“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 6

கடந்த தொடர் 05ல் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீயாக வந்த கால கட்டத்தில் திரு மக்கா நகரில் வாழ்ந்தவர்களின் அல்லாஹ் பற்றிய கொள்கை எவ்வாறிருந்ததென்று எழுதியிருந்தேன். பலரின் நன்மை கருதி மீண்டும் தொட்டுக் காட்டுகிறேன்.

அவர்களிடம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்த பதில்கள் யாவும் அவர்கள் அல்லாஹ்வைச் சரியாகவே நம்பியிருந்தார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களாக இருந்தன என்றும், அவர்கள் கேட்ட கேள்விகளையும், பதில்களையும் திருக்குர்ஆன் வசனங்களின் ஆதாரங்களோடும் குறிப்பிட்டிருந்தேன்.

இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வை எவ்வாறு நம்பியுள்ளார்களோ அவ்வாறுதான் மக்கத்து காபிர்களும் அன்று நம்பியிருந்தார்கள் என்றும் கூறியிருந்தேன்.

அவ்வாறிருந்தும் அவர்கள் அன்றும் காபிர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இன்றும் அவ்வாறுதான் அவர்கள் அழைக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த விடயத்தை சற்று ஊன்றிக் கவனித்தால் பொதுவாக முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்குமிடையில் பிரித்துக் காட்டும் அம்சம் விக்கிரக வணக்கம் ஒன்று மட்டுமே என்பது புரிகிறது. முஸ்லிம்கள் சிலை வணக்கம், விக்கிரக வணக்கம் செய்வதில்லை. முஸ்லிம்கள் அல்லாதவர்கள் விக்கிரக வணக்கம், சிலை வணக்கம் செய்கிறார்கள். இதுவே பிரித்துக் காட்டும் அம்சமாகும். இரு பிரிவினர்களும் இறை நம்பிக்கையில் ஒன்றுபட்டவர்களாகவே உள்ளனர்.

அவர்கள் சிலை வணக்கம், விக்கிரக வணக்கம் செய்தாலும் கூட அல்லாஹ்வை நிராகரிக்கவில்லை. அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்றுதான் நம்பியிருந்தார்கள். ஆத்திகர்களாகத்தான் இருந்தார்களேயன்றி நாத்திகர்களாக இருக்கவில்லை.

இதேபோல் அவர்கள் “கஃபா”வினுள் வைத்திருந்த அல்லாத், அல் உஸ்ஸா, ஹுபல் போன்ற விக்கிரகங்களை அல்லாஹ் என்று சொல்லவுமில்லை. பெருமானார், அவர்களிடம் கேட்ட கேள்விகள் ஐந்துக்கும் அவர்கள் “அல்லாஹ்” என்றுதான் பதில் கூறினார்களேயன்றி விக்கிரகங்களில் ஒன்றையும் அக்கேள்விகளுக்கு பதிலாக அவர்கள் கூறவுமில்லை. அல்லாத், அல் உஸ்ஸா, ஹுபல் என்ற பெயர்களைச் சொல்லவுமில்லை.

விக்கிரக வணக்கம், சிலை வணக்கம், சிருட்டி வணக்கம் சரியென்று நான் சொல்லவில்லை. சொன்னதுமில்லை. சொல்லப் போவதுமில்லை. இவற்றை முன்னிறுத்தி வணங்குதல் பிழையென்று ஆயிரம் முறை அடித்துச் சொல்வதற்கும் நான் தயாராகவே உள்ளேன். எனினும் நான் எல்லாமனே என்று சொல்வதால் الأصنام عين الله சிலைகள், விக்கிரகங்கள் என்பனவும், உலகில் எதெல்லாம் வணங்கப்படுகிறதோ அவையும், மற்றும் வணங்கப்படாமலுள்ள சிருட்டிகள் யாவும் عَيْنُ الله அல்லாஹ் தானானவை என்றுதான் – அல்லாஹ்வுக்கு வேறானவை அல்ல என்றுதான் சொல்கிறேனேயன்றி அவற்றை வணங்குவது சரியென்று நான் சொல்லவுமில்லை. நான் நம்பவுமில்லை. அது எனது “அகீதா” கொள்கையுமல்ல.

எனினும் நான் விக்கிரகம், சிலைகள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ் என்று சொல்லி வருவதாலும், பிகரங்கமாகப் பேசியும், எழுதியும் வருவதாலும் விளக்கம் அறவே இல்லாதவர்களும், விளக்கம் குறைந்தவர்களும் எனது கருத்தை தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. ஆகையால் அவர்களுக்கு நான் கூறும் கருத்துக்களில் தெளிவின்மை இருந்தால் நமது மௌலவீமார்களில் திறமையுள்ளவர்களைச் சந்தித்து தெளிவு கண்டு கொள்ளுமாறும் என்னைச் சந்தித்து விளக்கம் பெற விரும்புவோர் கொரோனா பிரச்சினை முடிந்தபின் என்னுடன் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நாளையும், நேரத்தையும் பெற்று என்னைச் சந்திக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவர் கூறும், அல்லது எழுதும் சரியான கருத்தை கேட்போரில் அதைச் சரியாகப் புரிந்து கொள்வோரும் இருப்பார்கள், தவறாகப் புரிந்து கொள்வோரும் இருப்பார்கள். அவர்களில் யாராவது தவறாகப் புரிந்து கொண்டால் அதற்குப் பேசியவர் அல்லது எழுதியவர் பொறுப்பாளியாகமாட்டார். தவறாகப் புரிந்து கொண்டவர்தான் குற்றவாளியாவார்.

இவ்வாறான குழப்பம் மார்க்க விடயத்திலும், இறைஞான கொள்கை விடயத்திலும் மட்டுமன்றி சாதாரண உலக விடயத்திலும் இருந்து வருவதை நாம் காண்கிறோம். மனிதர்களில் பல ரகம் உண்டு. اَلنَّاسُ أَجْنَاسٌ மனிதர்கள் பல ரகம் என்று ஒரு பழ மொழி உண்டு. ஒரு காலத்தில் என்னிடம் ஒரு பணியாள் இருந்தான். அவனிடம் சூடான தேனீர் கொண்டு வா என்றேன். அவர் மூன்று மணி நேரங்களாகியும் வரவில்லை. பிறகு வந்து எல்லாக் கடைகளிலும் சூடான பன்னீர் கேட்டு அலைந்தேன். அப்படியொரு பன்னீர் இல்லையென்று சொல்கிறார்கள் என்றான். இப்படியும் மனிதர்கள் உள்ளார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, ஒருவர் எழுதும் கருத்து, அவர் பேசும் பேச்சு ஒருவருக்கு விளங்காமற் போனால் அவராகவே அது பிழையென்று முடிவு செய்யாமல் அறிஞர்களிற் பலரிடமும் கேட்க வேண்டும். அல்லது எழுதியவர் அல்லது பேசியவர் உயிருடன் இருந்தால் அவரிடமே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். இதுவே மார்க்கம் கூறும் வழியாகும். இவ்வாறு செயல்படாமல் அவர் பேசியது பிழையென்றோ, எழுதியது பிழை என்றோ முடிவு செய்தல் அறியாமையாகும். இவ்விடத்தில் “பத்வா” வழங்கிய முல்லாக்களை நினைவு படுத்துகிறேன்.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு 40ம் வயதில் நபீப்பட்டம் கிடைத்தது. அதிலிருந்து 13 வருடங்களுக்குப் பிறகுதான் தொழுகை கடமையாக்கப்பட்டதேயன்றி நபித்துவம் கிடைத்தது முதல் தொழுகை கடமையாக்கப்பட வில்லை. இடைப்பட்ட 13 வருடங்களும் அவர்கள் செய்த பணியும், பிரச்சாரமும் இறை நம்பிக்கை தொடர்பானதேயாகும். அதாவது “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா கூறும் கொள்கைப் பிரச்சாரமேயாகும்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தின் பொருள் – போலிகள் சொல்வது போல் – வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றிருந்தால் இந்தக் கருத்தை மக்கள் மத்தியில் கூறி இதை நம்ப வைப்பதற்கு 13 ஆண்டுகள் எதற்கு? தேவைதானா? தேவiயில்லை. சாதாரணமாக 30 நிமிடங்களிலேயே இந்த உண்மையை எவருக்கும் புரிய வைக்கலாம். இந்தக் கருத்தைப் புரிய வைப்பதற்கு 13 ஆண்டுகள் தேவையேயில்லை.

ஏனெனில் அல்லாஹ் வணக்கத்திற்குரியவனல்லன் என்று அவர்கள் நம்பியிருந்ததற்கு ஆதாரமில்லை. மாறாக அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்றே அவர்கள் நம்பியிருந்தார்கள். அவர்களுக்கு அந்த நம்பிக்கையை வலியுறுத்த வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் காகம் கறுப்பு நிறம் என்று வலியுறுத்த வேண்டிய அவசியமே இல்லை. காகம் வெள்ளை நிறமென்று நம்பியிருந்தால் மட்டும்தான் அது வெள்ளை நிறமல்ல, அது கறுப்பு நிறம்தான் என்று வலியுறுத்த வேண்டும். அவ்வாறு அவனுக்கு வலியுறுத்தி அவனை நம்ப வைப்பதாயினும் கூட அதற்கு 13 ஆண்டுகள் தேவையா? இல்லை. 30 நிமிடங்களிலேயே அதை நம்ப வைத்து விடலாம். மாறாக காகம் கறுப்பு நிறம் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்காக 13 ஆண்டுகள் தேவையுமில்லை.

எனவே, மக்கத்து மக்கள் – அதாவது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த காபிர்கள் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்பியிருப்பானோ அவ்வாறுதான் அவர்களும் நம்பியிருந்தார்கள். இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களில் ஐந்து வசனங்களை முதலில் எழுதிக் காட்டினேன்.

பெருமானார் அவர்கள் நபீயாக அனுப்பி வைக்கப்பட்ட காலத்தில் மக்காவில் வாழ்ந்த மக்கள் வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்றும், அதேபோல் சூரியனையும் சந்திரனையும் படைத்தவன் அல்லாஹ் என்றும், சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தித் தந்தவன் அல்லாஹ் என்றும், வானத்திலிருந்து மழையை இறக்கி வரண்டு போன பூமியை செழிப்பாக்கி வைப்பவன் அல்லாஹ் என்றும் நம்பியிருந்தார்களே தவிர இதற்கு மாறாக தாம் வைத்திருந்த விக்கிரகங்களில் எதுவும் அவற்றைச் செய்ததாக அவர்கள் நம்பியிருக்கவுமில்லை, சொல்லவுமில்லை.

அன்று வாழ்ந்த மக்கத்து “காபிர்”கள் அல்லாஹ்வின் நம்பிக்கை விடயத்தில் இன்று முஸ்லிம்கள் நம்பியிருப்பது போன்றே அவர்களும் நம்பியிருந்தார்கள் என்பது மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் தெளிவாகின்றன.

ஆயினுமவர்கள் “கஃபா”வினுள் 300க்கும் மேற்பட்ட சிலைகளை, விக்கிரகங்களை வைத்து அவற்றை முன்னோக்கி, அவை அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்கள் எனக்கருதி வணக்கம் செய்து வந்தார்கள். இதுவே அவர்கள் செய்த தவறாகும். அவர்களின் அறியாமையின் வெளிப்பாடுமாகும். முஸ்லிம்கள் எக்காலத்திலும், எந்நாட்டிலும் விக்கிரகங்களை, சிலைகளை வைத்து அவற்றை முன்னோக்கி வணங்கியதற்கு வரலாறே கிடையாது.

இவ்விடயத்தில் நாம் ஒரு விடயத்தை ஆழமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

அவர்கள் அவற்றை முன்வைத்து வணங்கியது அவை வணக்கத்திற்கு தகுதியானவை என்று நம்பியதினாலா? அல்லது வேறு காரணத்தினாலா?

எதற்காக அவ்வாறு செய்தார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்களிடம் கேட்பதற்கு அவர்களில்லையே என்று நாம் ஏங்கத் தேவையில்லை. அவர்களே தமது நோக்கத்தை பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُوْنَا إِلَى اللهِ زُلْفَى


நாங்கள் அந்த விக்கரகங்களையும், சிலைகளையும் வணங்கவில்லை. அவை எங்களை அல்லாஹ் அளவில் நெருக்கமாக்கி வைப்பதற்காகவே ஒழிய. (திருக்குர்ஆன் 39-3)

தொடரும்….