தொடர் – 5
கொள்கையில் ஸுன்னீகளாகவும், ஸூபீகளாகவும் வாழுங்கள்!
ஸூபிஸமே இஸ்லாமின் உயிர் என்று நம்புங்கள்!
ஸூபிஸம் இன்றேல் இஸ்லாம் இல்லை! எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்!
உலகில் தோன்றிய நபீமார், மற்றும் வலீமார், ஸூபீகள் அனைவரும் “லா இலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை, அல்லது அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமுமில்லை, வேறெந்த வஸ்த்துமில்லை என்ற கொள்கையை நம்பினவர்களும், அதன் படி வாழ்ந்தவர்களும், செயற்பட்டவர்களுமேயாவர்.
ஸூபிஸம் – “தஸவ்வுப்” என்ற சொல், அல்லது “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் மட்டும்தான் பிந்தின காலத்தவர்களால் நடைமுறைக்கு வந்த சொற்களேயன்றி “எல்லாம் அவனே” என்ற தத்துவம், அல்லது அவனல்லாத ஒன்றுமில்லை என்ற தத்துவம், அல்லது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமே இல்லை என்ற தத்துவம் அல்லாஹ்வும், றஸூலும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தின் மூலம் சொன்ன தத்துவமேயன்றி வேறு எவரும் சொன்ன தத்துவமே அல்ல.
ஞான மகான்களும், ஸூபீ மகான்களும் மேற்கண்ட இத் தத்துவத்தை வேறுபட்ட பல வசனங்களிலும், பெயர்களிலும் சொன்னாலும் கூட அவர்களின் தத்துவங்கள் அனைத்திற்கும் கருவும், குருவும் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் 12 எழுத்துக்களைக் கொண்ட வசனமேயாகும்.
12 எழுத்துக்களை மட்டும் கொண்ட சிறிய வசனமாயினும் இது உள்வாங்கியுள்ள தத்துவம் எவராலும் வரையறுத்துக் கூற முடியாததாகும். இதனால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
أَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّوْنَ مِنْ قَبْلِيْ لَا إِلهَ إِلَّا اللهُ
நானும், எனக்கு முன் வாழ்ந்த நபீமார்களும் சொன்னவற்றில் மிகச் சிறந்தது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனமாகும் என்று கூறியுள்ளார்கள்.
மூன்றே மூன்று எழுத்துக்கள்தான் 12 எழுத்துக்களாக உள்ளன. அந்த மூன்றும் அலிப், லாம், ஹே என்பவையாகும். இம் மூன்று எழுத்துக்கள் தவிர வேறெந்த எழுத்துக்களும் அதில் இல்லை.
மூன்று எழுத்துக்கள் மட்டும் 12 எழுத்துக்கள் கொண்ட வசனமாகி பரந்து விரிந்த கடல் போன்ற தத்துவங்களை உள்வாங்கியதாகவும், 124,000 நபீமார் சொன்ன வசனங்களில் மிகச் சிறந்ததாகவும் இருப்பது நம்ப முடியாத உண்மைகளில் ஒன்று எனலாம்.
அல்லாஹ் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்ற கருத்துதான் இவ்வசனம் தருகின்ற தத்துவமென்றால் இது வியக்கத்தக்க விடயமுமல்ல. நபீமார் அனைவரும் சொன்ன வசனங்களில் மிகச் சிறந்த வசனம் என்று சொல்வதில் எந்த ஒரு வியப்பும் அல்ல.
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்தான் என்ற கருத்தை தருகின்ற வேறு வசனங்கள் திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் நிறைய வந்துள்ளன. திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற கருத்து மட்டும்தான் எனின் இந்த வசனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவதில் எந்த ஓர் அர்த்தமும் இல்லாமற் போய்விடும். இந்த வசனத்தை பெரிதாக சிறப்பாக்கி செய்திகள் வந்திருக்கவும் தேவையில்லை.
இது மட்டுமல்ல. இது தருகின்ற மேற்கண்ட பொருளைக் கூறியதால் நபீமாருக்கு எந்த ஓர் எதிர்ப்பு வந்திருக்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்கத்து காபிர்கள் அனைவரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்றுதான் நம்பியிருந்தார்களேயன்றி இதற்கு மாறாக நம்பியிருக்கவில்லை.
இதற்கு ஆதாரமுண்டா என்று கேட்க நினைக்கின்றீர்களா? இதோ ஆதாரங்கள்.
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ (سورة الزخرف – 09)
நபீயே! அவர்களிடம் – காபிர்களிடம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யாரென்று நீங்கள் கேட்டால் யாவையும் மிகைத்தவன், நன்கறிந்தவன் ஆகிய அல்லாஹ்தான் அவைகளைப் படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (43-9)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ (سورة لقمان 25)
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அவர்கள் அல்லாஹ் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுங்கள். எனினும் அவர்களில் அநேகர் அறியமாட்டார்கள். (31- 25)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ்தான் என்று நிச்சயமாக கூறுவார்கள். (39-38)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (29-61)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
மேலும் நபீயே! வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைக் கொண்டு பூமியை அது இறந்த பின் உயிர்ப்பித்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று நீங்கள் கூறுவீர்களாக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ளமாட்டார்கள். (29-63)
மேற்கண்ட ஐந்து திருக்குர்ஆன் வசனங்களும் அவர்கள் அல்லாஹ்வை நம்பினவர்களாக இருந்துள்ளார்கள் என்று திட்டமாக கூறுகின்றன.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காபிர்களிடம் கேட்ட போது அவர்கள் அல்லாஹ் என்றே சொன்னார்களேயன்றி அவர்கள் “கஃபா”வினுள் வைக்கப்பட்டிருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட விக்கிரகங்களில் எதையும் கூறவில்லை.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் மட்டும் அல்லாஹ் என்று அவர்கள் சொல்லவில்லை. அதேபோல் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தித் தந்தவன் யார்? என்று கேட்டதற்கும் அல்லாஹ் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். இன்னும் அதேபோல் வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக் கொண்டு பூமியை அது இறந்தபின் உயிர்த்தவன் யார்? என்று அவர்களிடம் கேட்ட போதும் அவர்கள் அல்லாஹ் என்றே சொன்னார்கள்.
மக்காவில் வாழ்ந்த காபிர்கள் மேற்கண்டவாறு சொன்னதன் மூலம் அவர்கள் கடவுள் – இறை நம்பிக்கையுள்ள ஆத்திகர்களாக இருந்தார்கள் என்பதும், இறைவன் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர்களாக இருக்கவில்லை என்பதும் திட்டமாக விளங்குகிறது.
மேற்கண்ட ஐந்து திருவசனங்களும் அவர்கள் இறை நம்பிக்கையுள்ளவர்களாகவே இருந்துள்ளார்கள் என்று எமக்குத் தெளிவாக கூறுகின்றன.
மேற்கண்ட கேள்விகளில் எதற்கும் அவர்கள் “கஃபா”வின் உள்ளே வைத்து வணங்கி வந்த எந்த ஒரு விக்கிரகத்தின் பெயரையும் அவர்கள் சொன்னதிற்கு ஆதாரமில்லை.
மேற்கண்ட கேள்விகள் போல் பல கேள்விகள் அவர்களிடம் கேட்டிருந்தாலும் கூட அவர்களிடம் கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கும் பதில் கூறியது போன்றே அவர்கள் பதில் கூறியிருப்பார்கள் என்றும் நாம் விளங்குகின்றோம்.
மக்கத்து காபிர்களிடம் கேட்டதுபோல் இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்திலோ அல்லது பொதுவாக உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களிடத்திலோ மேற்கண்ட கேள்விகளைக் கேட்டால் அந்த முஸ்லிம்களும் மக்கத்து காபிர்கள் சொன்னது போன்றே பதில் சொல்லியிருப்பார்கள் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
இறை நம்பிக்கையில் அன்று வாழ்ந்த மக்கத்து காபிர்களும், இன்று வாழும் முஸ்லிம்களும் ஒன்று போலவே உள்ளார்கள். நாம் அவர்களைக் காபிர்கள் என்று சொல்கிறோம். இவர்களை முஸ்லிம்கள் என்று சொல்கிறோம். அவர்களுக்கும், இவர்களுக்குமிடையே விக்கிரக வணக்கம் தவிர வேறெந்த ஒரு வேறுபாடுமில்லை. அவர்களும் இவர்களும் அல்லாஹ்வை நம்பினவர்களேயன்றி மறுத்தவர்கள் அல்லர்.
இக்காலத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அல்லாத ஒருவரிடம் மேற்கண்ட ஐந்து கேள்விகளையும் கேட்டால் அவர்களும் அல்லாஹ் என்றுதான் சொல்வார்கள். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
எனவே, அவர்களுக்கும், இவர்களுக்குமிடையில் உள்ள வேறுபாடு அவர்கள் விக்கிரகத்தை வணங்குவதேயாகும். எனினும் அவர்களில் எவரும் அல்லாஹ்வை நிராகரிக்க வில்லை. மாறாக அல்லாஹ்வை நம்பினவர்களேயாவர். அவர்களை நாம் இன்று “காபிர்”கள் என்று சொல்கிறோம். “காபிர்” என்றால் இறைவனை நிராகரித்தவன். அவர்களோ இறைவனை நிரகரிக்காத நிலையில் அவர்களைக் “காபிர்”கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமானதாகும்?
தொடரும்….