தொடர் – 37
தோட்டத்தில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நின்றிருந்ததைக் கண்டதும் நீங்கள் அபூ ஹுறைறாவா? என்று கேட்டார்கள் பெருமானார். ஆம் என்றார் அபூ ஹுறைறா அவர்கள்.
அங்கு வேறெந்த உரையாடலும் இடம் பெறவில்லை. அண்ணலெம்பெருமான் தங்களின் இரு செருப்புக்களையும் கழட்டி அபூ ஹுறைறாவிடம் கொடுத்து “இவ்விரு செருப்புகளையும் எடுத்துச் செல். நீ போகும் வழியில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று தனது உள்ளம் உறுதி கொண்ட நிலையில் சாட்சி சொல்பவர் யாரைக் கண்டாலும் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்வீராக!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
பெருமானாரின் இரு செருப்புக்களையும் கையில் எடுத்துக் கொண்டு வந்த அபூ ஹுறைறா முதலில் சந்தித்தது ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தான். இது என்ன இரண்டு செருப்புக்கள்? என்று உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். இவ்விரண்டும் பெருமானாரின் செருப்புக்கள். என்னிடம் இரு செருப்புக்களையும் தந்து பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொல்லி அனுப்பி வைத்தார்கள். “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று தனது உள்ளம் உறுதி கொண்ட நிலையில் சாட்சி சொல்பவர் யாரைக் கண்டாலும் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்வீராக!” என்றார்கள்.
இது கேட்ட உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கோபம் கொப்பளித்தவர்களாக தங்களின் கையைப் பொத்தி அவரின் நெஞ்சில் குத்த அவர் மல்லாந்த நிலையில் கீழே விழுந்தார். அபூ ஹுறைறாவைப் பார்த்து திரும்பிச் செல்லுங்கள் என்று கூற, அவர்கள் மீண்டும் பெருமானாரிடம் அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள்.
கண்ணீர் வடித்தவர்களாக பெருமானாரிடம் சென்ற அபூ ஹுறைறாவிடம் என்ன நடந்தது என வினவினார்கள் அண்ணலெம்பெருமான் அவர்கள். நான் முதலில் சந்தித்தது உமர் அவர்களைத்தான். அவர்களிடம் நீங்கள் கூறியதைச் சொன்ன வேளை அவர் என்னை அடித்து நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று அனுப்பி விட்டார்கள் என்று கூறினார்கள்.
அங்கு வந்த உமர் அவர்களைப் பார்த்து பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்? அடித்தீர்கள் என்று கேட்க, உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நீங்களா அபூ ஹுறைறாவை இரு செருப்புக்களையும் கொடுத்து இவ்வாறு சொல்லும் படி அனுப்பி வைத்தீர்கள் நாயகமே? என்று கேட்டார்கள். ஆம் என்றார்கள் பெருமானார் அவர்கள். அல்லாஹ்வின் திருத்தூதரே! தாங்கள் அவ்வாறு சொன்னால் மக்கள் அதையே நம்பி இருந்துவிடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அவர்களை வணக்கங்கள் செய்ய விட்டு விடுங்கள் என்றார்கள். அப்போது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விட்டுவிடுங்கள். அவர்கள் நற்கருமங்கள் செய்யட்டும் என்று கூறினார்கள்.
சிந்தனைகளும் அவற்றுக்கான விளக்கங்களும்….
நபீ பெருமான் அவர்கள் சமுகத்தலைவர், இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. புனித இஸ்லாமிய மார்க்கத்தின் தாபகர். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பொருத்தமாக சட்டங்கள் சொல்லும் ஒரு நீதிவான். இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட பெருமானார் அவர்களின் பேச்சு, மற்றும் நடவடிக்கை யாவும் சரியானவையாகவும், சந்தர்ப்ப சூழ் நிலைகளைப் பேணியவையாகவும் இருக்க வேண்டும்.
நபீ பெருமானின் நடைமுறைகள் சமுகத்தின் பார்வையில் வித்தியாசமானதாகவும், பொருத்தமற்றதாகவும் தெரிகின்றன.
சிலதை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
01. ஒரு சபையின் தலைவராயிருந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒருவர் சலம் கழித்தல் போன்ற ஒரு தேவைக்குப் போவதாயினும் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டுப் போவதே நல்ல நடைமுறை.
02. சபையில் பேசிக் கொண்டிருந்த பெருமானார் நீண்ட தூரம் நடந்து தோட்டத்திற்கு வர வேண்டிய எந்த ஒரு தேவையும் – அவசியமும் இல்லாத நிலையில் அவசரமாக தோட்டத்திற்கு வந்தமை.
03. தோட்டத்திற்குச் செல்வததற்கான வழிகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்த நிலையில் தோட்டக் காரர்களின் அனுமதியின்றி உள்ளே சென்றமை.
04. ஏதாவது அவசியத் தேவையிருந்து தோட்டத்தினுள்ளே போகத்தான் வேண்டும் என்ற எந்த ஒரு அவசர நிலையில்லாதிருந்தும் உடலை வருத்தி தோட்டத்துள் சென்றமை.
05. தோட்டத்துள் சென்ற அபூ ஹுறைறாவைக் கண்ட பெருமான் அபூ ஹுறைறாவா? என்று அவரிடம் கேட்டது.
06. எந்த ஒரு முன் தொடர், பின் தொடர் இல்லாமலும் தங்களின் செருப்பைக் கழட்டி அவரிடம் கொடுத்து “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னவனிடம் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லுங்கள் என்று சொன்னது.
07. நபீ பெருமானார் சொல்லுமாறு சொன்னதை அவ்வாறே பயன்படுத்திய பிரமச்சாரி அபூ ஹுறைறா அவர்களுக்கு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடித்தது.
08. இறுதியில் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆலோசனையை பெருமானார் சரி கண்டது.
மேற்கண்ட ஹதீதிலிருந்து நான் எழுதிக் காட்டிய ஆட்சேபனைகள், கேள்விகள் எழுகின்றன.
இவ்வாறான ஆட்சேபனைகளுக்கு இறைஞானிகளால் வழங்கப்பட்ட பொருத்தமான பதில்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.
விடை 01: முதலாம் கேள்விக்கான விடை என்னவெனில் நபீகள் நாயகம் அவர்கள் ஒரு நபீயாக இருந்ததால் அவர்களுக்கு எப்போது “வஹீ” வரும், எப்போது வராது என்பது நன்றாகத் தெரியும். அவர்கள் பள்ளிவாயலில் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் “வஹீ” வருவதற்கான அறிகுறி தென்பட்டதால் அவர்களின் முழுக்கவனமும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பியது جَذْبَةٌ إِلَهِيَّةٌ இறையீர்ப்பு அவர்களை அல்லாஹ்வில் லயிக்கச் செய்ததால் தன்னுணர்வை இழந்தார்கள். இதனால் பேணப்பட வேண்டிய நடைமுறையை அவர்கள் பேணாமல் விட்டார்கள்.
இரண்டாவது கேள்விக்கான பதில்: பெருமானார் எத்தேவையுமின்றி நீண்ட தூரம் நடந்து தோட்டத்திற்கு வர வேண்டியதாயிற்று. இது கூட “பனா” அல்லது “ஜத்பு” ஏற்பட்டதினாலுள்ள நடவடிக்கையேயாகும். எத்தேவையுமில்லாமல் தோட்டத்திற்கு வந்தார்கள் என்பது அறியாமையாகும்.
மூன்றாவது கேள்விக்கான பதில்: தோட்டக்காரனின் அனுமதியின்றி தோட்டத்தில் நுழைந்தது. அல்லாஹ்வில் “பனா” லயித்துப் போன ஒருவன், தன்னுணர்வை இழந்தவன் எது செய்தாலும் எதார்த்தத்தில் அவன் செய்வதில்லை. அவன் மூலம் அல்லாஹ்தான் செய்வான். அந்நேரம் அவனால் வெளியாகும் செயல்களுக்கோ, சொற்களுக்கோ எந்த ஒரு கேள்வியும் கிடையாது.
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ
அவன் செய்வது பற்றி கேட்கப்படாது. அவர்கள்தான் கேட்கப்படுவார்கள். (21-23)
இதன் கருத்து என்னவெனில் ஒருவன் அல்லாஹ்வில் “பனா” ஆனால் அவனால் ஏற்படுகின்ற செயலுக்கோ, சொல்லுக்கோ எந்த ஒரு கேள்வியுமில்லை. மனிதன் அல்லாஹ்வில் “பனா” ஆவதாயின் அவன் முதலில் உலகையும், உலகிலுள்ளவற்றையும், மற்றும் தன்னுணர்வையும் இழக்க வேண்டும்.
தொடரும்….