தொடர் – 3
படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற நம்பிக்கை “ஷிர்க்” இணை வைத்தலாகுமா?
படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்றும், அல்லாஹ் ஒரு படைப்பை படைத்து முடியம் வரை மட்டுமே அவனுக்கும், அந்தப் படைப்புக்கும் தொடர்பு இருந்ததென்றும், அதன் பின் தொடர்பு இல்லையென்றும் முஸ்லிம்களில் பலர் நம்பியுள்ளனர்.
படைத்தவனும், படைப்பும் வேறு வேறல்ல, அது இரண்டும் ஒன்றுதான் என்றும், அவனுக்கும் படைப்புக்குமுள்ள தொடர்பு நிரந்தரமானதென்றும், எக்காரணம் கொண்டும் அத் தொடர்பு ஒரு நொடி நேரம் கூட அறுந்து போகாதென்றும் முஸ்லிம்களிற் சிலர் நம்பியுள்ளனர்.
இவ்விரு வகை நம்பிக்கையும் சரியானதா? அல்லது இதில் ஒரு வகைதான் சரியானதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யும் கட்டுரைதான் இது.
படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற கொள்கைக்கு அறபியில் “ஙெய்ரிய்யத்” غَيْرِيَّةٌ என்றும், இரண்டும் ஒன்றுதான் என்ற கொள்கைக்கு عَيْنِيَّةٌ என்றும் சொல்லப்படும்.
முதற் படைப்பான பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளி உள்ளிட்ட சர்வ படைப்புகளும், பொதுவாகப் பிரபஞ்சம் அனைத்தும் அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையிலிருந்து படைக்கப்பட்டவையாகும். அதாவது அந்த உள்ளமையின் வெளிப்பாடுகளேயாகும். இன்னும் இதை சற்று ஆழமான வசனத்தில் சொல்வதாயின் அந்த உள்ளமைதான் சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியானதென்றே சொல்ல வேண்டும்.
உருவமற்ற, நிறமற்ற, எடையற்ற, சடமற்ற, முப்பரிமாணங்களற்ற, மற்றும் எந்த ஒரு கட்டுப்பாடுமற்ற அந்த “வுஜூத்” உள்ளமைதான் அனைத்து ஆலங்களாகவும், அவற்றிலுள்ளவையாகவும் வெளியாகியுள்ளது.
அந்த மூலப் பொருள்தான் எண்ணற்கரிய உயிருள்ளவையாகவும், உயிரற்றவையாகவும் வெளியானதென்றால் அது எவ்வாறு? அவ்வாறு வெளியானதாலும், வெளியாகிக் கொண்டிருப்பதாலும் அந்த “வுஜூத்” என்ற மெய்ப் பொருளுக்கு அழிவு, அல்லது குறைவு, அல்லது ஏதாவது குறைபாடு ஏற்படவில்லையா? ஏற்படாதா? என்ற கேள்விகள் எழத்தான் செய்யும். எழும் கேள்விகளுக்கு பதில் இல்லாமற் போகாது. இஸ்லாம் மார்க்கத்தில் கூறப்பட்ட சட்டங்களாயினும், தத்துவங்களாயினும் அவை தெடர்பாக எழும் கேள்விகளுக்கு பதில் இல்லாமற் போகாது. பதில் நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இஸ்லாம் அர்த்தமும், தத்துவமும் இல்லாத மார்க்கமல்ல. ஒவ்வொரு சட்டத்திற்கும் அர்த்தமுண்டு. அதேபோல் ஒவ்வொரு தத்துவத்திற்கும் அர்த்தமுண்டு.
ஒரு மனிதன் சலம் கழிக்கும் போது தனது உடற் பலத்தை இடது காலுக்கு கொடுத்து குந்திக் கொண்டு சலம் கழிக்க வேண்டுமென்ற சட்டம் உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களுக்கும் அர்த்தமும் உண்டு, காரணமும் உண்டு. ஆயினும் அவற்றை அறிந்தவர்கள்தான் மிகவும் குறைவாக உள்ளனர்.
ஒரு மூலப் பொருள் அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் இன்னொரு பொருளாவதெவ்வாறு என்பதை நாம் அறிந்து கொண்டால் மேற்கண்ட தன்மைகளையுடைய இறைவன் அழியாமலும், மாறு படாமலும், விகாரப்படாமலும் அவனே பிரபஞ்சமாக வெளியானான் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.
هذا أمرٌ سهلٌ لا صعبٌ، وهذا أيضا أساسٌ لمرفةِ الله تعالى، فمن لم يعرف الأساس فقد خاب وخسِرَ فى أمره، ولذا كان معرفة الله أوّل واجب على الإنسان،
இது மிக இலகுவான விடயமேயன்றி கடினமானதல்ல. அல்லாஹ்வை அறிவதற்கு இது ஓர் அத்திவாரமாகும். அத்திவாரம் அறியாதவன் தனது விடயத்தில் நஷ்டமடைந்தவனாகிவிடுவான். இதனால்தான் அல்லாஹ்வை அறிவது மனிதனின் முதற் கடமையாயிற்று.
இறைவன்தான் எல்லாமாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான் என்று கூறினால் ஞானத்துறையில் விளக்கமில்லாதவர்களால் இக்கூற்றை ஜீரணிக்க முடியாமற் போகிறது. அதெவ்வாறு சாத்தியமாகும் என்றும், சாத்தியமானாற் கூட அவனின் அந்த உள்ளமை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இறுதியில் முழுமையாக அழிந்து இல்லாமற் போய்விடுமல்லவா? என்று சிந்திக்கின்றார்கள். நான் தொடர்ந்து கூறவுள்ள விளக்கம் அத்தகையோரை மனிதனாக்குமென்று நம்புகிறேன். அத்தகையோர் பின்வரும் உதாரணங்களைக் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஒரு வஸ்த்து இன்னொரு பொருளாவதாயின் அதற்கு மூன்று வழிகள் மட்டுமே உண்டு.
வழி ஒன்று: அந்த வஸ்த்து முழுமையாக அழிந்து இன்னொரு பொருளாதல். உதாரணமாக மா விதை – மாங்கொட்டை முற்றாக அழிந்து மா மரமாதல் போன்று. இது ஒரு பொருள் முற்றாக அழிந்து இன்னொரு பொருளாவதற்கான உதாரணமாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் “வுஜூத்” என்ற உள்ளமை முழுமையாகவோ, அரை குறையாகவோ அழிந்துதான் பிரபஞ்சம் தோன்றிற்று என்று கொள்ளக் கூடாது. இப்படியும் ஒரு வகையில் ஒரு பொருள் இன்னொரு பொருளாகலாம். அல்லாஹ் படைப்புகளாக வெளியானான் என்பது இது போன்றுதான் என்று கொள்வது முற்றிலும் பிழையானதாகும்.
ஏனெனில் அல்லாஹ்வின் “வுஜூத்” என்பது எந்த வகையிலும் அழியவுமாட்டாது, மாறுபடவுமாட்டாது, விகாரப்படவுமாட்டாது. எத்தனை கோடி படைப்புகளாக அது வெளியானாலும் கூட அது எந்தக் குறையுமின்றி படைப்பாக வெளியாகுமுன் எவ்வாறிருந்ததோ அவ்வாறே படைப்பாக வெளியான பின்னும் இருக்கும்.
ஒரு சமயம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் كَيْفَ كَانَ الرَّبُّ بَعْدَ خَلْقِ الْخَلْقِ படைப்புகளைப் படைத்த பின் அல்லாஹ் எவ்வாறிருந்தான் என்று கேட்கப்பட்டதற்கு هُوَ الْآنَ كَمَا كَانَ அவன் இருந்தது போன்றே இருந்தான். படைப்புகளைப் படைக்குமுன் எவ்வாறிருந்தானோ அவற்றைப் படைத்த பின்னும் அவ்வாறுதான் உள்ளான் என்று கூறிய பதில் மூலம் அவன் படைப்புகளாக வெளியானதால் அவனுடைய “வுஜூத்” உள்ளமையில் எந்தவொரு குறையும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
வழி இரண்டு: ஒரு பொருள் இன்னொரு பொருளாவதற்கான இரண்டாவது வழியைக் கவனிப்போம்.
ஒரு பொருள் முழுமையாகவோ, அரை குறையாகவோ அழியாமல், ஆயினுமது மாறு பட்டும், விகாரப்பட்டும் இன்னொரு பொருளாதல்.
உதாரணமாக சட்டி, பானை செய்கின்ற குயவன் களி மண்ணை எடுத்து அதனால் சட்டி, பானை போன்ற மட் பாண்டங்கள் செய்கிறான். அக்களிமண் தான் குடம், சட்டியாக வெளியாகிறது. ஆயினும் குடம், சட்டி முதலான மட் பாண்டங்களுக்கு மூலமான களி மண் அழியாது போனாலும் அது மாறு பட்டும், விகாரப்பட்டுமே மட்பாண்டமானது.
முந்தின உதாரணத்தில் மா மரத்துக்கு எது மூலமாயிருந்ததோ அது முற்றாக அழிந்து மா மரமானது. இவ்வுதாரணத்தில் மட் பாண்டத்துக்கு மூலமான களி மண் அழியாமலிருந்தாலும் அது மாறு பட்டும், விகாரப்பட்டும், நெருப்பில் சுடுபட்டும் மட்பாண்டமானது.
முந்தின உதாரணமும், இந்த இரண்டாவது உதாரணமும் அல்லாஹ் படைப்பாக வெளியானான் என்பதற்கு பொருத்தமான உதாரணங்களல்ல. ஏனெனில் முந்தின உதாரணத்தில் மூலம் அழிந்தே போயிற்று. இரண்டாம் உதாரணத்தில் மூலம் அழியாது போனாலும் அது மாறு பட்டும், விகாரப்பட்டும், சுடுபட்டும் இன்னொரு பொருளானது.
அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்பது படைப்புகளாக வெளியானது இந்த இரண்டு வகைகளிலுமல்ல. மூன்றாம் வழிதான் அல்லாஹ்வின் “வுஜூத்” படைப்புகளாக வெளியாவதற்கு பொருத்தமான வழியும், உதாரணமுமாகும்.
தொடரும்…
குறிப்பு: தலைப்பிலுள்ள கேள்விக்கான பதில் இறுதியில் வெளியாகும்.