“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 35

இஸ்லாமின் மூல மந்திரமென்றும், மூல மொழி என்றும், திருக்கலிமா என்றும் சொல்லப்படுகின்ற لا إله إلا الله என்ற திரு மறை வசனத்திற்கு “அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை – நாயனும் இல்லை” என்றுதான் பொருள் கூற வேண்டுமென்றும், அதற்கு வலிந்துரை வைத்து பொருள் கொள்வது பிழை என்றும்,

அல்லாஹ் படைப்பாக “தஜல்லீ” வெளியானான் என்றால் அதன் சாரம் அவனே படைப்பாக தோற்றினான், தோற்றுகிறான் என்றும், படைப்பு அல்லாஹ் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்றும் நீங்கள் பேசியும், எழுதியும் வருகிறீர்கள்.

நீங்கள் சொல்வது போல் நம்பினவனை முஃமின் விசுவாசி என்றும், அவ்வாறு நம்பாதவனை விசுவாசியல்ல என்றும் கூறுகிறீர்கள்.

நீங்கள் சொல்வது போல் நீங்கள் குறித்த விபரப்படி அல்லாஹ்வை அறிந்து கொள்வது அனைத்து மக்களுக்கும் சாத்தியமானதல்ல. ஆயினும் மார்க்கம் படித்தவர்களுக்கும் – உலமாஉகளுக்கும், மார்க்கம் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கும், மற்றும் திறமையும், ஆர்வமும் உள்ளவர்களுக்கும் அது சாத்தியமான ஒன்றுதான்.

இந்த அடிப்படையில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் – மார்க்கம் கற்றவர்கள், கற்றுக் கொண்டிருப்பவர்கள் தவிர – “ஈமான்” இல்லாதவர்களாகவும், பாவிகளாகவும் மரணிக்க நேரிடுமல்லவா? இது வேதனைக்குரியதாயிற்றே! இதற்கு வழி என்ன? என்று ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்கு பின்வருமாறு நான் பதில் சொல்வேன்.

ஸூபிஸ வெளிச்சத்தில் நான் நின்று பதில் சொல்வதாயின் நான் மேலே எழுதியது போல் அல்லாஹ்வை அறிந்து நம்பினவன் மட்டும்தான் “முஃமின்” விசுவாசி என்று ஸூபீ மகான்கள் கூறுவர். ஸூபீகள் இறை கொள்கை விடயத்தில் கடும் போக்குடையவர்களாவர். எனினும் அவர்கள் உச்சக்கட்ட பேணுதல் உள்ளவர்களும், “ஷரீஆ”வை உயிராய் மதிப்பவர்களுமாவர். சிலர் ஸூபீகள் பற்றி அவர்கள் “ஷரீஆ”வை மதிப்பதில்லை என்று குறை சொல்கிறார்கள். குறை சொல்வோர் குறை குடங்கள். அவர்கள் நிறை குடங்களானால் நிறுத்திவிடுவார்கள். போலி ஸூபீகள் பற்றி எனக்குத் தெரியாது. நான் சொல்வது உண்மையான ஸூபீகளையே.

ஸூபீ மகான்களிடம் ஒவ்வொரு முஸ்லிமும் “தரீகா” வழி செல்வது கடமையாகும்.

மேலே குறித்த கேள்விக்கு “ஷரீஆ”வின் வெளிச்சத்தில் பதில் சொல்வதாயின் எப்போது ஒரு முஸ்லிம் பருவமடைகிறானோ, வயது வந்தவனாகிறானோ அன்றிலிருந்து அவன் மீது “ஷரீஆ” கடமையாகிறது. அதேபோல் “தரீகா”வும் – இறைஞானமும் கடமையாகிறது.

ஷரீஆவின் வெளிச்சத்தில் ஒருவன் எந்த அளவு “அகீதா” கொள்கையில் அல்லாஹ் பற்றி அறிந்திருக்க வேண்டுமோ அந்த அளவு அறிந்திருத்தல் அவன் மீது “வாஜிப்” கடமை. அதற்கு அதிகமாக அறிந்திருப்பது அவன் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.

“ஷரீஆ” கூறிய அளவு “அகீதா” கொள்கையை அறிந்து கொள்ளாதவன் கடமையை விட்ட பாவியாவான்.

“அகீதா” நூல் எதை எடுத்தாலும் அதில் பின்வருமாறு இருக்கும்.

يَجِبُ عَلَى كُلِّ مُكَلَّفٍ عَاقِلٍ بَالِغٍ أَنْ يَعْرِفَ مَا يَجِبُ لِمَوْلَانَا عَزَّ وَجَلَّ وَمَا يَسْتَحِيْلُ عَلَيْهِ وَمَا يَجُوْزُ لَهُ،

அதாவது வயது வந்த புத்தியுள்ள முஸ்லிம்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” அவனில் கட்டாயம் இருக்க வேண்டிய தன்மைகளையும், அவனுக்கு “முஸ்தஹீல்” அவனில் இருக்க முடியாத தன்மைகளையும், அவனில் இருப்பதும், இல்லாதிருப்பதும் சமமான தன்மையையும் அறிவது “பர்ழ் ஐன்” தொழுகை போன்ற கட்டாயக் கடமையாகும். கடமை செய்யாதவன் தண்டனைக்குரிய குற்றவாளியாவான். இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் எத்தனை வீதமானோர் இவ்விபரத்தை அறிந்தவர் இருப்பார்களென்று கணக்கிட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

உலமாஉகள், மார்க்க கல்வி கற்கும் மாணவர்கள் தவிர ஏனையோரில் 75 வீதமானவர்கள் இந்த விபரம் தெரியாதவர்களாகவே இருப்பர். இவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகளே!

இஸ்லாமிய சமுகம் இறை கொள்கையில் இந்த அளவு பின் தங்கிய நிலையில் இருப்பதை எண்ணி நான் கவலையடைகிறேன். என் போன்றவர்களும் கவலைப்படுவார்கள். முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் கலந்து வாழ்ந்தாலும், அல்லது தனி முஸ்லிம் ஊரில் வாழ்ந்தாலும் அல்லது காட்டுப் புறங்களில் வாழ்ந்தாலும் கடமை கடமைதான். மனிதன் ஒருவன் கூட இல்லாத காட்டில் வாழ்பவனின் கதை வேறு. அவனுக்கு சட்டமும் வேறுதான்.

வேதனையான விடயம் என்னவெனில் முஸ்லிம்கள் “அகீதா” கொள்கையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பது பகிரங்கமாக அனைவரும் அறிந்த விடயமாயிருக்கும் நிலையில் அகில இலங்கை உலமா சபை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்களோ? இவர்களை விடுவோம். இவர்கள் யாருக்கவாது “முர்தத்” பத்வா வழங்குவதென்றால் மட்டும்தான் விசர்நாய் போல் அங்குமிங்கும் ஓடியலைந்து நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது “ஹலால்” நற்சான்றிதழ் வழங்குவதென்றால் மட்டும்தான் ஓடித்திரிவார்கள். தீனை உயிர்ப்பிக்கவோ, மக்களுக்கு கொள்கையை விளக்கி வைப்பதற்கோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். அவர்களுக்கு பொது வேலைகளை விட சொந்த வேலைகள்தான் அதிகம். அவர்களால் மக்களுக்கு கொள்கையை விளக்கி வைப்பதாயினும் வஹ்ஹாபிஸக் கொள்கையை மட்டும் விளக்கி வைக்க முடியும். அவர்களுக்கு சரியான கொள்கை ஒன்றுமே தெரியாது. “பத்வா” வழங்கிய “முனாபிக்”குகளுக்கான சோதனை அல்லது தண்டனை காலம் வெகு தொலைவில் இல்லை.

இதேபோல் ஏனைய ஊர்களில் வாழும் முஸ்லிம்களும் “அகீதா” கொள்கை விடயத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளார்கள். அவர்களைக் கூட அவர்களின் ஊர்களில் உள்ள உலமாஉகள் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

உலமாஉகள், மார்க்கம் படிக்கும் அறபுக் கல்லூரி மாணவர்கள் தவிரவுள்ள அனைவரும் நான் மேலே எழுதிய அல்லாஹ் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

பச்சைக் கிளி போல் 41 “ஸிபத்”துகளுக்கான சொற்களை மட்டும் மனனம் செய்யாமல் ஒவ்வொரு சொற்களையும் சரியாக விளங்கி அறிய வேண்டும். அறிவதே அவசியம். மனனம் செய்வது அவசியமில்லை.

உதாரணமாக அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான – அதாவது அவனில் அவசியம் இருக்க வேண்டிய பன்புகள் இருபதையும் விளங்கி அறிய வேண்டும். சொற்களை மனனம் செய்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. விஷயத்தை விளங்கியிருந்தால் போதும். விளங்கியவன் பாவத்திலிருந்து தப்பிக் கொள்வான்.

அல்லாஹ்வின் “வாஜிப்” ஆன 20 தன்மைகளையும் விளங்கி அறிவதுடன் “முஸ்தஹீல்” அவனில் இருக்க முடியாத தன்மைகள் 20 ஐயும், அவனுக்கு “ஜாயிஸ்” இருப்பதும், இல்லாதிருப்பதும் சமமான ஒரு தன்மையையும் மொத்தம் 41 தன்மைகளையும் விளங்கி அறிந்திருத்தல் அவசியம்.

இதேபோல் நபீமார்களுக்கு அவசியமான தன்மைகளை அதாவது அவர்களில் அவசியம் இருக்க வேண்டிய தன்மைகளையும், அவர்களில் இருக்க முடியாத தன்மைகளையும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

இன்னுமிதுபோல் மலக்குகளில் அவசியம் இருக்க வேண்டிய பன்புகளையும், அவர்களில் இருக்கக் கூடாத பன்புகளையும் அறிந்திருத்தல் அவசியமாகும். அதாவது வயது வந்த ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

மேலே நான் எழுதிய விடயங்களை விளங்கி அறிந்திருப்பது வயது வந்த ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். உலமாஉகளுக்கு மட்டும் இவை கடமையென்பது கருத்தல்ல. ஆயினுமவர்கள் “அவாம்முன்னாஸ்” என்றழைக்கப்படுகின்ற பொது மக்களை விட கூடுதலாக அறிந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட விபரப்படி கொள்கையை அறியாதவன் குற்றவாளியேதான். இதில் மாற்றமில்லை.

முஸ்லிம்களின் தாய்ச் சங்கமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும், மற்ற ஏனைய உலமா சபைகளும் ஒன்றிணைந்து நாட்டில் வாழும் வயது வந்தவர்களுக்கு மட்டுமாவது அல்லாஹ் பற்றிய அறிவை “ஷரீஆ”வின் மட்டத்திலாவது கற்றுக் கொடுத்து அவர்களைப் பாவத்திலிருந்து பாதுகாப்பது உலமாஉகளின் கடமையே தவிர அரசாங்கத்தின் கடமையோ, அமைச்சர்களின் கடமையோ, செல்வந்தர்களின் கடமையோ அல்ல.

மக்களுக்கு “அகீதா” கொள்கை விளக்கம் கொடுப்பதாயினும் “அஷ்அரிய்யா” கொள்கை விளக்கம் மட்டுமே கொடுக்க வேண்டும். அதோடு ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கமும் கொடுக்க வேண்டும்.

இன்று இப்னு தைமிய்யாவினதும், இப்னு அப்தில் வஹ்ஹாபினதும் கொள்கை வழி செல்லும் வஹ்ஹாபிகள் தமது கொள்கையை வளர்ப்பதற்கும், தமது கட்சியைப் பலப்படுத்துவதற்கும் கடும்பாடு படுகிறார்கள். பேச்சு மூலமும், எழுத்து மூலமும் கொள்கை பரப்பும் நடவடிக்கைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு கூட்டம்.

“தப்லீக் ஜமாஅத்” அமைப்பைச் சேர்ந்தோர் இன்னோர் கூட்டம். இவ்வாறு பல கொள்கையுடைய பல கூட்டங்கள் நாட்டில் நடமாறுகின்றன. இவையாவும் ஏதோ ஓர் வகையில் வழிதவறிய கூட்டங்களேயாகும்.

அறிஞர்களுள் பொறுக்கியெடுத்த, தலை சிறந்த, ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா ஆகிய நாற்பெரும் கடல்களிலும் மூழ்கியெழுந்த பேரறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்னவெனில் “அஷ்அரிய்யா” கொள்கை வழியும், “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழியும், ஸூபிஸ ஞான வழியுமே ஒரு மனிதனின் மோட்சத்திற்கு உகந்த வழி என்பதாகும். (தொடரும்….)