தொடர் – 33
சகோதரா! அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்று திருக்கலிமாவுக்குப் பொருள் கூறுவது சரியென்று சொல்வது போல் அல்லாஹ் அல்லாத எந்த வஸ்த்துமில்லை என்று சொல்வதும் சரிதான் என்ற உண்மையை நீ விளங்கியிருப்பாய். அல்ஹம்துலில்லாஹ்!
இன்னுமொரு விளக்கம் சொல்கிறேன். இதையும் கவனத்திற் கொண்டு சிந்திக்குமாறு உன்னை வேண்டுகிறேன்.
உலகிலுள்ள எந்த வஸ்த்துவாயினும் அசுத்தமான பிராணி என்று இஸ்லாம் கூறுகின்ற நாய், பன்றி உள்ளிட்ட பிராணிகளும் பாதணி, குடை, நீர், நெருப்பு, உணவு, பணம் போன்ற வஸ்த்துக்களும் – இவற்றில் ஒவ்வொன்றும் إله “இலாஹ்” என்றும், مَأْلُوْهْ “மஃலூஹ்” என்றும் சொல்வதற்கு தகுதியானவையாகும்.
“இலாஹ் – மஃலூஹ்” إله – مألوه என்று இரண்டு விடயம் உண்டு. “இலாஹ்” என்றால் ஒரு மனிதன் எதன்பால் தேவையாகின்றானோ அது அவனுக்கு “இலாஹ்” என்று சொல்லப்படும். தேவையுள்ளவனை مَأْلُوْهْ “மஃலூஹ்” என்று சொல்லப்படும். உதாரணமாக மனிதன் நீரின்பால் தேவையானால் நீர் அவனுக்கு “இலாஹ்” என்றும், அவனை مَأْلُوْهْ “மஃலூஹ்” என்றும் அறபியில் சொல்லப்படும். படைப்புகளில் ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் “இலாஹ்” ஆக இருப்பதற்கும், “மஃலூஹ்” ஆக இருப்பதற்கும் சாத்தியமுண்டு.
இவ்வாறு யார் எதன்பால் தேவையாகிறாரோ அது அவருக்கு “இலாஹ்”தான். அவர் “மஃலூஹ்”தான்.
இதை இப்படியும் சொல்லலாம். அதாவது مُحْتَاجْ என்றும், مُحْتَاجْ إِلَيْهِ என்றும் சொல்லலாம். مُحْتَاجْ என்றால் தேவை உள்ளவன் என்றும், مُحْتَاجْ إِلَيْهِ என்றால் தேவையை முடித்துக் கொடுப்பவன் என்றும் பொருள் வரும். உதாரணமாக அப்துல்லாஹ்வுக்கு நீர் தேவையானால் அப்துல்லாஹ் مُحْتَاجْ என்றும், தேவையுள்ளவன் என்றும், நீர் مُحْتَاجْ إِلَيْهِ தேவையை நிறைவேற்றுவது என்றும் சொல்லப்படும்.
இவ்வடிப்படையில் ஒரேயொருவன் ஒரே நேரத்தில் محتاج ஆகவும், محتاج إليه ஆகவும் இருக்கலாம். இதற்கு காரணம் தெய்வீகம் என்பது ஒவ்வொரு வஸ்த்திலும் செயல்படுவதேயாகும்.
இந்த விபரம் அறபு மொழியல்
إنّ جميعَ الأشياء إلهٌ من وجه، ومَأْلُوْهٌ من وجه آخر، فكلُّ صورة من وجهٍ مُحتاجَةٌ، ومن وجهٍ محتاج إليها، وذلك لِسِرِّ سَرَيانِ الألوهيّةِ فى كلِّ ذَرَّةٍ من الذَّرَّات الكونيّة، فسِرُّ الألوهيّة كالمَوْلُوْهِيّة سارٍ فى كلِّ ذرّة، فكلُّ شيئٍ إلهٌ من وجه ومألوه من وجهٍ،
كاحتياج الرجل الّذي أصابه البردُ إلى حرارةِ النّار، وكاحتياج الطالب المتعلِّمِ إلى المعلِّم فى تحصيل الكمالات العلميّة، واحتياج المعلِّم إلى المتعلِّم فى إفاضة فيوضاتِه العلميّة، وكاحتياج الفقير العائل إلى الغنيّ الباذل، واحتياج الغنيّ إلى الفقير لإظهار صفته الغِنى والجود والسخاء، فهو تعالى إله الفقير فى صورة الغنيّ، وللمتعلِّم فى صورة المعلِّم وللّذي أصابه البردُ فى صورة حرارة النّار،
உலகிலுள்ள எந்த வஸ்த்தாயினும் அது ஒரு வகையில் “இலாஹ்” ஆகவும், இன்னொரு வகையில் “மஃலூஹ்” ஆகவுமே உள்ளது. உலகிலுள்ள எந்த வஸ்த்தின் உருவமும் ஒரு வகையில் محتاج ஆகவும், இன்னொரு வகையில் محتاج إليه ஆகவுமே உள்ளது.
ஒவ்வொரு வஸ்த்தும் இவ்வாறு இருப்பதற்கு காரணம் – அதாவது ஒவ்வொரு வஸ்த்தும் ஒரே நேரத்தில் محتاج ஆகவும், محتاج إليه “முஹ்தாஜ் இலைஹி” ஆகவும் இருப்பதற்கு காரணம் அவற்றில் ஒவ்வொன்றிலும் தெய்வீக இரகசியம் இருப்பதேயாகும். அந்த இரகசியம் இருப்பதினால்தான் அதுவே – அவ் வஸ்த்துவே – அப்பொருளே இருக்கிறது. அல்லாஹ்வின் படைப்புக்களில், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும் தெய்வீக இரகசியம் இல்லாத ஒரு அணுவும் இல்லை. அணு அணுவாக இருப்பதுவே அதில் தெய்வீக இரகசியம் இருப்பதினால்தான். எந்த ஒரு வஸ்த்தாயினும் அது வஸ்த்தாக இருப்பதே அதில் தெய்வீகம் இருப்பதினால்தான்.
இறைவன் إلهٌ مُطْلَقٌ لا مُقَيَّدٌ கட்டுப்பாட்டிற்கு அப்பால், பரந்து விரிந்த கடல் போல் இல்லை அதைவிடப் பரந்து விரிந்த மெய்ப் பொருளான அந்த பரிசுத்த “தாத்”தின் வெளிப்பாடான படைப்பு சாதாரணமானதல்ல. குறிப்பாக மனித படைப்பு சாதாரணமானதல்ல.
இதனால்தான் படைப்பில் ஒவ்வொன்றும் இன்னொன்றின் பால் தேவையுள்ள مُحْتَاجْ ஆகவும், இன்னொன்றுக்கு அது தேவையான مُحْتَاجْ إِلَيْهِ ஆகவும் உள்ளது.
“தாத்” எனும் அந்தப் பெருங்கடல் தான் அறியப்பட வேண்டுமென்று விரும்பி வெளியான படைப்புத்தான் மனிதன். இன்ஸான். இவன் எண் சாண் உள்ளவன்தான். ஆயினும் இவன் தன்னை மூடியுள்ள அறியாமை எனும் திரையை அகற்றினால் அவன் அல்லாஹ்வின் பிரதிநிதி என்று அறிந்து கொள்வான்.
ஒவ்வொரு வஸ்த்தும் ஒரு வகையில் إلهٌ “இலாஹ்” ஆகவும், இன்னொரு வகையில் مَأْلُوْهْ “மஃலூஹ்” ஆகவுமே உள்ளது. இதேபோல் ஒவ்வொன்றும் محتاج ஆகவும், محتاج إليه ஆகவும் உள்ளது.
குளிரால் தாக்கப்பட்ட ஒருவன் நெருப்புச் சூட்டின்பால் தேவையாவது போலும், கல்வி கற்கும் மாணவன் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக ஓர் ஆசிரியரின் பால் தேவையாவது போலும், ஓர் ஆசிரியர் தன்னிடமுள்ள அறிவு ஞானங்களை வழங்குவதற்கு ஒரு மாணவனின் பால் தேவையாவது போலும், வறுமைப் பிடியில் மாட்டிக் கொண்ட ஓர் ஏழை அள்ளி வழங்கும் செல்வந்தன் பால் தேவையாவது போலும், ஒரு செல்வந்தன் தன்னிடமுள்ள செல்வத்தை வழங்குவதற்கு ஒரு ஏழையின் பால் தேவையாவது போலும் அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒவ்வொரு படைப்பும் இன்னொன்றின் பால் தேவையுள்ளதாயும், அதேநேரம் அந்தப் படைப்பின் பால் இன்னொரு படைப்பு தேவையுள்ளதாயுமே இருக்கின்றது. இந்த இணைப்பின்றி எதுவுமில்லை.
அல்லாஹ்வின் தத்துவத்தை என்னவென்று சொல்வது? எது இன்னொன்றின்பால் தேவையாகிறதோ அது அறபியில் مَأْلُوْهْ என்றும், எதனளவில் தேவையாகிறதோ (தேவைப்படும் பொருள்) إله என்றும் சொல்லப்படும். இதேபோல் எந்த வஸ்த்துக்கு எது தேவையோ அந்த வஸ்த்தின்பால் தேவையானது அல்லது தேவையானவன் مُحْتَاجْ என்றும், தேவையான பொருள் مُحْتَاجْ إِلَيْهِ என்றும் அறபியில் வழங்கப்படும்.
நான் இதுவரை கூறி வந்த விபரங்கள் மூலம் இஸ்லாமின் மூல மொழியான திருக்கலிமாவுக்கு அதன் நேரடிப் பொருளான அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்றும், அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்து இல்லையென்றும் பொருள் கூறலாம் என்பது தெளிவாகிவிட்டது.
இதேபோல் திருக்கலிமாவுக்கு “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்று பொருள் கூறுதல் மொழியிலக்கணச் சட்டத்திற்கு முரணானதென்பதும், திருக்கலிமா அருளப்பட்ட பிரதான இலட்சியத்துக்கு முரணானதென்பதும் தெளிவாகிவிட்டது.
ஒருவன் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று நம்புவதை விட்டு எல்லாம் அவனே என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் மட்டும்தான் அவன் விசுவாசியாவான்.
இந்த நம்பிக்கை இல்லாதவன் – அதாவது படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்றும், அவ்விரண்டிற்கும் “தாத்”துடன் சம்பந்தப்பட்ட தொடர்பு இல்லையென்றும் நம்புகிறானோ அவன் “காபிர்” என்பதில் நான் சந்தேகம் கொள்ளமாட்டேன்.
1979ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 42 ஆண்டுகளாக எனது சொந்த ஊரான காத்தான்குடியில் இருந்து கொண்டு இறைஞானம், ஸூபிஸம் தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்வுகளில் கலந்து உரையாற்றியுள்ளேன். எனினும் காத்தான்குடி மக்களில் அநேகர் என் அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை. இதே நேரம் இந்தியாவின் தமிழ் நாட்டிலும், கேரளா மாநிலத்திலும் வாழ்கின்ற உலமாஉகளிற் பலரும், பொது மக்களிற் சிலரும் என்னைக் காணாமலேயே CD மூலமும், நூல்கள் மூலமும் எனது கருத்துக்களை அறிந்து அவற்றை நம்பி என் கை பற்றி “பைஅத்” பெறாத “முஹிப்பீன்”களாகவும் இருந்து வருகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்!
எங்கெங்கோ வாழ்பவர்கள் பல கோடி ரூபாய்கள் செலவிட்டுப் பெற்றுக் கொள்ள முடியாத நான் பேசி வருகின்ற அதியுயர் தத்துவத்தை சரி கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் எனதூரில் பிறந்த எனது உறவினர்கள் கூட இத் தத்துவத்தை எதிர்த்துக் கொண்டும், எனக்கு எதிரான கூட்டத்துடன் இணைந்து செயல்படுவதும் எனக்கு வேதனையாயிருந்தாலும் “நக்குத் தின்பதற்கும் நஸீப் வேண்டும்” என்று யாரோ ஒருவன் கூறிய தத்துவத்தை அடிக்கடி நினைத்து நான் நிம்மதியடைந்து கொண்டு வாழ்கிறேன்.
அண்ணலெம்பெருமான், அஹ்மத் எங்கள் கோமான், நபீயே கரீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர் முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அவர்களை எமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய நேரத்தில்,
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا، خَيْرٌ لَكَ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
முஆதே! உங்களைக் கொண்டு – உங்கள் மூலம் அல்லாஹ் ஒரேயொரு நபரை நேர்வழிப்படுத்துவது இந்த உலகமும், இதிலுள்ளவையும் உங்களுக்கு சொந்தமாயிருப்பதை விடச் சிறந்ததென்று கூறிய போது தோழர் முஆத் மகிழ்ச்சி கண்ணீர் சிந்தி மன நிறைவு பெற்றார்கள். அவர்களுக்கு அன்று ஏற்பட்ட மன நிறைவோடு நான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனது பிரச்சாரத்தின் மூலம் ஒரேயொருவர் நேர்வழி பெற்றால் அதுவே எனக்குப் போதும். நபீ பெருமானின் வாக்குப்படி அண்ட கோடிகளையும் ஒரு பந்துபோல் சுருட்டிக் கைக்குள் அடக்கிய உணர்வு வந்து விடும்.
முல்லா மகான்கள் வழங்கிய “பத்வா”வினால் எனக்கு பொருளாதார இழப்போ, அது பற்றிய கவலையோ இல்லை. பத்வாவுக்கு முன்னிருந்த நிலையை விட ஸூபிஸ சமுகத்திற்கு எல்லா வளங்களும் நிறைவாகவே உள்ளன. ஸூபிஸ சமுகமும் பல் துறைகளிலும் பல படிகள் ஏறித்தான் உள்ளார்களே தவிர எவரும் இறங்கியதாக இல்லை.
“பத்வா” வழங்கிய ஆரம்ப கட்டத்தில் கல்வித் துறையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே ஸூபிஸ சமுகம் இருந்தது. அக்கால கட்டத்தில் படித்த மட்டம் என்னை விட்டும் தூரமாகியது. அதேபோல் பண முதலைகளும் தூரமாகின. அதேபோல் அரசியல்வாதிகளும் என்னைச் சந்திப்பதற்காக நள்ளிரவில் நடு நிசியில் முன் வழியால் வராமல் பின் வழியால் வந்து கொண்டிருந்த காலம். அதிபர் என்று ஒரேயொருவர் மட்டுமே ஸூபிஸ சமுகத்தில் இருந்தார். ஆசிரியர்களும் சிலர் மட்டுமே இருந்தார்கள். BA பட்டதாரியென்று ஒரே ஒருவர் மட்டுமே இருந்தார். உலமாஉகளில் பலர் ஒரு வழியில் என்னைக் கண்டால் அவர்கள் மறு வழியால் மாறுபவர்களாகவே இருந்தார்கள்.
இன்று ஸூபிஸம் எல்லாத் துறைகளிலும், எல்லா வளங்களிலும் முன்னேறி வெற்றி நடை போடுகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் நீதியாளன். அர்ஹமுர் றாஹிமீன்.
இன்று ஸூபிஸ சமுகத்தில் படித்தவர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் என்று பல்கலைப் பட்டதாரிகள் உள்ளனர். மகப்பேற்று சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் சிங்கப்பூரில் சேவை செய்கிறார். விமானி ஒருவரும் அவுஸ்திரேலியாவில் பணி செய்கிறார். இன்னும் ஒரு வருடத்தில் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரும் வர இருக்கிறார்.
இவ்வாறு அல்லாஹ் ஸூபிஸ சமுகத்தை கை விடவில்லை. கருணை மழை இறக்கிக் கொண்டே இருக்கிறான். “பத்வா”வினால் எனக்கேற்பட்ட இழப்பு பெறுதற்கரிய ஒரு பொக்கிஷத்தை பேச்சு மூலம் மக்களுக்கு பகிரங்கமாக திறந்து காட்ட முடியாமற் போனதேயாகும். எனினும் அல்லாஹ் நாடினால் இந்த வாய்ப்பும் கிடைக்கலாம்.
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ