“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 36

நாம் அனைவரும் இறைவனையே பார்க்கிறோம். ஆனால் நம்மில் சிலர் மட்டுமே இறைவனாக பார்க்கிறார்கள்.

உலகில் தோன்றி மறைந்த, இதே நொடியில் தோன்றிக் கொண்டிருக்கின்ற, இதன்பிறகு தோன்றவுள்ளவை அனைத்தும் – படைப்புக்கள் யாவும் அல்லாஹ்வின் “மளாஹிர்” அவன் வெளியாகும் பாத்திரங்கள் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

“ளாஹிர்”, “மள்ஹர்”, “ளுஹூர்” என்று மூன்று அம்சங்கள் உள்ளன. இம் மூன்றையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இறைஞான வழி நடப்பவர்களில் பலர் இச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இச் சொற்கள் இறைஞானிகளினதும், ஸூபீகளினதும் கலைச் சொற்களாகும். இறைஞான வழி நடப்பவர்கள் அனைவரும் இச் சொற்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆயினும் இன்று தெரிந்தவர், தெரியாதவர் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.

“ளாஹிர்” ظَاهِرْ என்றால் வெளியானது அல்லது வெளியாகக் கூடியது என்று பொருள் “மள்ஹர்” என்றால் வெளியாகும் இடம் என்று பொருள். “ளுஹூர்” என்றால் வெளியாதல் என்று பொருள்.

இதை ஓர் உதாரணம் மூலம் கூறினால் விடயம் தெளிவினும் தெளிவாகிவிடும்.

உதாரணமாக தங்கம், மோதிரம் போன்று. அதாவது தங்க மோதிரம் என்பது போல். தங்க மோதிரம் என்ற இவ்வசனத்தில் மூன்று அம்சங்களும் உள்ளன.

வெளியானது தங்கமாதலால் அதற்கு “ளாஹிர்” வெளியானதென்று சொல்லப்படும். தங்கம் வெளியான இடம் மோதிரமாயிருப்பதால் அதை “மள்ஹர்” என்று சொல்லப்படும். தங்கம் மோதிரமாக வெளியாதல் என்பது “ளுஹூர்” என்று சொல்லப்படும்.

அல்லாஹ் மனிதனாக வெளியாகியுள்ளான் என்ற உதாரணத்தில் வெளியானவன் அல்லாஹ்வாக இருப்பதால் அவனை “ளாஹிர்” என்று சொல்வோம். மனிதனை “மள்ஹர்” என்று சொல்வோம். அல்லாஹ் மனிதனாக வெளியானதை “ளுஹூர்” என்று சொல்வோம்.

இறைஞானம், “வஹ்ததுல் வுஜூத்” பேசிய முன்னோர்கள் நான் மேலே சொன்னது போல் அறபுச் சொற்களுக்கான சரியான மொழியாக்கம் சொல்லிக் கொடுக்காமல் அறபு மொழியிலேயே ஞானக் கலைச் சொற்களைப் பயன்படுத்தி பேசி வந்ததால் முரீதுகளான சிஷ்யர்களுக்கு ஒன்றுமே புரியாமல் காலம் கழித்துவிட்டார்கள். சிலரைத் தவிர.

ஆயினும் படித்த சிலரும், சிந்தனைத் திறனுள்ள சிலரும் அவர்களின் திறமைக்கேற்ப புரிந்து கொண்டார்கள்.

ஒருவன் பிறந்தது முதல் அவன் எத்தனை வருடங்கள் வாழ்ந்து மரணித்தாலும் கூட அவன் ஸூபிஸ வழியிலும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானவழியிலும் செல்லவில்லையானால் அவன் வாழ்ந்த வாழ்க்கை மிருக வாழ்க்கை என்றே நான் கூறுவேன்.

இந்த நபீ மொழி பற்றி உலமாஉகளின் கருத்து என்ன?

عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ» (المعجم الكبير للطبراني)

தாயிப் யுத்தம் ஆரம்பமான அன்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பகல் முழு நேரமும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் றஸூலே! இன்று நீண்ட நேரம் அலீ அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தீர்களே! என்று கூறினார்கள்.
«مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ»
நான் அலீயுடன் பேசவில்லை. அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்று கூறினார்கள்.
ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர், ஆசிரியர்: தபறானீ

இந்த நபீ மொழியின் சுருக்கம் என்னவெனில் பகல் முழு நேரமும் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்பதை ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளிட்ட அங்கு நின்றிருந்த அனைவரும் நன்கறிவர். அலீ அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது யாரென்று கேட்டால் றஸூலுல்லாஹ் அவர்கள்தான் என்று அனைவரும் சொல்வார்கள். இது அனைவரும் அறிய நடந்ததேயன்றி இரகசியமாக நடைபெறவில்லை.

அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பேசியது நான் அல்ல அல்லாஹ்தான் என்று திட்டமாகக் கூறினார்கள் பெருமானார்.

இந்த ஹதீதின்படி பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொல்லிவிட்டார்கள். ஆகையால் அவர்களுக்கு என்ன “பத்வா” கொடுப்பதென்று அவர்களில் எவரும் நினைக்கவில்லை.

நமது இலங்கை நாட்டு அல்லாமா மௌலானா மௌலவீ ரிஸ்வி அவர்களும், அவரின் “பாடிகார்ட்”களான “பத்வா” குழுவும் அந்நேரம் அங்கிருந்திருந்தால் உடனே “பத்வா” எழுதியிருப்பார்கள். அதோடு முப்திகளின் கதையும் அன்றே முடிந்திருக்கும்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஆன்மிக நிலைகளை அறியாதவர்கள் வஹ்ஹாபிகள் போல் அவர்களைத் தரக்குறைவாக எடை போட்டுவிடுவார்கள். அல்லது யாரோ ஒருவன் சொன்னது போல் பெருமானாருக்கு ஈமானைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தவன் ஒரு யஹூதீ என்று சொல்லிவிடுவார்கள்.

ஹதீதுகளுக்கு விளக்கம் சொல்பவர் எவராயினும் அவர் எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்து கலாநிதி பட்டம் பெற்றிருந்தாலும் அவர் பெருமானாரின் ஆன்மீக நிலைகளை அறியாத வரை ஹதீதுகளுக்கு உரிய விளக்கம் கொடுக்க அவரால் முடியாமற் போய்விடும். அதாவது தவறான விளக்கம் கொடுக்க நேரிடும்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஆன்மீக நிலைகளைக் காட்டக் கூடிய பல ஹதீதுகள் உள்ளன. அவை யாவையும் இங்கு எழுதத் தேவையில்லை. ஆயினும் ஒரேயொரு ஹதீதை மட்டும் சுருக்கமாக எழுதுகிறேன்.

ஆன்மீக நிலைகளைக் குறிக்கும் ஹதீதுகள் அனைத்தையும் வாசகர்கள் ஒரே நூலில் பார்த்தறியும் வகையில் ஒன்று திரட்டி எழுத நாடியுள்ளேன். அங்கு விரிவாக எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.

ஒரு ஹதீது:

இந்த ஹதீது பெருமானாரின் ஆன்மிக நிலையை – “பனா” உடைய நிலையை காட்டும் ஹதீதாகும்.

ஒரு சமயம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுடன் திரு மதீனா நகர் பள்ளிவாயலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

முன்பின் எந்த அறிவித்தலுமின்றி திடீரென்று எழுந்து அவசர தேவையொன்றுக்குச் செல்பவர்கள் போல் விரைவாக நடந்து சென்றார்கள். அங்கிருந்த நபீ தோழர்கள் சலம் கழிக்கச் செல்கிறார்களோவென்று எண்ணிக் கொண்டார்கள்.

பெருமானார் திரும்பி வரத் தாமதமாயிற்று. இருந்தவர்களுக்கு ஒரு வகை அச்சம் ஏற்பட்டது. இந்த ஹதீதை அறிவிக்கின்ற ஸெய்யிதுனா அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள், நான்தான் முதலில் பயந்தேன் என்று கூறுகிறார்கள்.

பள்ளிவாயலில் இருந்த நபீ தோழர்கள் பெருமானாரைத் தேடி பல வழிகளாலும் கலைந்து சென்றார்கள். எங்குமே எம் பெருமானாரைக் காணவில்லை.

எதிரிகளின் சதியோவென்று சந்தேகப்பட்டவர்களாக அழுதழுது தேடியலைந்தார்கள்.

தோழர் அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வழியாக தேடி வரும் வேளை பேரீத்த மரத் தோட்டம் ஒன்று அவருக்கு தெரிந்தது. அண்ணல் நபீ அதனுள் சென்றிருப்பார்களோ என்று நினைத்த அபூ ஹுறைறா தோட்டத்தினுள்ளே செல்ல வழியுண்டா? என்று தேடிப் பார்த்தார் கிடைக்கவில்லை.

எனினும் வெளியிலிருந்து தோட்டத்திலுள்ள மரங்களுக்கு நீர் செல்வதற்காக சிறிய துவாரம் ஒன்று மட்டும் சுவரில் இருந்தது. அவ்வழியால் பெருமானார் உட் சென்றிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் அவரும் அவ்வழியால் உட்செல்ல முயற்சித்தார்கள். துவாரம் சிறியதாக இருந்ததால் ஒரு நரியானது எவ்வாறு தனது உடலை வளைத்தும், சுருக்கியும் செல்லுமோ அவ்வாறு சென்றார்கள்.

ஸுப்ஹானல்லாஹ்! அங்குதான் அண்ணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நின்றார்கள்.

தொடரும்…