“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 8

நபீ முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் 40ம் வயதில் “நுபுவ்வத்” எனும் நபீ பட்டம் பெற்ற கால கட்டத்தில் திரு மக்கா நகரில் ஒரு முஸ்லிம், ஒரு முஃமின் கூட இருக்கவில்லை. அங்கு வாழ்ந்த அனைவரும் விக்கிரகத்தை முன்வைத்து வணக்கம் செய்பவர்களாகவே இருந்தனர்.

விக்கிரகம், சிலைகளை முன் வைத்து வணங்கினாலும் கூட அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததா? இல்லையா? என்பதற்கு நான் ஏற்கனவே எழுதிய தொடர் 05ல் ஐந்து திருக்குர்ஆன் வசனங்களை எழுதியிருந்தேன். அவ்வசனங்களை மீண்டும் எழுதாமல் அவற்றுக்குரிய பொருளின் சுருக்கத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

01. அல்லாஹ், நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிட்டான்.

நபீயே! நீங்கள் அவர்களிடம் – மக்கத்து காபிர்களிடம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யாரென்று கேட்டால் யாவையும் மிகைத்தவனும், நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்தான் படைத்தான் என்று அவர்கள் சொல்வார்கள் என்று கூறினான். (திருக்குர்ஆன் 43 – 09)

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அந்த மக்களிடம் கேட்ட போது அவர்கள் அவ்வாறே சொன்னார்கள்.

02. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அவர்கள் அல்லாஹ் என்று நிச்சயமாக கூறுவார்கள். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுங்கள். எனினும் அவர்களில் அநேகர் அறியமாட்டார்கள். (திருக்குர்ஆன் 31 – 25)

03. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 39 – 38)

04. வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கு திருப்பப்படுகின்றார்கள்? (திருக்குர்ஆன் 29 – 61)

05. நபீயே! வானத்திலிருந்து மழையை இறக்கி, அதனைக் கொண்டு பூமியை அது இறந்தபின் உயிர்ப்பித்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ் என்று நிச்சயமாக கூறுவார்கள். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று நீங்கள் கூறுவீர்களாக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (திருக்குர்ஆன் 29 – 63)

மேற்கண்ட ஐந்து திரு வசனங்களும் மக்கத்து காபிர்களின் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை எவ்வாறிருந்தது என்பதை மிகத் தெளிவாக கூறுகின்றன.

முதலாவது வசனம் அந்தக் காபிர்கள் வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ்தான் என்று சொன்னதோடு அவனே யாவையும் மிகைத்தவன் என்றும், நன்கறிந்தவன் என்றும் சொன்னார்கள். அதாவது அல்லாஹ் “அஸீஸ்” யாவையும் மிகைத்தவன் என்றும், “அலீம்” யாவையும் அறிந்தவன் என்றும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்விரு திருப் பெயர்களும் அல்லாஹ்வின் 99 திரு நாமங்களில் உள்ளவை என்பதும், அக்காபிர்கள் அவ்விரண்டையும் ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

இரண்டாம் வசனம் அவர்கள் வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பதை தெளிவாகக் கூறுவதோடு அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்வைப் புகழுமாறு அல்லாஹ் நபீ அவர்களுக்கு கட்டளையிட்டான் என்பதையும் கூறுகிறது. அதோடு மேலும் ஒரு கருத்தையும் கூறுகிறது. அதாவது அவர்களில் அநேகர் அறிவில்லாதவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

மூன்றாம் வசனம் முதலாம் வசனம் போன்றதே!
நாலாம் வசனம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்றும், அதேபோல் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தித் தந்தவன் அல்லாஹ் என்றும் அவர்கள் சொல்லியுள்ளார்கள் – ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதையும் தெளிவாக கூறுவதுடன் அவர்கள் எங்கே திருப்பப்படுவார்கள்? என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஐந்தாம் வசனம் வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக் கொண்டு பூமியை அது இறந்தபின் உயிர்ப்பித்தவன் அல்லாஹ் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை கூறுவதுடன் இரண்டாம் வசனம் கூறியது போன்ற ஒரு செய்தியையும் கூறுகிறது. இரண்டாம் வசனத்தை மீண்டும் ஒரு முறை கவனிக்குமாறு வாசகர்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

வாசக நேயர்களே! மக்காவில் வாழ்ந்த, நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நபீ என்று ஏற்றுக் கொள்ளாத மக்கத்து மக்களின் இறை நம்பிக்கை எவ்வாறிருந்தது என்பதை மேற்கண்ட வசனங்கள் ஐந்தும் தெளிவாகக் கூறுகின்றன.

அவர்களிடம் மேற்கண்ட கேள்விகள் கேட்குமாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்டவன் அல்லாஹ்தான். அக்கட்டளையின் படி கேள்விகள் கேட்ட பெருமானார் அவர்களுக்கு அந்த மக்கள் இறை நம்பிக்கையில் எவ்வாறிருந்தார்கள் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. பெருமானார் அவர்கள் அந்த மக்களிடம் அவ்வாறான கேள்விகள் கேட்டு அவர்கள் கூறும் பதில்களின் மூலம்தான் அவர்கள் என்ன கொள்கையில் இருந்தார்கள் என்பதை பெருமானார் அறிய வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

எனினும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “உம்மத்” சமுகம் பெருமானாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வாறான கொள்கையுள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக நிகழ்ந்த கேள்வி – பதில் நிகழ்வுதான் அன்று நடந்த நிகழ்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லாஹ்தான் அனைத்துச் செயல்களையும் செய்கிறான் என்றும், அல்லாஹ் என்ற பெயரில் ஒருவன் உள்ளான் என்றும் நம்பினவர்களாயிருந்தார்களேயன்றி அல்லாஹ் என்று ஒருவனில்லை என்று நம்பினவர்களாக – நாத்திகர்களாக இருக்கவில்லை என்பதே உண்மை.

இங்கு ஒரு கேள்விக்கு இடமுண்டு. அதாவது அவ்வாறான நம்பிக்கையுள்ளவர்கள் சிலைகளையும், விக்கிரகங்களையும் ஏன் வணங்கினார்கள் என்பதே அந்தக் கேள்வியாகும். இந்த விபரத்தை வாசிக்கும் சகோதரனுக்கும் இப்படியொரு கேள்வி வருவது அதிசயமல்ல.

இக்கேள்விக்கு மக்கத்து மக்களே விடை சொல்லிவிட்டார்கள். அவர்கள் கூறிய விடையை அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.
مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى
நாங்கள் அவைகளை வணங்கவில்லை – அதாவது நாங்கள் அந்த விக்கிரகங்களையும், சிலைகளையும் வணங்கவில்லை, அவை எங்களை அல்லாஹ்வின்பால் நெருக்கமாக்கி வைப்பதற்காகவே ஒழிய.

இதன் கருத்து என்னவெனில் அச்சிலைகளையும், விக்கிரகங்களையும் நாங்கள் முன்வைத்து வணங்கினாலும் கூட நாங்கள் அவற்றை வணங்கவில்லை. அதோடு அவை வணங்கப்படுவதற்கு தகுதியானவை என்று நம்பவுமில்லை. எனினும் அவற்றை முன்வைத்து வணங்குவதால் அவை எம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கின்றன என்றுதான் சொன்னார்களே தவிர நாங்கள் இந்த விக்கிரகங்களையும், சிலைகளையுமே வணங்குகிறோம் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொன்னதற்கு ஆதாரங்களுமில்லை.

விக்கிரகங்களையும், சிலைகளையும் நாங்கள் வணங்கவில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கும் நிலையில் திரு வசனத்தில் வந்துள்ள “மா” என்ற சொல்லைச் சேர்க்காமல் – அதை மறைத்து நாங்கள் அவற்றை வணங்குகிறோம் என்று பொருள் கூறுவதற்கு அனுமதியில்லை.

அந்தக் காபிர்கள் அல்லாஹ்வை வணங்காமல் சிலைகளையும், விக்கிரகங்களையுமே வணங்கினார்கள் என்று கூறுவது மேற்கண்ட திரு வசனத்திற்கு மட்டுமன்றி பின்னால் நான் எழுதவுள்ள திருமறை வசனங்களுக்கும் முரணானதாகிவிடும்.

وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ

வானங்களிலும், மற்றும் பூமியில் இருப்பவை யாவும் விருப்பத்துடனும், வெறுப்புடனும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிகின்றன – “ஸுஜூத்” செய்கின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் அவனுடைய கட்டளைக்குப் பணிந்து “ஸுஜூத்” செய்கின்றன. சாஷ்டாங்கம் செய்கின்றன.
(திருக்குர்ஆன் 13-15)

وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ

ஜீவராசிகளில் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிந்து வணங்குகின்றன. “ஸுஜூத்” செய்கின்றன. இன்னும் மலக்குகளும் அவ்வாறே சிரம் பணிகின்றனர். அவர்களோ பெருமையடிக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 16-49)

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ

நபீயே! நிச்சயமாக அல்லாஹ் – அவனுக்கு வானங்களில் உள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், மனிதர்களில் அதிகமானோரும் “ஸுஜூத்” செய்கின்றனர் – சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் பெரும்பாலானோர் அவர்கள் மீது வேதனை விதியாகிவிட்டது. மேலும் அல்லாஹ் யாரை இழிவு படுத்துகிறானோ அவனை கண்ணியப்படுத்துபவர் எவருமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை செய்வான். (திருக்குர்ஆன் 22-19)

மேற்கண்ட திரு வசனங்கள் மூன்றும் சர்வ படைப்புகளும் அல்லாஹ்வையே வணங்குகின்றன என்ற கருத்தை தெளிவாக கூறுகின்றன. இத்திரு வசனங்களின் கூற்றுப்படி மக்கத்து காபிர்கள் – அபூ ஜஹ்ல், அபூ லஹப் போன்றவர்கள் உள்ளிட்ட யாவரும் அல்லாஹ்வையே வணங்கினார்கள் என்பதும், இன்று வாழும் முஸ்லிம்கள் யாவரும் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள் என்பதும், இதேபோல் முஸ்லிம் அல்லாதவர்களும் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. இவர்கள் அனைவரும் அல்லாஹ்வை வணங்கினாலும் கூட இவர்களை விசுவாசிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதென்பதற்கு வேறு காரணம் உண்டு.

தொடரும்….