“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 4

ஒரு பொருள் – ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தாவதாயின் அதற்கு மூன்று வழிகள் மட்டுமே உண்டு என்று கூறி அவற்றில் இரண்டு வழிகள் குறித்து கடந்த 03ம் தொடரில் விளக்கி எழுதி விட்டேன். இந்த நாலாம் தொடரில் மூன்றாவது வழி பற்றி ஆய்வு செய்வோம்.

ஒரு வஸ்த்து அல்லது ஒரு பொருள் இன்னொரு பொருளாவதாயின் அதற்கான மூன்றவாது வழி அந்தப் பொருள் அழியாமலும், மாறு படாமலும், விகாரப்படாமலும் அப்பொருள் இருந்தவாறே இருக்க இன்னொரு பொருளாதலாகும்.

இதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். ஆயினும் நான் மூன்று உதாரணங்கள் மட்டும் கூறுகிறேன்.

ஒன்று நபீ மொழியுடன் தொடர்புள்ளது. ஒரு சமயம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் திரு மதீனாப் பள்ளிவாயலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வேளை அங்கு ஒருவர் வந்தார். அவர் யாரென்று இருந்தவர்கள் எவருக்கும் தெரியவில்லை. அவர் உடுத்திருந்த உடைகள் கடும் வெள்ளை நிறமுடையதாக இருந்தன. அவரின் முடிகள் கடும் கறுப்பு நிறமுள்ளதாக இருந்தன.

வந்தவர் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நெருங்கி தனது முழங்கால் இரண்டையும் நபீயவர்களின் முழங்கால்களுடன் சேர்த்து அமர்ந்து தனது இரு கைகளையும் தனது தொடையின் மீது அல்லது நபீயவர்களின் தொடையில் வைத்துக் கொண்டு “ஈமான்” விசுவாசம் என்றால் என்ன? என்று கேட்டார். நபீயவர்கள் “ஈமான்”இன் ஆறு விடயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லி முடித்தார்கள்.

வந்தவர், صَدَقْتَ உண்மை சொன்னீர்கள். சரியாகச் சொன்னீர்கள் என்றார். தோழர்களுக்கு இவரின் நடவடிக்கை வியப்பாக இருந்தது. தெரியாதவர் போல் கேள்வி கேட்கிறார். தெரிந்தவர் போல் சரியாகச் சொன்னீர்கள் என்றகிறாரே! என்று வியந்தார்கள்.

மீண்டும் அவர் “இஸ்லாம்” என்றால் என்ன? என்று கேட்டார். நபீமணி அவர்கள் இஸ்லாமிய ஐந்து கடமைகளையும் சொல்லி முடித்தார்கள். அப்போதுமவர் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார். அப்போதும் தோழர்கள் வியந்தார்கள்.

மீண்டும் அவர், “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்டார். நபீ அவர்கள்,

أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،

நீங்கள் அல்லாஹ்வைக் காண்பவர் போல் – பார்ப்பவர் போல் அவனை வணங்க வேண்டும். நீங்கள் அவனைக் காணாது போனால் அவன் உங்களைக் காண்கிறான் என்று கூறினார்கள்.

மீண்டும் அவர் மறுமை நாள் எப்போது உண்டாகும் என்று கேட்டார். அதற்கு நபீ பெருமானார் அவர்கள்,

مَا الْمَسْئُوْلُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ

அது பற்றி கேட்கப்பட்டவரை விட கேட்டவருக்கு நன்றாகத் தெரியும் என்றார்கள்.

இந்த நபீ மொழி நீளமானது. அவை யாவையும் இங்கு சொல்லத் தேவையில்லை. அதற்கு உரிய இடம் வரும் போது சொல்வோம் இன்ஷா அல்லாஹ்.

வந்தவர் பேச்சு வார்த்தையை முடித்த பின் போய்விட்டார். நபீ பெருமான் தங்களின் தோழர்களிடம் வந்தவர் யாரென்று தெரியுமா என்று கேட்க, அவர்கள் الله ورسوله أعلم அல்லாஹ்வுக்கும், றஸூல் அவர்களுக்கும் தான் தெரியும் என்று சொல்ல, هَذَا جِبْرِيْلُ أَتَاكُمْ لِيُعَلِّمَكُمْ دِيْنَكُمْ இவர்தான் வானவர் ஜிப்ரீல். உங்களின் “தீன்” மார்க்கத்தை உங்களுக்குச் சொல்லித் தரவே வந்தார் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

இந்த நபீ மொழி மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. அவை யாவையும் விளக்கமாகச் சொல்ல வாய்ப்பு இல்லை. ஆகையால் அவசியம் தேவையானவற்றை மட்டும் எழுதுகிறேன்.

முதல் விடயம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்டதற்கு நபீகளார் பின்வருமாறு பதில் கூறினார்கள். “இஹ்ஸான்” என்றாலும், “இக்லாஸ்” என்றாலும் ஒன்றுதான். எனினும் “இக்லாஸ்” என்ற சொல் முஸ்லிம்களிடையே அறியப்பட்ட சொல்லாகும். ஒருவன் விசுவாசமின்றியும், கள்ளம், கபடத்தோடும், நயவஞ்சகத்தோடும் நடந்தால் அவர் பற்றிக் கூறுகையில் அவன் “இக்லாஸ்” இல்லாதவன் என்று மக்கள் சொல்வதுண்டு. தமிழில் தூய்மை, பரிசுத்தம், கலப்பற்ற நிலை என்று சொல்லலாம். பொதுவாக கள்ளம், கபடமில்லாத நிலைக்கு இக்லாஸ் எனப்படும்.

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபீ பெருமானிடம் “இக்லாஸ்” பற்றி கேட்டதற்கு,

أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ،

நீங்கள் அல்லாஹ்வை பார்ப்பவனைப் போல் அவனை வணங்குவதாகும். நீங்கள் அவனைக் காணவில்லையானால் அவன் உங்களைக் காண்கிறான் என்று கூறினார்கள்.

“இக்லாஸ்” என்றால் என்ன என்பதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அறபு மொழியில் சொன்ன மேலே எழுதிய பதில் நபீ அவர்களின் திரு வாயிலிருந்து வந்த பதிலாததால் எவருக்கும் அதில் திருத்தம் செய்யவோ, அதில் சந்தேகம் கொள்ளவோ முடியாது. இடமே இல்லை.

நபீ பெருமான் அவர்கள் என்ன கருத்தை தங்களின் மனதில் நினைத்துச் சொன்னார்களோ அதே கருத்தை இந்த ஹதீதுக்கு விளக்கம் சொல்பவர்களில் அநேகர் புரிந்து கொள்ளவில்லை என்பதும், நானும் புரிந்து கொள்ளவில்லை என்பதும் எனது கருத்தாகும்.

இந்த ஹதீதில் எனக்கு ஏற்பட்ட தெளிவின்மை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு உலமாஉகளிற் பலரிடம் நான் விளக்கம் கேட்ட வகையில் அவர்களில் எவரும் கூறிய பதில் என் தாகத்தை தீர்க்கவில்லை. இதுவரையும் நான் தாகம் தீராதவனாகவே உள்ளேன். என் தாகத்தை தீர்ப்பதாயின் “விலாயத்” ஒலித்தனமுள்ள, “இல்ஹாம்” என்ற அறிவு வழங்கப்பட்ட ஒரு மகானால் மட்டுமே முடியுமென்று நான் நம்புகிறேன். அத்தகைய ஒரு மகானைச் சந்திக்கும் வாய்ப்பை தருமாறு அல்லாஹ்விடம் இடையறாது பிரார்த்தனை செய்தவனாகவே உள்ளேன்.

ஆகையால் மேற்கண்ட இந்த ஹதீதிலிருந்து என் தலைப்புக்கு தேவையான ஆதாரத்துக்கான விளக்கத்தை மட்டும் எழுதுகிறேன். விளங்காததை விட்டு விடுகிறேன்.

நபீ பெருமானிடம் கேள்வி கேட்டு வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒளியினால் படைக்கப்ட்டவர்கள். அவர்களின் ஒளியுடலமைப்பு மிக வலுப்பமானதென்று கூறப்படுகின்றது. அவர்களுக்கு வலுப்பமான இரண்டு இறக்கைகள் இருந்ததாகவும், அவற்றில் ஓர் இறக்கையை மட்டும் அவர்கள் விரித்தார்களாயின் சூரிய வெளிச்சம் கூட பூமிக்கு வராமல் தடைப்பட்டுவிடுமளவு வலுப்பமான இரு இறக்கைகள் உள்ளவர்கள்.

இத்தகைய உடலமைப்பைக் கொண்ட ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித உடலெடுத்து வந்ததால் அவர்களின் இயற்கையான உடல் அழியவுமில்லை, மாறுபடவுமில்லை, விகாரப்படவுமில்லை. அவ் உடல் இருந்தவாறே இருக்கவே மனித உருவம் பெற்று வந்து மீண்டும் தனது இயற்கை உடலைப் பெற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறுதான் அல்லாஹ்வுமாவான். அவன் எத்தனை கோடி உருவங்களில் தோன்றினாலும், மலையாகவோ, கடலாகவோ, பூமியாகவோ, எவ்வளவுதான் பெரிய, சிறிய படைப்புகளாக தோற்றினாலும், தஜல்லீயானாலும் அவனுடைய “வுஜூத்” அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை.

இதற்கு இன்னுமொரு உதாரணம் எழுதுகிறேன். நாம் கனவில் காணுகின்ற காட்சிகள் யாவும் நமது “கல்பு” மனதின் காட்சிகளேயாகும். கனவில் கடலாக, மலையாக, மற்றும் நதிகளாக, பெரும் மாளிகைகளாகத் தோற்றுவது நமது மனமேயன்றி வேறொன்றல்ல. இதுவே எதார்த்தமும், தத்துவமுமாகும்.

இவ்வாறு கனவுலகில் மனம் தோற்றுவதால் அந்த மனம் அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை. அது எத்தனை உருவத்தில் தோற்றினாலும் அவ்வாறு தோற்றுவதற்கு முன் எவ்வாறிருந்ததோ அவ்வாறே அது இருக்கும்.

இதற்கு இன்னுமொரு உதாரணம் எழுதுகிறேன்.

بِذِكْرِ الْأَمْثِلَةِ تَتَبَيَّنُ الْأَشْيَاءُ

உதாரணங்கள் கூறுவதன் மூலம் விஷயங்கள் தெளிவாகுமாதலால் இன்னுமொரு ஆதாரம் மட்டும் எழுதுகிறேன்.

நாம் TV யில் பல்வேறு காட்சிகள் காண்கிறோம். பெரும் சனக் கூட்டத்தைக் காண்கிறோம். விலங்குகளைக் காண்கிறோம், கடல், ஆறு, குளம் போன்றவற்றையும் காண்கிறோம். இவ்வாறு பல்லாயிரம் காட்சிகள் காண்கிறோம்.

இக்காட்சிகள் யாவும் ஒளியின் உருவங்களேயாகும். ஒளிதான் அவ்வாறெல்லாம் தோற்றுகிறது. ஒளிக்கு அத்தகைய சக்தி உண்டு.

اَلنُّوْرُ يَتَشَكَّلُ بِأَشْكَالٍ مُخْتَلِفَةٍ

ஒளியானது பல உருவங்களில் தோற்றும் தன்மையுள்ளதாகும். ஒளியானது TV யில் பல உருவங்களில் தோற்றுவதால் ஒளி அழிந்து போவதுமில்லை. மாறுபட்டுப் போவதுமில்லை. விகாரப் பட்டுப் போவதுமில்லை.

அல்லாஹ்வின் “வுஜூத்” தனி ஒளியானதாகும். அவனுக்கு – அந்த வுஜூதுக்கு “அந்நூர்” ஒளியென்றும் ஒரு பெயருண்டு.

எனவே அது எத்தனை வஸ்த்துக்களாகத் தஜல்லீ – வெளியானாலும் அந்த வுஜூத் – உள்ளமை அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்பபடுவதுமில்லை. هُوَ الْآنَ كَمَا كَانَ அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இருக்க பல கோடிப் படைப்புக்களாக அதுவே வெளியாகி காட்சி வழங்குகிறது.

ஜிப்ரீல் என்ற அமரர் அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒரு படைப்பாவார். அவரின் இயற்கை உடலமைப்பில் எந்த ஒரு குறையும் ஏற்படாமல் பல உருவங்களிலும், பல தோற்றங்களிலும் அவர் தோற்ற முடியுமாயின்,

அதேபோல் கனவுலகில் மனிதனின் மனம் பல உருவங்களில் எந்த ஒரு குறைபாடுமின்றித் தோற்ற முடியுமாயின்,

அதேபோல் TV யில் நாம் காணுகின்ற காட்சிகளாகத் தோற்றுவது ஒளியேயன்றி வேறொன்றுமில்லை. அந்த ஒளிக்கு எந்த ஒரு குறைபாடுமின்றித் தோற்ற முடியுமாயின் ஒளியையும், மனதையும், ஜிப்ரீலையும் படைத்த அல்லாஹ்வுக்கு எந்த ஒரு குறையுமின்றி பல்வேறு தோற்றங்களில் தோற்றுவதற்கு முடியாதென்று எவ்வாறு கூற முடியும்?

அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் அவன் படைத்த அனைத்து படைப்புக்களாகவும் தோற்றுகிறதென்று நாம் கூறும் போது அவ்வாறு தோற்றுவதால் அவன் அழிந்துவிடவுமாட்டான், அவன் மாறு படவுமாட்டான், அவன் விகாரப்படவுமாட்டான். அவன் எவ்வாறு வெளியானாலும் அவனுக்கு எந்தக் குறையும் ஏற்படமாட்டாதென்று தெளிவாகவும், திட்டமாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.