தொடர் – 26
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் விளக்கம்!
(இத்தொடர் மிகவும் கவனத்தோடும், சிந்தனையோடும் வாசிக்க வேண்டிய தொடராகும்)
(லா – இலாஹ – இல்லா – அல்லாஹு)
இந்த நான்கு சொற்களினாலும், 12 எழுத்துக்களினாலும் ஆனதே திருக்கலிமா எனும் மூல மொழி.
12 எழுத்துக்களாகத் தோற்றுவது மூன்று எழுத்துக்களான அலிப், லாம், ஹே என்பவைதான். أَ لَ هَ – “அலஹ” என்ற மூன்றெழுத்தின் ரகசியம் என்னவெனில் உலகிலுள்ள அறிஞர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மூல மொழியானது நரக நெருப்பில் விழுந்து எரியாமல் மக்களைக் காக்கும் அருமருந்து.
இத்திரு வசனத்தின் தொடக்கமே “இல்லை” என்பதுதான். “லா” என்றால் இல்லை என்று பொருள்.
இத்திரு வசனம் மறைமுகமாக ஒரு கேள்விக்கு பதிலாக வந்தது போல் உள்ளது. அல்லாஹ் அல்லாத தெய்வம் உண்டா? என்ற கேள்வியின் பதில் போல் இது அமைந்திருக்கிறது.
உலகிலுள்ள ஒவ்வொரு வஸ்த்தும் – அதாவது உலகமே மனிதனிடம் அல்லாஹ் அல்லாத தெய்வம் உண்டா? அல்லாஹ் அல்லாத ஏதாவதொன்று உள்ளதா? என்று கேட்க, நாம் அதற்கு அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை என்று கூறும் பாணியில் இந்த மொழி அமைந்திருப்பது “அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை” என்பதையே காட்டுகிறது.
ஒருவன் ஒரு பள்ளிவாயலுக்கு முன்னால் நின்று கொண்டு பள்ளிவாயலில் யாராவது இருக்கின்றார்களா? என்று அவனிடம் எவரும் கேட்காத நிலையில் அவன் தானாக لَا رَجُلَ فِى الْمَسْجِد பள்ளிவாயலில் எவருமில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது போன்றதே திருக்கலிமாவின் அமைப்பாகும். அதாவது இயற்கையே இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.
உலகிலுள்ள ஒவ்வொரு வஸ்த்துவும் அல்லாஹ்வைத் துதிப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. அந்த வஸ்த்து எவ்வாறு துதிக்கின்றதென்பது எவருக்கும் தெரியாது. எனினும் பல வஸ்த்துக்கள் அல்லாஹ்வை துதித்ததை பல பெரியார்கள் செவிமடுத்ததற்கு வரலாறுண்டு.
படைப்புக்களில் ஒவ்வொன்றும் இறைவனைத் துதிக்கின்றதென்றால் ஒவ்வொன்றும் திருக்கலிமாவை மொழிகிறதென்றும், لَسْتُ غَيْرَ اللهِ “தான் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றதென்றும் கஷ்பு, இல்ஹாம் உள்ள வலீமார்கள் கூறுகின்றார்கள். வலீமாரின் கூற்று “இல்ஹாம்”, “கஷ்பு” எனும் அறிவோடு சம்பந்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
லா لَا என்ற சொல்.
மூலமொழியான திருக்கலிமாவின் முதற் சொல் “லா” இல்லை என்பதேயாகும்.
இந்த “லா” எப்போதும் இல்லை என்ற பொருளையே தரும். இது மொழியிலக்கணத்தில் இரு பெயர்களால் அழைக்கப்படும். لا التبرئة என்றும், لا الَّتِيْ لِنَفْيِ الْجِنْسِ என்றும் சொல்லப்படும்.
“தப்ரிஅத்” என்ற சொல்லுக்கு நீக்கி வைத்தல் என்று பொருள் வரும். உதாரணமாக لَا رَجُلَ فِى الدَّارِ என்றால் வீட்டில் யாருமே இல்லை, ஒரு மனிதனும் இல்லை என்ற கருத்தை தரும்.
இந்த “லா”வுக்கு لا الَّتِيْ لِنَفْيِ الْجِنْسِ என்றும் சொல்வதுண்டு. பெயர்கள் இரண்டாயினும் பொருளிலும், வேலையிலும் இரண்டும் ஒன்றுதான். عَمَلَ إِنَّ اجْعَلْ لِلَا فِى نَكِرَةٍ இந்த “லா” “நகிறா” குறிப்பில்லாத பெயர்ச் சொல்லுடன் இணைந்து إِنَّ “இன்ன” செய்வதுபோல் “இஸ்மு”க்கு “நஸ்பு” செய்யும், “கபறு”க்கு “றப்உ” செய்யும்.
இந்த “லா” பற்றிய விபரம் அறபுக் கல்லூரியில் மொழியிலக்கணம் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு நன்றாகத் தெரியும். இது பற்றி அறிவதற்கு கெய்ரோவிலுள்ள “அல்அஸ்ஹர்” பல்கலைக் கழகம் போகத் தேவையில்லை. காத்தான்குடியிலேயே இது பற்றித் தெரிந்தவர்கள் பலருளர்.
இரண்டு பெயர்களுடைய இந்த “லா”வுக்கு பின்னால் வருகின்ற சொல் “நகிறா” குறிப்பற்றதாக – தனி ஒன்றை மட்டும் குறிக்காமல் பொதுவாக கூறப்பட்ட சொல் காட்டும் அனைத்தையும் உள்வாங்கியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக لَا رَجُلَ فِى الدَّارِ என்பது போன்று. இதன் பொருள் “வீட்டில் எந்த மனிதனும் – ஆணும் இல்லை” என்பதாகும்.
“லா”வுக்குப் பின்னால் வந்துள்ள رَجُلٌ என்ற சொல் குறிப்பற்றதாக இருக்க வேண்டுமென்ற விதிப்படி வந்துள்ளது. رَجُلٌ என்ற சொல்லை மனிதர்களில் எந்த ஆணுக்கும் பயன்படுத்தலாம். அது ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல. எவருக்கும் இயற் பெயரானதுமல்ல.
“லா”வுக்கு பின்னால் வருகின்ற சொல் “நகிறா” குறிப்பற்றதாக இருக்க வேண்டுமென்பது மிகப் பிரதான நிபந்தனையாகும். இச் சொல் எதைக் குறிக்கிறதோ அது போன்ற அனைத்தையும் அது உள்வாங்கும் சொல்லாக வந்துள்ளது.
உதாரணமாக لَا رَجُلَ فِى الدَّارِ வீட்டில் எந்த மனிதனும் இல்லை என்ற இவ் உதாரணத்தில் “லா” என்ற சொல்லுக்குப் பின்னால் வந்துள்ள رَجُلٌ என்ற சொல் ஒருவரை மட்டும் குறிக்காமல் “நகிறா” பொதுவாக ஆண்களில் அனைவரையும் உள்வாங்கும் சொல்லாகும்.
இதன்படி لَا رَجُلَ என்ற வசனத்துக்கு அது “நகிறா” குறிப்பற்றது என்ற காரணத்தால் எந்த ஒரு மனிதனும் இல்லையென்று பொதுவாகச் சொல்கிறோம்.
வீட்டில் எந்தவொரு மனிதனும் இல்லை என்றுதான் சட்டப்படி பொருள் கூற வேண்டும். ஆயினுமிவ்வசனம் நெட்டையன், கட்டையன், தலைப்பாகை அணிந்த, அணியாத அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும். இதன்படி இந்த வசனத்திற்கு வீட்டில் எவருமில்லை. நெட்டையன், கட்டையன், தலைப்பாகை அணிந்தவன், அணியாதவன் எவருமில்லை என்று கருத்து வரும்.
இங்கு கவனிக்க வேண்டும்.
“லா”வுக்கு மேலே சொன்ன விபரப்படியும், விதிப்படியும் لا رجل فى الدار என்ற வசனத்துக்கு வீட்டில் எந்த ஒருவரும் இல்லையென்று பொருள் கூறாமல் வீட்டில் நெட்டையான எந்த மனிதனுமில்லை என்றோ, வீட்டில் கட்டையான எந்த மனிதனும் இல்லையென்றோ, வீட்டில் தலைப்பாகை அணிந்த எந்த ஒரு மனிதனுமில்லையென்றோ, வீட்டில் தலைப்பாகை அணியாத எந்தவொரு மனிதனும் இல்லை என்றோ பொருள் கூற முடியாது. அவ்வாறு பொருள் கொள்வதற்கு எந்தச் சட்டமும் கிடையாது. அதேபோல் எந்த வழியுமே இல்லை.
திருக்கலிமாவில் “லா” என்ற சொல்லுக்கு பின்னால் வந்துள்ள “இலாஹ்” என்ற சொல் رَجُلٌ என்ற சொல் போல் “நகிறா” குறிப்பைக் காட்டாத ஒன்றுதான். சட்டப்படிதான் வசனம் வந்துள்ளது. இதற்கு முறைப்படி, சட்டப்படி பொருள் சொல்வதாயின் “லா இலாஹ” எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று பொதுவாகத்தான் பொருள் கூறவேண்டுமே தவிர ஏதாவது குறிப்பைக் காட்டக் கூடிய சொல்லைச் சேர்த்துப் பொருள் சொல்வது மொழியிலக்கணச் சட்டத்திற்கு பிழையாகிவிடுவது மட்டுமன்றி திருக்கலிமா அருளப்பட்ட இலட்சியம் கூட இல்லாமற் போய்விடும்.
இக்காலத்தில் திருக்கலிமாவுக்கு சொல்லப்படுகின்ற “வணக்கத்திற்குரிய நாயன் – தெய்வம் அல்லாஹ் தவிர வேறெந்த நாயனுமில்லை” என்று பொருள் சொல்வதால் பெரும் முரண்பாடு ஏற்படுகின்றது.
“வணக்கத்திற்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்ற போலிப் பொருள் ஏற்படுத்துகின்ற சிக்கலும், முரண்பாடும் என்னவெனில் வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் இல்லையென்றால் வணக்கத்துக்குத் தகுதியில்லாத நாயன்கள், தெய்வங்கள் உள்ளன என்ற கருத்து வந்துவிடும்.
இது எது போலென்றால் لا رجل فى الدار வீட்டில் எந்த ஒரு மனிதனும் இல்லைஎன்ற இந்த வசனத்துக்கு இதில் வராத مُعَمَّمٌ தலைப்பாகை கட்டிய என்ற ஒரு சொல்லைச் சேர்ப்பது சட்ட விரோதமாகும். ஏனெனில் “லா”வுக்கு பின்னால் வருகின்ற சொல் அதுபோன்ற, அனைத்தையும் உள்வாங்க வேண்டும். இந்த வசனம் அனைத்து மனிதர்களையும் உள்வாங்கவில்லை. வீட்டில் தலைப்பாகை கட்டிய மனிதன் தவிர வேறு மனிதர்கள் உள்ளார்கள் என்று சொன்னது போலாகிவிடும்.
இப்போது “லா”வுக்குப் பின்னால் வந்த சொல்லுக்கு ஒரு வலிந்துரை வைத்து வசனத்திற்கு பொருள் சொன்னால் வீட்டில் தலைப்பாகை கட்டிய எந்த மனிதனும் இல்லை என்றால் தலைப்பாகை கட்டாத மனிதர்கள் வீட்டில் உள்ளார்கள் என்ற கருத்து வநதுவிடும்.
இதன்படி “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவுக்கு لا رجل فى الدار معمم வீட்டில் தலைப்பாகை அணிந்த எந்த ஒரு மனிதனும் இல்லை என்று பொருள் சொன்னது போல் பொருள் சொன்னால் வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர யாருமில்லையென்றால் வணக்கத்துக்குத் தகுதியில்லாத நாயன் உண்டு என்ற கருத்து வரும். இவ்வாறு கருத்து வருவது எதார்த்தத்திற்கும், சத்தியத்திற்கும் முரணானதாகும். அதேபோல் மொழியிலக்கணத்திற்கும் பிழையானதாகும்.
மொழியிலக்கணத்திற்கு எந்த வகையில் பிழையாகுமென்றால் நான் ஏற்கனவே எழுதியது போல் “லா”வுக்கு பின்னால் வருவது “நகிறா” எந்தக் குறிப்பும் அற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறாயின் எந்த ஒரு வலிந்துரையுமின்றி அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்று பொருள் கூற வேண்டும்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தில் வந்துள்ள “இலாஹ்” என்ற சொல்லுக்கு “வணக்கத்திற்குத் தகுதியான” என்ற பொருள் கொடுப்பதால் “லா”வுக்கு பின்னாலுள்ளது “நகிறா” எந்த ஒரு குறிப்பற்றதாயும் இருக்க வேண்டும் என்ற பொது விதிக்கு இது முரண்படுகின்றது.
எனவே, திருக்கலிமாவில் “லா”வுக்கு பின்னால் வந்துள்ள “இலாஹ்” என்ற சொல்லுக்கு مُسْتَحِقٌّ வணக்கத்திற்குத் தகுதியானவன் என்ற ஓர் குறிப்பை கொடுப்பதன் மூலம் அது மொழியிலக்கணச் சட்டத்துக்கு பிழையாவது போல் அவ்வாறு வலிந்துரை கொண்டு பொருள் கொள்வது திருக்கலிமா அருளப்பட்ட இலட்சியத்துக்கே முரணாகிவிடுகின்றது.
இன்றுள்ளவர்கள் திருக்கலிமாவுக்கு பொருள் சொல்வது போல் சொன்னால் அது திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படும். ஏனெனில் வணக்கத்துக்கு தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை என்றால் வணக்கத்துக்குத் தகுதியில்லாத நாயன்மார் – இலாஹுகள் இருக்கின்றன என்ற கருத்து வரும்.
இக்கருத்து لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا – வானத்திலும், பூமியிலும் அல்லலாஹ் தவிர வேறு “இலாஹ்” இருந்தால் வானமும், பூமியும் கெட்டுப் போகும் என்ற திருமறை வசனத்திற்கு முரணாகிவிடும்.
இத்தொடரும், இதற்கு முந்தின தொடரும், இனி வரும் தொடரும் மிக அவதானத்தோடும், சிந்தனையோடும் வாசிக்க வேண்டிய தொடர்களாகும்.
எந்த ஓர் தொடராயினும் அதை தெளிவு ஏற்படும் வரை திரும்பத் திரும்ப வாசிப்பது நல்லது.
என் ஆசை மக்கள் விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதேயன்றி என்னுடன் இணைந்து என் கையை பலப்படுத்த வேண்டுமென்பதல்ல.
தொடரும்…