தொடர் – 27
இஸ்லாமின் மூல மொழியான “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவுக்கு அதற்குரிய நேரடிப் பொருள் கொள்ளாமல் – அதாவது (அல்லாஹ் அல்லாத, அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு வஸ்த்தும் இல்லை) என்று பொருள் கொள்ளாமல், “இலாஹ்” தெய்வம் என்ற சொல்லுக்கு مُسْتَحِقٌّ தகுதியானவன் என்று ஒரு வலிந்துரையை கற்பனை செய்து (வணக்கத்திற்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை) என்று சொல்வது பிழையென்று மேலே சொன்னேன்.
அவ்வாறு சொல்வது பிழை என்பதற்கு பல காரணங்களும் கூறினேன்.
அவற்றில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் திருக்குர்ஆன் வசனங்களில் “முஹ்கம்” ஆன வசனமாதலால் அதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டுமேயன்றி வலிந்துரை ஆகாதென்றும் கூறினேன்.
அது “முஹ்கம்” வசனமாதலால் அதற்கு வலிந்துரையின்றியே பொருள் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தேன்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மட்டும் சொன்னார்களேயன்றி வேறெந்த விளக்கமும் சொல்லவில்லை. வலிந்துரை கொண்டால்தான் அதன் கருத்து சரிவருமென்றிருந்தால் நபீ பெருமான் அவர்கள் அந்த வலிந்துரையுடனேயே அதைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.
“லா”வுக்கு பின்னால் வருவது அதாவது அதனுடைய “இஸ்ம்” என்பது எந்த ஒரு கலப்புமில்லாத தெளிவான “நகிறா”வாயிருப்பதவசியம் என்ற விதிக்கு அதற்கு வலிந்துரை கொள்வது முரணாகின்றது. ஏனெனில் வலிந்துரை மூலம் அது குறிப்பாகிவிடுகிறது. “நகிறா” குறிப்பற்றது “மஃரிபா” குறிப்பாகிவிடுகிறது.
இவ்வாறு பல காரணங்களால் திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொள்வது பிழையாகிற படியால் அதற்கு வலிந்துரை எதுவுமின்றி நேரடிப் பொருள் கொள்வதே சரியானதாகும். இதுவே நான் வலியுறுத்தி வருகின்ற விடயமுமாகும்.
மேற்கண்ட காரணங்களை விட வலிந்துரை கூடாதென்பதற்கான பிரதான காரணம் என்னவெனில் வலிந்துரை செய்வதன் மூலம் திருக்கலிமா அருளப்பட்ட இலட்சியம் இல்லாமற் போவதாகும்.
ஏனெனில் திருக்கலிமா அருளப்பட்டதற்கான பிரதான காரணம் “இலாஹ்” என்ற பெயரிலுள்ள அனைத்தும், அல்லாஹ்வுக்கு வேறானவையல்ல என்பதை நிறுவுவதும், அவையாவும் அவன் தானானவைதான் என்பதைத் தரிபடுத்துவதுமேயாகும்.
இதுவே திருக்கலிமா அருளப்பட்டதற்கான பிரதான இலட்சியம்.
திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொள்ளுதல் இந்த இலட்சியத்திற்கு முரணானதாகிவிடும். ஏனெனில் இந்த வலிந்துரையின்படி எல்லாத் தெய்வங்களும் “நபீ” இல்லையென்று சொல்லப்படவில்லை. நீக்கப்படவில்லை. மாறாக வணக்கத்துக்குத் தகுதியற்ற தெய்வங்கள் – நாயன்கள் இருக்கின்றன என்ற கருத்து வந்துவிடுகிறது. இது திருக்கலிமா அருளப்பட்ட இலட்சியத்திற்கு மாறானதாகும்.
மேற்கண்ட காரணங்களால் திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொள்ளாமல் பொருள் கொள்ள வேண்டுமென்பது தெளிவாகிறது.
திருக்கலிமாவுக்கு நேரடிப் பொருள் கொள்வோர் பின்வரும் விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டும்.
திருக்கலிமாவிலுள்ள لا إله என்ற வசனத்திற்கு வணக்கத்திற்குத் தகுதியான தெய்வமோ, தகுதியில்லாத தெய்வமோ எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லையென்றும், إِلَّا என்ற சொல்லுக்கு غَيْرُ உடைய பொருளும் கொடுத்து பொருள் கூற வேண்டும். இவ்வாறு கூறினால் “அல்லாஹ்வுக்கு வேறான அல்லது அல்லாஹ் அல்லாத எந்த ஓர் தெய்வமும் இல்லை” என்று பொருள் வரும். இப் பொருள்தான் எந்த ஓர் ஆட்சேபனையுமற்ற பொருளாகும்.
“இல்லா” إِلَّا என்ற சொல்லுக்கு غَيْرُ வேறு அல்லது அல்லாத என்ற பொருள் கொடுக்க வேண்டுமேயன்றி استثناء உடைய பொருள் கொடுக்கக் கூடாது. இன்றுவரை அநேகர் إستثناء உடைய “தவிர” என்ற பொருள் கொடுத்தே சொல்லி வருகின்றார்கள்.
இதுபற்றி இமாம் ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
اتفق النحويون على أنَّ محلّ إِلَّا فى هذه الكلمة محل غير، والتقدير لا إله غير الله، وهو كقول الشاعر،
وكل أخٍ مفارقُه أخوه – لَعَمْرُ أبيكَ إلّا الْفَرْقَدَانِ
والمعنى كل أخ غير الفرقدين فإنّه يفارقه أخوه، وقال تعالى لو كان فيهما آلهةٌ إلا الله لَفَسَدَتَا قالوا التقدير غير الله،
والّذي يدلُّ على صحّةِ ما قلنا هذا أنّا لو حملنا إلّا على الإستثناء لم يكن قولُنا إلّا الله توحيدا مَحْضًا، لأنّه يصير تقديرُ الكلام لا إله يُستثنى عنهم اللهُ فيكون هذا نفيا لآلهةٍ مُسْتَثْنًى عنهم اللهُ، ولا يكون نفيا لآلهةٍ لا يُستثنى عنهم اللهُ، بل عند من يقول بدليل الخطاب يكون إثباتا لذلك، وهو كفرٌ،
فثَبَتَ أنّه لو كانت كلمةُ إلَّا محمولةً على الإستثناء لم يكن قولُنا إلّا الله توحيدا محضا،
ولمّا اجتمعت العقلاء على أنّه يُفيد التوحيد المحضَ وَجَبَ حملُ إلّا على معنى غير، حتّى يصير معنى الكلام لا إله غير الله،
(لوامع البينات، ص 94-95، للإمام فخر الدين الرازي)
இமாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அறபு மொழியில் மேலே கூறியுள்ள சாராம்சத்தை மட்டும் சுருக்கமாக எழுதுகிறேன். இந்த விபரம் அறபுக் கல்லூரியில் மொழியிலக்கணம் படிக்கின்ற மாணவர்களுக்கு மிக முக்கியமான விடயமாகும். அவர்கள் நான் எழுதிக் காட்டிய வரிகளின் விளக்கத்தை தெரிந்து கொள்வார்கள். அல்லது ஹழ்றத்மார்களின் உதவியுடன் புரிந்து கொள்வார்கள்.
சுருக்கம் என்னவெனில் திருக்கலிமாவிலுள்ள “இல்லா” என்ற சொல்லை حرف الإستثناء என்றும், அதன் பின்னாலுள்ள “அல்லாஹ்” என்ற சொல்லை مُسْتَثْنَى என்றும், “லா”வுக்குப் பின்னால் வந்த “இலாஹ்” என்ற சொல்லை مُسْتَثْنَى منه என்றும் வைத்துக் கொண்டு திருக்கலிமாவின் பொருளை ஆராய முற்படுவது பிழை. அறியாமையாகும்.
அவ்வாறு வைத்துக் கொண்டு பொருள் சொன்னால், “வணக்கத்திற்குரிய – தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்றுதான் பொருள் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சொன்னால் ஒரு சிக்கல் ஏற்படும். அதாவது அல்லாஹ் தவிர வணக்கத்துக்குரிய – தகுதியான நாயன் வேறு யாருமில்லை என்று பொருள் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சொன்னால் ஒரு சிக்கல் ஏற்படும். அதாவது அல்லாஹ் தவிர வணக்கத்துக்கு தகுதியான நாயன் வேறு யாருமில்லை என்றால் வணக்கத்துக்கு தகுதியில்லாத நாயன்கள், தெய்வங்கள் நிறைய உள்ளன என்ற கருத்து வந்து விடும். நன்றாக ஆய்வு செய்தால் உண்மை தெளிவாகும்.
அவ்வாறு பொருள் கொண்டால் வணக்கத்துக்கு தகுதியற்ற “இலாஹ்” தெய்வம் இருக்க வேண்டுமென்று – இருக்கும் என்று கருத்து வரும். அவ்வாறு கருத்து வந்தால் வானமும், பூமியும் “பஸாத்” கெட்டுப் போயிருக்கும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதற்கு என்ன பதில்? பின்னால் படித்துப் பார்க்கவும்.
لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا
வானம், பூமி இவ்விரண்டிலும் அல்லாஹ் தவிர தெய்வங்கள் இருக்குமாயின் அவ்விரண்டும் கெட்டுப் போயிருக்கும். (திருக்குர்ஆன் 21-22)
அல்லாஹ் தவிர தெய்வங்கள், இலாஹுகள் இருந்தால் அத் தெய்வங்களுக்கிடையில் போட்டியும், பொறாமையும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு வானமும், பூமியும் நாசமாகியிருக்கும். ஆனால் நாசமாகவில்லை. இதற்கு காரணம் அல்லாஹ் தவிர தெய்வங்கள் இருந்தாலும் கூட அவையாவும் அல்லாஹ்வுக்கு வேறாகாமல் அவை அவன் தானானவையாக இருப்பதாலேயே அவ்விரண்டும் கெட்டுப் போகாமல் உள்ளதென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இத்திருவசனத்திலுள்ள إلا என்ற சொல்லுக்கு غير – உடைய பொருள் கொடுத்து அல்லாஹ் அல்லாத தெய்வங்கள் இருக்குமாயின் அவ்விரண்டும் கெட்டுப் போயிருக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும். அப்படியானால் அல்லாஹ்வான தெய்வங்கள் இருப்பதினால்தான் வானமும், பூமியும் கெட்டுப் போகாமல் இருக்கின்றன என்று விளக்கம் வரும். விளங்கிக் கொள்ளவும் வேண்டும்.
மேற்கண்ட இத்திரு வசனத்திலுள்ள إلا – “இல்லா” என்ற சொல்லுக்கு இஸ்தித்னா – إستثناء உடைய “தவிர” என்ற பொருள் கொடுத்து அவ்விரண்டிலும் – வானத்திலும், பூமியிலும் அல்லாஹ் தவிர வேறு இலாஹுகள் தெய்வங்கள் இருக்குமாயின் அவ்விரண்டும் கெட்டுப் போயிருக்கும் என்று பொருள் வரும். அவ்விரண்டும் கெட்டுப் போயிருக்கவும் வேண்டும். அப்படியொன்றும் நடக்கவில்லை. அவ்விரண்டும் அன்று இருந்தாற் போலவே இப்போதும் இருக்கின்றன.
மேற்கண்ட அல்லாஹ்வின் சொற்படி அல்லாஹ் தவிர தெய்வங்கள் இருந்தால் அவ்விரண்டும் கெட்டுப் போயிருக்க வேண்டும். அல்லாஹ் தவிர எத்தனையோ எண்ணற்ற தெய்வங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் சொற்படி அவ்விரண்டும் கெட்டுப் போகாமலிருப்பதற்குக் காரணம் இருக்கின்ற தெய்வங்கள் யாவும் அல்லாஹ்வான தெய்வங்களாயிருப்பதினால்தான் அவ்விரண்டும் அழியாமலிருக்கின்றன என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
சுருக்கமென்னவெனில் தெய்வங்களாயினும், அல்லது வேறு எதுவாயினும் அல்லாஹ்வுக்கு வோறான அல்லது அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்தும் இல்லவே இல்லை. எந்த ஒரு வஸ்த்தாயினும், காரிருளில் கருங்கடலினுள்ளே வாழும் கட்டெறும்பாயினும், சிற்றெறும்பாயினும் அல்லாஹ்வுக்கு வோறான அல்லது அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்துமில்லை என்று நம்புதலே “ஈமான்” இறைவன் பற்றிய விசுவாசமாகும். இதற்கு மாறான கொள்கை வழிகேடேதான்.
(திருக்கலிமாவில் வந்துள்ள “இல்லா” என்பதற்கு “இஸ்தித்னா” உடைய கருத்து கொடுத்தால் அதாவது “தவிர” என்று கொடுத்தால் அதன் கருத்து அல்லாஹ்வைத் தவிர்த்து உள்ள எந்த இலாஹும் இல்லை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர்க்காமல் உள்ள இலாஹுகள் உள்ளன என்று வரும் – அல்லாஹ் “இஸ்தித்னா” செய்யப்பட்ட இலாஹுகள் இல்லை. அல்லாஹ் “இஸ்தித்னா” செய்யப்படாத இலாஹுகள் உள்ளன என்ற கருத்து வரும். இது கூட “ஜின்ஸ்” அந்த இனத்தையே “நபீ” இல்லாமற் செய்ததாக ஆகாது. ஆகவே திருக்கலிமாவிலுள்ள “இல்லா”வுக்கு தவிர என்று கருத்துக் கொடுத்தால் அது “குப்ர்”ஐயே ஏற்படுத்தும்)
من قال بالغيريّة فقد أثبت لله تعالى نِدًّا وشريكا وكُفُوا من حيث لا يشعر، ولا يعلم ولا يفهم، لأنّ القائم بنفسه هو وجوده تعالى فقط، وما سواه قائم به تعالى، والحقّ تعالى قائم بنفسه أبدا وأزلا، والخلق قائم به تعالى كقيام القميص بالقطن، وقيام المِسمار بالحديد، وقيام الخاتم بالذّهب، فانتفت الإثنينيّةُ، وثبتت العينيّة، فافهموا مقالي وإشاراتي، وادخلوا خاني ولو مرّة فى حياتكم، واشربوا سؤري ولو قطرة،
தொடரும்…