தொடர் – 7
மேற்கண்ட இத்தலைப்பில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பாக இப்னு அறபீ நாயகம் அவர்களும், அவர்களுக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த இஸ்லாமிய இறைஞான மகான்களும் கூறிய இறை தத்துவங்களை தொடராக எழுதி வருகிறேன்.
இறுதியாக 06ம் தொடர் முடியும் வரை எழுதிய நான் எனது சொந்த வேலை காரணமாக கண்டி, கொழும்பு போன்ற வெளி ஊர்களுக்குச் சென்றிருந்ததால் சில நாட்கள் எழுத முடியாமற் போனதையிட்டு வருந்தினவனாக மீண்டும் தொடர்கிறேன்.
அறிவுக் கலைகளில் மிகச் சிறந்த, எவராலும் விலை மதிக்க முடியாத, கரை காணவும் முடியாத அறிவுக் கலை இறையறிவுக் கலையேயாகும்.
தப்ஸீர் – திருக்குர்ஆன் விரிவுரை கலை, ஹதீதுக்கலை, “தாரீக்” வரலாற்றுக் கலை, இன்னுமிவை போன்ற பல்கலைகளிலும் மிகச் சிறந்த கலை இறைஞானக் கலை மட்டுமேயாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
ஒரு கலையின் சிறப்பு அதன் கருவைக் கொண்டே கணிக்கப்படுகிறது. வானவியற் கலையின் கரு வானமாயும், புவியியற் கலையின் கரு புவியாயும், விலங்கியற் கலையின் கரு விலங்குகளாயும் இருப்பது போல் “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியற் கலையின் கரு இறைவனாக இருப்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. இக்கலையின் கரு மட்டுமே படைத்தவனாக இருப்பதாலும், மற்றெல்லாக் கலைகளினதும் கருக்கள் படைப்புக்களாக இருப்பதாலும் அறிவுக் கலைகளில் சிறந்தது இறைஞானமென்று அறிஞர்களும் கருத்து வேறுபாடின்றி ஒரே குரலில் கூறியுள்ளார்கள்.
நான் கூறிய மேற்கண்ட விபரங்கள் மூலம் இறைஞானமே சிறந்ததென்று நிறுவப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வயது வந்த, பருவ வயதை அடைந்த அல்லது வயது வருமுன் வேறு வகையில் பருவமடைந்த ஆண், பெண் அனைவர் மீதும் இறைஞானம் கற்பது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமையாகிவிட்டது.
இறைஞானமென்பது பரந்து விரிந்த பெருங்கடல், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த வரை பருகிக் கொள்ள முடியும். ஒருவன் ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து இராப்பகலாக அக்கடலில் குடித்தாலும் கூட அவன் அக்கடலில் ஒரு சில துளிகளை மட்டும் குடித்தவனாவானேயன்றி அதன் மூலம் இறைஞானத்தில் அவன் முழுமை பெற்றுவிட்டான் என்பது கருத்தல்ல.
எனினும் “ஷரீஆ” எனும் ஷரியை ஒரு முஸ்லிம் இறைஞானத்தை குறைந்தபட்சம் எந்த அளவு அறிந்திருக்க வேண்டுமென்று ஒரு வரம்பு போட்டுள்ளது. “ஷரீஆ” போட்டுள்ள அந்த வரம்புக்குட்பட்ட வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருப்பது “பர்ழ்ஐன்” போன்ற கட்டாயக் கடமையாகும். “ஷரீஆ”வின் வரம்புக்கப்பாற் செல்வது ஒவ்வொருவரினதும் தாகத்தைப் பொறுத்ததாகும். “ஷரீஆ”வின் வரம்பை கடக்கக் கூடாதென்பது கருத்தல்ல. எனினும் “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையை விளங்கி அவனை அறிதல் பூரண “ஈமான்” விசுவாசத்திற்கு வழி செய்யும் என்பதை கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். விசுவாசிகள் அனைவரும் சுவர்க்கம் செல்வார்களாயினும் அதில் பல சுவர்க்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மற்றதை விட எல்லா இன்ப சுகங்களிலும் சிறந்ததாகவே இருக்கும். அந்த சுவர்க்கங்களில் அதியுயர் சுவர்க்கம் எங்கள் நெய்னார் முஹம்மத் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இருக்கும் “பிர்தவ்ஸ்” எனும் சுவர்க்கமாகும். “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் அல்லாஹ்வை அறிந்தவர்கள் நபீ பெருமானாருடன் “பிர்தவ்ஸ்” எனும் அதியுயர் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
எனினும் திருக்குர்ஆன் 04-136ம் வசனத்தை ஸூபீ மகான்கள் ஆதாரமாகக் கொண்டு “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் “ஈமான்” நம்புதல் மட்டுமே நம்பிக்கையாகுமென்று திட்டமாகக் கூறியுள்ளார்கள். இது தொடர்பான விபரம் பின்னால் வரும் தொடர்களில் இடம் பெறும்.
“ஷரீஆ” குறிப்பிடும் அளவு இறைஞானம் கற்றுக் கொள்ளாதவன் நிரந்தரப் பாவியாகிவிடுவான்.
இறைஞானத்தை இழித்துரைப்போரும், அதைக் கிண்டல் செய்வோரும் வாழுமிக்காலத்தில் “ஷரீஆ” கூறியுள்ளவாறு இறைஞானம் கற்றவர்கள் உலமாஉகளும், மார்க்கத்தில் பக்தியுள்ளவர்களுமேயாவர். எனது கணிப்பின் படி “ஷரீஆ” கூறிய படியேனும் இறைஞானம் கற்றவர்கள் நூற்றுக்கு ஐந்து பேர்களென்றே சொல்ல வேண்டும். மற்றவர்கள் அனைவரும் பாவிகளேயாவர்.
இது ஒரு முக்கிய விடயமாகும். விரும்பினவர்கள் கற்றுக் கொள்ளலாம். விரும்பாதவர்கள் விடலாம் என்பது கருத்தல்ல. மாறாக ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டிய விடயமாகும்.
அவை அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தன்மைகள் இருபது என்றும், அவை எவையென்றும், அவனுக்கு “முஸ்தஹீல்” ஆன “ஸிபாத்” தன்மைகள் இருபது என்றும், அவையெவை என்றும், அவனுக்கு “ஜாயிஸ்” ஆன “ஸிபத்” ஒன்று என்றும், அது எது என்றும் அறிவது கடமையாகும்.
இவ்விபரங்களை அறிதல் உலமாஉகளுக்கு மட்டும், இதேபோல் அறபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியருக்கு மட்டும் கடமையானதல்ல. வயது வந்த, பருவமடைந்த முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும். இது “ஷரீஆ” கூறும் சட்டமாகும். இச்சட்டத்தைப் பேணிக் கற்றுக் கொண்டவர்கள் நூற்றுக்கு ஐந்து வீதமானோர் மட்டுமே இருப்பார்கள் என்று நான் மேலே எழுதியுள்ளேன்.
“அகீதா” கொள்கை சம்பந்தமாக எழுதப்பட்ட நூல்கள் அனைத்திலும் பின்வருமாறு வசனம் வந்திருப்பது உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரி மாணவர்களுக்கும் நன்றாகத் தெரியும். வசனம் இதோ..
يَجِبُ عَلَى كُلِّ مُكَلَّفٍ أَنْ يَعْرِفَ مَا يَجِبُ لِمَوْلَانَا عَزَّ وَجَلَّ وَمَا يَسْتَحِيْلُ عَلَيْهِ وَمَا يَجُوْزُ لَهُ،
இதன் பொருள்:
பருவமடைந்த ஆண், பெண் அனைவர் மீதும் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆனவற்றையும், அதாவது அவனில் அவசியம் இருக்க வேண்டிய தன்மைகள் இருபதையும், அவனில் அறவே இருக்க முடியாத தன்மைகள் இருபதையும், அவனுக்கு இருப்பதும், இல்லாதிருப்பதும் ஆகுமான “ஸிபத்” தன்மை ஒன்று என்றும் அறிந்திருப்பது கடமையாகும்.
கடமையை விட்டவன் தண்டிக்கப்படுவான்.
பொது மக்களில் நூற்றுக்கு ஐந்து பேர்கள் மட்டுமே இவ்விபரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் இருப்பார்கள். ஏனையோர் நிரந்தரப் பாவிகளாகவே கணக்கெடுக்கப்படுவார்கள்.
தீனின் பணி செய்யும் “தப்லீக்” அமைப்பு இதுவரை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக நான் அறியவில்லை.
எனினும் “முர்தத்” பத்வா வழங்கி இந்நாட்டின் பரம்பரை முஸ்லிம்களில் பல இலட்சம் பேரையும், வெளிநாட்டு முஸ்லிம்களில் பல கோடிப் பேர்களையும் மதம் மாற்றி சாதனை படைத்துள்ளார்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முப்திகள். இதுவே இவர்கள் செய்த மறக்க முடியாத பெருஞ்சேவையும், சாதனையுமாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்ணும் குருடாகி, மூளையும் கெட்டுப்போன “பத்வா” குழுவினதும், தலைமறைவான தலைவரினதும் அட்டூழிய “பத்வா”வுக்கு எதிராக குரல் கொடுக்காமல் “ஆமாசாமி” போட்டுக் கொண்டு பெற்றிக்கும், மெயினுக்கும் தலையசைத்துக் கொண்டிருக்கின்ற “தரீகா”க்களின் ஷெய்குமார்களும், தரீகாக்களின் கலீபாக்களும், அறபுக் கல்லூரி ஹஸ்றத்மார்களும் மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
ثُمَّ لَتُسْئَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيْمِ
மறுமையில் அல்லாஹ்வினால் “நிஃமத்” அருள் வழங்கப்பட்ட அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட அருள் பற்றி கேட்கப்படுவார்கள் என்ற இறைவனின் அருள்மறை வசனம் மேற்கண்ட இவர்களின் நெஞ்சங்களைக் குத்தமாலிருப்பதேனோ?
நான் அறிந்தவரை உலகில் தோன்றிய ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபீமாரும், உலகில் தோன்றிய கோடிக் கணக்கான இறை நேசர்களும் “வஹ்ததுல் வுஜூத்” இறை ஞானத்தைச் சரி கண்டவர்களும், அதை ஏற்றுச் செயல்பட்டவர்களும், அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தவர்களுமேயாவர்.
உலகப் பிரசித்திபெற்ற “ஆரிபீன்” இறைஞானி என்று அறியப்பட்ட எவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழை என்றோ, “குப்ர்” என்றோ, “ஷிர்க்” என்றோ சொன்னதற்கு நம்பத்தகுந்த ஓர் ஆதாரமேனும் எவராலும் காட்ட முடியாது. அவ்வாறு காட்ட முடியுமா? என்று உலமா சபையின் “பத்வா” குழுவையும், எதிர்த்துக் கொண்டிருக்கின்ற ஏனைய உலமாஉகளையும், பெயரளவில் தரீகாவை வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஷெய்குமார்களையும் நான் கேட்கிறேன். ஊமைகளாயிருக்காமல் அல்லாஹ்வுக்காக பதில் கூறுங்கள்!
குறிப்பு: காத்தான்குடியில் வாழும் மக்களில் பருவ வயதை அடைந்தும் கூட “ஷரீஆ”வின் கூற்றுப்படி மட்டுமாவது இறைவனை அறிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்களென்று காத்தான்குடி உலமா சபையிடம் நான் கேட்பதுடன், அறியாதவர்களின் வழிகேட்டிற்கு யார் பொறுப்பானவர்கள் என்றும் கேட்கிறேன்.
தொடரும்…