தொடர் – 23
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மக்காவிலுள்ள அபூ குபைஸ் மலையில் நின்று இஸ்லாமிய மார்க்கத்தின் மூல மொழியான திருக்கலிமா எனப்படும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தைச் சொன்ன போது 39 ஆண்டுகளாக “அல் அமீன்” நம்பிக்கைக்குரியவர் என்றும், “அஸ்ஸாதிக்” உண்மையாளர் என்றும் பெருமானாரைப் போற்றிப் புகழ்ந்த வாய்கள் அவர்களைப் பொய்யர் என்றும், சூனியக்காரர் என்றும் இழித்துரைக்கத் தொடங்கின.
மூல மொழியின் உண்மைப் பொருளான அல்லாஹ் அல்லாத எந்தவொரு நாயனுமில்லை, அதேபோல் எந்தவொரு வஸ்த்துவும் இல்லை என்ற பொருளை பெருமானார் சொன்ன போது மலையடியில் கூடி நின்றவர்களிற் சிலர் இவர் பைத்தியம் என்றார்கள்.
பெருமானாரை அவ்வாறு அவர்கள் இழித்துரைத்ததற்கான காரணம் என்ன? மூல மொழியாம் திருக்கலிமாவின் கருத்து அவர்களை அவ்வாறு சொல்ல வைத்ததென்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் மூல மொழி திருக்கலிமாவை கல்வித் திறமை கொண்டும், அல்லாஹ்வின் அருள் கொண்டும் ஆய்வு செய்தால் அல்லாஹ் அல்லாத தெய்வமும் இல்லை, அதேபோல் வேறொன்றுமே இல்லை என்ற உண்மைதான் ஆய்வின் முடிவில் கிடைக்கும்.
அவ்வாறாயின் அதன் சுருக்கம் என்வெனில் அந்தக் காபிர்கள் “கஃபா”வினுள் வைத்திருந்த பல மூலங்களினாலான, பல நாம ரூபங்களுடைய சிலைகள், விக்கிரகங்கள் அனைத்தும் அல்லாஹ் அல்லாதவையல்ல – அவனுக்கு வேறானவையல்ல என்ற கருத்து வரும்.
இக்கருத்தை இன்னுமொரு பாணியில் துலங்க வைப்பதாயின் اَلْآلِهَةُ عَيْنُ اللهِ لَا غَيْرُ اللهِ அனைத்து “இலாஹ்” தெய்வங்களும் அல்லாஹ் தானானவைதான் என்று விளங்க வரும்.
இதைவிடவும் தெளிவினும் தெளிவாய் சொல்வதாயின் விக்கிரகங்களும், மற்றும் சிலைகளும் அல்லாஹ்தான் என்று முடிவு வரும்.
இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிச் சென்றவர்கள் இதே கருத்தை விளங்கியதனால்தான் “இலாஹ்” என்ற பெயரைப் பெற்ற யாவும், மற்றும் அல்லாஹ்வும் ஓர் “இலாஹ்”தான். அல்லாஹ் என்ற “இலாஹ்” வேறு, தெய்வங்கள் என்ற பெயரிலுள்ள வேறு தெய்வங்கள் வேறு என்ற கருத்து மூலமொழியான திருக்கலிமாவில் இல்லை. கிடையவே கிடையாது. இதுவே இஸ்லாம் கூறும் ஸூபிஸ தத்துவம்.
திரு வசனத்தில் கூறப்பட்ட இன்னொரு விடயத்தையும் இங்கு எழுதுகிறேன்.
அதாவது மலையில் நின்று “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று பெருமானார் சொன்ன போது அங்கு வந்து நின்ற இன்னும் சிலர்
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ
இவர் தெய்வங்கள் அனைத்தையும் ஓர் “இலாஹ்” தெய்வமாக்கிவிட்டாரா? இது பெரும் ஆச்சரியமான விடயம் என்றும்,
مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ
இப்படியொரு செய்தியை கடைசி மார்க்கத்தில் கூட நாங்கள் கேள்விப்படவில்லையே! இது பொய் என்றும் சொன்னவர்களாக திரும்பிச் சென்றார்கள்.
எல்லா “இலாஹ்” தெய்வங்களும் ஒன்றுதான் என்று முஹம்மத் சொல்கிறாரா? இது ஆச்சரியமான விடயமென்று அவர்கள் சொன்னது அவர்களின் கற்பனையுமல்ல, அவர்களின் தவறான விளக்கமுமல்ல. மூல மொழி எதைக் கூறியதோ அதையே அவர்கள் சொன்னார்கள்.
இதன் மூலம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் உள்ளிட்ட தெய்வங்கள் யாவும் அல்லாஹ் தானானவையே தவிர அவனுக்கு வேறானவையல்ல என்று சொன்னார்கள் என்பது உண்மைதான். அதுவே திருக்கலிமா கூறும் தத்துவம் என்பது தெளிவாகிறது.
#திருக்கலிமாவின் இலட்சியம் வேறென்ற வேரை அறுப்பதா? விக்கிரக வணக்கத்தை ஒழிப்பதா?
இரண்டும்தான். இவ்விரண்டிலும் முந்தினது “ஙைரிய்யத்” எனும் வேறென்ற உணர்வை வெட்டியெறிவதாகும். இதனால்தான் – அந்த மக்களிடமிருந்த அல்லாஹ் வேறு, தாம் வைத்திருக்கின்ற விக்கிரகங்கள் வேறு என்ற “ஙைரிய்யத்” உணர்வை வெட்டியெறிவதற்காக தங்களின் நாற்பதாம் வயதிலிருந்து 53ம் வயது வரை – 13 வருடங்கள் கழித்தார்கள். குறித்த 13 வருடங்களும் இராப் பகலாக முழு நாளையும் இஸ்லாமிய போர்களிலும், அது தொடர்பான ஏனைய விடயங்களிலும், மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை கட்டியெழுப்புவதிலுமே தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தினார்கள்.
இஸ்லாமின் ஐந்து கடமைகளில் “கலிமா” தவிர ஏனைய நான்கு கடமைகளும் 13 வருடங்களுக்குப் பிறகுதான் கடமையாக்கப்பட்டன. இதற்கான காரணம் கூட “ஙெய்ரிய்யத்” வேற்றுமை நீக்கி “ஐநிய்யத்” ஒற்றுமை நிலவ வேண்டுமென்பதை கருத்திற் கொண்டேயாகும்.
படைப்பும், படைத்தவனும் வேறென்ற இருளை அகற்றி அவ்விரண்டும் ஒன்றுதான் என்ற ஒளியை ஏற்றுவதற்கு நபீகட்கரசர் அவர்களுக்கே 13 ஆண்டுகள் தேவையானதென்றால் மற்றவர்களுக்கு எத்தனையாண்டுகள் தேவையென்று சொல்லவும் வேண்டுமா?
ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபீமாரும் திருக்கலிமா பிரச்சாரம் செய்தவர்கள்தாம். ஆயினும் அவர்களிற் சிலர் மட்டும் அதிகம் “உம்மத்” சமுகத்துடைய நபீமார்களாக இருந்தார்கள். தம்மைக் கொண்டு ஒருவர் கூட ஈமான் – நம்பிக்கை கொள்ளவில்லை என்று மனம் நொந்து இறைவனிடம் முறையிட்ட நபீமாரும் பலர் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் அல்லாஹ்விடம் முறையிடுவதைப் பாருங்கள்.
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا،فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا
இறைவா! எனது கூட்டத்தாரை இராப்பகலாக நான் அழைத்தேன். நான் அழைக்கும் போதெல்லாம் அவர்கள் என்னைவிட்டும் தூரம் போய்விட்டார்கள். (திருக்குர்ஆன் 71 – 5, 6)
“முஃஜிஸத்” எனும் அற்புதம் வழங்கப்பட்ட நபீமார் அற்புதங்களைக் காட்டி அழைத்தும் கூட அவர்களின் அழைப்பை புறக்கனித்துவிட்டார்கள்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமே பெருங்கொண்ட “உம்மத்” உள்ளவர்களாக விளங்கினார்கள். இன்று உலகில் 250 கோடி முஸ்லிம்கள் இருப்பார்களாயின் அவர்கள் அனைவரும் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “உம்மத்”களேயாவர்.
நான் 1979ம் ஆண்டு முதல் இற்றைவரை சுமார் 42 ஆண்டுகளாக முஸ்லிம்களின் மூல மொழியான திருக்கலிமாவிற்கு விளக்கம் சொல்லி வருகிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்! முஃஜிஸத் உடைய நபீமார், “கறாமத்” உள்ள வலீமார் ஆகியோரின் பாதணி தலைமேல் சுமப்பதற்கும் தகுதியற்ற எனது அயராத முயற்சி காரணமாக இவ்வூரிலும், வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் வாழ்கின்ற, ஞானத் தாகமுள்ள பல்லாயிரம் பொது மக்களும், பல நூறு உலமாஉகளும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலையும், மூல மொழி திருக்கலிமாவின் விளக்கத்தையும் அறிந்து உண்மை விசுவாசிகளாகவும், இறைஞானம் பெற்றவர்களாகவும் இருப்பதை நான் காணும் போதும், அறியும் போதும் என் மனம் குளிர்வது எனக்கு நிம்மதி தருகிறது. அதுவே எனக்குப் போதும். அல்ஹம்துலில்லாஹ்!
உலமாஉகள் வழங்கிய “முர்தத் பத்வா”வினால் என்னையும் பல இன்னல்கள் சூழ்ந்து கொண்டாலும், பல சோதனைகள் என்னை ஒடித்து முறித்தாலும் எதிரிகளின் தொல்லைகளால் நான் பல இன்பங்களை இழந்தாலும் கூட அவர்களின் “பத்வா” பல சாதனைகளுக்கு காரணமாயிருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்களின் “பத்வா” இன்றேல் நான் இறைஞானத்திலும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திலும் இந்த அளவு முன்னேறியிருக்க முடியாது. “ஈமான்” என்றால் என்னவென்று அறியாமலிருந்த பலர் அதன் சுவையை அறிந்திருக்க முடியாது. உள்ளூரிலும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பல ஆதரவாளர்கள் உருவாகியிருக்க முடியாது. என்னைக் காணாமலேயே “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை CDயில் கேட்டும், நூல்கள் வாசித்தும் ஆன்மிக ஞான உணர்வால் இழுக்கப்பட்டவர்கள் இருக்க முடியாது,
இந்த வகையில் பத்வா வழங்கினவர்கள், எதிர்த்தவர்கள் அனைவரையும் நான் மறக்க முடியாது. அதேநேரம் அவர்களுக்கு நன்றி சொல்லவும் வேண்டும்.
வாசக நேயர்களே!
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற மூல மொழி திருக்கலிமாவின் மூன்று வகைப் பொருளில் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை என்ற பொருள் வலிந்துரையோடு சம்பந்தப்பட்ட பொருளாகும். இப்பொருள் எந்த வகையிலும் திருக்லிமாவுக்கு பொருந்தாது.
வலிந்துரையின்றிப் பொருள் விளங்கப்படுகின்ற ஒரு “முஹ்கம்” ஆன வசனத்துக்கு அதற்குரிய நேரடிப் பொருள் கொள்வதால் எந்த ஒரு சிக்கலும், முரண்பாடும் ஏற்படவில்லையானால் அதற்கு ஏன் வலிந்துரை கொடுக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன?
வணக்கத்துக்குரிய நாயன் என்ற வலிந்துரையின்றி அல்லாஹ் அல்லாத “இலாஹ்” தெய்வம் இல்லை என்று பொருள் கொண்டால் அதனால் என்ன சிக்கல் ஏற்படுகிறதென்றும், எதற்கு முரண்பாடாகிறதென்றும் கூற வேண்டும்.
تحويل المعنى الظاهر لعبارة إلى المعنى الآخر من غير ضرورة لا يجوز
ஒரு வசனம் தருகின்ற வெளிரங்கமான பொருளை அவசியமின்றி வேறொரு பொருளுக்கு மாற்றுவது கூடாது.
திருக்கலிமாவில் لا إله லா இலாஹ என்ற வசனத்தின் நேரடிப் பொருள் எந்த “இலாஹ்” – எந்த தெய்வமும் இல்லை என்றிருக்கும் நிலையில் அந்த நேரடிப் பொருளைவிட்டு வணக்கத்துக்குரியவன் என்று குறிப்பிடுவது ஏன்? இதற்கான காரணம் என்ன? வலிந்துரை கொண்டுதான் மூல மொழிக்கு பொருள் கொள்ள வேண்டுமென்று அடம் பிடிப்போர் சரியான ஆதாரம் கூற வேண்டும்.
உலமாஉகளே அவசரப்படாதீர்கள்!
அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை என்றும், இருப்பவை எல்லாம் அவனே என்றும் நான் சொல்வதால் அவசரப்பட்டு மீண்டும் ஒரு “பித்னா” குழப்பத்தை ஏற்படுத்திவிடாமலும், ஐயோ! ஆண்டவனே! என்று தலையில் கைவைத்து இதென்ன புதுமை? இப்படியும் ஒரு தத்துவமா? இல்லை. இது பொய். இஸ்லாம் இவ்வாறு சொல்லவில்லை என்று எவரும் சீறி எழாமல் தமது சிந்தனைக் கதவைத் திறக்க வேண்டுமென்றும், அல்லது என் கதவைத் தட்ட வேண்டுமென்றும், “ஷரீஆ”வின் அடுத்தபடிகளான தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான இறைஞானத்துறையில் ஆழமான அறிவுள்ளவர்களை அணுகி அவர்களிடமும் கேட்க வேண்டுமென்றும், அல்லது ஆரிபீன்களான ஞான மகான்களால் எழுதப்பட்ட “இல்முத் தஸவ்வுப்”, “இல்முல் ஹகாயிக்”, “இல்முல் ஹிக்மத்” முதலான நூல்களை நுகரவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
தொடரும்.