தொடர் – 32
كلماتٌ وسطورٌ عن الشّيخ المحدّث عبد العزيز الدهلوي، رحمه الله رحمة واسعة، أسعدني الله بزيارة ضريحه فى مدينة دهلي فى الهند، هو العالم النِّحرير ، الألمعيّ البصير، وحيدُ زمانه وفريد أوانه، البحر الزاخر، الحِبرُ الماهر، نقّاشُ الحديث النبويّ عبد العزيز الدهلوي،
அஷ் ஷெய்குல் முஹத்திது அப்துல் அஸீஸ் – ஹதீது கலை மேதை றஹிமஹுல்லாஹ் அவர்கள் டில்லியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் டில்லி மா நகரில் அவர்களின் கப்று ஷரீபை சந்திக்கும் வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.
அவர்கள் மிகப் பெரும் திறமை மிக்கவரும், அக்காலத்தில் அவர்களுக்கு நிகரில்லாதவர்களுமாவர். கல்வியில் கரை காண முடியாத பெருங்கடலாக விளங்கினார்கள். ஹதீதுக் கலையில் மிகப் பிரசித்தி பெற்று விளங்கினார்கள்.
“இலாஹ்” தொடர்பாக பின்வரும் தகவல்களைத் தந்தவர்கள் என்பதற்காக அவர்களைப் பற்றி சில வரிகள் எழுதினேன்.
டில்லியில் ஒரு ஹோட்டலில் நாங்கள் ஏழு பேர்கள் தங்கியிருந்து வலீமாரின் சமாதிகளைத் தரிசிப்பதற்காக டில்லி மா நகரம் சென்றோம். பல சமாதிகளுக்குச் சென்றோம். பல தர்ஹாக்களைத் தரிசித்தோம். நாங்கள் சென்ற தர்ஹாக்களில் எங்கேயோ ஓர் இடத்தில் எங்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, பணம், மற்றும் தஸ்தாவேஜுகள் – ஆவணங்கள் உள்ளடக்கிய கைப் பையை தவற விட்டுவிட்டார். எந்த இடமென்று அவருக்குத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த பிறகுதான் இந்த விடயம் எங்களுக்கு தெரிய வந்தது. அன்றிரவு சுமார் 12 மணியளவில் எங்கு போய் தேடுவதென்று யோசித்துக் கொண்டிருந்த சமயம் அங்கு எதிர்பாராமல் ஒருவர் வந்து தவறிப் போன கைப் பையை எம்மிடம் தந்தார்.
அவரிடம் நீங்கள் எங்கிருந்து இந்தப் பையை எடுத்தீர்கள்? நாங்கள் இங்கு தங்கியிருக்கும் செய்தி உங்களுக்கு எவ்வாறு தெரியும் என்று கேட்டோம். அவர் ஒரு கேள்விக்கும் பதில் தராமல் மௌனியாயிருந்தார். அவர் யாரென்று சொல்லாது போனதால் அவர் யாரென்று அறிந்து கொள்ள முடியாமற் போயிற்று.
அவருக்கு ஓர் அன்பளிப்பு கொடுகக் முயற்சித்தோம். அவர் எடுக்க மறுத்து விட்டு அவசரமாகப் போய்விட்டார்.
நான் என்னோடு இருந்தவர்களிடம் இவர் அஷ் ஷெய்கு அப்துல் அஸீஸ் நாயகம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறினேன்.
அவர் சென்றபின் கைப் பையை – மணிபேர்ஸை திறந்து பார்த்த போது அதிலிருந்த இந்தியப் பணம் 13,650 ரூபாயும், கடவுச்சீட்டும், மற்றும் ஆவணங்களும் அவ்வாறே இருக்கக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம். அல்ஹம்து லில்லாஹ்.
வலீமாரின் சக்திகளை எவ்வாறு சொல்வது? பாராட்டுவது?
واللهُ أصلُه الإلهُ، فحُذفت الهمزةُ وعُوِّضَ عنها حرفُ التّعريف،
الإله – اشتقاقُه مِن اَلَهَ بمعنى عُبِدَ، أو اَلِهَ إذا تحيَّرَ لهيمان العقول فى إدراك كنه ذاتِه، أو مِن اَلِهَتِ العُقولُ إذا سَكَنَتْ لإطمأنانِ القلوب بذكره، أو مِن اَلُهَ، إذا فَزِعَ بوُرودِ النّازلةِ لِفَزَع العائذ إليه، أو مِن لَاهَ، إذا احْتَجَبَ به عن الأبصار،
“இலாஹ்” என்ற சொல்லுக்கு ஐந்து வகையான பொருள் இருப்பதாக மேற்கண்ட மகான் அல்வலிய்யுல் காமில் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவீ அவர்கள் தங்களின் “அந் நபாயிஸுல் இர்திழியா” எனும் நூல் 5ம் பக்கத்தில் கூறியுள்ளார்கள்.
இது தொடர்பான விபரம் மேலே எழுதப்பட்டுள்ளது. நான் தமிழில் எழுதியுள்ள விபரம் போதாதென்று உலமாஉகளிலும், அறபுக் கல்லூரி மாணவர்களிலும் யாராவது கருதினால் நான் அறபியில் எழுதியுள்ள வசனங்களை திறமையுள்ள ஓர் “உஸ்தாத்” இடம் கொடுத்து விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். அல்லது என்னை நேரில் சந்தித்து தெளிவு பெற்றுக் கொள்ளுமாறும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வியும் பதிலும்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” لا إله إلا الله எனும் மூல மொழிக்கு – திருக்கலிமாவுக்கு நேரடிப் பொருள் “அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்று சொல்கிறீர்கள். அதேநேரம் அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்றும் பேசுகிறீர்கள். திருக்கலிமாவில் “இலாஹ்” என்ற சொல் தெளிவாக வந்திருக்கும் நிலையில் அதற்குரிய பொருள் கொடுக்காமல் அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை என்று நீங்கள் பேசுவது எந்த வகையில் சரி என்றும், நீங்கள் சொல்வதுபோல் ஒன்றுமே இல்லையென்று பொருள் கொள்வதாயின் திருக்லிமா لَا شَيْئَ – “லா ஷைஅ இல்லல்லாஹ்” என்று வந்திருக்க வேண்டுமென்றும் யாராவதொருவர் என்னிடம் கேட்பாராயின் அவரை நான் பாராட்டுவேன்.
ஏனெனில் அவர் நல்ல நோக்கமுள்ளவர். தனக்கு தெரியாத அறிவை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணம் உள்ளவர்.
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவர்களாயின் அறிவுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற இறை கட்டளையை பேணி நடப்பவர். இவர் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
உலமாஉகளில் இன்னும் சிலர் உள்ளனர். உருவமே இல்லாத பொறாமையை உருவத்தில் பார்க்க விரும்பினால் அந்தச் சிலரைப் பாரத்தாலே போதும். உலமாஉகளின் எதிரிகள் உலமாஉகள்தான். செங்கல் வியாபாரியுமல்ல. செருப்புத் தைக்கும் செம்மானுமல்ல.
இஸ்லாமிய வரலாற்றில் இறை ஞானிகளிற் பலர் கொல்லப்படுவதற்கும், நாடுகடத்தப்படுவதற்கும் காலாக இருந்தவர்கள் உலமாஉகளேயாவர். இது எனது கற்பனையல்ல. இது வரலாறு. வரலாற்று நூல்களை வாசிப்போர் தெரிந்த கொள்வர்.
உலமாஉகளிற் பலர் பொறாமையுள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்கிறார்கள் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள். இமாம் அவர்களின் “அல் யவாகீத்” எனும் நூல் முதலாம் பாகம் 13ம் பக்கத்தை புரட்டினால் உண்மை தெரியும்.
கேள்வி கேட்க நினைக்கும் சோதரா! நீ மிகவும் அவதானத்தோடு பின்வரும் விடயத்தை கவனி.
உனது கேள்வி நியாயமானது. சகோதரா! திருக்கலிமாவுக்கு “அல்லாஹ் அல்லாத எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்ற பொருளை நீ சரி காண்கிறாயா? இல்லையா? இதற்கு முதலில் பதில் சொல். உனது பதிலைக் கவனித்து உனக்கு விளக்கம் சொல்கிறேன்.
நீ திருக்கலிமாவுக்குரிய மேலே நான் சொன்ன பொருளைச் சரி கண்டால் – அதாவது அல்லாஹ்வான “இலாஹ்” தெய்வம் உண்டு என்று நீ நம்பினால் அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்பதை நீ நீச்சயமாக நம்பத்தான் வேண்டும். நீ நம்புவாய்.
அதெவ்வாறென்றால் அல்லாஹ் தானான அந்த “இலாஹ்” தெய்வங்கள் – விக்கிரகங்கள் சிருஷ்டி – படைப்பு என்பதை நீ ஏற்றுக் கொள்வாய். அதை உன்னால் மறுக்க முடியாது.
இவ்விடத்தில் நீ ஒரு பொது விதியை தெரிந்து கொண்டால்தான் நான் சொல்லப் போவது உனக்குப் புரியும்.
ஒரு பொது விதி உண்டு. இதை விதியென்றும் சொல்லலாம். தத்துவமென்றும் சொல்லலாம். நீ எப்படியாவது வைத்துக் கொள்.
لَا فَضْلَ لِمُحْدَثٍ عَلَى مُحْدَثٍ مِنْ حَيْثُ الْحُدُوْثِ، وَإِنَّمَا الْفَضْلُ مِنْ حَيْثُ الصِّفَاتِ الْجَمِيْلَةِ،
(اليواقيت والجواهر، ج 1، ص 216، المبحث الثاني والعشرون)
ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்கு படைப்பு என்ற வகையில் சமமானதே! ஒரு படைப்பு இன்னொரு படைப்பை விட சிறந்ததென்பதும் அல்லது சிறந்ததில்லை என்பதும் அந்தப் படைப்பின் “ஸிபாத்” எனும் தன்மைகளைப் பொறுத்தேயாகும். இது பொது தத்துவம்.
ஆதாரம்: அல்யவாகீத்
பாகம் 01, பக்கம்216
உதாரணமாக உயிரினங்களில் மனிதன், மாடு, ஆடு, கோழி, பாம்பு, குரங்கு என்பவை படைப்பு என்ற வகையில் எல்லாமே ஒன்றுதான். அவற்றில் ஒன்றை மட்டும் குறித்து அது மட்டும்தான் படைப்பு மற்றது படைப்பில்லை என்று சொல்ல முடியாது.
ஆயினும் இவற்றில் சிறப்புள்ளது, சிறப்பில்லாதது என்பதைக் கணிப்பது அதன் தன்மையைக் கொண்டேயாகும். ஆனால் அவை எல்லாமே படைப்பு என்ற வகையில் ஒன்றுதான்.
சகோதரா! இந்த விடயத்தை நீ சரியாக விளங்கிக் கொண்டால் அல்லாஹ்வான “இலாஹ்” தெய்வம் யாவும் படைப்பு என்பதை நீ மறுக்கமாட்டாய்.
எனவே, திருக்கலிமாவில் “இலாஹ்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதுவும், ஏனைய அனைத்து படைப்புகளும் படைப்பு என்ற வகையில் ஒன்றுதான் என்ற அடிப்படையில் திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத எந்த வஸ்த்துமில்லை என்று பொருள் சொல்வது எந்த வகையில் பிழையாகும்?
எனவே மேற்கண்ட விபரத்தின்படி விக்கிரகங்கள் உள்ளிட்ட பிரபஞ்சமும், அதிலுள்ள யாவும் அல்லாஹ் தானானவை தான் என்பது தெளிவாகும். சிலைகளும், விக்கிரகங்களும், மற்றும் வணங்கப்படுகின்ற எப் பொருளாயினும், மற்றும் வணங்கப்படாத சாதாரண பொருளாயினும் இவையெல்லாம் அல்லாஹ் தானானவைதான் என்பதே எதார்த்தம்.
சகோதரா! திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத இலாஹ் – தெய்வம் இல்லையென்றும், அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்றும் பொருள் சொல்வது நூறு வீதம் சரியான தத்துவம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தொடரும்…