருக்கலிமா “தஃவீல்” – வலிந்துரை கொண்டுதான் விளங்கப்பட வேண்டியதென்றால் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் அனைவரும், மற்றும் புத்தி குறைந்தவர்களும் அதை விளங்குவது கடினமாகிவிடும். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கா வாசிகளில் 90 வீதமானோர் படிப்பறிவும், சிந்தனை சக்தியும், ஆய்வுத் திறனும் இல்லாதவர்களாகவே இருந்தார்கள்.

ஸஹாபாக்கள் – நபீ தோழர்கள் ஏனையோர்களை விடப் பதவியில் உயர்ந்தவர்களாயினும் நம்மில் பலரகமுள்ளவர்கள் இருப்பது போல் அவர்களிலும் பல ரகத்தில் இருந்தார்கள். அதனால் அவர்களைக் கீழ்த்தரமானவர்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. சொல்லவும் கூடாது.

திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொண்டு விளங்குமாற்றல் உள்ளவர்கள் ஒரு சிலரே இருந்திருக்கலாம். நபீ தோழர்கள் எம்மை விட ஆயிரம் மடங்கு மேலானவர்களும், அதேபோல் இறையருள் பெற்றவர்களுமாவர். கல்வித்துறை, ஆய்வுத்துறை, விஞ்ஞானத்துறை முதலான வளர்ச்சிகள் இல்லாத காலமாக அக்காலம் இருந்தது.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எந்தக் கருத்தை மனதிற் கொண்டு “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார்கள் என்பது அவர்களும், அத்திருக்கலிமாவைக் கற்றுக் கொடுத்தவனாம் அல்லாஹ்வும் அறிந்ததாகும்.

எனினும் எனது ஆய்விலும், எனது பார்வையிலும் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கின்ற இரத்தினச் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்பதையன்றி வேறொன்றில்லை.


اَلْحَقُّ مَوْجُوْدٌ وَالْخَلْقُ مَعْدُوْمٌ
திருக்கலிமா வலிந்துரைக்கு இடமில்லாத வசனம் என்பதை நிறுவுவதற்கு அண்ணலெம் பெருமான் முஹம்மது முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் எடுத்த நடவடிக்கை ஓர் ஆதாரமாகும்.

அபூ குபைஸ் மலையில் அண்ணலெம்பெருமான்…

ஒரு நாள் நபீ பெருமான் அவர்கள் தன்னந்தனியாக திரு மக்கா நகரிலுள்ள அபூ குபைஸ் மலை மீதேறி அங்கு நின்றவாறே திரு மக்கா நகர் மக்களை சத்தமாக அழைத்தார்கள். மக்கா நகர் மக்கள் அனைவரும் மலையடிவாரம் நோக்கி அணி திரண்டனர். மக்கா நகர் வெறிச்சோடிக் கிடந்தது. சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட அனைவரும் அலை திரண்டனர். மக்காவில் பிரசித்தி பெற்ற தலைவர்களான அபூ ஜஹ்ல், அபூ லஹப், ஷைபா போன்றவர்களும் அங்கு வந்தனர்.

மலை உச்சியில் நின்று அதன் கீழே நின்றிருந்த அனைத்து மக்களையும் விழித்து, “நான் இந்த மலை உச்சியில் நிற்கிறேன். நீங்கள் அடியில் நிற்கிறீர்கள். நான் இந்த மலையின் இரு புறங்களையும் பார்க்கிறேன். நீங்களோ ஒரு புறத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். மலையின் மறு புறத்திலுள்ளதை நீங்கள் காணமாட்டீர்கள்.

இந்நிலையில் மறுபுறத்தில் உங்களைத் தாக்குவதற்கென்று ஒரு கூட்டம் வந்துள்ளதென்று நான் சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா? என்று எம்பிரான் மஹ்பூபே றஹ்மான் கேட்டார்கள்.

அதற்கவர்கள், நாங்கள் உங்களை நாற்பதாண்டுகளாக “அமீன்” நம்பத் தகுந்தவர் என்றும், “ஸாதிக்” உண்மையாளர் என்றும் நம்பியுள்ள நிலையில் நீங்கள் எதைச் சொன்னாலும் அதை நம்புவோம் என்றார்கள்.

அப்போது தான் முதற் தடவையாக “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா திரு மக்கா நகரில் ஒலிக்கப் போகிறது. புரட்சி வெடிக்கப் போகிறது.

திரு மக்கா நகர் மக்களே! “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று நம்புங்கள் என்றார்கள். வேறொன்றும் அவர்கள் சொல்லவில்லை. திருக்கலிமாவுக்கு விளக்கம் கூடச் சொல்லவில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை.

பெருமானாரின் அறிவித்தலை மலையடியில் நின்று செவியேற்றவர்களில் எவரும் பட்டதாரிகளுமல்ல. பண்டிதர்களுமல்ல.

“அபூ ஜஹ்ல்” (அபூ ஜஹீல் அல்ல) என்ற அறியாமையின் தந்தை அங்கு வந்திருந்தான். “அபூ லஹப்” நெருப்பின் தந்தையும் அங்கு வந்திருந்தான். உத்பா, ஷைபா போன்ற மக்கா நகரைத் தமது கைக்குள் வைத்திருந்த “மினிமறுவா”க்களும் அங்கு வந்திருந்தார்கள். அங்கு வந்திருந்தவர்களிற் பலர் குறைஷிக் குல வழி வந்தவர்களும், எம் பெருமானின் உறவினர்களுமேயாவர்.

அப்போது யாரோ ஒருவன் – அவன் அபூ ஜஹ்லாக இருக்கலாம். அல்லது நபீ பெருமானாரின் உறவினரான அபூ லஹப் ஆகவும் இருக்கலாம். கோபம் தாங்க முடியாமல் ஒரு பிடி மண் எடுத்து நபீ பெருமானை நோக்கி எறிந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டு تَبًّا لَكَ أَلِهَذَا دَعَوْتَنَا நீ நாசமாப் போகட்டும். இதற்காகவா எங்களை அழைத்தாய்? என்று கூறினான். யாரோ இன்னுமொருவன் إِنَّكَ مَجْنُوْنْ நீ பைத்தியக்காரன் என்றான். இன்னும் யாரோ ஒருவன் إِنَّكَ سَاحِرٌ நீ சூனியக் காரன் என்றான். இவ்வாறு அங்கு வந்த அனைவரும் தலைவர்களின் பாணியில் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டனர்.

இது பற்றிக் கூறிய அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.

وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ، أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ، وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَى آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ، مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ،

மேலும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர் ஆகிய நீர் அவர்களின் இனத்திலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இவர் பெரும் பொய்யரான சூனியக் காரர் என்றும் உம்மைப் பற்றி நிராகரிப்போர் கூறினர்.

என்ன! இவர் நம்முமைடய வணக்கத்திற்குரிய தெய்வங்களை நிராகரித்துவிட்டு ஒரேயொரு வணக்கத்திற்குரியவனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான் என்றும் கூறினர்.

அவர்களிலுள்ள தலைவர்கள் மற்றவர்களிடம் இவரை விட்டு உங்கள் வழியில் நீங்கள் சென்று விடுங்கள். இன்னும் உங்கள் தெய்வங்களின் மீது நீங்கள் உறுதியுடன் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும் இக்கூற்றானது ஏதோ ஒன்றை சுய நலத்தைக் கருத்திற் கொண்டு நாடப்பட்டதாக உள்ளது என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர். (திருக்குர்ஆன் 38 – 4, 5, 6, 7)

மேற்கண்ட திரு வசனங்களுக்கான மொழி பெயர்ப்பு என்னுடையதல்ல. இந்த மொழி பெயர்ப்பு ஸஊதி அரசால் வெளியிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்ட மொழியாக்கமாகும். இந் நூலின் மொழி பெயர்ப்பு நூறு வீதமும் சரியானதென்று நான் சொல்லமாட்டேன்.

இதன் மொழி பெயர்ப்பாளர்கள் யார்? இந்த மொழி பெயர்ப்பை சரி கண்டவர்கள் யார்? என்பது பற்றிய விபரத்தை அடுத்த தொடரில் பொது மக்களுக்கு விளக்கி வைத்த பின் எனது தலைப்பை தொடர்வேன். இன்ஷா அல்லாஹ்!

தொடரும்..