தொடர் – 28
அல்லாஹ் எவ்வாறு வெளியாகியுள்ளான்?
“தாத்” கொண்டா? “ஸிபாத்” எனும் தன்மைகள் கொண்டா?
ஒரு “முஃமின்” அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்று நம்புதல் வேண்டும். அவனுக்கு “தாத்” இல்லையென்று நம்பினவன் அவனை நம்பாதவனேயாவான்.
அல்லாஹ்வின் “தாத்” படைப்புகளின் “தாத்” – “தவாத்” போன்றதல்ல. அதற்கு நிகரில்லை, உருவமில்லை, சடமில்லை, நிறமில்லை, எடையில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதாயின் அவனின் “தாத்” போல் எதுவுமில்லை.
அவனின் “தாத்” பற்றி எவரும் சிந்திக்கவோ, ஆராயவோ வேண்டாமென்று நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் “உம்மத்” சமுகத்தை தடுத்துள்ளார்கள்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَفَكَّرُوا فِي خَلْقِ اللَّهِ، وَلَا تَفَكَّرُوا فِي اللَّهِ
அல்லாஹ்வின் “தாத்” பற்றிச் சிந்திக்காதீர்கள். ஆராயாதீர்கள். ஆயினும் அல்லாஹ்வின் படைப்பு பற்றிச் சிந்தியுங்கள் என்று அருளியுள்ளார்கள்.
இன்னும் பிரதான நபீ தோழர்களிற் பலரும்
اَلْعَجْزُ عَنْ إِدْرَاكِهِ إِدْرَاكٌ – اَلْعَجْزُ عَنْ دَرْكِهِ دَرْكٌ
அவனின் “தாத்” எவ்வாறானதென்று சிந்தித்து அதை அறிய முடியாதென்றும், அதை சூழ்ந்து கொள்ள முடியாதென்றும் முடிவு செய்தலே அவனை அறிவதாகும் என்று கூறியுள்ளார்கள்.
ஆகையால் அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்று நம்புவது கடமையே தவிர அதை சூழ்ந்து கொள்ள எவராலும் முடியாது. எனினும் அவனின் படைப்புக்களை ஆய்வு செய்வதன் மூலம் அவன் எப்படியானவன் என்று அறிந்து கொள்ள முடியும். முடியுமானதை அடைய முயற்சிப்போம்.
அல்லாஹ்வின் “தாத்” என்றால் என்னவென்று விளக்கம் கூறி அதைப் புரிய வைக்கலாம். எனினும் “தாத்” என்ற சொல்லை தமிழில் எவ்வாறு சரியாக மொழியாக்கம் செய்வதென்று எனக்குப் புரியவில்லை. அச் சொல்லை மொழியாக்கம் செய்ய சரியான சொல் இருக்காதென்றே நான் கருதுகிறேன்.
“அல்லாஹ்” என்பது “இஸ்ம்” பெயர்தான். அது “தாத்” அல்ல. அந்தப் பெயர் கொண்டு பெயர் வைக்கப்பட்டதே “தாத்” எனப்படும்.
ஒருவனுக்கு முஸ்தபா என்று பெயர் வைத்தால் அது அவனின் பெயர்தான். அது “தாத்” அல்ல. ஆயினும் அந்தப் பெயர் கொண்டு பெயர் வைக்கப்பட்டதே “தாத்” ஆகும். அவ்வாறாயின் அப் பெயர் வைக்கப்பட்ட உடல்தான் “தாத்” எனப்படும். படைப்பைப் பொறுத்து உடல் என்று கூறலாம். உதாரணமாக “முஸ்தபா”வின் “தாத்” என்று சொல்லலாம். ஆயினும் அல்லாஹ்வின் “தாத்”திற்கு உடல் என்று சொல்வது கூடாது. சொன்னாலும் கூட வருகின்ற கேள்விகளுக்கு விடை சொல்வதிலேயே கப்றுப் பயணம் வரை காலம் கழிந்துவிடும்.
1980 – 81 களில் “தாத்” என்ற சொல்லுக்கு “பிரம்மம்” என்ற சொல் பொருத்தமாயிருக்கலாமென்று கருதி பல பகிரங்க மேடைகளில் நான் பேசினேன். இந்துக்கள் பாவிக்கின்ற சொல்லை இவர் பாவிக்கிறார். ஆகையால் இவர் பேசுவதும் இந்து மத ஞானமென்று சொல்லத் தொடங்கினார்கள் சங்கைமிகு உலமாஉகளிற் சிலர். இன்னும் சில பட்டதாரிகள் சீற்றம் கொண்டு துண்டுப்பிரசுரம் வெளியிட்டு என்னை எச்சரித்தனர்.
இவர்களுக்கு பதில் கூறி நேர காலத்தை வீணாக்க விரும்பாததாலும், இவர்கள் இதை துரும்பாக வைத்துக் கொண்டு நாடு முழுவதும் பறை சாற்றி என்னை இந்து மத தத்துவம் பேசுகின்றவன் என்று படம் பிடித்துக் காட்டி இந்த ஞானத்தை பொய்யாக்கி விடக் கூடாதென்பதையும் கருத்திற் கொண்டு நான் எனது பேச்சுக்களில் அச் சொல்லையும் தவிர்த்துக் கொண்டேன்.
இதேபோல் பெருமானாரின் அருள் மொழிக்கு விளக்கம் கொடுக்கும் போது “அல்லாஹ் முருகன்” என்று ஒரு சமயம் பேசினேன். மறுநாள் காத்தான்குடி வீதியெங்கும் பிரசுரங்கள் குவிந்தன. இறைவனை முருகன் என்று சொல்லிவிட்டார் என்று காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு அவசர தகவல்கள் ஹெலி மூலம் பறந்தன. அறபு மொழியில் جَمِيْلٌ “ஜெமீல்” என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள் வரும்.
ஒரு சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எவனது உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்குமோ அவன் சுவனம் செல்லமாட்டான் என்று சொன்னபோது நபீ தோழர் ஒருவர்
قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً،
அல்லாஹ்வின் றஸூலே! ஒருவர் தனது உடை அழகாகவும், தனது பாதணி அழகாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்? என்று கேட்டார். அதாவது இது பெருமையாகுமா? என்று கேட்டார். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஆம், இல்லை என்று பதில் கூறாமல்
إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ
அல்லாஹ் அழகன், அவன் அழகையே விரும்புகிறான், பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களை இழிவாக கருதுவதுமாகும் என்று பதில் சொன்னார்கள். جميل என்ற சொல்லுக்கு அழகன் என்று சொல்வது ஆகுமென்றால் முருகன் என்று சொல்வதும் ஆகுமானதே. இரண்டும் ஒரே கருத்துள்ள சொற்களாகும். நான் முருகன் என்று சொன்னது அழகன் என்ற கருத்தில்தானேயன்றி இந்துக்கள் வணங்குகின்ற முருகக்கடவுளை கருத்திற் கொண்டல்ல.
இது குற்றமில்லை. இது குற்றமென்றால் முஸ்லிம்கள் இறைவன் என்றும், ஆண்டவன் என்றும் சொல்ல முடியாமற் போய்விடும்.
வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்று முன்னோர்கள் சொல்வர். அதோடு சேர்த்து மூச்சுக் காற்றுப்பட்டாலும் குற்றம் என்று இன்னோர் சொல்ல வேண்டும். நிலைமை மோசமாகிவிட்டது.
அறிவிலிகளினதும், ஆற்றாமைக் காரர்களினதும் தொல்லை தாங்கமுடியாமல் “ஜெமீல்” என்ற சொல்லுக்குரிய அந்த மொழியாக்கத்தையும் நான் விட்டுவிட்டேன்.
அறபுச் சொற்களில் சில சொற்கள் உள்ளன. அவற்றை எந்த மொழியில் மொழியாக்கம் செய்தாலும் அதை அறபியில் மொழியும் போது கிடைத்த சுவையும், நிறைவும் வேறு மொழியில் கிடைக்காது. அத்தகைய சொல்தான் “தாத்” என்ற சொல்லுமாகும்.
அல்லாஹ் எதைப் படைப்பதாயினும் அப்படைப்பு அவனின் “தாத்”தின் வெளிப்பாடென்றே நம்ப வேண்டும். “ஸிபாத்” தன்மைகளின் வெளிப்பாடு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
எது சரி? எது பிழை?
எந்த ஒரு வஸ்தாயினும் அது வெளியாகுமிடம் அல்லாஹ்வின் “தாத்”தேயன்றி வேறொன்றில்லை.
உலகம் தோன்றியதிலிருந்து இது கால வரை தோன்றியவையும், தற்போது தோன்றிக் கொண்டிருக்கின்றவையும், இதன் பிறகு தோன்றவுள்ளவையும் அல்லாஹ்வின் “தாத்” என்ற உள்ளமையை – அந்த மூலப் பொருளைக் கருவாகக் கொண்டவையேயாகும்.
சர்வ படைப்புகளும் அவை வெளியாகுமுன் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளியாயினும், இன்னும் சிலர் சொல்வது போல் நீராயினும் அனைத்துப் படைப்புக்களும் அவனின் “தாத்” உள்ளமையில் இருந்தவையேயாகும்.
சிலர் இவ்வாறு நினைப்பதுண்டு. படைப்புகளைப் படைக்கு முன் அவை அவனின் “இறாதத்” நாட்டத்திலும், அவனின் “இல்ம்” அறிவிலும் இருந்தனவேயன்றி அவனின் “தாத்”தில் இருக்கவில்லை என்று கருதுகிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான். அதேநேரம் அவனின் நாட்டமும், அறிவும் அவனின் “தாத்”திலேயே – உள்ளமையிலேயே இருந்ததென்றும் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவனின் நாட்டம், அறிவு என்பன அவனின் “தாத்”தை விட்டும் பிரிந்தவையுமல்ல.
ஒன்றுமே பாக்கியில்லாமல் அனைத்தும் அவனின் “தாத்”திலேயே புதைந்து கிடந்தன.
கொப்பு வித்தினுள்ளே குடியிருந்த கொள்கையென
எப்பொருட்கும் சித்தாய் இருந்தாய் மனோன்மணியே!
பிரபஞ்சங்கள், படைப்புக்கள் அனைத்தும் அவனின் “தாத்”தில் எவ்வாறிருந்ததென்றால் ஒரு மைக் கூட்டிலுள்ள மையில் கோடிக்கணக்கான எழுத்துக்கள் மறைந்துள்ளது போன்று மறைந்திருந்தது.
மை கூட்டிலுள்ள மையில் கோடிக் கணக்கான எழுத்துக்கள் இருந்தாலும் அவ் எழுத்துக்கள் யாவும் மை தானானதாக இருந்தனவையேயன்றி மைக்கு வேறானதாயிருக்கவில்லை. அதேபோல் எழுத்துக்கள் அவற்றின் தோற்றம் பெறாமல் மை தானானவையாகவே இருந்தன. எழுத்துக்கள் இனங்காணும் வகையில் இருக்கவுமில்லை.
இவ்வாறுதான் மையில் எழுத்துக்கள் இருந்தது போல் சர்வ பிரபஞ்சமும் அவனின் “தாத்”தில் – உள்ளமையில் இருந்தன. நானும் இருந்தேன். இக்கட்டுரையை நுகரும் நீங்களும் இருந்தீர்கள். உலகில் வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழப் போகின்ற அனைவரும், மற்றுமுள்ள அனைத்து வஸ்த்துக்களும் இருந்தன.
அவ்வேளை அவையாவும் اَلشُّؤُوْنُ الذَّاتِيَّةُ – “அஷ் ஷுஊனுத் தாதிய்யா” என்றழைக்கப்பட்டன. அவனின் தாத்தில் இருந்தவற்றில் இருந்த ஏதாவதொன்றாக அவன் “தஜல்லீ” வெளியாக விரும்பினால் அந்த “தாத்” தானே அந்தப் பொருளாக வெளியாகும்.
இவ்வாறு வெளியானாலும் கூட வெளியானது அல்லாஹ்வின் “தாத்”தை விட்டும் பிரிந்ததாக ஆகாது. ஒரேயொரு பொருள் பல கோடிப் படைப்புக்களாக வெளியானதாலோ, வெளியாகுவதாலோ அந்த பரிசுத்த “தாத்”திற்கு எந்த ஒரு குறையும் ஏற்படமாட்டாது.
(தொடரும்…)