“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 44

அல்லாஹ் வேறு படைப்பு வேறு என்பது சரியா? பிழையா?

படைத்தவனும், படைப்பும் ஒன்றல்ல. படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று நம்புவதால் ஏற்படுகின்ற விபரீதம், மார்க்க முரண்பாடு என்ன?

படைத்தவனும், படைப்பும் வேறுதான். அவ்விரண்டும் ஒன்றல்ல என்று கூறுவோர் “ஙெய்ரிய்யத்” غَيْرِيَّة கொள்கைவாதிகள் என்றும், அவ்விரண்டும் ஒன்றுதான் என்று கூறுவோர் “ஐனிய்யத்” عَيْنِيَّة கொள்கைவாதிகள் என்றும் ஸூபீ மகான்களான எதார்த்தவாதிகளால் அழைக்கப்படுவர்.

இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் – 75 சதவீதமானோர் – அல்லாஹ் வேறு, படைப்பு வேறு எனும் கொள்கையுள்ளவர்களாகவே உள்ளனர்.

ஆயினும் தரீகாக்களைப் பின்பற்றி வாழ்பவர்களில் ஸூபிஸ ஞானத்தோடு தொடர்புள்ளவர்கள் மட்டுமே ஹக்கும், கல்கும் ஒன்றுதான் என்பார்கள். இவர்கள் அரிதினுமரிது.

இக்காலத்தைப் பொறுத்தவரை ஒரு – ஷெய்கு – ஞானகுருவிடம் “பைஅத்” ஞானத்தீட்சை – ஒப்பந்தம் செய்தவர்கள் கூட தரீகா என்றால் என்ன? பைஅத் என்றால் என்னவென்று தெரியாதவர்களாகவே உள்ளனர். பெயருக்கும், புகழுக்கும் பைஅத் செய்கிறார்களேயன்றி தமது ஆன்மிக முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு செய்கிறார்கள் இல்லை.

அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று நம்புவதால் ஏற்படுகின்ற விபரீதம் “குப்ர்” அல்லது “ஷிர்க்” எனும் நிராகரிப்பும், இணைவைத்தலுமேயாகும்.

இதன் விபரம் பின்வருமாறு.
அல்லாஹ்வில் மட்டும் அவசியம் இருக்க வேண்டிய இருபது “ஸிபாத்” பண்புகளில் ஒன்று قَائِمٌ بِنَفْسِهِ “காயிமுன் பினப்ஸிஹீ” அவன் தன்னைக் கொண்டு நிலை பெற்றிருப்பதாகும். இது அவனில் அவசியம் இருக்க வேண்டிய பண்பு.

படைப்பு இதற்கு மாறானது. இறைவனில் இருக்க வேண்டிய மேற்கண்ட இத்தன்மை படைப்பில் இருக்க முடியாது. அது அசாத்தியம்.

அல்லாஹ்வின் “தாத்” இன்னொருவனால் படைக்கப்பட்டதல்ல. அது தனக்குத் தானாக உள்ளதேயாகும். இவ்வாறுதான் அவனின் “ஸிபாத்” எனும் தன்மைகளுமாகும். அவையும் தனக்குத் தானானவையே தவிர அவை அவனுக்கு இன்னொருவனால் வழங்கப்பட்டவையல்ல.

அல்லாஹ்வின் “தாத்” என்பதும் “மக்லூக்” படைக்கப்பட்டதல்ல. அவனின் “ஸிபாத்” எனும் தன்மைகளும் படைக்கப்பட்டதல்ல.

அல்லாஹ் வேறு படைப்பு வேறு என்று யாராவது சொன்னால் அவரிடம் அல்லாஹ்விலும், அவன் படைப்பிலும் “காயிமுன் பினப்ஸிஹீ” தன்னைக் கொண்டு நிலைபாடானது எது என்று கேட்க வேண்டும். அவன் அல்லாஹ் என்று பதில் கூறினால் படைப்பு எது கொண்டு நிற்கிறது? என்று கேட்க வேண்டும். படைப்பும் அல்லாஹ் போல் தன்னைக் கொண்டே நிற்கிறதென்று அவன் சொன்னால் அவன் அந்த விடயத்தில் – “காயிமுன் பினப்ஸிஹீ” தன்னைக் கொண்டு நிலைபெற்றிருத்தல் என்ற விடயத்தில் இறைவனுக்கு இணை “ஷிர்க்” வைத்த “முஷ்ரிக்” ஆகிவிட்டான். இவ்விடயத்தில் இரண்டாம் கருத்திற்கு இடமே இல்லை. இவ்வுண்மையை அறியாத முஸ்லிம்களே அதிகமாக உள்ளனர். உலமாஉகளிற் பலர் இதை அறியாதிருப்பது வியப்பானதும், வேதனையானதுமாகும்.

அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று சொன்னவன் மேலே சொன்னதற்கு மாறாக அல்லாஹ் மட்டும்தான் தன்னைக் கொண்டு நிலைபெற்றவன் என்றும், படைப்பு என்பது தன்னைக் கொண்டு நிலை பெறாமல் قَائِمٌ باِللهِ காயிமுன் பில்லாஹ் – அல்லாஹ்வைக் கொண்டு நிலை பெற்றதென்றும் சொன்னால் அவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனல்ல. அவன் “முஃமின்” விசுவாசிதான்.

ஆயினும் அவனிடம் படைப்பு இறைவனைக் கொண்டு நிலைபெற்றதென்று சொல்கிறாய். அது எவ்வாறு என்று விளக்கமாக சொல்ல முடியுமா? என்று கேட்க வேண்டும்.

அவன் சொல்லும் விளக்கத்தைப் பொறுத்துதான் அவனின் நம்பிக்கை சரியா? பிழையா? என்று கூற முடியும்.

படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்பது சாய்ந்து நிலத்தில் விழப் போகின்ற ஒரு வாழை மரம் ஒரு முட்டில் நிற்பது போல் படைப்பை வாழை மரமாகவும், அல்லாஹ்வை முட்டாகவும் உதாரணம் சொல்லி இவ்வாறுதான் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறது என்று அவன் விளக்கம் சொன்னால் அவனும் “முஷ்ரிக்” இணைவைத்தவன்தான்.

ஏனெனில் இவ் உதாரணத்தில் படைப்பு என்றும், முட்டு என்றும் இரண்டு வஸ்த்துக்கள் உள்ளன. எதார்த்தத்தில் உள்ளது ஒன்றுதான். இரண்டல்ல. இஸ்லாமில் இரண்டிற்கு இடமே இல்லை.

படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்பதற்கு படைப்பு என்றும், படைத்தவன் என்றும் இரண்டு வஸ்த்துக்கள் தேவையில்லை. இதை சரியாக விளங்கிக் கொள்வதாயின் வாழை மரம், முட்டு என்ற உதாரணம் பொருத்தமற்றதாகும். இரண்டு வஸ்த்துக்கள் இல்லாத, ஒரே வஸ்த்துள்ள உதாரணமே இதற்குப் பொருத்தமானது.

உதாரணமாக اَلْقَمِيْصُ قَائِمٌ بِالْقُطْنِ ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறது. اَلْغِلَافُ قَائِمٌ بِالْوَرَقِ கவர் – என்விலோப் தாளைக் கொண்டு நிற்கிறது اَلْكُرْسِيُّ قَائِمٌ بِالْخَشَبِ கதிரை மரத்தைக் கொண்டு நிற்கிறதென்று உதாரணம் சொல்வது போன்று.

நான் இப்போது மேலே சொன்ன மூன்று உதாரணங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் கூட எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் இருக்காது. ஒன்றுதான் இருக்கும்.

ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறதென்ற உதாரணத்தில் ஷேட் என்றும், பஞ்சு என்றும் இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் கூட இரண்டு வஸ்த்துக்கள் இருக்காது. ஒன்றுதான் இருக்கும். அது பஞ்சு மட்டுமேயாகும். ஷேட் என்பது பெயரளவில் மட்டுமுள்ளதேயன்றி அதற்கு எதார்த்தமில்லை.

கவர் – என்விலோப் தாளைக் கொண்டு நிற்கிறதென்பதும் இவ்வாறுதான். கவர், தாள் என்று இரு பெயர்கள் சொல்லப்பட்டாலும் கூட எதார்த்தத்தில் இரு வஸ்த்துக்கள் இருக்காது. ஒரேயொரு வஸ்த்து மட்டுமே இருக்கும். அது தாள் மட்டுமேயாகும்.

கதிரை மரத்தைக் கொண்டு நிற்கிறதென்ற உதாரணமும் இவ்வாறுதான். கதிரை, மரம் என்று இரு பெயர்கள் சொல்லப்பட்டாலும் இரு வஸ்த்துக்கள் இருக்காது. இருப்பது மரம் என்ற ஒரு வஸ்த்து மட்டுமேதான்.

எனவே, படைப்பு அல்லாஹ்வைக் கொண்டுதான் நிற்கிறதென்று சொல்வது பிழையல்ல. இதேபோல் கதிரை மரத்தைக் கொண்டு நிற்கிறதென்று சொல்வதும் பிழையல்ல. இதேபோல் கவர் தாளைக் கொண்டு நிற்கிறதென்று சொல்வதும் பிழையல்ல.

எனினும் எவ்வாறு சொல்லிக் கொண்டாலும் எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்று வசனம் சொல்வது பிழையாகாது. ஆனால் அதற்கு வாழை மரம் முட்டில் நிற்பது போலென்று விளங்கிக் கொள்வதே பிழையாகும். இவ்வுதாரணம் மேலே நான் சொன்ன மூன்று உதாரணங்கள் போன்றதல்ல. இம் மூன்று உதாரணங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு வஸ்த்துக்கள் நிச்சயமாக இருக்காது.

இதை இன்னும் சற்று விரிவாக ஆய்வு செய்து பார்த்தால் எதார்த்தம் தெளிவாகும்.

வாழை மரம் முட்டில் நிற்கிறதென்ற உதாரணத்தில் வாழை மரம் என்றும், முட்டு என்றும் இரண்டு பெயர்களில் இரண்டு வஸ்த்துக்கள் நிஜமாகவே உள்ளன.

ஏனைய நான் கூறிய உதாரணங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் கூட சொல்லப்பட்ட இரண்டு வஸ்த்துக்கள் நிஜமாக இருக்காது.

உதாரணங்களைக் கவனிப்போம்.
ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறதென்று சொல்லும் போது ஷேட் என்றும், பஞ்சு என்றும் இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அவ்வாறு சொல்லப்பட்டாலும் கூட எதார்த்தத்தில் இருப்பது பஞ்சு மட்டுமேயாகும். ஷேட் என்பது பஞ்சின் வெளிப்பாடேயன்றி அது தனிமுதலானதல்ல. “ஷேட்”டுக்கு “வுஜூத்” இல்லை. உள்ளமை – இருப்பு இல்லை.

இவ்வாறுதான் நான் கூறிய ஏனைய உதாரணங்களின் விளக்கமுமாகும்.

தலைப்பிலிருந்து இதுவரை நான் கூறிய விபரங்கள் மூலம் கிடைக்கின்ற சுருக்கம் என்னவெனில் யாவையும் படைத்தவனான அல்லாஹ் மட்டுமே قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிலைபெற்று நிற்பவனாவான். அவன் தவிர அவனின் கோடிக் கணக்கான படைப்புகளில் தன்னைக் கொண்டு உண்டாகி, தன்னைக் கொண்டு நிற்பது எதுவுமே இல்லை. அதுவே எதார்த்தம். கண்களுக்குப் புலப்படாத – கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத சிறிய, பெரிய எந்த ஒரு வஸ்த்தும் தனக்குத் தானாகத் தோன்றி தன்னைக் கொண்டே நிலைபெற்றது அல்ல. இறைவன் மாத்திரம்தான் தன்னைக் கொண்டு நிலைபெற்றவன். வேறெந்த ஒரு வஸ்த்தும் இத்தன்மையுள்ளதல்ல. இத்தன்மை இறைவனுக்கு மட்டுமே உள்ளது. இதனால்தான் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிற்பவன் என்ற “ஸிபத்” தன்மை அவனில் அவசியம் இருக்க வேண்டிய “வாஜிப்” கடமையான தன்மையாயிற்று.

உலகில் எந்த ஓர் ஆய்வாளனாயினும், விஞ்ஞானியாயினும் தன்னைக் கொண்டு உண்டாகி தன்னைக் கொண்டு நிற்பது இறைவன் மட்டுமல்ல என்று நம்புவானாயின், அல்லது சொல்வானாயின் அவன் “ஷிர்க்” இணை வைத்த முழு “முஷ்ரிக்” இணை வைத்தவனாகவே இருப்பான். அவன் ஆலிமாக இருந்தாலும், அல்லாமாவாக இருந்தாலும், கலாநிதியாக இருந்தாலும், அல்லது உலகம் போற்றும் “முப்தீ” ஆக இருந்தாலும் சரியே!

இறைவனைக் கொண்டு நிற்கும் படைப்பு அவனுக்கு வேறானதாயிருக்க மாட்டாது. மாறாக அவன் தானானதாகவே இருக்கும். ஷேட் என்பது பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதாயிருக்காது. கதிரை என்பது மரம் தானானதேயன்றி அதற்கு வேறானதாயிருக்காது. கவர் – என்விலோப் என்பது தாளுக்கு வேறானதாயிருக்க முடியாது.

இதை மிகவும் சுருங்கச் சொல்வதாயின் ஷேட் பஞ்சுதான், கதிரை மரம்தான், “கவர்” தாள்தான் என்றே சொல்ல வேண்டும்.

இதே தத்துவத்தை முதலில் சொன்னவன் அல்லாஹ்தான். அதன் பிறகு உலகில் தோன்றிய நபீமார், ஞானிகள் சொன்னார்கள். இன்று வரை சொல்லிக் கொண்டுமே இருக்கிறார்கள்.

இவ்வாறு சொன்ன மாமேதைகள் ஒரு சிலர் மட்டுமென்றால் அவர்களின் முழு வரலாறுகளையுமே எழுதிவிடலாம்.

ஓர் இலட்சத்து 24 ஆயிரம் நபீமார் – தீர்க்கதரிசிகள், மற்றும் இதுவரை தோன்றிய இறைஞானிகள் அனைவரும் இதே தத்துவத்தையே கூறி வந்துள்ளனர். இதற்கு மாறாகச் சொன்னவர் அவர்களில் எவருமே இல்லை. உலகில் தோன்றிய எந்த ஒரு நபீயும், எந்த ஒரு வலீயும் படைப்பு தன்னைக் கொண்டு நிற்கிறதென்று சொன்னதற்கு ஆதாரமே இல்லை.

எனவே, அல்லாஹ் மட்டுமே தனக்குத் தானானவனும், தன்னைக் கொண்டு நிற்பவனுமாவான் என்றும், அவன் படைத்த உயிருள்ள, உயிரில்லாத, சிறிய, பெரிய அனைத்துப் படைப்புகளும் அவனைக் கொண்டே நிலை பெற்று நிற்கின்றன என்றும், அவன் படைப்புகளை படைத்தான் என்றால் அவனேதான் அப்படைப்புகளாக “தஜல்லீ” வெளியாகினான் என்றும் நம்ப வேண்டும். இவ்வாறு நம்புதலே அல்லாஹ்வை நம்புவதாகும்.

ஹக்கு வேறு, கல்கு வேறு என்று கூறுவோர் ஸூபிஸ ஞானம் தெரிந்தவர்களின் உதவியுடன் அவற்றை வாசித்தறிய வேண்டும்.