தொடர் – 41
قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا
நபீயே! நீங்கள் கூறுங்கள். என் இரட்சகனின் வாக்கியங்களுக்கு – திரு வசனங்களுக்கு – அதை எழுதுவதற்கு கடல் நீர் யாவும் மையாக இருந்தாலும் என் இரட்சகனின் வாக்கியங்கள் எழுதி முடிவதற்கு முன்னதாகவே கடல் நீர் முடிந்து செலவாகிவிடும். அது போன்றதை – இன்னொரு கடலையும் நாம் உதவிக்கு கொண்டு வந்த போதிலும் சரியே! (திருக்குர்ஆன் 18-109)
وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
மேலும் நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோலாகவும், கடல் நீர் யாவும் மையாகவும் இருந்து அது தீந்ததற்குப் பின்னர் ஏழு கடல்கள் அதனுடன் மையாகச் சேர்த்து அவற்றால் எழுதிக் கொண்டிருந்தாலும் அல்லாஹ்வின் வாக்குகள் எழுதித் தீராது. நிச்சயமாக அல்லாஹ் யாவையும் மிகைத்தவன். தீர்க்கமான அறிவுள்ளவன். (திருக்குர்ஆன் 31-27)
மேற்கண்ட இரண்டு திரு வசனங்களின் படி திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துக்களையும், அகமியங்களையும் எவராலும் மட்டிடவோ, வரையறுத்துக் கூறவோ முடியாதென்று அல்லாஹ் திட்டமாகக் கூறியுள்ளான்.
قال صلى الله عليه وسلم إن للقرآن ظهراً وبطناً
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள். “நிச்சயமாக திருக்குர்ஆனின் வசனங்களுக்கு முதுகும், வயிறும் உண்டு”
முதுகு என்பது அதன் வெளிக் கருத்துக்களையும், வயிறு என்பது அதன் உட்கருத்துக்களையும் குறிக்கும்.
قال علي رضي الله عنه لو شئت لأوقرت سبعين بعيراً من تفسير فاتحة الكتاب
நான் நாடினால் “பாதிஹா” அத்தியாயத்திற்கு மட்டும் 70 ஒட்டகங்கள் சுமக்கும் அளவு விளக்கம் எழுதுவேன் என்று ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அருளியுள்ளார்கள்.
ஒட்டகங்களில் தரமான, ஆரோக்கியமான, திடகாத்திரமான ஒட்டகமாயின் அது 1000 கிலோ பாரத்தை சுமக்கும் என்று விலங்கியல் நிபுணர்கள் கூறுவர். இவர்களின் கூற்றுப்படி 70 ஒட்டகங்களும் 70 ஆயிரம் கிலோ பாரத்தை சுமக்கும் என்று வைத்துக் கொண்டால் “கிதாப்” நூலாக அதை அமைத்தால் 70 ஆயிரம் கிலோ எடையுடைய பல வால்யூம்கள் கொண்ட ஒரு கிதாபு எழுதுவேன் என்று அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்களென்றால் திருக்குர்ஆன் வசனத்தின் ஆழ நீளத்தை எவரால் எவ்வாறு கணிக்க முடியும்?
அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு சொன்னவை ஏழு வசனங்களைக் கொண்ட “பாதிஹா” அத்தியாயத்திற்கு மட்டுமேயாகும்.
ஏழு வசனங்களுக்கு 70 ஒட்டகங்கள் சுமக்குமளவு நூல்கள் எழுதுவேன் என்று சொல்லியிருப்பது ஒரு வசனத்திற்கு 10,000 கிலோ பாரமுள்ள நூற்கள் (பல வால்யூம்கள்) எழுத முடியுமென்றால் திருக்குர்ஆனிலுள்ள 6666 வசனங்களுக்கும் 66,660,000 (ஆறு கோடி அறுபத்தாறு இலட்சத்து அறுபதாயிரம்) கிலோ எடையுள்ள நூற்கள் எழுதலாம்.
ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வாறு சொல்லியுள்ளார்களே தவிர எழுதவில்லை.
நான் அறிந்த வகையில் திருக்குர்ஆனுக்கு மா பெரும் விரிவுரை எழுதிய ஒரேயொரு மகான் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமேயாவர்.
அவர்கள் கூட 15ம் “ஜுஸ்உ” – பாகம், 18ம் அத்தியாயம், 65ம் வசனம் வரை மட்டுமே “தப்ஸீர்” எழுதினார்கள். தொடர்ந்து எழுத முடியாமற் போயிற்று. சுமார் 15 “ஜுஸ்உ” பாகம் வரை மட்டுமே எழுதினார்கள். அவர்கள் எழுதிய இறுதி வசனம் وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا எங்களிடமிருந்து நாங்கள் அவருக்கு கற்றுக் கொடுத்தோம் என்ற வசனமாகும்.
இது ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்களின் “கறாமத்” அற்புதங்களில் ஒன்றெனக் கூறப்படுகின்றது. இவர்கள்தான்
خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيِّ
அறிவுலகில் இவ்வாறு சொன்ன மகான் அவர்கள் மட்டுமேயாவர்.
அவ்லயாஉகளில் பலர் தமது ஆன்மீகப் பலத்திற்கேற்றவாறு பல கட்டங்களில் பாடியிருந்தாலும் கூட ஆன்மிக உச்சியில் நின்று “வஹ்ததுல் வுஜூத்” வழிக்கு அறை கூவல் விடுத்தது இப்னு அறபீ மட்டுமேயாவர்.
وقد قال بعض العلماء لكل آية سِتُّونَ أَلْفِ فهم، وما بقي من فهمها أكثر،
ஒவ்வொரு வசனத்திற்கும் அறுபதாயிரம் விளக்கமுண்டு என்றும் உலமாஉகளிற் பலர் கூறுயுள்ளார்கள்.
எனினும் இதுவரை எவராலும் அறியப்படாத இறை மறை தத்துவங்கள் அறியப்பட்டவற்றை விட அதிகம் உள்ளன. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.
وقال آخرون القرآنُ يَحْوِى سبعةً وسبعين ألف علمٍ ومأتَيْ علمٍ،
இன்னும் சில இறை ஞானிகள் திருக்குர்ஆனில் 77, 200 வகை அறிவுகள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
قال ابن مسعود رضي الله عنه مَن أراد علم الأوّلين والآخرين فَلْيَتَدَبَّرِ الْقُرْآنَ
முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவுகளையும் அறிந்து கொள்ள ஒருவன் விரும்பினால் அவன் திருக்குர்ஆனை ஆய்வு செய்யட்டும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
மேலே நான் கூறிய குறிப்புக்கள் மூலம் திருக்குர்ஆன் என்பது தாளில் அச்சிடப்பட்ட எழுத்துக்களைக் குறிக்காது. அது “முஸ்ஹப்” என்ற சொல்லில் அடங்கி விடும்.
அல்குர்ஆன் என்பது كَلَامُ اللهِ அல்லாஹ்வின் பேச்சை மட்டுமே குறிக்கும். அதாவது 6666 வசனங்கள்தான் திருக்குர்ஆன் எனப்படும்.
அல்லாஹ்வின் பேச்சுக்கு உரிய முறையில் விளக்கம் கூற அல்லாஹ்வால் மட்டுமே முடியும்.
“தப்ஸீர்” – விரிவுரை என்ற பொருளுக்குப் பொருத்தமானவை ஒரு சில “தப்ஸீர்”கள்தான். மற்றவை எல்லாம் “தர்ஜமதுல் குர்ஆன்” திருக்குர்ஆன் மொழியாக்கம் மட்டுமேயாகும்.
இதுவரை நான் எழுதியவற்றின் சுருக்கம் என்னவெனில் திருக்குர்ஆன் வசனங்களுக்கு பொருள் கூறும் விடயத்தில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுதல் அவசியம்.
ஒரு மனிதனின் பேச்சுக்கும், இறைவனின் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு. மனிதன் படைப்பு. படைப்பின் பேச்சுக்கும், படைத்தவனின் பேச்சுக்கும் வித்தியசம் உண்டு. அல்லாஹ்வின் பேச்சுக்கு நிகரில்லை. அது كَلَامٌ قَدِيْمٌ பூர்வீகமான பேச்சு. மனிதனின் பேச்சு كَلَامٌ حَادِثٌ பூர்வீகத்துக்கு மாற்றமான பேச்சாகும். மனிதனின் பேச்சுக்கு எல்லை உண்டு, திசை உண்டு. ஆயினும் இறைவனின் பேச்சுக்கு எந்தவொரு கட்டுப்பாடுமில்லை. மனிதனின் பேச்சுக்கு ஆழ நீளமுண்டு. அளவு உண்டு. எல்லை உண்டு.
ஆனால் இறைவனின் பேச்சு பரிசுத்தமானது. வரையறை இல்லாதது. ஆழ நீளம் காண முடியாதது.
இத்தகைய பேச்சு ஒரு பொருளையல்ல. ஆயிரம் பொருளை உள்வாங்கியதாக இருக்கும். அதை எவராலும் அளந்து முடிவு காணமுடியாது.
ஆனால் உலமாஉகளில் ஒருவர் திருக்கலிமாவுக்கு ஒரேயொரு பொருள்தானேயன்றி வேறு பொருள் கிடையவே கிடையாதென்று சொல்வாராயின் அவர் நான் தலைப்பில் எழுதிய இரண்டு திரு வசனங்களையும் புரியாதவராகவே இருப்பார்.
அதேநேரம் திருக்கலிமாவுக்கு வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற போலியான பொருள் மட்டும்தான் என்று சொல்பவரின் பேச்சு மேற்கண்ட இரண்டு திரு மறை வசனங்களுக்கும், ஈமானின் அடிப்படைக்கும் முரணானதாகும். இவ்வாறு சத்தியம் செய்து கூறியவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பது திருக்கலிமா மட்டும்தான். அதற்கும், திருக்குர்ஆன் வசனத்திற்கும் சம்பந்தமில்லை என்று தனது அறியாமையால் எண்ணிக் கொண்டார் போலும். அது கலிமா மட்டுமல்ல திருக்குர்ஆன் வசனமுமாகும் என்று நான் கூறிய பின்புதான் விளங்கியுள்ளார் போலும். இப்போது சற்று இறங்கி வருகிறார்.
அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டாராம் அந்த ஆலிம்.
அந்த ஆலிமுக்கு நான் கூறும் உபதேசம் என்னவெனில் நீங்கள் மௌலவீதானே? அப்படியானால் அல்லாஹ் “தாத்” கொண்டுதான் வெளியானான் என்று இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் பாகம் 01, பக்கம் 62ஐ பார்க்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
அதோடு நின்று விடாமல் அந்த மௌலவிக்கு வழிகாட்டும் குருக்களிடம் குறித்த இந்த கிதாபையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுக் குருடர்கள் தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்துள்ள “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலையும், இமாம் அப்துல் கரீம் அல்ஜீலீ அவர்களின் “இன்ஸான் காமில்” எனும் நூலையும், அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூலையும் கொடுத்து அவற்றுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டு சரியான விடையைத் தெரிந்து கொள்ளுமாறும் திருக்குர்ஆன் வசனத்திற்கு ஒரு பொருள்தானே தவிர பல பொருள் இல்லையென்று திருக்குர்ஆனுக்கு மாறாகச் சொன்னதற்காக “தவ்பா” செய்வதுடன், திருக்கலிமாவையும் ஸூபீகள் சொல்லும் கருத்தையறிந்து சொல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்தால் தொடரும்..