“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 38

திரு மதீனா பள்ளிவாயலில் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த பெருமானார் அவர்கள் திடீரென்று எழுந்து தோட்டம் ஒன்றில் மறைந்திருந்தது தொடர்பாக எழுதிய நான் நபீ பெருமான் அவர்கள் இந்த நிகழ்வின் போது நடந்து கொண்ட நடைமுறைகள் சமுகத்தின் பார்வையில் வித்தியாசமானதாகவும், பொருத்தமற்றதாகவும் தெரிகின்றன என்று நற்பாக்கியமற்ற சிலர் அவர்களைத் தப்பாகப் பேசுகிறார்கள் என்றும், இன்னும் சிலர் சந்தேகத்தை மனதுள் வைத்துக் கொண்டு தடுமாறுகிறார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

மூன்று சந்தேகங்களுக்கு மட்டும் தொடர் 38ல் விளக்கம் எழுதினேன்.

இங்கு மூன்றாவது சந்தேகத்தோடு தொடர்புள்ள ஒரு செய்தியையும் எழுதுகிறேன். எதை எழுதினாலும் அதில் ஒரு பாடமோ அல்லது பல பாடங்களோ நிச்சயமாக இருக்கும் என்பதை விளங்கி வாசிக்க வேண்டும்.

ஓர் இறைஞானி தனது சிஷ்யனான ஆசிரியர் ஒருவருடன் இன்னோர் இறைஞானியை சந்திக்கச் வெளியூர் சென்றார். அவர் அவ்வேளை இந்தியா சென்றிருந்தார். அவரைச் சந்திக்க முடியாது போனதால் அவரின் உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காக சிஷ்யனுடன் அவர் இருக்குமிடம் சென்றார். அவரும் ஒரு ஞானிதான். இவர் சிறிய ஞானி. இந்தியா சென்றிருந்தவர் பெரிய ஞானி.

சந்திக்கப் போனவரும், சிறிய ஞானியும் பேசிக் கொண்டிருக்கையில் போனவர் சிறிய ஞானியிடம், பெரியவரே! சிறிய சந்தேகம். கேட்கலாமா? என்று கேட்டார். ஆம் என்றார் அவர். அப்போது போனவர்

لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ

அவன் – அல்லாஹ் செய்வது பற்றிக் கேட்கப்படமாட்டாது. அவர்கள் – அடியார்கள் செய்வது பற்றிக் கேட்கப்படும் என்று அல்லாஹ் சொல்லியுள்ளான். இது பற்றி சற்று விளக்கி வையுங்கள் என்று போனவர் கேட்டார். சின்ன ஞானி அல்லாஹ் செய்வது பற்றி அவனிடம் யார் கேட்பது? என்று சின்னப் பிள்ளைத் தனமான பதில் கூறினார். போனவர் இன்னும் சற்று விளக்கமாக கூறுங்கள் என்றார். அப்போதும் அவர் முன்பு சொன்னது போலவே சொன்னார்.

போனவர் ஒன்றுமே பேசாமல் விடை பெற்று வெளியே வந்ததும் தன்னுடன் உதவிக்குச் சென்றிருந்த ஆசிரியரிடம் நான் இவரைப் பெரும் மலையென்று நினைத்தேன். இவர் கல் மலையல்ல. மண் மலை. நாம் ஊருக்குப் போனபின் சந்திப்போம் என்று கூறினார்கள். இருவரும் காத்தான்குடி வந்து மறுநாள் சந்தித்தார்கள்;.

ஆசிரியர் ஆலிம் அவர்களிடம் சின்ன ஞானி சொன்ன விளக்கம் பற்றிக் கேட்டார். ஆலிம் அவர்களுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. இவர்களெல்லோரும் பெரும் பெரும் பட்டம் பதவிகளில் இருப்பவர்களாயிற்றே! ஏன் அல்லாஹ்வை விட்டும் தூரப்பட்டவர்களாக உள்ளார்கள் என்று வேதனையுடன் சொல்லிவிட்டு சின்ன ஞானியிடம் கேட்ட கேள்வி பற்றி விளக்கம் கொடுத்தார்கள் ஆலிம்.

அல்லாஹ்வுக்கு இரு நிலைகள் உள்ளன. ஒன்று ஜமால், மற்றது ஜலால் என்று சொல்லப்படும். ஜமால் என்பது மென்மையையும், ஜலால் என்பது வன்மையையும் குறிக்கும்.

அல்லாஹ் சில நேரம் ஜமால் நிலையிலிருந்து பேசுவான். சில நேரம் ஜலால் நிலையிலிருந்து பேசுவான்.

அவன் செய்வது பற்றிக் கேட்கப்படமாட்டாது. அடியார்கள் செய்வது பற்றிக் கேட்கப்படும் என்றால் இங்கு ஒரு தத்துவம் சுட்டிக் காட்டப்படுகிறது. அதாவது ஓர் அடியான் அல்லாஹ்வை அறிந்து அவனை நெருங்கி அவனில் “பனா” ஆகிவிட்டானாயின் அவ் அடியானின் சொல் அல்லாஹ்வின் சொல்லாகவும், அவனின் செயல் அல்லாஹ்வின் செயலாகவும் ஆகிவிடும். அந்த “பனா” நிலை அடைந்து அடியான் செய்யும் செயலும், சொல்லும் வார்த்தைகளும் அல்லாஹ்வின் சொல்லாகவும், அல்லாஹ்வின் செயலாகவுமே இருக்கும். அடியான் அல்லாஹ்வாகிச் செய்கின்ற எந்த ஒரு செயலுக்கும், எந்த ஒரு சொல்லுக்கும் கேள்வியே கிடையாது. யார் யாரிடம் கேள்வி கேட்பதும், யார் யரைத் தண்டிப்பதும்?

لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ

என்ற வசனம் இத் தத்துவத்தையே உணர்த்துகிறதென்று ஆலிம் அவர்கள் ஆசிரியருக்கு விளக்கம் கொடுத்தார்கள். “பனா” நிலையில் செய்யப்படுகின்ற செயல் அல்லாஹ்வின் செயல் என்றால் அது “ஷரீஆ”வுக்கு முரணானதாயிருக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. ஏனெனில் அல்லாஹ் அநீதி செய்வதில்லை.

04. நாலாவது ஆட்சேபனைக்கான பதில். தோட்டத்துள் செல்வதாயினும், கோட்டைக்குள் செல்வதாயினும் உரியவனின் அனுமதி அவசியம்தான். ஆயினும் தவிர்க்க முடியாத இடத்தில் அது குற்றமாகாது. அவசர, அவசிய நிலை இருந்தால் சுவரை உடைத்துக் கொண்டேனும் உள்ளே செல்ல வேண்டும். நபீ பெருமானார் அவர்களுக்கு அந்தக் கட்டத்தில் இருந்த அவசரம் பற்றி நான் எழுதத் தேவையில்லை. அது இறைவனின் அழைப்பு. எதை உடைத்துக் கொண்டேனும் போயாக வேண்டும். அவர்கள் “மஹ்பூப்”. ஹபீபுடைய அழைப்புக்கு உடனே பதில் சொல்ல வேண்டும். “பனா” உடைய நிலையில் யாருக்கு யார் சட்டம் சொல்வது? حَبِيْبٌ وَمَحْبُوْبٌ وَمَا ثَمَّ ثَالِثٌ

05. ஐந்தாவது ஆட்சேபனைக்கான பதில். நபீ தோழர் அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏனைய தோழர்களை விட பெருமானாருக்கு மிக நெருங்கியவர்களாவர். பெருமானாருக்காகவே வாழ்ந்தவர்களாவர். அஹ்லுஸ்ஸுப்பா – أَهْلُ الصُّفَّةِ திண்ணைத் தோழர்களில் மிக முக்கியமானவர்களாவர். பெருமானாரோடு இராப்பகலாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தையே வெறுத்த ஒரு ஸஹாபீ. நபீ மொழி அறிவிப்பாளர்களில் அதிக ஹதீதுகளை அறிவித்த பெருந்தகை.

இவரின் வாடை பட்டாற் கூடப் போதும். பெருமானார் அபூ ஹுறைறா என்று விளங்கிக் கொள்வார்கள். நகமும், சதையும் போல் இருந்தவர்கள்.

இத்தகைய நெருக்கத்தோடும், நட்போடும் வாழ்ந்த அபூ ஹுறைறா அவர்கள் தோட்டத்துள் சென்ற போது யார் அபூ ஹுறைறாவா? என்று பெருமானார் கேட்டது பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும்.

பெருமானார் ஏன் அவ்வாறு கேட்டார்கள். தெளிவற்ற மயக்க நிலை. இறை போதை. அவர்களை நிலை குலையச் செய்தது. எங்கு பார்த்தாலும் وَجْهُ اللهِ அல்லாஹ்வின் திருக்காட்சி. கண்ணை மூடினாலும் காட்சி, கண்ணைத் திறந்தாலும் அதே காட்சி. எல்லாமே ஒளி மயம். شِدَّةُ النُّوْرِ ظُلْمَةٌ கடும் ஒளி இருள் என்ற தத்துவத்தைக் கருத்திற் கொண்டதினால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒளியின் உச்சிக்குச் சென்ற நேரமெல்லாம் أَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْمْ என்று சொல்லி கடும் ஒளியிலிருந்து இறங்கினார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي كُلِّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ»

எனது கல்பில் – உள்ளத்தில் ஒளியிலான இருள் சூழ்ந்துவிடுமாயின் நான் ஒரு நாளைக்கு நூறு தடவைகள் பாவ மன்னிப்புக் கேட்டு உச்சியிலிருந்து கீழே இறங்குகிறேன் என்று கூறினார்கள்.

அவர்கள் உச்சியிலிருந்து இறங்காது போனால் அவர்களுமில்லை. “உம்மதுன் இஸ்லாமிய்யா” இஸ்லாமிய சமுகமே இல்லை. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் اَلْحُجُبُ النُّوْرَانِيَّةُ ஒளித்திரைகளால் சூழப்பட்டிருந்ததால் அபூ ஹுறைறாவைக் கூட அவர்களால் அடையாளம் காண முடியாமற் போயிற்று.

06. ஆறாவது ஆட்சேபனைக்கான பதில். நபீ பெருமான் அவர்கள் தங்களின் செருப்பைக் கழட்டி அபூ ஹுறைறாவிடம் கொடுத்ததற்கான காரணம் அபூ ஹுறைறா பெருமான் அவர்களை நேரில் கண்டு கொண்டார்கள் என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்காகவேயாகும்.

இடைக்குறிப்பு:

(நான் கூறி வருகின்ற இந்த ஹதீது இன்னுமோர் அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது

அதாவது பெருமானார் அவர்கள் அபூ ஹுறைறாவிடம் செருப்பைக் கொடுத்து “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்ன அனைவரும் சுவர்க்கம் நுழைந்து விட்டனர் என்று சொன்னதைச் செவியேற்ற அபூ ஹுறைறா அவர்கள் وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى يا رسل الله அவன் திருடினாலும். விபச்சாரம் செய்தாலும் கூட சுவர்க்கம் செல்வானா? என்று கேட்டார்கள். ஆம் என்றார்கள் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம். இவ்வாறு மூன்று தடவைகள் சொன்னார்கள் எம் பெருமானார் அவர்கள்)

இவ்வாறு நபீகளார் ஏன் சொன்னார்களெனில் அவ்வேளை அவர்கள் அல்லாஹ்வின் பாவ மன்னிப்பு என்ற கடலில் மூழ்கியிருந்ததால் எக்குற்றமாயினும் அல்லாஹ் மன்னித்துவிடுவான் என்ற மேலான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் அவ்வாறு சொன்னார்கள். இதுவே “ஜமால்” உடைய நிலை எனப்படும்.

அல்லாஹ்வின் “ஜமால்” உடைய நிலையையும், “ஜலால்” உடைய நிலையையும் அவனின் வலீமார் நன்கறிவர்.

அல்லாஹ்வுக்கு மேற்கண்ட இரு நிலைகள் இருப்பது போல் அவ்விரு நிலைகளும் வலீமாருக்கும் உண்டு. “ஜலால்” உடைய நிலையில் அவர்களை நெருங்க முடியாது. நெருங்கவும் கூடாது. “ஜமால்” நிலையில் அவர்களுடன் செல்லமாகவும் பழகலாம். எப்படியும் பழகலாம்.

வலீமாரில் சிலர் “ஜமால்” நிறைந்தவர்களாகவும், வேறு சிலர் “ஜலால்” நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். பெருமானார் செருப்பை அவரிடம் கொடுத்து அவ்வாறு சொன்ன நேரம் அவர்கள் “ஜமால்” மிகைத்தவர்களாயிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடரும்..