“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 30

அந்தக் கேள்வி என்னவெனில் அல்லாஹ் அல்லாத எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் “எங்களுக்கு” இல்லையென்றால் மற்றவர்களுக்கு அத்தகைய தெய்வம் உண்டு என்ற கருத்து வருகிறது.

இது பிழையான கருத்தாகும். ஏனெனில் திருக்கலிமாவின் இலட்சியமும், குறிக்கோளும் பொதுவாக எந்தவொரு தெய்வமும் இல்லையென்று சொல்வதேயாகும். ஆனால் لا إله لنا எங்களுக்கு எந்த தெய்வமும் இல்லையென்றால் மற்றவர்களுக்கு அது உண்டு என்று ஓர் ஐயம் ஏற்படுகிறது. இப்படியொரு சிறிய ஐயமும் வராத வகையில் தெய்வங்கள் அனைத்தையும் எந்தவொரு நிபந்தனையுமின்றி இல்லையென்று சொல்வதே திருக்கலிமாவின் குறிக்கோளாயிருப்பதால் لَنَا “லனா” என்ற மூன்றெழுத்து வலிந்துரைக்கே இடமில்லையென்றால் “வணக்கத்திற்கு தகுதியானவன்” எனும் பெரும் வசனத்தை வலிந்துரையாகக் கொள்வது எவ்வாறு? வலிந்துரை செய்வோர் சற்று சிந்திக்க வேண்டும்.

“லனா” என்ற சொல்லை வலிந்துரையாக கொண்டதினால் அது பிழையானதுபோல்தான் பின்வரும் உதாரணமுமாகும்.

لَا إلهَ فِى الْوُجُوْدِ إِلَّا اللهُ

இருப்பவற்றில் அல்லாஹ் அல்லாத எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று வலிந்துரை கொள்வதும் பிழையானதேயாகும்.

ஏனெனில் فى الوجود இருப்பவற்றில் அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று சொல்வதும் கூட ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது இருப்பவற்றில்தான் அப்படியான இலாஹ் – தெய்வம் இல்லையே தவிர பொதுவாக தெய்வம் இல்லை என்ற கருத்து விளங்கப்படவில்லை. ஆகையால் لا إله فى الوجود என்று சொல்வதும் பிழையாகிவிட்டது.

வலிந்துரைக்கே இடமில்லாத ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு لَنَا “லனா” என்று வைக்கலாம் என்றும், فى الوجود “பில் வுஜூதி” என்று வைக்கலாம் என்றும், மேலும் திருக்கலிமாவில் உள்ள “இலாஹ்” என்ற சொல்லுக்கு مُستحقٌّ للعبادة வணக்கத்திற்கு தகுதியானவன் என்று வலிந்துரை வைக்கலாம் என்றும் சொல்வது பலன் தராத வீணான பேச்சாகும். இது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கும் வேலை போலாகிவிடும்.

எனவே, திருக்கலிமா எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே இருக்க எந்தவொரு வலிந்துரையுமின்றி அதற்குப் பொருள் கொள்வதே சிறந்தது. இதை நியாயப்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை கூறத் தொடங்கினால் விடயம் நீண்டுவிடும்.

இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் திருக்கலிமாவிலுள்ள إِلَّا “இல்லா” என்ற சொல்லுக்கு “தவிர” என்று “இஸ்தித்னா”வின் பொருள் சொல்லாமல் அதற்கு غَيْرُ “அல்லாத” அல்லது “வேறான” என்று பொருள் சொல்ல வேண்டுமென்று தெளிவாக கூறியுள்ளார்கள்.

اتفق النحويون على أنَّ محلّ إِلَّا فى هذه الكلمة محل غير، والتقدير لا إله غير الله، وهو كقول الشاعر،
وكل أخٍ مفارقُه أخوه – لَعَمْرُ أبيكَ إلّا الْفَرْقَدَانِ
والمعنى كل أخ غير الفرقدين فإنّه يفارقه أخوه، وقال تعالى لو كان فيهما آلهةٌ إلا الله لَفَسَدَتَا قالوا التقدير غيرُ الله،

திருக்கலிமாவிலுள்ள إِلَّا – இல்லா என்ற சொல்லுக்கு غَيْرْ உடைய பொருள் கொள்ள வேண்டும் என்றும் “இஸ்தித்னா”வுடைய “தவிர” என்ற பொருள் சொல்லக் கூடாதென்றும் நஹ்வியூன் – மொழியிலக்கண மேதைகள் அனைவரும் ஒரே குரலில் கூறியதாக இமாம் றாஸீ கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரமாவே கவிஞனின் கவிதையைக் கூறி,

لو كان فيهما آلهةٌ إلا الله لَفَسَدَتَا

எனும் திரு வசனத்தையும் ஆதாரமாகக் கூறியுள்ளார்கள். அவர்களின் இந்தப் பேச்சு மூலம் திருக்கலிமாவில் வருகின்ற “இல்லா” என்ற சொல்லுக்கும், மேலே எழுதிய திருக்குர்ஆன் வசனத்தில் வருகின்ற “இல்லா” என்ற சொல்லுக்கும் “தவிர” என்று பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அல்லாத அல்லது வேறான என்ற பொருள் கொள்ள வேண்டுமென்பது தெளிவாகிறது.

திருக்கலிமாவில் வருகின்ற “இல்லா” என்ற சொல்லுக்கு غير உடைய பொருள் கொள்ளாமல் “தவிர” என்று பொருள் கொண்டால் சிக்கலும், முரண்பாடும் ஏற்படும்.

அதெவ்வாறெனில், அல்லாஹ் தவிர “இலாஹ்” இல்லையென்றால் அல்லாஹ் தவிர இருக்கின்ற ஏனைய விக்கிரகங்கள் “இலாஹு”கள் அல்ல என்ற கருத்து வரும். அவைகளையும் “இலாஹ்” என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் பல இடங்களில் அவர்கள் முன்வைத்து வணங்கும் விக்கிரகங்கள், சிலைகளுக்கு “இலாஹ்” என்ற சொல்லையும், அதன் பன்மைச் சொல்லான “ஆலிஹத்” என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளதால் அவைகள் “இலாஹ்” என்றே சொல்லப்படும்.

“இல்லா” என்பதற்கு “தவிர” என்று பொருள் கொண்டு அல்லாஹ் தவிர “இலாஹ்” எதுவுமில்லையென்றால் இது பொய்யாகிவிடும். ஏனெனில் எத்தனையோ இலாஹுகள், விக்கிரகங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் தவிர இலாஹுகள் இல்லையென்பது பகிரங்க பொய்யாகிவிடும்.

எனவே, “இல்லா” என்ற சொல்லுக்கு தவிர என்று பொருள் கொள்வதால் பல சிக்கல்களும், முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. அதற்கு தவிர என்று இஸ்தித்னாவின் பொருள் கொள்ளாமல் غَيْرْ என்ற சொல்லின் அல்லாத, அல்லது வேறான என்ற பொருள் கொண்டால் அல்லாஹ் அல்லாத, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று பொருள் வரும். இது பொய்யுமல்ல. தவறுமல்ல.

ஏனெனில் அல்லாஹ்வுக்கு வேறான அல்லது அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்பதே இஸ்லாம் கூறும் தத்துவமாகும்.

எனவே, திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத, அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்பதே திருக்கலிமாவுக்கான எந்த ஒரு சிக்கலும், முரண்பாடுமில்லாத இலகுவான பொருள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு மாறாக வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை என்று திருக்கலிமாவுக்கு பொருள் கொள்வது பிழையாகும்.

எந்த வகையில் பிழையாகுமென்று கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன். மீண்டுமொரு முறை சுட்டிக் காட்டுகிறேன்.

வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லையென்றால் வணக்கத்துக்குத் தகுதியாதல் என்ற விடயத்தில் மட்டும் அல்லாஹ்வை “தௌஹீத்” செய்ததாக ஆகிவிடும். திருக்கலிமாவை மொழிந்தவன் இஸ்லாமிய மார்க்கம் என்ற கோட்டையினுள் நுழைகின்றான் என்றால் ஒட்டு மொத்தமாக சகல விடயங்களிலும் அல்லாஹ்வை “தௌஹீத்” செய்தவனாக இருக்க வேண்டும். வணக்கத்தில் மட்டுமன்றி உணவளித்தல், உதவி செய்தல், அன்பு காட்டல், அடக்கியாள்தல் போன்ற சகல அம்சங்களிலும் குறிப்பாக “வுஜூத்” உள்ளமையிலும் அவன் தனித்தவனாக இருக்கின்றான் என்று அவனை “தௌஹீத்” செய்தவனாக இருக்க வேண்டும். ஆக திருக்கலிமாவில் வந்துள்ள “இலாஹ” என்ற சொல்லுக்குப் பின்னால் ஏதாவதொரு சொல்லை வலிந்துரையாக வைத்து ஒரு விடயத்தில் மட்டும் மட்டுப்படுத்தி “தௌஹீத்” செய்யாமல் எவ்வித வலிந்துரையுமின்றி Total – மொத்தமாக சகல விடயங்களையும் “நFபீ” இல்லாமலாக்கி சகலதும் அவனுக்கே உண்டு என்று சொல்வதே “தௌஹீதுன் மஹ்ழ்” கலப்பற்ற ஏகத்துவமாகும்.

அல்லாஹ் அல்லாத அல்லது அல்லாஹ்வுக்கு வேறான தெய்வங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்ளும் போது பின்வரும் திருமறை வசனம் அவ்வாறான தெய்வங்கள் இருக்க முடியாதென்றும், அவ்வாறிருந்தால் வானம், பூமி இரண்டும் கெட்டுப் போயிருக்கும் என்றும் கூறுவதைக் கருத்திற் கொண்டு பார்த்தால் வேறான தெய்வங்கள் இருந்தும் கூட வானமும், பூமியும் கெட்டுப் போகாமல் இருப்பது திருமறை வசனத்திற்கு முரணாகிறதே என்று ஒருவர் கேட்டால் அவரின் கேள்வி நியாயமானதே என்ற வகையில் அவருக்கு பதில் கூற வேண்டும். அல்லது திருக்குர்ஆனின் கூற்று பொய் என்று சொல்ல வேண்டும்.

திருக்குர்ஆனை நம்பியுள்ள முஸ்லிம்கள் ஒரு போதும் அதைப் பொய்யென்று சொல்லமாட்டார்கள்.

அவ்வாறாயின் இந்த முரண்பாட்டுக்கு உரிய பதில் வேண்டுமல்லவா? இதோ அதற்கான மிகச்சுருக்கமானதும், இலகுவானதுமான பதில்.

அல்லாஹ் என்ற “இலாஹ்” தெய்வம் மட்டும்தான் உள்ளதேயன்றி மற்ற தெய்வங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு வேறானவை என்றோ, அல்லாஹ் அல்லாதவை என்றோ கொள்ள முடியாது.

ஆகையால் அல்லாஹ்வுக்கு வோறன, அல்லாஹ் அல்லாத தெய்வங்கள் இருந்தால்தான் வானம், பூமி இரண்டும் கெட்டிருக்கும் என்று அல்லாஹ் சொல்லியுள்ளான். ஆயினும் அத் தெய்வங்கள் அல்லாஹ்வுக்கு வேறாகாத, அல்லாஹ் தானான தெய்வங்களாக இருப்பதினால்தான் அவ்விரண்டும் கேட்டை அடையாமல் இருக்கின்றன என்று பதில் சொல்வோம்.

சுருக்கம் என்னவெனில் கந்தன், முருகன், காளி, சரஸ்வதி போன்ற இந்துக்களால் வணங்கப்படுகின்ற தெய்வங்களோ அல்லது வேறு தெய்வங்களோ “வுஜூத்” உள்ளமை அடிப்படையில் அல்லாஹ் என்ற தெய்வத்துக்கு வேறானவையே அல்ல. அது தானானவைதான். ஆயினும் அவற்றை இறைவனுக்கு வேறான, அவனளவில் நெருக்கி வைக்கும் சாதனங்களாக நினைப்பதும், பயன்படுத்துவதும் தவறாகும். இதனால்தான் முஸ்லிம்கள் விக்கிரக வணக்கமோ, சிலை வணக்கமோ, சிருஷ்டி வணக்கமோ செய்வதுமில்லை, செய்வதைச் சரி காண்பதுமில்லை.

வணக்கத்துக்குத் தகுதியானவன் ஒருவன்தான். ஒரு தெய்வம்தான். ஒரு “இலாஹ்”தான். அதையே வணங்க வேண்டும். அவன்தான் முஸ்லிம்களால் அல்லாஹ் என்றழைக்கப்படுபவனாவான். அவனேதான் கடவுள் என்றும், இறைவன் என்றும், ஆங்கிலத்தில் “கோட்” என்றும், சிங்களத்தில் “தெய்யோ” என்றும், உர்து, பார்ஸீ மொழியில் “குதா” என்றும் அழைக்கப்படுகின்றவனாவான்.

அல்லாஹ் அல்லாத “இலாஹு”கள், தெய்வங்கள், நாயன்கள் இல்லை என்றும், அல்லாஹ்வுக்கு வேறான “இலாஹு”கள், தெய்வங்கள் இல்லை என்றும் நம்புகின்றவன் மட்டுமே தெளிந்து வடித்தெடுக்கப்பட்ட ஒரிஜினல் – அசல் விசுவாசியாவான்.

மேற்கண்ட வசனங்களை மறுபக்கம் புரட்டி பார்த்தால் “அல்லாஹ்வான இலாஹுகள் உள்ளனவென்றும், அல்லாஹ்வுக்கு வேறாகாத இலாஹுகள் உள்ளன” என்றும் கருத்து வரும்.

அதாவது اَلْأَصْنَامُ عَيْنُ اللهِ، اَلْأَوْثَانُ عَيْنُ اللهِ விக்கிரகங்கள் அல்லாஹ்தான், சிலைகள் அல்லாஹ்தான் என்று கருத்து வரும்.

இந்தக் கருத்தைப் புதிதாக அறிபவர்கள் ஸுப்ஹானல்லாஹ்! இதென்ன அதிசயம்! விக்கிரகங்களும் அல்லாஹ்வா? என்று தலையில் கை வைத்து கத்துவர். கதறுவர்.

ஸூபிஸம் கற்ற, அதில் அதிக அனுபவமுள்ள எவரும் அசையமாட்டார். அவரை அசைக்கவும் முடியாது. அவருக்கு இதெல்லாம் பாலர் வகுப்பு மாணவர்களின் பாடம் போலவே இருக்கும்.

ஸூபிஸ எல்லைக்குள் புதிதாக வருபவர்கள் ஒரு கட்டுரை இரண்டு கட்டுரைகளை மட்டும் பார்த்துவிட்டு எந்த முடிவும் எடுக்காமல் பொறுமையுடன் பல கட்டுரைகளை படிக்குமாறும், எனது CD களைத் தொடர்ந்து கேட்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சத்தியத்தை அறிவதற்குப் பொறுமை வேண்டும். நீண்ட காலமும் வேண்டும்