“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 25

“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் விளக்கம்!

خَيْرُ الْقُرُوْنِ قَرْنِيْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ يَفْشُو الْكَذِبُ،

நூற்றாண்டுகளில் சிறந்தது எனது நூற்றாண்டு. பின்பு அதையடுத்த நூற்றாண்டு. பின்பு அதையடுத்த நூற்றாண்டு. பின்னர் பொய் பரவும் என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். – நபீ மொழி –

மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் நூற்றாண்டையும், அதையடுத்த நூற்றாண்டையும், அதையடுத்த நூற்றாண்டையும் 300 நூற்றாண்டுகள் சிறந்த நூற்றாண்டுகள் என்றும், அதன் பின் பொய் பரவும் என்றும் கூறியுள்ளார்கள்.

இது ஒரு தீர்க்க தரிசன அறிவிப்பாகும். இது நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் திரு வாய் மூலம் வெளியான வசனமாயினும்

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

அண்ணலெம்பிரான் தங்களின் விருப்பத்தின் படி பேசமாட்டார்கள். பேசினால் அது “வஹீ”யாகவே இருக்கும் என்ற திருமறை வசனத்தின் படி அவ்வசனத்திற்குரியவன் அல்லாஹ்தான். இதில் மாற்றமில்லை. இது ஒரு போதும் பொய்யாக இருக்காது.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் நூற்றாண்டையும், அதைத் தொடர்ந்த இரண்டு நூற்றாண்டுகளையும் நல்ல நூற்றாண்டுகள் என்று கூறி பின்பு பொய் பரவும் என்று கூறியுள்ளார்கள்.

இந்த அமுத வாக்கின் படி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டிலும், அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளிலும் மொத்தம் 300 வருடங்களிலும் பொய் பரவவில்லையென்றும், அதன் பிறகுதான் அதாவது நான்காம் நூற்றாண்டிலிருந்துதான் பொய் பரவும் என்றும் கூறியுள்ளார்கள்.

நபீயவர்களின் அமுத வாக்கு பொய்யுமில்லை. அதில் தவறுமில்லை. அது இறையறிவிப்பேயன்றி வேறில்லை.

நபீ பெருமான் குறிப்பிட்ட 300 ஆண்டுகளும் பொய்யில்லாத அல்லது பொய் பரவாத ஆண்டுகள் என்பது தெரிகிறது.

கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னது சரிதான். ஆயினும் நாம் அதை தவறாக விளங்கிவிடக் கூடாது.

நான் ஆய்வு செய்த வகையிலும், இறை ஞானிகளிற் பலரை நான் நேரில் கேட்ட வகையிலும் அவர்கள் கூறிய கருத்தை இங்கு தருகிறேன்.

நபீ பெருமான் வாழ்ந்த நூற்றாண்டிலும், அதையடுத்த இரு நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தவர்களில் எவரும் பொய் சொல்லாமலேயே வாழ்ந்தார்கள் என்பது கருத்தல்ல.

மூன்று நூற்றாண்டிலும் உலக விவகாரங்களில் பொய் சொல்பவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. இது நிதர்சனமான உண்மையாகும். இதை மறுக்க முடியாது.

குறித்த மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த மக்கள் உலக விவகாரத்தில் பொய் சொல்லிக் கொண்டுதான் இருந்துள்ளார்கள்.

அவ்வாறாயின் நபீ பெருமான் எதைக் கருவாகக் கொண்டு அவ்வாறு சொன்னார்கள் என்பதை சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும் ஆய்வு செய்த வகையில் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் மூல மொழியான திருக்கலிமாவுக்கு நேரடிப் பொருள் கூறுவதில்தான் பொய் பரவும் என்று முடிவு செய்துள்ளார்கள்.

மூன்று நூற்றாண்டுகளிலுமில்லாதிருந்த இந்த மாற்றம் திருக்கலிமாவின் பொருளில் பொய் சொல்லுதல் ஏன் ஏற்பட்டது? இதற்கான காரணம் என்ன? என்பது பற்றியும் ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளார்கள்.

சிந்தனைக்காக அவற்றில் சில காரணங்கள் கூறுகிறேன்.

பெருமானார் வாழ்ந்த நூற்றாண்டில் அவர்களும் உயிருடன் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு நேரில் கண்டு “ஈமான்” நம்பிய தோழர்களும் இருந்தார்கள். நேரில் காணாது போனாலும் அவர்களை நம்பினவர்களும் இருந்தார்கள். இதனால் மூல மொழியாம் திருக்கலிமாவில் – அதன் நேரடிப் பொருளில் மாற்றம் ஏற்படவில்லை. ஏற்பட வாய்யப்பில்லாமற் போயிற்று. அன்று அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் அறபீகளாகவே இருந்தனர். இதனாலும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற மூல மொழியின் வசன அமைப்பு அனைவரும் புரியக் கூடிய வகையில் இருந்ததினாலும் அவர்கள் அனைவரும் திருக்கலிமாவின் நேரடிப் பொருளை சாதாரணமாக எல்லோருமே அறிந்திருந்தார்கள்.

இத்தகைய காரணங்களால் திருக்கலிமாவின் நேரடிப் பொருளில் எந்த மாற்றமும் இடம் பெறவில்லை. இந்த நிலையிலேயே 300 ஆண்டுகள் கடந்து விட்டன.

திருக்கலிமாவுக்கு (அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமுமில்லை, எந்த வஸ்த்துவுமில்லை) எனும் ஸூபிஸ ஞானம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு எதிரான, முரணான கருத்து திருக்கலிமாவுக்குச் சொல்லப்படவில்லை.

குறித்த முன்னூறாண்டுகளும் நபீ தோழர்கள், அவர்களைக் கண்ட “தாபியீன்” தொடர்ந்தவர்கள், அவர்களைக் கண்ட “தபஉத் தாபியீன்” தொடர்ந்தவர்களைத் தொடர்ந்தவர்கள் வாழ்ந்த காலமென்று கூறலாம்.

முன்னூறு ஆண்டுகளிலும் மேற்கண்ட மகான்கள், ஈமானில் வலுவான சிங்கங்கள் இருந்ததால் திருக்கலிமாவில் புரட்டல், தில்லுமுல்லு, வலிந்துரை எதுவுமே நடைபெறவில்லை.

முன்னூறாண்டுகள் கடந்ததும் அறபு மக்களுடன் அறபிகள் அல்லாத வேறு மொழியுடையவர்கள் கலந்து பழக வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கா, மதீனா, ஜித்தா முதலான இடங்களுக்கு வியாபார நோக்கத்தோடும், வேறு நோக்கங்களோடும் பயணிக்க வேண்டிய தேவை “அஜமீ”களுக்கு – அறபு தெரியாத வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டது.

முன்னூறாண்டுகளைக் கடந்த கால கட்டத்தில் அறபு மக்களும், ஏனைய மொழி பேசும் மக்களும் கலந்து, உறவாடி, உரையாடி நெருங்கும் சூழல் ஏற்படும் போது அறபு நாட்டு முஸ்லிம் வேறு மொழியுடைய முஸ்லிமல்லாதவர்களைக் காணும் போது அவர்களிடையே மார்க்க ரீதியான கொள்கை விளக்கம் தொடர்பாக பேசுகையில் எவ்வாறு பேசியிருப்பார்? என்பதை நான் சொல்லிக் காட்டுகிறேன்.

எனதூரான காத்தான்குடியைக் கடந்தால் ஆரையம்பதி, படுவான்கரை போன்ற பல இந்துக்கள் வாழும் பல ஊர்கள் உள்ளன.

அவற்றில் ஓர் ஊருக்கே ஆரம்ப காலத்தில் அறபு மக்களிற் சிலர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல நாடுகளைச் சேர்ந்த, பல உடலமைப்புள்ள, பல நிறத்திலுள்ள முஸ்லிம்களாக இருந்தனர். இதை நம்பத் தகுந்த ஆதாரமின்றி மறுக்க முடியாது.

அங்கு வந்த முஸ்லிம் அறபிகள் இந்துக்களில் “முக்குவர்” இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவிடம் போய் சேர்ந்துள்ளார்கள்.

அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். கோவில்கள் என்று பெருங் கட்டடமாக இல்லாது போனாலும் சிறிய அளவிளான அவர்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் இல்லாமலிருந்திருக்க முடியாது.

வந்த அறிபிகளுக்கு அங்குள்ளவர்களின் மொழியும், அவர்களின் வணக்க வழிபாட்டு முறைகளும், பழக்க வழக்கங்களும் வியப்பாகவும், வேதனையாகவும் இருந்திருக்கும்.

அங்கு வந்த அறபிகள் தமிழ் மொழியை ஓரளவு பேசக் கற்றுக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுத்து, அதன் பொருளையும் சொல்லிக் கொடுக்கும் போது அந்த மக்களுக்கு அது விளங்கியும் இருக்கலாம். விளங்காமலும் இருக்கலாம். விக்கிரக வணக்கம், சிலை வணக்கம் கூடாதென்று அந்த அறபிகள் சொல்வதாயிருந்தாலும் கூட மொழியைக் கொண்டு மட்டும் விக்கிரக வணக்கம் கூடாதென்று சொல்வதுடன் அவர்களை அவர்களின் வணக்கத்தலங்களுக்கு அழைத்துச் சென்று விக்கிரகங்களை உடைத்து தகர்த்து ஏதோ ஒரு வகையில்தான் திருக்கலிமாவின் பொருளைப் புரிய வைத்திருக்க முடியும்.

அறபிகள் இலங்கைக்கு வந்தது போல் வேறு அறபு மொழி தெரியாதவர்கள் வாழ்கின்ற நாடுகளுக்கும் அறபிகள் சென்று அங்குள்ளவர்களுக்கு எந்த மொழியிலேனும் திருக்கலிமாவின் பொருளை சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.

அறபிகள் அறபு தெரியாதவர்களுடன் கலந்து வாழும் சூழல் ஏற்பட்டது திருக்கலிமாவின் நேரடிப் பொருளில் புரட்டல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு.

திருக்கலிமாவின் நேரடிப் பொருளில் புரட்டல் ஏற்பட்டதற்கு நான் கூறும் காரணமில்லையென்று யாராவது சொல்ல நினைத்தால் அதற்கான காரணத்தை அவர் கூறட்டும்.

காரணம் இருக்கட்டும். அல்லது இல்லாமற் போகட்டும். திருக்கலிமாவின் நேரடிப் பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதென்பதை பகுத்தறிவு ரீதியாகவும் மறுக்க முடியாது. அதாவது யுக்திப் பிரமாணங்களாலும் மறுக்க முடியாது. சுருதிப் பிரமாணங்களாலும் மறுக்க முடியாது.

முல மொழியில் முதல் வரும் “லா” பற்றிய விளக்கம் தொடரும்…