“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 21

மேலே நான் எழுதிய “ஸாத்” அத்தியாயத்தின் 4, 5, 6, 7 ஆகிய வசனங்களின் சுருக்கமான விளக்கத்தை இத் தொடரில் சாறாகப் பிழிந்து தருகிறேன்.

மா நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மலை உச்சியிலிருந்து “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்ன அன்றுதான் அவர்களுக்கு எதிர்ப்பு ஆரம்பமானது. சுமார் 39 ஆண்டுகள் நபீகள் நாயகம் அவர்களுக்கு எந்த ஓர் எதிர்ப்பும், எங்கேயும் ஏற்பட்டதேயில்லை. இந்த எதிர்ப்பு கொள்கையைக் கருவாகக் கொண்டு ஏற்பட்டதேயன்றி வேறு எக்காரணத்திற்காகவுமில்லை.

நபீகள் நாயகம் அவர்கள் திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை மட்டும்தான் சொன்னார்களேயன்றி அதற்கு ஒரு விளக்கமும் கூறவில்லை. கூறத் தேவையுமிருக்கவில்லை. ஏனெனில் அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் அறபு மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களாவர். அவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பெருமானாரின் இந்த நடவடிக்கை மூலம் திருக்கலிமாவை சிறியவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவர் மத்தியிலும் பகிரங்கமாகச் சொல்லலாம் என்பது விளங்கப்படுகின்றது.

திருக்கலிமாவின் விளக்கம் என்பது படிக்காதவர்கள், பொது மக்கள், சிறுவர்கள், பெண்கள் முதலானோர் மத்தியில் சொல்லக் கூடாதென்று முஸ்லிம் உலமாஉகளிலும், ஷெய்குமார்களிலும், பொது மக்களிலும் பலர் கூறுகிறார்கள்.

அபூ குபைஸ் மலை நிகழ்வை நினைவூட்டி பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்கலிமாவை பகிரங்கமாகவும், பல தரப்பட்ட மக்கள் மத்தியிலும் பேசியுள்ளார்களே என்று பகிரங்கமாகப் பேசுவதும், பல தரப்பட்ட மக்கள் மத்தியில் பேசுவதும் கூடாதென்று சொல்வோரிடம் கூறினால் நபீகள் நாயகம் அறபியில் சொன்னார்கள். ஆனால் நீங்கள் தமிழில் சொல்கிறீர்களே என்று எம்மிடம் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது? இத்தகையோருக்கு எதைச் சொல்லித்தான் விளக்கி வைப்பது?

மக்க நகர் மக்கள் அறபிகள். அதனால் அவர்கள் அறபியில் கூறினார்கள். நமது நாட்டு மக்கள் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழில் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். இதில் என்ன தவறு? தவறென்பது எந்த மொழியில் சொல்லப்பட்டாலும் அது தவறுதான். சரியென்பது எந்த மொழியில் சொல்லப்பட்டாலும் அது சரிதான். சட்டம் சொல்லுக்கும், செயலுக்குமுரியதேயன்றி மொழிக்குரியதல்ல.

திருக்கலிமாவுக்கு விளக்கம் சொல்பவனுக்கும் வயதெல்லை தேவையில்லை, கேட்பவனுக்கும் வயதெல்லை தேவையில்லை, அதைச் சொல்வதற்கும் இன்னொருவரின் அனுமதியும் தேவையில்லை. திருக்கலிமாவின் சரியான விளக்கம் தெரிந்தவர் அதை எங்கேயும் பேசலாம். எப்போதும் பேசலாம். பேசுவதற்கு தடையில்லை. கேட்போரில் விளங்குவோரும் இருப்பார்கள், விளங்காதவர்களும் இருப்பார்கள். அது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

மேற்கண்ட விபரம் மூலமும், பின்வரும் திரு வசனம் மூலமும் திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறும் “அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் – நாயனுமில்லை” என்ற தத்துவத்தை பகிரங்கமாகவும், வயதெல்லையின்றியும் ஆண் பெண் என்ற வித்தியாசமின்றியும், நேர, கால, சூழ்நிலை பார்க்காமலும் சொல்ல வேண்டுமென்பது தெளிவாகிறது.

அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும், நாயனுமில்லை என்ற தத்துவத்தை வயதெல்லை, ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவர் மத்தியிலும் பேசலாம் என்பதற்கு எவராலும் மறுக்க முடியாத ஆதாரம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவ்வாறு சொன்னதேயாகும். பேசியதேயாகும். அவர்களைப் பின்பற்றுமாறு நாம் ஏவப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் செய்ததைச் செய்வது எவ்வாறு தவறாகும். தவறென்போர் சிந்திக்க வேண்டும்.

திருக்கலிமா பகிரங்கமாக சொல்லப்பட வேண்டுமென்பதற்கான ஆதாரம் நபீ பெருமான் சொன்னது மட்டுமல்ல. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் கூட அதே கருத்தையே வலியுறுத்துகிறது.

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ

“அவனே – அல்லாஹ்வே தனது றஸூல் – திருத்தூதர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை “ஹுதா” நேர்வழி கொண்டும், சத்திய மார்க்கம் கொண்டும் அனுப்பி வைத்தது அதை அவர்கள் பகிரங்கப்படுத்துவதற்காகவேதான். இதை – இவ்வாறு பகிரங்கப்படுத்துவதை இணை வைத்தோர் வெறுத்தாலும் சரியே” என்று அல்லாஹ் கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 9-33)

இத்திருவசனத்தில் لِيُظْهِرَهُ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதன் பொருள் சத்திய மார்க்கத்தை “இள்ஹார்” “பிரகடனம்” செய்வதற்காக என்பதாகும்.

“இள்ஹார்” என்றால் பிரகடனம் செய்தல், பகிரங்கப்படுத்துதல். “இஸ்றார்” என்பது இதற்கு எதிரானது. இதன் பொருள் மறைத்தல், இரகசியமாய் வைத்திருத்தல் என்பதாகும்.

சத்திய மார்க்கமான “தீனுல் இஸ்லாம்” மார்க்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

திரு வசனத்தில் வந்துள்ள لِيُظْهِرَهُ “சத்திய மார்க்கத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காக” என்ற சொல்லுக்கு لِيُسِرَّهُ என்று எதிர்ச் சொல் வரும். இதன் பொருள் சத்திய மார்க்கத்தை இரகசியமாகச் சொல்வதற்காக என்று வரும்.

மேற்கண்ட இவ்விபரங்கள் மூலம் دِيْنُ الْحَقِّ சத்திய மார்க்கம் எப்போதும், எங்கேயும் பகிரங்கமாகப் பேசப்பட வேண்டியதென்பது தெளிவாகிறது.

திருக்கலிமாவின் விளக்கம் சத்திய மார்க்கத்தின் அடிப்படை விளக்கமாகும். அடிப்படை விளக்கத்தை சொல்வதன் மூலமே சத்திய மார்க்கத்தின் சத்தியம் எதுவென்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அந்த சத்தியத்தை பகிரங்கமாக தெளிவு படுத்தாமல் மூடலாக அல்லது தெளிவின்றிக் கூறுவதால் மக்களுக்கு “ஈமான்” விசுவாசம் என்றால் என்னவென்று விளங்காமற் போய்விடும்.

“தரீகா”வைப் பின்பற்றி ஒரு ஷெய்கின் – ஞான குருவின் வழி காட்டலில் வாழ்பவர்களிற் சிலர் உள்ளனர். இவர்கள் தமது ஷெய்குமார் – ஞான குருக்கள் சொல்வதை ஏன் சொன்னார்கள்? எதற்காகச் சொன்னார்கள்? என்பதை விளங்காமல் தமக்கு “வஹீ” வந்த பாணியில் சில விடயங்களைக் கூறுவார்கள். அவற்றில் ஒன்றுதான் பின்வரும் செய்தியாகும்.

அதாவது ஸூபீ மகான்கள் தமது நூல்களில் إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ என்று ஒரு வசனம் எழுதுவார்கள். இதன் பொருள் “றுபூபிய்யத்” உடைய இரகசியத்தை வெளிப்படுத்துவது “குப்ர் – நிராகரிப்பு” என்பதாகும்.

இந்த வசனத்தில் سر الربوبيّة இறைவன் “றப்”பாக இருப்பதிலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்துவது “குப்ர்” நிராகரிப்பு என்றுதான் வந்துள்ளதேயன்றி إِظْهَارُ سِرِّ الرَّبِّ “றப்பு” உடைய இரகசியத்தை வெளிப்படுத்துதல் நிராகரிப்பு என்று வரவில்லை.

இவ்வாறு வசனம் வந்துள்ளதால் “றுபூபிய்யத்” தின் இரகசியத்தை வெளிப்படுத்துதல்தான் பிழையேயன்றி திருக்கலிமா சொல்கின்ற தத்துவத்தை வெளிப்படுத்துதல் எந்த வகையிலும் பிழையாகாது. திருக்கலிமாவின் தத்துவம் இரகசியமென்று வைத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் அதை விளக்கமாகச் சொல்வதெவ்வாறு?

முஸ்லிம்களல்லாத – வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிற் பலர் “திருக்கலிமா”வை மொழிந்து இஸ்லாம் மார்க்கத்தில் நுழைகிறார்கள். அவர்களிற் பலர் நாடளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தால் அவர்களை நிருபர்கள் பேட்டி காண்கிறார்கள். அவர்கள் தமது பேட்டியில் அவர்களிடம், “நீங்கள் இஸ்லாமிய அம்சங்களில் எந்த அம்சத்தால் கவரப்பட்டு இஸ்லாமானீர்கள்” என்று கேட்கும் போது அவர்களில் ஒவ்வொருவரும் தான் கவரப்பட்டதற்கான காரணத்தைக் கூறுகின்றார்கள்.

முஸ்லிம்களின் தொழுகை முறை தன்னைக் கவர்ந்ததென்று ஒருவர் சொல்கிறார். முஸ்லிம்களின் உணவு முறையும், சாப்பிடும் ஒழுங்கும் என்னைக் கவர்ந்ததென்று இன்னொருவர் சொல்கிறார். முஸ்லிம்களின் சுத்தம், சுகாதாரம் என்பன தன்னைக் கவர்ந்ததென்று வேறொருவர் சொல்கிறார். இவ்வாறு பிற மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்தில் இணைகின்றவர்கள் தம்மைக் கவர்ந்த காரணங்களைக் கூறுகின்றார்கள்.

ஆயினும் அவர்களில் எவரும் இஸ்லாம் கூறும் இறை கொள்கைதான் தன்னைக் கவர்ந்ததென்று சொன்னதாக நான் அறியவில்லை. எனினும் ஒரு சிலர் அவ்வாறு சொல்லியிருப்பதற்கு சாத்தியமுண்டு.

எவராயினும் “கலிமா”வின் – “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திரு வசனம் உணர்த்தும் கொள்கையால் கவரப்பட்டவன் மட்டுமே இஸ்லாம் கூறும் இறை கொள்கையை புரிந்து இஸ்லாம் மார்க்கத்தில் இணைகிறான். மற்றவர்கள் இறை தத்துவத்தை உணராமல் இஸ்லாம் கூறும் சுகாதாரம், சுத்தம், சமுக நடைமுறை போன்றவற்றால் கவரப்பட்டு இஸ்லாமில் இணைகிறார்கள். இவர்கள் “துன்யா” இவ்வுலக நடைமுறையில் முஸ்லிம்கள்தான். ஆயினும் அல்லாஹ்வை விளங்கியறிந்த “முஃமின்” விசுவாசிகளாகமாட்டார்கள்.

தொடரும்..