“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 24

“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் விளக்கம்!

இஸ்லாமிய மூல மொழி திருக்கலிமாவின் தத்துவம் பகிரங்கமாக சொல்லப்பட வேண்டியதா? மறைக்கப்பட வேண்டியதா?


“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா தருகின்ற “அல்லாஹ் அல்லாத, அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை, வேறு எதுவும் இல்லை” என்ற தத்துவம் மக்கள் மத்தியில் சொல்லப்பட வேண்டியதா? மறைக்கப்பட வேண்டியதா? இதன் தீர்வு என்ன?

தீர்வு:

கட்டாயம் சொல்லப்பட வேண்டும். இதற்கு எவராலும் அசைக்க முடியாத ஆதாரம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அபூ குபைஸ் மலையில் ஏறி நின்று சொன்னதேயாகும். அவர்கள் மலையேறிச் சொன்னதற்கான காரணம் அது பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய வேண்டிய தத்துவம் என்பதற்காகவேதான். இது கூட விளங்காமலும், விளக்கம் கூற முடியாமலுமிருந்து கொண்டு அதை பகிரங்கமாகச் சொல்லக் கூடாதென்று அர்த்தமில்லாமல் உளறுவோரை நாம் என்ன செய்வது? குன்றின் மேல் தீபம் போலும், உள்ளங்கை நெல்லிக் கனி போலும் தெளிவான ஓர் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது மனிதாபிமானமாகுமா?

திருக்கலிமாவுக்கு நேரடிப் பொருள் சொல்வது பிழை என்பது பெருமானார் அவர்களை மறைமுகமாக ஆட்சேபிப்பது போன்றதேயாகும். அல்லாஹ் என்னைப் பாதுகாத்துக் கொள்வானாக!

திருக்கலிமாவின் நேரடிப் பொருள் சிக்கலானது, பிரச்சினைக்குரியது, முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடியதென்றிருந்தால் எல்லாமறிந்த பெருமானார் அவர்களுக்கு இந்த விடயம் விளங்காமற் போயிற்றென்று கூற வலிந்துரை வாதிகள் நினைக்கிறார்களா? மஆதல்லாஹ்! பதவி மோகம் எதையும் செய்யும்.

இவ் ஆதாரம் ஒரு புறமிருக்க, “தீன்” மார்க்கம் என்பது பகிரங்கமாகச் சொல்லப்பட வேண்டியதென்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு கூட வலிந்துரை வாதிகளின் கருத்து முரண்படுகிறது.

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ

அல்லாஹ் எத்தகையவனென்றால் தனது தூதரை நேர்வழி கொண்டும், சத்திய மார்க்கம் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்துக் கொண்டிருப்போர் வெறுத்த போதிலும் உலகிலுள்ள எல்லா மார்க்கங்களையும் விட அதை பிரகடனப்படுத்துவதற்காக அவ்வாறு செய்தான். (திருக்குர்ஆன் 09 – 33)

இத்திரு வசனத்தில் لِيُظْهِرَهُ “லியுழ்ஹிறஹூ” என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதைப் பிரித்துப் பார்த்தால் لِيُظْهِرَ – هُ இதன் விளக்கமான பொருள் அவர் – அதை வெளிப்படுத்துவதற்காக என்று வரும். அதாவது முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சத்திய மார்க்கத்தை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் அவர்களை அனுப்பி வைத்தான்.

ليظهره – என்ற இந்த வசனத்திற்கு ஒரு தெளிவை ஏற்படுத்துவதாயின் இச் சொல்லுக்கு பின்னால் لَا لِيُسِرَّهُ அதை இரகசியமாக்கி வைப்பதற்காக அல்ல என்று ஒரு “தப்ஸீர்” விளக்கம் வருமாயின் அது தெளிவுக்கு வழி வகுக்கும்.

دين الحق – சத்திய மார்க்கம் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா என்று இஸ்லாமிய இறை ஞானிகளாலும், ஸூபீ மகான்களாலும் கூறப்படுகின்ற நான்கு வழிகளையும் உள்வாங்கிய ஒன்றாகும்.

திருக்கலிமா மூல மொழி என்பது மேற்கண்ட விளக்கத்தின்படி “தீன்” என்ற சொல்லில் அடங்கிவிடும். எனவே, “தீன்” மார்க்கத்தைப் பிரகடனப் படுத்துதல் என்பது திருக்கலிமாவைப் பிரகடனம் செய்வதேயாகும்.

திருக்கலிமாவின் நேரடிப் பொருள் பிரகடனப் படுத்தப்பட வேண்டுமென்பதற்கு மேற்கண்ட ஆதாரம் இதுவும் ஓர் ஆதாரமேதான்.

வலிந்துரை மகான்கள் இதற்கும், அதற்கும் தெளிவான விடை தர வேண்டும்!

மூல மொழி “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் தருகின்ற நேரடிப் பொருள் அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்பதாகும். அல்லது எந்த வஸ்த்துவும் இல்லை என்பதாகும்.

இதற்கு மாறாக குறித்த வசனத்திற்கு (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை) என்று பொருள் கொள்வது முற்றிலும் முரணானதும், பிழையானதுமாகும்.

இக்கட்டுரையை நுகர்வோர் நாம் கூறும் கருத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தவறாகப் புரிந்து தடுமாற வேண்டாமென்றும், பிறரை தடுமாற வைக்க வேண்டாம் என்றும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று திருக்கலிமாவுக்கு சொல்லப்படுகின்ற மேற்கண்ட பொருளில் இரண்டு பிழைகள் இருக்கின்றன. அவ்விரண்டையும் இத் தொடரின் இறுதியில் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்! அல்லது அடுத்த தொடரில் எழுதுவேன்.

அதற்கு முன் கலிமாவின் நேரடிப் பொருளான, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தருகின்ற “அல்லாஹ்வுக்கு வேறான, அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை” என்ற கருத்தை பகிரங்கமாகப் பேசலாம், அதற்கு மார்க்கத்தில் தடை இல்லை என்பதை இங்கு மீண்டும் குறிப்பிடுகிறேன்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருக்கலிமாவின் நேரடிப் பொருள் சொல்வதற்கு எத்தடையும் இஸ்லாம் மார்க்கத்தில் கிடையாது. மாறாக அதற்கு சிலர் கற்பனை செய்து கொண்ட “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு எந்த நாயனும் இல்லை” என்ற பொருளை எங்கும் எவரும் சொல்லக் கூடாது. இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கத்தில் தடையுண்டேயன்றி அதன் நேரடிப் பொருள் சொல்வதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. அது மட்டுமல்ல. அதன் நேரடிப் பொருள் சொல்வதே மார்க்கமுமாகும்.

அல்லாஹ்வும், அஹ்மத் எங்கள் கோமானும் சொன்ன வசனத்திற்கு நேரடிப் பொருள் கூறாமல் அதற்கு கையாலும், மடியாலும் வலிந்துரை செய்தும், கற்பனை பண்ணியும் பொய் சொல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இது திருக்கலிமாவில் கை வைத்ததாகிவிடும்.

மூல மொழியின் நேரடிப் பொருள் கூற யாரும் பயப்படத் தேவையில்லை.

ஒரு வசனத்திற்கு அதற்கான நேரடிப் பொருள் சொல்வதால் ஏதாவது சிக்கல், அல்லது முரண்பாடு ஏற்பட்டால் மட்டுமே வலிந்துரையின் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும். இன்றேல் ஒரு வலிந்துரையும் தேவையில்லை.

வலிந்துரைவாதிகளே! “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் மூல மொழிக்கு அதன் நேரடிப் பொருளான “அல்லாஹ் அல்லாத அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்றோ அல்லது “எதுவுமே இல்லை” என்றோ பொருள் சொல்வதால் மார்க்கத்துக்கு என்ன முரண்பாடு ஏற்படுகிறது? அல்லது வேறென்ன சிக்கல் ஏற்படுகிறதென்று வலிந்துரை வாதிகளை நான் கேட்கிறேன்.

மூல மொழியின் நேரடிப் பொருள் மார்க்கத்துக்கு முரணாகுமென்றிருந்தால் அல்லாஹ் அந்த வசனத்தைக் கூறாமல் வேறு வசனம் சொல்லியிருப்பான்.

வலிந்துரைவாதிகள் பலரிடம் உங்களின் வலிந்துரைக்கு நியாயமான காரணம் என்னவென்று கேட்டால் உரிய பதில் கூறாமல் – கூறத் தெரியாமல் தமது திருட்டுப் புத்தியால் கேள்வி கேட்டவனை பைத்தியக்காரனாக்க முனைகிறார்கள். ஏன் இந்த விதண்டாவாதமோ? ஏன் இந்த பிடிவாதமோ?

தொடரும்…