தொடர் – 31
“லா இலாஹ இல்லல்லாஹ்” لاا إله إلا الله எனும் திருக்கலிமாவில் இல்லையென்ற பொருளுக்குரிய لَا லா – என்ற சொல்லை அடுத்து إِلَهَ “இலாஹ” என்ற சொல் வந்துள்ளது.
“இலாஹ்” என்ற இச் சொல் “நகிறா” குறிப்பற்றதென்று சொல்லப்படும். அதாவது குறித்த ஒன்றுக்கு மட்டும் சொல்லப்டுவதல்ல. அந்த ஒன்று போலுள்ள அனைத்திற்கும் சொல்ல முடியும்.
உதாரணமாக رَجُلٌ (மனிதன்) என்ற சொல் போன்று. இது “நகிறா” எனப்படும். குறித்த ஒன்றுக்கு மட்டும் பாவிப்பதற்குரியதல்ல. மனிதர்களில் ஒவ்வோர் ஆணுக்கும் رَجُلٌ என்று சொல்ல முடியும்.
இதுபோன்ற “நகிறா” குறிப்பற்ற சொல்தான் “இலாஹ்” என்ற சொல்லுமாகும். இதன் பன்மைச் சொல் آلِهَةٌ – “ஆலிஹதுன்” என்று வரும். திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் இச் சொல் இடம் பெற்றுள்ளது.
இச் சொல்லுக்கு தெய்வம் என்று பொதுவாக பொருள் சொல்லப்படுகிறது. முஸ்லிம்கள் இச் சொல்லுக்கு “நாயன்” என்றே பொருள் சொல்வார்கள்.
“இலாஹ்” என்ற சொல் அல்லாஹ் உள்ளிட்ட வணங்கப்படுகின்ற விக்கிரகங்கள், சிலைகள், மற்றும் பசு, நாகம் போன்றவற்றையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
தொன்று தொட்டு உலகிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் “இலாஹ்” என்ற சொல்லுக்கு நாயன் என்றே பொருள் சொல்லி வருகிறார்கள்.
இந்தியா – தமிழ் நாட்டிலும் கூட திருக்கலிமாவுக்கு பொருள் சொல்கையில் “வணக்கத்திற்குரிய “நாயன்” அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்றே சொல்கிறார்கள். இவர்கள் “இலாஹ்” என்ற சொல்லுக்கே நாயன் என்று சொல்கிறார்கள். “இலாஹ்” எனும் ஒருமைக்கு “ஆலிஹத்” என்று பன்மை வரும். ஒருமைக்கு நாயன் என்றால் பன்மைக்கு நாயன்மார் என்று சொல்லப்படும்.
كُلُّ مَعْبُوْدٍ إلهٌ – வணங்கப்படுபவை அனைத்தையும் “இலாஹ்” என்று சொல்ல முடியும். வணங்கப்படாமலுள்ள பாதணி, துடைப்பான், மலம், சலம் என்பவற்றை “இலாஹ்” என்று சொல்ல முடியாது.
எனினும் எந் நாட்டில் எந்த மூலையில் ஒரேயொருவன் மட்டுமாவது இவற்றில் ஒன்றை வணங்கினால் அதுவும் “இலாஹ்” ஆகிவிடும். ஒன்று “இலாஹ்” என்று சொல்லப்படுவதற்கு அதை பலர் வணங்கத் தேவையில்லை. ஒருவர் வணங்கினாலும் அது வணங்கப்பட்டதேயாகும்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது உலகில் எந்த ஒரு வஸ்த்தும் வணங்கப்படாமல் இருக்காது. அது எந்த ஒரு சமயத்திலாவது வணங்கப்படத்தான் செய்யும். காலம் செல்லச் செல்ல நாம் நினைக்காத பொருட்களும் வணங்கப்படும் தெய்வங்களாக மாறச் சாத்தியமுண்டு. கழிக்கும் மல சலம் கூட ஒரு காலத்தில் வணங்கப்படமாட்டாதென்று கூற எவராலும் முடியாது.
ஒரு காலத்தில் சகல வஸ்த்துக்களும் வணங்கப்படும் என்பதற்கு ஆதாரம் சுமார் 100 வருடங்களுக்கு முன் வணங்கப்படாதவை இன்று வணங்கப்படுவதேயாகும்.
இஸ்லாமிய மதப் பெரியார்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள், கண்ணிப்படுத்தப்படுகின்றார்கள். அவ்வளவுதான். முஸ்லிம்களில் எவரும் அவர்களை வணங்குவதில்லை.
ஆயினும் ஏனைய மதத்தை சேர்ந்தவர்கள் தமது மதப் பெரியார்களை வணங்குகிறார்கள். இஸ்லாம் விக்கிரக வணக்கம், சிலை வணக்கம், சிருஷ்டி வணக்கம் என்பவற்றை கடுமையாக கண்டிக்கிறது.
இலாஹ்
“இலாஹ்” என்ற சொல் வேறு கருத்துகளுக்கும் பயன்படுத்தப்படும். அவற்றை சுருக்கமாக இங்கு தருகிறேன்.
முதலில் “அல்லாஹ்” என்ற சொல் கூட “இலாஹ்” என்ற சொல்லின் ஒரு வடிவம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது “இலாஹ்” என்ற சொல்தான் “அல்லாஹ்” என்ற சொல்லாக மாறியுள்ளதென்பதை அறிந்து கொள்ள வேண்டும். “அல்லாஹ்”வை “யா அல்லாஹ்” என்று அழைப்பது போல் “யா இலாஹீ” என்றும் அழைக்க முடியும்.
“இலாஹ்” என்ற சொல் எதெல்லாம் வணங்கப்படுகின்றதோ அதெல்லாம் “இலாஹ்” என்ற பெயருக்குப் பொருத்தமானதாயிருப்பதால்தான் “லா இலாஹ இல்லல்லாஹ்” எந்த இலாஹும் – தெய்வமும் இல்லை என்று நாம் சொல்கிறோம்.
“இலாஹ்” என்ற சொல் வணங்கப்படுகின்ற ஒன்றுக்கு பயன்படுத்தப்படுவதுபோல் வேறு கருத்துகளுக்கும் பயன்படுத்தப்படும்.
“இலாஹ்” إلهٌ என்ற சொல்லின் மூலச் சொல் أَلَهَ என்றும் இருக்கும். இவ்வாறு வைத்துக் கொண்டால் அதற்கு வணங்கப்படுகின்ற ஒன்று என்று கருத்து வரும். ஏனெனில் இதன் மூலச் சொல் أَلَهَ என்பதற்கு வணங்கப்படுதல் என்ற பொருள் உண்டு. இதன்படி திருக்கலிமாவில் வந்துள்ள لَا إلهَ என்ற வசனத்துக்கு வணங்கப்படுகின்ற எதுவுமில்லை என்று கருத்து வரும். இதன் படி திருக்கலிமாவின் பொருள் “வணங்கப்படுகின்ற எதுவும் அல்லாஹ் அல்லாததாக இல்லை, அல்லது வணங்கப்படுகின்ற எதுவும் அல்லாஹ்வுக்கு வேறானதாக இல்லை” என்று பொருள் வரும்.
“இலாஹ்” என்ற சொல் أَلِهَ – “அலிஹ” என்ற மூலச் சொல்லின் தோற்றம் என்றும் கொள்ள முடியும். இச் சொல்லுக்கு தடுமாறினான் என்று பொருள் வரும். கருத்து வரும். இதன்படி திருக்கலிமாவின் பொருள் “அல்லாஹ் அல்லாத தடுமாறக் கூடிய எதுவுமில்லை” என்ற வரும்.
இன்னும் “இலாஹ்” என்ற சொல் أَلِهَتِ الْعُقُوْلُ புத்திகள் அமைதியாயின என்ற மூலச் சொல்லின் தோற்றம் என்றும் கொள்ள முடியும்.
இதன்படி திருக்கலிமாவின் பொருள் “அல்லாஹ் அல்லாத நிம்மதி பெற்றவன் எவருமில்லை, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான நிம்மதி பெற்றவன் யாருமில்லை” என்று வரும்.
இன்னும் “இலாஹ்” என்ற சொல் اَلُهَ – “அலுஹ” என்ற மூலச் சொல்லின் தோற்றம் என்றும் கூறப்படுகின்றது. “அலுஹ” என்றால் பயந்தான், திக்பிரமை அடைந்தான் என்ற பொருளைக் கொண்டதாகும். இதன்படி திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத பயப்படுபவன் யாருமில்லை, அல்லாஹ்வுக்கு வேறான பயப்படுபவன் யாருமில்லை என்று வரும்.
இன்னும் “இலாஹ்” என்ற சொல் மறைந்து விட்டான் என்ற பொருளுக்குரிய لَاهَ என்ற சொல்லின் தோற்றம் என்றும் கூறப்படுகின்றது.
இதன்படி திருக்கலிமாவின் பொருள் அல்லாஹ் அல்லாத மறைந்தவன் வேறு யாருமில்லை, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான மறைந்தவன் யாருமில்லை என்று பொருள் வரும்.
சுருக்கம்:
“இலாஹ்” إله என்ற சொல்லுக்கு தெய்வம், நாயன் என்று பொருள் சொன்னாலும் கூட இச்சொல்லுக்கு இது மட்டும்தான் பொருள் என்பது கருத்தல்ல. இதற்கு இன்னும் பல அகராதி கருத்துக்கள் இருக்கின்றன. மொதத்தம் அதற்கு ஐந்து கருத்துக்கள் உள்ளன.
அவ் ஐந்து கருத்துக்களையும் சரியாகவும், தெளிவாகவும் ஆய்வு செய்தால் “இலாஹ்” என்ற சொல் சர்வ சிருட்டியையும் உள்வாங்கிய சொல் என்பது தெளிவாகும்.
“இலாஹ்” என்ற சொல்லுக்கு சொல்லப்படுகின்ற ஐந்து கருத்துக்களில் مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ என்ற வலிந்துரை அடங்காது, கூறப்பட்ட ஐந்து கருத்தும் அகராதியோடு சம்பந்தப்பட்டதாகும். مستحق للعبادة வணக்கத்துக்குத் தகுதியான நாயன் என்ற இக்கருத்து அகராதிக் கருத்தல்ல. அது சிலரின் கற்பனைக் கருக் கருத்து. அல்லது அவர்களின் பிறப்பு வாசி. இதையே குணங்குடியார் தனது பாடலில்
மாதா பிதாவும் வருந்தி வருத்தி வைத்த
போதனையை பார்க்கில் பிழை காண் நிராமயமே!
என்று பாடியுள்ளார்.
சந்தேக நிவர்த்தி:
திருக்கலிமாவின் நேரடிப் பொருள்தான் சரியானதென்றும், வலிந்துரைப் பொருள் பிழையானதென்றும் நாங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் எம்மிடம், நேரடிப் பொருள் பற்றிப் பேசும் நீங்கள் திருக்கலிமாவுக்கு விளக்கம் கூறுகையில் அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்று கூறுகிறீர்களே! நீங்கள் வலியுறுத்தும் நேரடிப் பொருள் எங்கே போயிற்று? என்று கேட்க நினைக்கும் சகோதரர்களுக்கு விளக்கம் பின்வருமாறு.
“இலாஹ்” என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் ஐந்து எழுதியுள்ளேன். மீண்டுமொரு முறை நினைவூட்டுகிறேன்.
முதலாவது – இலாஹ் என்ற சொல்லுக்கு பொதுவாக مَعْبُوْدْ வணங்கப்பட்டது என்று பொருள் கூறுதல். இந்தப் பொருள் விக்கிரகம், சிலை போன்றதை வணங்குவதையும் எடுத்துக் கொள்ளும். இது அகராதியோடு தொடர்புடையதே!
இரண்டாவது – “இலாஹ்” என்ற சொல் أَلِهَ – “அலிஹ” என்ற மூலச் சொல்லின் ஒரு தோற்றம். இந்த மூலச் சொல்லுக்கு தடுமாறுதல் என்று பொருள் வரும். அல்லாஹ் என்ற எதார்த்தத்தை அடைந்து கொள்வதில் புத்திகள் தடுமாறுவதால் இவ்வாறு கருத்துச் சொல்லபப்டுகிறது.
இதன்படி திருக்கலிமாவின் பொருள் “அல்லாஹ் அல்லாத தடுமாறியவன் யாருமில்லை, அல்லாஹ்வுக்கு வேறான தடுமாறுபவன் யாருமில்லை” என்று வரும்.
அல்லாஹ்வின் எதார்த்தம் எவராலும் அறிய முடியாத ஒன்றாகும். ஆகையால் இந்த விடயத்தில் அனைவரும் தடுமாறியே ஆக வேண்டும். இதைக் கருத்திற் கொண்டு இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது – “இலாஹ்” என்ற சொல்லின் மூலச் சொல் புத்திகள் அமைதியாயின اَلِهَتِ الْعُقُوْلُ அடங்கின என்ற பொருள்களைக் கொண்ட சொல்லாகும்.
ஏனெனில் அல்லாஹ்வை நினைப்பதன் மூலம் மனச் சாந்தியும், அமைதியும் கிடைப்பதை கருத்திற் கொண்டு மேற்கண்ட சொல்லில் இருந்த எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருக்கலிமாவின் பொருள் அல்லாஹ் அல்லாத புத்தி அமைதியான எவருமில்லை, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான புத்தி அமைதியான எவருமில்லை என்று பொருள் வரும்.
நாலாவது – “இலாஹ்” என்ற சொல்லின் மூலச் சொல் اَلُهَ – “அலுஹ” என்று சொல்லப்படுகிறது. இச் சொல்லுக்கு பயந்தான், தினுக்கிட்டான் என்று பொருள் வரும்.
இதன்படி திருக்கலிமாவின் பொருள் அல்லாஹ் அல்லாத பயப்படுபவன் யாருமில்லை அல்லது அல்லாஹ்வுக்கு வேறான பயப்படுபவன் யாருமில்லை என்று பொருள் வரும்.
உலகில் பயமில்லாத எந்த ஒரு மனிதனும் இருக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் மனிதன் பயமுள்ளவனாகவே இருப்பான். வலீமார்களைத் தவிர. அவர்கள் மனித சுவாபங்களைக் கடந்தவர்கள்.
ஐந்தாவது – “இலாஹ்” என்ற சொல்லின் மூலச் சொல் لَاهَ “லாஹ” என்பதாகும். இதற்கு மறைந்து கொண்டான் என்ற பொருள் வரும்.
இதன்படி திருக்கலிமாவின் பொருள் அல்லாஹ் அல்லாத மறைந்தவன் வேறு யாருமில்லை. அல்லது அல்லாஹ்வுக்கு வேறான மறைந்தவன் யாருமில்லை என்பதாகும்.
“இலாஹ்” என்ற சொல்லுக்கு அகராதி வழிகாட்டலின் படி ஐந்து விதமாக பொருள் கூறலாமென்பது தெளிவாகிறது.
மேற்கண்ட இந்த விபரம் எனது கையால் மடியால் போட்டதல்ல.
“அந்நபாயிஸுல் இர்தழியயா” எனும் நூலை எழுதிய ஹதீதுக்கலை மேதை அப்துல் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மேற்கண்ட علم البلاغة கலையில் எழுதப்பட்ட தங்களின் நூல் ஐந்தாம் பக்கம் கூறியுள்ளார்கள். அவர்களின் வசனத்தை எந்த மாற்றமும் செய்யாமல் கீழே எழுதுகிறேன்.
தொடரும்…