“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 34

“அபூ குபைஸ்” மலையில் அண்ணலெம்பிரான்!
திருக்கலிமா அருளப்பட்டது எதற்காக?
விக்கிரக வழிபாட்டை ஒழிப்பதற்காகவா?
அல்லது “ஙெய்ரிய்யத்”தை அழித்து “ஐனிய்யத்”தை நிலை நாட்டுவதற்காகவா?

விக்கிரக வழிபாடு, சிலை வணக்கம், சிருட்டி வணக்கம் என்பவை எல்லாமே பிழைதான்.

நாற்பதாம் வயதில் நபீ பட்டம் தரித்த நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாமிய கன்னிப் பிரச்சாரத்திற்காக தெரிவு செய்த மலைதான் “அபூ குபைஸ்” மலை.

தங்களின் கன்னியுரை لا إله إلّا الله – அல்லாஹ் அல்லாத எந்த ஒரு தெய்வமுமில்லை, எந்த ஒரு வஸ்த்துவுமில்லை என்ற தத்துவமிக்க, புரட்சியான உரையாக அமைந்தது.

நாற்பதாண்டுகளாக மக்கத்து மக்களால் “அல் அமீன்” நம்பிக்கையாளர், “அஸ்ஸாதிக்” – உண்மையாளர் என்று போற்றிப் புகழப்பட்ட “மஹ்மூத்” நபீ, அல்லாஹ்தான் உள்ளான். அவனன்றி வேறொன்றுமில்லை என்ற தத்துவத்தை சொன்னதும் வெடித்தது புரட்சி. காத்தான்குடியிலும் இவ்வாறுதான் ஏகத்துவப் புரட்சியும், ஸூபிஸ தத்துவ புரட்சியும் வெடித்தது.

மலையடிக்கு வந்த மக்கத்து மக்கள் அங்கு வந்திருந்த மக்கத்து தலைவர்களான அபூ ஜஹ்ல், அபூ லஹப், உத்பா, ஷைபா போன்றோரைப் பார்த்தனர். செல்லுங்கள் என்று தலைவர்கள் தலை ஜாடை செய்தனர்.

கூட்டம் கலைகிறது. ஒருவன் إنّك ساحر كذّاب நீ பொய்யனும், சூனியக் காரனும் என்றான். இன்னொருவன் تبا لك ألهذا دعوتنا உனக்கு கேடு உண்டாகட்டும். இதற்காகவா எங்களை அழைத்தாய்? என்றான்.

இவ்விருவரும் என்ன காரணத்திற்காக அவ்வாறு இழித்துரைத்தார்கள் என்பது அறியப்படவில்லை.

எனினும் இன்னும் சிலர் பின்வருமாறு சொன்னவர்களாக மலையடிவாரத்திலிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் சொன்ன வசனம் பின்வருமாறு.


وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ (4) أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ (5) وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَى آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ (6) مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ (7)

(இதன் பொருள்) மேலும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர் – ஆகிய நீங்கள் அவர்களின் இனத்திலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இவர் பெரும் பொய்யரான சூனியக் காரர் என்றும் உங்களைப் பற்றி நிராகரிப்போர் கூறினர். என்ன இவர் நம்முடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை நிராகரித்துவிட்டு ஒரே ஒரு வணக்கத்துக்குரியவனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான் என்றும் கூறினர்.

அவர்களில் உள்ள தலைவர்கள் உங்கள் வழியில் சென்று விடுங்கள். இன்னும் உங்கள் தெய்வங்கள் மீது நீங்கள் உறுதியுடன் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக உங்கள் தெய்வங்களைக் கை விடும்படி கூறும் இக் கூற்றானது ஏதோ ஒன்றை சுய நலத்தைக் கருத்திற் கொண்டு நாடப்பட்டதாக உள்ளது என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்.

கடைசி மார்க்கமான கிறிஸ்தவ மதத்திலும் இது பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. இது இவரால் உண்டாக்கப்பட்ட பொய்யை தவிர வேறொன்றில்லை என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 38 – 04, 05, 06, 07)

38ம் அத்தியாயம், 04, 05, 06, 07 ஆகிய நான்கு வசனங்களுக்குமான மொழியாக்கம் ஸஊதி அரேபியாவின் வெளியீடான “தர்ஜமதுல் குர்ஆன்” எனும் திருக்குர்ஆனின் தமிழ் மொழியாக்க நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

இந்த மொழியாக்கத்தில் பிழை உண்டு என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அந்த மொழியாக்கத்தை இங்கு எழுதினேன்.

அந்த மொழியாக்கத்தில் பிழைகள் உள்ளன. நாலாம் வசனம் சரியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 5ம், 6ம் வசனங்களின் மொழியாக்கம் என்னைப் பொறுத்து திருப்தியானதல்ல. ஒரு தத்துவத்தை மறைக்கும் பாணியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் 5ம், 6ம் வசனங்களுக்கான பொருளை நான் அறிந்த வகையில் எழுதுகிறேன்.

5ம் வசனத்திற்கான பொருள்: எல்லா “இலாஹ்” தெய்வங்களையும் ஒரே தெய்வமாக முஹம்மத் ஆக்கிவிட்டாரா? இது ஆச்சரியமான விடயமாகும்.

6ம் வசனத்திற்கான பொருள்: அவர்களின் தலைவர்கள் அவர்களிடம், உங்கள் வழியில் நீங்கள் சென்று உங்கள் தெய்வங்கள் மீது உறுதியாக இருங்கள். இது நாடப்பட்ட விடயம். என்றார்கள்.

ஐந்தாம் வசனம் என்ன சொல்கிறதென்றால் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எல்லா “இலாஹ்” தெய்வங்களும் ஒரே தெய்வம்தான் என்று கூறியது அந்த மக்கத்து காபிர்களுக்கு வியப்பாகத் தெரிந்தது.

ஏனெனில் அவர்கள் அல்லாஹ் என்பவன் ஒரு தெய்வம் என்றும், அதேபோல் அல்லாத், அல் உஸ்ஸா, ஹுபல் முதலான ஒவ்வொன்றும் தனித்தனியான தெய்வங்கள் என்றும், அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதற்கு வேறானதென்றுமே நம்பியிருந்தார்கள். அல்லாஹ் தானான தெய்வங்கள் என்று நம்பியிருக்கவில்லை. இவ்வாறிருக்கும் நிலையில்தான் பெருமானார் அவர்கள் நீங்கள் வைத்துள்ள தெய்வங்கள் அல்லாஹ்வுக்கு வேறானவையல்ல, அவை யாவும் அல்லாஹ் தானானவைதான் என்று கூறியது நம்ப முடியாத ஒன்றாய்ப் போய்விட்டது.

இந்த விடயம் தெரியாதவர்களுக்கு வியப்பானதாகவே இருக்கும்.

உதாரணமாக அப்துல்லாஹ்வும், அப்துஸ்ஸமதும், அப்துல் கப்பாரும் ஒரே ஆள்தான் என்றால் இதை இலகுவில் எவரும் நம்பமாட்டார்கள். மூன்று பேரையும் தனித்தனி நபராகவும், ஒருவர் மற்றவருக்கு வேறானவராகவுமே பார்ப்பார்கள்.

அவர்கள் அந்த விக்கிரகங்களை அல்லாஹ்வுக்கு வேறானவையாகப் பார்த்தார்களேயன்றி அவற்றை அவன் தானானவையாகப் பார்க்கவில்லை.

கண்மணி நாயகம் அவர்கள் அல்லாஹ் என்ற தெய்வமும், ஏனைய பெயர்களில் அவர்கள் வைத்துள்ள தெய்வங்களும் “இலாஹ்” தெய்வங்கள்தான். ஆயினுமவை அல்லாஹ் எனும் தெய்வத்திற்கு மாறான, வேறானவையல்ல என்றே கூறினார்கள்.

ஒரு மனிதனின் தலை அவனுக்கு வேறானதல்ல, அவனின் கால் அவனுக்கு வேறானதல்ல, அவனின் கை அவனுக்கு வேறானதல்ல, இவ்வாறு மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் அவனுக்கு வேறானதல்ல என்ற இவ் உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இவ்வாறுதான் அல்லாஹ்வையும், அவன் படைப்பையும் நாம் பார்க்க வேண்டும், அறிய வேண்டும்.

இவ்வாறு அறிவதோடு மனிதனின் கை அவனுக்கு வேறானதல்ல என்றாலும் அவனின் கை அவனின் காலுக்கு வேறானதென்றும், அவனின் தலை அவனின் வயிற்றுக்கு வேறானதென்றும், அவனின் மூக்கு அவனின் நாக்குக்கு வேறானதென்றும் விளங்குவது தவறில்லை. ஆனால் அவனின் எந்த ஓர் உறுப்பும் அவனுக்கு வேறானதென்று நம்பவும் கூடாது, சொல்லவும் கூடாது.

இவ்வாறுதான் படைத்தவனும், படைப்புமாகும். படைப்பில் எந்தவொரு படைப்பாயினும் அது எந்த வகையிலும் படைத்தவனுக்கு வேறாக இருக்க முடியாது. படைப்பை படைத்தவனை விட்டும் பிரிக்கவும் முடியாது.

இவ்வாறுதான் அல்லாஹ்வும். காபிர்கள் வைத்திருந்த அல்லாத், அல் உஸ்ஸா, ஹுபல் போன்ற தெய்வங்களுமாகும். அவற்றில் ஒன்று மற்றதற்கு வேறானதாயிருந்தாலும் அவையாவும் படைப்பு என்ற வகையில் அவனுக்கு வேறானவையல்ல.

வணங்கப்படுகின்ற தெய்வங்கள் என்ற பெயரில் இருப்பவை மட்டும் அல்லாஹ்வுக்கு வேறானவையல்ல என்று விளங்கிக் கொள்ளலாகாது. அல்லாஹ் படைத்த எந்த ஒரு படைப்பாயினும் அது அல்லாஹ்வுக்கு வேறானதாயிருப்பது அசாத்தியமாகும்.

ஆணி இரும்புக்கு வேறானதென்று சொல்ல முடியுமா? நகை தங்கத்திற்கு வேறானதென்று சொல்ல முடியுமா? துணி பஞ்சுக்கு வேறானதென்று சொல்ல முடியுமா?

அல்லாஹ்வின் எந்த ஒரு படைப்பாயினும் அது இன்னொரு படைப்புக்கு வோறனதாக இருந்தாலும்கூட அது அல்லாஹ்வுக்கு வேறானதாயிருப்பது அசாத்தியமேதான்.

இதற்குக் காரணம் அல்லாஹ் தனது “தாத்”தைக் கொண்டு படைப்பாக வெளியாகியிருப்பதேயாகும்.

#அல்லாஹ்தாத்தைக் கொண்டே வெளியாகியுள்ளான். “ஸிபாத்” எனும் தன்மைகளை மட்டும் கொண்டல்ல.

அல்லாஹ் படைப்பாக வெளியாகியிருப்பது தனது “தாத்” கொண்டும், மற்றும் “ஸிபாத்” தன்மைகள் கொண்டுமேயாகும். இதுதான் உண்மை. இதுதான் எதார்த்தம்.

அல்லாஹ்வின் “தாத்”தை விட்டும் அவனின் “ஸிபத்” தன்மை என்பது ஒருபோதும் பிரியாது. பிரிவது அசாத்தியம்.

இதற்கு ஒரு பொது விதி உண்டு. اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ தன்மை என்பது எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் அது பிரியவுமாட்டாது. அதை விட்டும் அதைப் பிரித்தெடுக்கவும் முடியாது. இது அசாத்தியம்.

உதாரணமாக சீனியும், அதன் இனிப்பு போன்றும், மிளகாயும், அதன் உறைப்பு போன்றும், பாகற்காயும், அதன் கசப்பு போன்றும், புளியம் பழமும், அதன் புளிப்பு போன்றும், உப்பும் அதன் உவர்ப்பு போன்றுமாகும்.

சீனியின் “தாத்”தை விட்டும் அதன் இனிப்பையும், மிளகாயின் “தாத்”தை விட்டும் அதன் உறைப்பையும், இன்னுமிதுபோல் பாகற்காயை விட்டும் அதன் கசப்பையும், புளியம்பழத்தை விட்டும் அதன் புளிப்பையும், உப்பை விட்டும் அதன் உவர்ப்பையும் பிரிக்க முடியாதது போல் ஒன்றின் “ஸிபத்” தன்மையை அதை விட்டும் பிரிக்க முடியாது. இது “முஹால்” அசாத்தியமாகும்.

“ஸிபத்” என்றால் விட்டுப் பிரியாத தன்மை என்று விளக்கம் வரும். தன்மை என்பது ஒரு போதும் அது தனியே நிற்காது. மாறாக ஏதாவது ஒன்றைக் கொண்டுதான் அது நிற்கும். ஏதாவதொன்றை அண்டித்தான் அது நிற்கும்.

மேற்கண்ட உதாரணங்களில் கூறப்பட்ட இனிப்பு, உவர்ப்பு, உறைப்பு, கசப்பு, புளிப்பு, என்பன போன்று. இவையாவும் “ஸிபத்” விட்டுப் பிரியாத தன்மைகளாகும்.

இவ்வாறுதான் மனிதனின் “ஸிபத்” தன்மைகளுமாகும். மனிதனில் ஏழு “ஸிபாத்” தன்மைகள் உள்ளன. அவ்வேழும் அவனில்தான் இருக்குமேயன்றி அவற்றில் ஒன்றைக் கூட அவனை விட்டும் பிரிக்க முடியாது.

உதாரணமாக மனிதனின் சக்தி, நாட்டம், கேள்வி, பார்வை, அறிவு, பேச்சு, உயிர் என்பன போன்று. இவ் ஏழும் மனிதனின் “ஸிபாத்” தன்மைகளாகும். இவற்றை மனிதனை விட்டும் பிரித்தெடுக்க முடியாது.

இவ்வாறு இறைவனுக்கும் ஏழு தன்மைகள் உள்ளன. மேலே நான் எழுதிய மனிதனில் இருக்க வேண்டிய தன்மைகளே அவ் ஏழு தன்மைகளுமாகும். இவ் ஏழுடன் அவனில் விஷேடமாக படைத்தல் என்றும் ஒரு “ஸிபத்” தன்மை உண்டு. இவற்றில் ஒன்று கூட அல்லாஹ்வின் “தாத்”தை விட்டும் பிரிக்க முடியாது. நான் மேலே எழுதிக்காட்டிய اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ தன்மை என்பது அது எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் ஒரு போதும் பிரியாதென்ற பொதுவிதியை எல்லா விடயத்திலும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

எதார்த்தம் இவ்வாறிருக்கும் நிலையில் அல்லாஹ் படைப்பாக வெளியானான் என்றால் அவன் தனது “தாத்” கொண்டு வெளியாகாமல் “ஸிபத்” தன்மை கொண்டுதான் படைப்பாக வெளியானான் என்று சொல்வதும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்ததால் உலகிலுள்ள முயல்களில் ஒவ்வொன்றுக்கும் மூன்று கால்கள்தான் என்று பிடிவாதம் செய்வதும் அறிவுடைமையல்ல.

எனவே, அல்லாஹ் மனிதனாக வெளியானாலும், வேறெந்த படைப்பாக வெளியானாலும் அவன் தனது “தாத்”தைக் கொண்டுதான் வெளியாகிறானேயன்றி தனது “ஸிபத்” எனும் தன்மை கொண்டு மட்டும் வெளியாகவில்லை என்று சந்தேகமின்றி அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அபூ குபைஸ் மலையில் அண்ணலெம்பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறிய திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற தத்துவத்தைக் கேட்ட சிலர் மட்டும் எல்லாத் தெய்வங்களும் ஒரு தெய்வம்தான் என்று முஹம்மத் ஆக்கிவிட்டாரா? என்று வியந்து கூறினார்கள்.

இவ்வாறு மக்காவில் வாழ்ந்த அறபு மக்களிற் பலர் கூறினார்கள். அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்ற தகவலை மேற்கண்ட திரு வசனம் மூலம் அல்லாஹ்தான் சொல்லியுள்ளான்.

இவ்வாறு அந்த மக்கள் சொன்னதன் மூலம் அவர்கள் لا إله إلا الله எனும் மூல மொழி என்ன தத்துவம் கூறுகின்றதென்பதை சரியாகவே புரிந்திருந்தார்கள் என்பது விளங்கப்படுகின்றது.

அன்று மக்கத்து மக்கள் என்ன கொள்கையில் இருந்தார்களோ அதே கொள்கையில்தான் இன்று முஸ்லிம்கள் உள்ளார்கள் என்று சொல்ல வேண்டும்.

அன்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்கலிமாவை சொன்னபோது அவர்கள் – அந்தக் காபிர்கள் எல்லா “இலாஹ்” தெய்வங்களும் ஒரே “இலாஹ்”தான் என்று பெருமானார் கூறுகின்றார்கள் என விளங்கியதனால்தான் أجعل الآلهة إلها واحدا எல்லா “இலாஹ்” தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான் என்று கூறினர்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்ன போது அங்கு கூடி நின்ற மக்கா வாசிகளுக்கு கோபம் வந்ததற்கான காரணம் என்ன? என்று சற்று சிந்தனை பண்ணிப் பார்ப்போம்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தில் “அல்லாஹ் அல்லாத எந்த தெய்வமும் இல்லை” என்றுதான் கூறப்பட்டுள்ளதேயன்றி சிலை வணக்கம் கூடாதென்றோ, விக்கிரக வணக்கம் கூடாதென்றோ கூறப்படவில்லை.

இதன் மூலம் திருக்கலிமாவின் உயிர் வேற்றுமையை நீக்குவதேயன்றி விக்கிரக வணக்கத்தை ஒழிப்பதல்ல. அது இரண்டாவது விடயம்தான்.

ஏனெனில் திருக்கலிமாவிலோ, வேறு திரு வசனங்களிலோ அல்லது ஹதீதுகளிலோ வேற்றுமையை நீக்குவதற்கு முதல் சிலை வணக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று கூறப்பட்டதாக நான் அறியவில்லை.

عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ،

“காபிர்”கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சாட்சி சொல்லும் வரை அவர்களுடன் யுத்தம் செய்யுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்களேயன்றி குறித்த நபீ மொழியில் விக்கிரக வழிபாடு தொடர்பாக எதுவுமே கூறப்படவில்லை.

பெருமானார் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்ன போது இதற்காகவா எங்களை அழைத்தாய்? என்று மக்கத்து மக்களிற் சிலர் சொன்னதை விடுவோம். “ஸாஹிர்” சூனியக் காரர் என்று அவர்களிற் சிலர் சொன்னதையும் விடுவோம். பொய்யன் என்று அவர்கள் சொன்னதையும் விடுவோம்.

ஏனெனில் அவர்கள் பயன்படுத்திய வசனங்கள் மூலம் அவர்கள் அறிவிலிகளும், பொறாமைக் காரர்களும், “நஸீப்” எனும் நற்பாக்கியமற்றவர்களும் என்பது தெளிவாகிறது. ஆகையால் அவர்கள் சொன்னவற்றை நாம் கணக்கெடுக்காமல் அவற்றை விட்டு இன்னும் சிலர் சொன்னதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிய, மேலே நான் எழுதிக்காட்டிய வசனம் பற்றி மட்டும் ஆய்வு செய்வோம்.

நீண்ட வசனத்தை துண்டு துண்டாக எழுதி விளக்கி வைக்கிறேன். ஒன்று

أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا

என்பதாகும்.

முஹம்மத் தெய்வங்கள் எல்லாவற்றையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டாரா? என்று வியந்தார்கள்.

அவர்கள் திருக்கலிமாவின் வசனம் மூலம் அல்லாஹ் அல்லாத “இலாஹ்” தெய்வம் இல்லை என்ற தத்துவத்தை விளங்கிக் கொண்டார்கள்.

(தொடரும்….)