Home எழுத்தாக்கங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
79

தொடர் – 22

மேற்கண்ட தலைப்பு தொடர் 20ல் அபூ குபைஸ் மலையில் அண்ணலெம்பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்கலிமாப் பிரகடனம் செய்தது தொடர்பாக சில வரிகள் எழுதியிருந்தேன்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா, அல்லது இஸ்லாமின் மூல மொழி என்பது பகிரங்கமாகச் சொல்லப்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் வயதெல்லை, ஆண், பெண், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சொல்ல வேண்டுமென்றும் எழுதியிருந்தேன்.

அதே தொடரில் சில வரிகள் எழுதுகிறேன்.

அதற்குமுன், திருக்கலிமாவுக்கு மூன்று சாரார் மூன்று விதமாகப் பொருள் கூறுகிறார்கள் என்று எழுதியிருந்தேன்.

அந்த மூன்றையும் ஒரு தரம் நினைவு படுத்தியபின் தொடர்கிறேன்.
மூன்று சாராரின் மூன்று வகையான பொருள்.
ஒன்று – வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை.
இரண்டு – அல்லாஹ் தவிர எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை.
மூன்று – அல்லாஹ் அல்லாத அல்லது அல்லாஹ்வுக்கு வோறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை, எந்த வஸ்த்துவும் இல்லை.

நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதன் முதலாக திருக்கலிமாப் பிரகடனம் செய்த போது மேற்கண்ட மூன்று வகையான பொருள்களில் எந்த வகையின் அடிப்படையில் அதாவது எந்த வகைப் பொருளின் அடிப்படையில் கூறினார்கள் என்பது தொடர்பாக சற்று ஆராய்வோம்.

முதலாவது கருத்து “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்பதாகும்.

இதே பொருளைக் கருத்திற் கொண்டு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்கலிமாப் பிரகடனம் செய்யவில்லை என்பது எனது ஆய்வில் கிடைத்த கருத்தாகும்.

எனது இக்கருத்தை நிறுவ பல ஆதாரங்கள் கூற முடியும். முடிந்தவரை எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற நான்கு சொற்களையும், 12 எழுத்துக்களையும் கொண்ட இத்திருக்கலிமாவுக்கு – மூல மொழிக்கு நேரடிப் பொருள் கூறுவதாயின் “அல்லாஹ் அல்லாத – அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த இலாஹும் – தெய்வமும் இல்லை” என்றும் சொல்ல முடியும். அல்லது எந்த வஸ்த்துவும் இல்லை என்றும் சொல்ல முடியும். இரண்டும் சரிதான். இதுவே இதற்கான நேரடிப் பொருள்.

இது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதற்கான சுருக்கமான நேரடிப் பொருளாகும். இது மட்டுமே சரியான பொருள் என்று ஸூபிஸக் கொள்கைவாதிகள் சொல்வார்கள். நானும் இதே கருத்தையே மூல மொழிக்கு கூறி வருகிறேன். இதுவே நான் சரிகண்ட கருத்துமாகும். ஸூபீகளின் பொருளின் படியும், கருத்தின்படியும் திருக்கலிமாவுக்கு எந்தவொரு “தஃவீல்” வலிந்துரையும் தேவையில்லை. வலிந்துரையின்றியே திருக்கலிமாவின் பொருள் சரியாக அமைந்து விடும். இந்த வழி அனைவருக்கும் இலகுவான வழியாகும். நேரடிப் பொருள் கொள்வதற்கு எந்த ஒரு “தஃவீல்” வலிந்துரையும் தேவையில்லை.

ஒரு கொள்கையின் பிரதான கருத்தை மிக எளிதாக – இலகுவாக விளங்குவதாயின் “தஃவீல்” என்ற சுற்றி வழைப்பு இல்லாதிருக்க வேண்டும். சுற்றி வழைப்பு இருந்தால் எளிதில் பொருள் விளங்க முடியாமற் போய்விடும்.

“தஃவீல்” எனும் வலிந்துரை வைப்பதாயினும் அது எல்லோராலும் சாத்தியமானதல்ல. அதற்கு ஓரளவேனும் திறமை இருக்க வேண்டும்.

இன்று திருக்கலிமாவுக்கு “தஃவீல்” வலிந்துரை வைத்துப் பொருள் கொள்பவர்கள் “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்று கூறுகின்றார்கள். இதே பொருளை அறபு மொழியில் வலிந்துரை வைப்பதாயின் لَا إِلَهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்றுதான் வைக்க வேண்டும். நபீ அவர்களின் அழைப்பை ஏற்று மலைக்குச் சென்றவர்களில் அதிகமானோர் இவ்வாறு தஃவீல் – வலிந்துரை கொள்ளும் திறமையுள்ளவர்களாக இருந்திருக்கச் சாத்தியமில்லை.

“நுபுவ்வத்” எனும் நபீ பட்டம் கிடைத்த பின் முதற் தடவையாக அந்த மக்கள் மத்தியில் பெருமானார் சொல்லவுள்ள கொள்கைக்கான மூல மொழி “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாதான். இந்த வசனம் அந்த மக்கள் மத்தியில் அறிமுகமில்லாத புதிய வசனமாகும். இத்தகைய வசனம் மிக எளிதாகவும், இலகுவாகவும் விளங்கக் கூடியதான வசனமாக இருத்தல் அவசியம். சிறுவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் செவியேற்றதும் விளங்கிக் கொள்ளும் பாணியில் இருக்க வேண்டும். புரிந்து கொள்வது கஷ்டமான சொற்பிரயோகம் இவ்வாறான இடத்திற்கு பொருத்தமற்றதாகும்.

உதாரணமாக ஓர் இடத்தில் பெரியதோர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும், அதற்கு சிறுவர்கள், பெண்கள், மற்றும் படித்த, படிக்காதவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றதென்றும் வைத்துக் கொள்வோம். அங்கு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஓர் அவசர, முக்கிய அறிவித்தல் செய்ய வேண்டியிருந்தால் அவ் அறிவித்தலின் வசனங்கள் படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிக எளிதில் விளங்கும் வசனத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். படித்தவர்கள் மட்டும் விளங்கும் பாணியில் அவ் அறிவித்தல் இருத்தலாகாது. அறிவித்தல் எழுத்துக்களும், சொற்களும் அனைவருக்கும் அறிமுகமானவையாகவும் இருக்க வேண்டும்.

உதாரணமாக விழா நடக்கவுள்ள, மக்கள் அதிகமாக, நெரிசலாக ஒன்று கூடுமிடத்தில் “கரண்ட்” மின்சாரம் தாக்கும் அமைப்பு இருக்குமானால் பொது மக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல் கொடுக்க வேண்டும். உதாரணமாக

(எச்சரிக்கை: இவ்விடத்தில் “கரண்ட்” மின்சாரம் அடிக்கும். கவனம்!)
இவ்வாறு எழுதப்பட்டிருந்தால் அனைவரும் புரிந்து கொள்வார்கள். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை இவ்வாறு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலேயே அறிவித்தல் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யாமல் அஸ்ஸலாமு அலைக்கும். இவ்விடத்தில் மின் ஒழுக்கு உண்டு! என்று மட்டும் அறிவித்தல் செய்வது கூடாது. இவ்வாறு அறிவித்தல் செய்தால் தீய விளைவுகளுக்கு வழி வகுக்கும். இது நேரடியாக உரிய பொருளை எளிதில் தராது.

இதற்கு இன்னுமோர் உதாரணம் எழுதுகிறேன்.
வெள்ளிக்கிழமை பள்ளிவாயலில் ஜும்ஆப் பிரசங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வேளை ஒரு பாம்பு பள்ளிவாயலினுள் நுழைந்து விட்டது. மக்களைக் காப்பாற்றுவதற்காக அவசரமாக ஓர் அறிவித்தல் செய்ய வேண்டும். அவ் அறிவித்தல் சிறுவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக எச்சரிக்கை! என்று சொல்லவிட்டு பள்ளிக்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அனைவரும் எழுந்து அதை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவும் என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு சொல்லாமல் அனைவரும் புரியாத சொல்லில் “சர்ப்பம்” ஒன்று பள்ளிக்குள் வந்துள்ளது என்று மட்டும் அறிவித்தல் செய்தல் பொருத்தமில்லை. சர்ப்பம் என்ற சொல் அனைவரும் புரியக் கூடியதல்ல.

மேற்கண்ட இரண்டு உதாரணங்களையும் ஏன் எழுதினேன் என்றால் நபீகள் நாயகம் அபூ குபைஸ் மலையில் நின்று செய்த அறிவித்தல் அறபு மொழி அறிந்த அனைவரும் மிக இலகுவாக விளங்கும் பாணியில் அமைந்திருந்தது. அந்த மக்கள் அவ்வசனத்தைச் செவியேற்ற உடனேயே அதன் சரியான கருத்தைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் சரியான கருத்தையே புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரம் அவர்கள் நபீ அவர்களைப் பைத்தியக் காரன் என்று சொன்னதும், இதைச் சொல்லவா எங்களை அழைத்தாய்? என்று கேட்டதும், இவர் ஒரு பொய்யர் என்று இன்னும் சிலர் சொன்னதுமாகும்.

நபீகள் நாயகம் என்ன சொன்னார்கள் என்பதை எந்த ஒரு தஃவீல் வலிந்துரையுமின்றி அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரம் அவர்கள் அவர்களைக் கீழ்த்தரமாக பேசியதும், ஏசியதுமேயாகும்.

இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவெனில் மலைக்கு வந்த மக்களிற் சிலர் ஆக்ரோஷத்துடன் திரும்பிச் செல்கையில் பின்வருமாறு சொல்லிச் சென்றார்கள்.

وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ، أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ، وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَى آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ، مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ،

மேலும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர் ஆகிய நீங்கள் அவர்களின் இனத்திலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இவர் பெரும் பொய்யரான சூனியக் காரர் என்றும் நிராகரிப்போர் கூறினர்.

என்ன இவர் நம்முடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை நிராகரித்துவிட்டு ஒரேயொரு வணக்கத்துக்குரியவனாக ஆக்கவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான் என்றும் கூறினர்.

அவர்களிலுள்ள தலைவர்கள் மற்றவர்களிடம் இவரை விட்டும் உங்கள் வழியில் நீங்கள் சென்று விடுங்கள். இன்னும் உங்களின் தெய்வங்களின் மீது நீங்கள் உறுதியுடன் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக உங்கள் தெய்வங்களை கைவிடும்படி கூறும் இக்கூற்றானது ஏதோ ஒன்றை சுயநலத்தைக் கருத்திற் கொண்டு நாடப்பட்டதாக உள்ளது என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டனர்.

கடைசி மார்க்கமான கிறிஸ்தவ மதத்திலும் இது பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. இது இவரால் உண்டாக்கப்பட்ட பொய்யைத் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 38 – 4, 5, 6, 7).

மேற்கண்ட நான்கு திருக்குர்ஆன் வசனங்களுக்குமான மொழியாக்கம் ஸஊதி அரசு வெளியிட்ட “தர்ஜமதுல் குர்ஆன்” எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த மொழியாக்கம் எனக்கு திருப்தியாக இல்லை.

எனினும் அவ்வசனங்களுக்கான விளக்கங்களை நான் சரியாக அமைத்துக் கூறியுள்ளேன். أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا என்ற வசனத்துக்குரிய சரியான பொருள், “முஹம்மத் அவர் எல்லாத் தெய்வங்களும் ஒரே தெய்வம்தான் சொல்கிறாரா?” என்பதேயாகும். எவரால் எது “இலாஹ்” என்று சொல்லப்படுகிறதோ அது அல்லாஹ்வுக்கு வோறனதல்ல என்பதே கருத்தாகும்.

சுருக்கம்: 22வது தொடரின் சுருக்கமும், சாராம்சமும் என்னவெனில் இஸ்லாமின் மூல மொழியான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவின் பொருள் அனைவரும் நேரடியாக எந்த ஒரு வலிந்துரையுமின்றி விளங்கும் பாணியிலேயே இருந்தது.

ஏதாவது ஓர் அறிவித்தல்அதி முக்கியமானதாயிருந்தால் அவ் அறிவித்தல் செய்பவன் அனைவரும் விளங்கும் பாணியில், எளிய மொழி நடையிலேயே செய்ய வேண்டும். இதைக் கருத்திற் கொண்டே நபீ பெருமான் திருக்கலிமாவை சொன்னார்கள் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். வலிந்துரை கொண்டுதான் பொருள் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை.

தொடரும்..

NO COMMENTS